பொன்னியின் செல்வன் கதையை 5 நிமிடங்களில் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரமாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக வலுவான பேரரசுகளில் ஒன்றாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் வரலாற்றைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனைக் கதையே 'பொன்னியின் செல்வன்.'

இந்த பிரமாண்டமான படைப்பின் கதைச் சுருக்கத்தை இங்கே காணலாம்.

முதலில் இந்தக் கதையின் பின்னணியைப் பார்த்து விடலாம்.

கி.பி. 980வாக்கில் சோழ சாம்ராஜ்ஜியத்தை சுந்தர சோழர் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழன் ஆண்டு வந்தார். கும்பகோணத்திற்கு அருகில் இருந்த பழையாறை பல ஆண்டுகளாக சோழ நாட்டின் தலைநகராக இருந்த நிலையில், சுந்தரசோழரின் காலத்தில் தஞ்சாவூர் தலைநகரமாக மாற்றப்பட்டிருந்தது.

சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இரண்டாவதாக குந்தவையும் கடைசியாக அருள்மொழி வர்மனும் பிறந்திருந்தனர்.

சுந்தரசோழ சக்கரவர்த்தி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு, நடக்க முடியாமலும் பிரயாணம் செய்ய முடியாத நிலையிலும் இருந்தார். சோழ நாட்டின் பொக்கிஷம், வரி விதிக்கும் அதிகாரம் ஆகியவை பெரிய பழுவேட்டரையரிடம் இருந்தன. தஞ்சைக் கோட்டையின் காவல், சிறிய பழுவேட்டரையர் வசம் இருந்தது.

மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டிருந்தது. அவர் வடதிசைப் படையின் அதிபதியாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். தென்திசைப் படையின் மாதண்ட நாயகராக நியமிக்கப்பட்டிருந்த இளைய மகன் அருள்மொழி வர்மன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தார்.

சோழர்களின் தலைநகரம் தஞ்சைக்கு மாறிவிட்டாலும் குந்தவையும் வேறு பல அரச குடும்பப் பெண்மணிகளும் பழையாறை நகரிலேயே தங்கியிருந்தனர்.

இதற்கிடையில், சுந்தரசோழரின் பெரிய தந்தையான கண்டாராதித்த சோழனின் மகனான மதுராந்தகன், சுந்தர சோழருக்குப் பிறகு தானே அரசனாக வேண்டுமென நினைத்தார். அவர் சின்னப் பழுவேட்டரையரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதால், பழுவேட்டரையர்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது. வேறு சில சிற்றரசர்களும் இதற்கு ஆதரவளித்தனர்.

ஆதித்த கரிகாலன் தனது இளம் வயதில் நந்தினி என்ற அர்ச்சகர் வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். ஆனால் அது தகாத காதல் என கண்டராதித்தரின் மனைவியும் ஆதித்தனின் பாட்டியுமான செம்பியன் மாதேவி அவனிடம் சொல்லிவிட்டு, இருவரையும் பிரித்தார். ஆனால், ஆதித்தனால் நந்தினியை மறக்க முடியவில்லை. இந்த நிலையில், 60 வயதைக் கடந்த பெரிய பழுவேட்டரையர் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டார்.

இனி பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

நாவல் துவங்கும்போது, காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஆதித்த கரிகாலனிடமிருந்து சுந்தர சோழருக்கு ஒலை ஒன்றை எடுத்துவருகிறான் அவனுடைய நண்பனான வந்தியத்தேவன். தஞ்சைக்கு வரும் வழியில் தன் நண்பன் கந்தமாறனின் கடம்பூர் மாளிகையில் தங்குகிறான். அன்று இரவு கடம்பூர் அரண்மனையில் சுந்தர சோழருக்குப் பிறகு, மதுராந்தகனை பட்டத்திற்குக் கொண்டுவருவது தொடர்பாக ஒரு மிகப் பெரிய சதியாலோசனைக் கூட்டம் பழுவேட்டரையர் தலைமையில் நடப்பதை பார்க்கிறான்.

பிறகு, தஞ்சையைச் சென்றடைந்து சுந்தர சோழரையும் குந்தவையையும் சந்தித்து ஆதித்த கரிகாலன் அளித்த ஓலையை கொடுக்கிறான். இதனால், வந்தியத்தேவனை வெகுவாக நம்பும் குந்தவை, "ராஜ்யத்திற்குப் பேரபாயம் வந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா" என ஒரு ஒலையை எழுதி வந்தியத்தேவனிடம் கொடுத்து, ஈழத்தில் உள்ள தனது தம்பியிடம் சேர்ப்பிக்கும்படி சொல்கிறாள்.

