பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் - பிரபலங்கள் சொல்லும் காரணம்

கார்த்தி மற்றும் திரிஷா

பட மூலாதாரம், LYCA Production

    • எழுதியவர், ச. பொன்மனச்செல்வன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது ‘பொன்னியின் செல்வன்’. எம்.ஜி.ஆர், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் ஷங்கர் என தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் படமாக எடுக்க முயன்று முடியாமல் போன இந்த நாவலை இயக்குநர் மணிரத்னமும் ஏற்கனவே ஒருமுறை முயன்று முடியாமல் போனது. ஆனாலும், மற்றொரு முயற்சியில் அது கைக்கூடியது. ஏராளமான கதாபாத்திரங்கள், சிக்கலான கதையமைப்பு கொண்ட நாவலை எப்படி திரைக்கதையாக்கி திரையில் படைக்கப்போகிறார் மணிரத்னம் என எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வந்தது ‘பொன்னியின் செல்வன்’.

விக்ரம்

பட மூலாதாரம், LYCA Production

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ் என பிரபலமான பல நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குநர் தோட்டா தரணி என இந்திய சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரம் பிடிக்கும், அதற்கான காரணம் என்ன? என சில பிரபலங்களும், ரசிகர்களும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா

பட மூலாதாரம், LYCA Production

ஸ்ரீகணேஷ்- திரைப்பட இயக்குநர், சென்னை

ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் துயரம்தான் பொன்னியின் செல்வனின் ஒட்டுமொத்த ஆதாரமும் என்பதால், எனக்கு அந்த கதாப்பாத்திரத்தின் மீது பெரும் ஆர்வமுண்டு. அவ்வளவு பெரிய பேரரசையும் தன் காதலுக்காக துறந்து, மீளா துயரில் ஓயாதிருக்கும் ஆதித்த கரிகாலன், உணர்ச்சியே என்னளவில் அந்த கதைக்கான ஜீவன்.

ஆதித்த கரிகாலனும், அந்த கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்திப் போன நடிகர் விக்ரமும் அடுத்த பாகத்தில் என்னவெல்லாம் நிகழ்த்தப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தோடே பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

நீலிமா இசை, திரைப்பட நடிகை, சென்னை

குந்தவையின் சாணக்யத்தனமும், பூங்குழலியின் தைரியமும் வெகுவாக கவர்ந்தது.

ஒரு பெண் கதாப்பாத்திரம் ஒரு பேரரசின் அதிகார எல்லைகளுக்குள் எப்படி யோசிக்க முடியும், அதனை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை குந்தவை கதாப்பாத்திரத்தின் வழியே நிறுவியிருப்பார் கல்கி. அந