குந்தவையின் ஓலையுடன் கோடியக்கரை சென்ற வந்தியத்தேவன், அங்கிருந்த பூங்குழலி என்ற பெண்ணின் உதவியால் ஈழத்தைச் சென்றடைகிறான். அருண்மொழி வர்மனைச் சந்தித்து குந்தவை கொடுத்த ஓலையையும் கொடுத்தான். இதற்குப் பிறகு அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் நெருக்கமான நண்பர்களாயினர்.

அப்போது இலங்கையில் தான் கண்டறிந்த சில அதிசயமான விவரங்களை அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனுக்குச் சொன்னார். அதாவது, சுந்தரசோழர் பட்டத்து இளவரசராவதற்கு முன்பாக இலங்கையை அடுத்த பூதத் தீவில் சில காலம் தங்க நேர்ந்தது. அங்கே அவரைத் தாக்கவந்த கரடியிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். வாய் பேசவோ, கேட்கவோ இயலாத அந்தப் பெண்ணைக் காதலிக்கும் சுந்தர சோழர், சில காலம் அவளுடன் வாழ்கிறார். பிறகு அவளைப் பிரிந்து நாடு திரும்புகிறார்.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

ஈழத்தில் அருண்மொழியைப் பின்தொடரும் அந்தப் பெண்மணி, பல தருணங்களில் அருண்மொழியை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறாள். அந்தப் பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்தும் அந்தக் குழந்தைகள் யார் என்பது குறித்தும் அருள்மொழி வர்மனுக்கு சில யூகங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தன் தந்தையைச் சந்தித்து சொல்ல விரும்புகிறார் அருள்மொழிவர்மன்.

இதற்கிடையில், அருள்மொழிவர்மனைக் கைதுசெய்து அழைத்துப் போவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு கப்பல்களை அனுப்புகின்றனர். அதில் ஒன்றில் ஏறிச் செல்லும் வந்தியத்தேவனும் அருள் மொழி வர்மனும் புயலில் சிக்கி, பிறகு பூங்குழலியின் உதவியால் கோடியக்கரையை வந்தடைகின்றனர்.

கோடியக்கரை வரும் இளவரசருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், குந்தவை சொல்லி அனுப்பியபடி நாகப்பட்டனம் சூடாமணி விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தத் தகவலை குந்தவையைச் சந்தித்துச் சொல்கிறான் வந்தியத்தேவன்.

இதற்கிடையில் பழுவூர் இளைய ராணி நந்தினியை ஆதித்த கரிகாலனின் நண்பனான பார்த்திபேந்திரன் சந்திக்க நேர்கிறது. அவனிடம் ஒரு திட்டத்தைச் சொல்கிறாள் நந்தினி. அதாவது, சுந்தர சோழருக்குப் பிறகு குழப்பம் ஏற்படாமல் இருக்க, நாட்டை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் கொடுத்துவிடலாம் என்கிறாள் நந்தினி. அதைப் பற்றிப்பேச, ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு வரவழைக்கும்படி பார்த்திபேந்திரனிடம் கூறுகிறாள். நந்தினியின் அழகில் மயங்கிப்போன பார்த்திபேந்திரன் அதைச் செய்வதாக உறுதியளிக்கிறான்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இதைக் கேள்விப்பட்ட முதல் மந்திரி அநிருத்தர், வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனிடம் அனுப்பி, அவன் கடம்பூருக்கு வராமல் தடுக்க வேண்டும் என குந்தவையிடம் சொன்னார். குந்தவையும் அதை ஏற்றுக்கொள்கிறாள். வந்தியத்தேவனைச் சந்தித்து அவனைக் காதலிப்பதாகச் சொல்லும் குந்தவை, ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால், அவனைவிட்டுப் பிரியக்கூடாது என்றும் வந்தியத்தேவனைக் கேட்டுக்கொள்கிறாள். இதையடுத்து, அநிருத்தரின் சிஷ்யனான ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டான் வந்தியத்தேவன்.

இதற்கிடையில் வானதியும் குந்தவையும் நாகப்பட்டனம் சென்று இளவரசனைச் சந்தித்தனர். அப்போது, இலங்கையில் உள்ள வாய்பேச முடியாத பெண்ணான மந்தாகினியை தஞ்சைக்கு எப்படியாவது அழைத்துவர வேண்டுமென்றும் மந்தாகினியைப் போலவே இருக்கும் நந்தினியை வைத்து சுந்தர சோழரை எப்படயெல்லாம் பழுவேட்டரையர் தரப்பினர் பயமுறுத்தி வருகிறார்கள் என்பதையும் அருள்மொழியிடம் விவரித்தாள் குந்தவை. மேலும் பழுவேட்டரையர்களும் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு ஆதித்த கரிகாலனுக்கு எதிராகச் செய்துவரும் சதி பற்றியும் கூறினாள்.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

இதற்கிடையில் காஞ்சிபுரத்திலிருந்து கந்தமாறன், பார்த்திபேந்திரனுடன் ஆகியோருடன் புறப்பட்ட ஆதித்த கரிகாலன் கடம்பூரை வந்தடைந்தான். வந்தியத்தேவனும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

இதற்கிடையில் மந்தாகினி தேவியை அழைத்துவந்து சுந்தர சோழரிடம் காட்டிவிட்டால், அவர் இனிமேல் நந்தினியைப் பார்த்துப் பயப்பட மாட்டார் என்பதால், அவளை தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், வரும் வழியில் ரவிதாஸனையும் சோமன் சாம்பவனையும் பார்த்துவிட்ட மந்தாகினி அவர்களால் ஏதாவது தீய காரியம் நடக்கக்கூடும் என்பதால் அவர்களைப் பின்தொடர்ந்தாள்.

அவனும் ரவிதாஸனும் ஒரு நிலவறை மூலமாக சுந்தர சோழரின் படுக்கை அறையை சென்றடைந்தார்கள். மூன்று நாட்கள் அந்த நிலவரையிலேயே காத்திருந்து, பிறகு வேல் எறிந்து சுந்தரசோழரைக் கொல்ல வேண்டுமென்றான் ரவிதாஸன்.

இதையெல்லாம் கவனித்த மந்தாகினி, இருள் சூழ்ந்ததும் சோமன் சாம்பவனை பயமுறுத்தி விரட்டிவிட்டு, அவர்கள் சென்ற நிலவறை வழியாகவே சுந்தர சோழரின் படுக்கை அறையைச் சென்றடைந்தாள். அப்போது அங்கே பூங்குழலி, அநிருத்தர் ஆகியோர் இருந்தனர். அநிருத்தர் சக்கரவர்த்தியிடம் எல்லா உண்மையையும் சொன்னார். எல்லோரும் அங்கிருந்து சென்ற பிறகு, மந்தாகினி அங்கே வந்தாள்.

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், @LycaProductions

அவளைப் பார்த்ததும் அருகில் இருந்த உலோகப் பொருள் ஒன்றை அவள் மீது எறிந்தார் சுந்தர சோழர். அவள் கத்திய சத்தம் கேட்டதும் அனைவரும் ஓடிவந்தார்கள். அப்போது குந்தவை, அவள்தான் மந்தாகினி என்றும் அவள் சாகவில்லையென்றும் கூறினாள்.

மந்தாகினி உயிருடன் இருந்தது மன்னருக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், மந்தாகினி தூங்கவில்லை.

இதற்கிடையில் கடம்பூரில் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசிவந்தான். அவனுடைய பேச்சுகளால் ஆத்திரமடைந்த பழுவேட்டரையர், தஞ்சைக்குத் திரும்புவதாகச் சொன்னார். ஆனால், நந்தினி அங்கேயே தங்கிவிட்டாள். ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்தித்து, அவள் தன்னுடைய சகோதரி என்றான். அவள் அதை ஏற்கவில்லை.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

இதற்கிடையில் நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அருள்மொழி வர்மன் தன் தந்தையைப் பார்ப்பதற்காக தஞ்சைக்குப் புறப்படுகிறார்.

தஞ்சாவூருக்குப் போய்க் கொண்டிருந்த பழுவேட்டரையருக்கு நந்தினி தொடர்பாக பல சந்தேகங்கள் தோன்றியபடியே இருந்தன. இவையெல்லாம் யோசித்தபடி கொள்ளிடத்தைக் கடப்பதற்கு படகில் பயணித்தார் பழுவேட்டரையர். அந்தப் படகு கவிழ்ந்துவிடவே, ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு கரையேறிய அவர், ஒரு கோவிலில் அன்று இரவு தங்கினார்.

அப்போது சந்தர்ப்பவசமாக தேவராளனும் ரவிதாஸனும் பேசிக்கொண்டிருப்பதை அறியும் பழுவேட்டரையர் சுந்தர சோழரையும் இளவரசர்களையும் கொல்ல நடக்கும் சதியைப் பற்றி தெரிந்துகொள்கிறார். மேலும், வீரபாண்டியன் இறப்பதற்கு முன்பாக பழுவூர் ராணியைத் தனது பட்ட மகிஷியாக்கிக் கொண்டதையும் தெரிந்துகொள்கிறார்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டு, பழியை வந்தியத்தேவன் மீது போடுவதற்கு நந்தினி திட்டமிட்டிருப்பதையும் அறிகிறார். உடனே குந்தவையும் வானதியும் சந்திக்கும் பழுவேட்டரையர், அனைத்து தகவல்களையும் அவர்களிடம் சொல்கிறார். பிறகு நந்தினியைக் கொல்ல கடம்பூருக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் அங்கிருந்து சென்று விடுகிறார்.

இதற்கிடையில் தஞ்சைக்கு வந்து சுந்தர சோழரைச் சந்தித்தார் அருள் மொழி வர்மர். சுந்தரசோழர் அருள்மொழி வர்மனின் கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தபோது மந்தாகினி தேவி திடீரென அவர்களுக்கு முன்வந்து நின்றாள். சுந்தரசோழரை கொல்ல சோமன் சாம்பவனால் வீசப்பட்ட வேல், அவள் மீது பாய்ந்தது. சுந்தரசோழரின் மடியில் படுத்தபடி உயிர்நீத்தாள் மந்தாகினி.

இதற்கிடையில் கடம்பூர் மாளிகையில் நடக்கும் சம்பவங்களின் உச்சகட்டமாக ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் மேல் சுமத்தப்படுகிறது. நந்தினி அங்கிருந்து ஓடிவிடுகிறாள். வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.

தன் சகோதரன் ஆதித்த கரிகாலனை வந்தியத்தேவன் கொன்றிருப்பானா என்ற குழப்பத்தில் இருந்த குந்தவையை வந்து சந்தித்த கந்தமாறனின் சகோதரி மணிமேகலை, ஆதித்த கரிகாலன் குந்தவைக்கு எழுதிய ஒலை ஒன்றை கொடுத்தாள். அதில், ஆதித்த கரிகாலன் "வந்தியத்தேவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நன்றாகப் பாதுகாத்தான். கடம்பூரில் தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அது என் விதிதான்" என்று எழுதியிருந்தான்.

நந்தினியும் மதுராந்தகனும் மந்தாகினியின் பிள்ளைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் சுந்தரசோழனின் குழந்தைகள் இல்லை என்றும் தெரிய வருகிறது. இதனால், மதுராந்தகனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுக்கக்கூடாது என்கிறார் குந்தவை. தான் வளர்த்த மகன் உண்மையில் அரச குடும்பத்தவன் இல்லை என்பதால்தான் அவனுக்கு பட்டம் கட்டுவதை எதிர்த்ததாக செம்பியன் மாதேவி தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பூங்குழலியின் அத்தை மகனாக வளர்ந்த சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என்று கூறி, சக்கரவர்த்தி முன்பு நிறுத்துகிறார்கள்.

இதற்குப் பிறகு சுந்தரசோழர் மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் ஆதித்தன் கொலைக்கு தானே காரணம் என்று சொல்லிவிட்டு தன்னைதானே மாய்த்துக்கொள்கிறார்.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்ட நாள் குறிக்கப்படுகிறது. அன்றைய தினம், தன் தலையில் சூட்டவிருந்த மகுடத்தை மதுராந்தகன் தலையில் சூட்டினார் அருள்மொழிவர்மர். இதையடுத்து உத்தமசோழன் என்ற பெயரில் மன்னனானான் சேந்தன் அமுதன்.

செம்பியன் மாதேவி வளர்த்த பழைய மதுராந்தகன், "அமரபுஜங்கள் நெடுஞ்செழியன்" என்ற பெயரில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு சேர்ந்து செயல்பட்டான். அருள்மொழி வர்மனுக்கும் வானதிக்கும் திருமணம் நடைபெறுகிறது.

பொன்னியின் செல்வன் கதை இதோடு நிறைவடைந்தது.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பட மூலாதாரம், @LycaProductions

இதற்குப் பிறகு நாவல் தொடர்பான சில சந்தேகங்களுக்கு கல்கி விளக்கமளித்திருந்தார்.

1. குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், "இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

2. உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், அருள்மொழி வர்மர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜ ராஜ சோழன்' என்ற பட்டத்துடன் சோழ நாட்டை ஆள்கிறார்.

3. பழைய மதுராந்தகன் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். ராஜராஜ சோழன் பதவியேற்றதும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார்.

4. வானதிக்கும் அருள்மொழி வர்மனுக்குப் பிறந்த மகனே ராஜேந்திரச் சோழன் என்ற பெயரில் புகழ்பெறுகிறான்.

5. சுந்தர சோழர் காஞ்சிபுரம் பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்' என்று பெயர் பெறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: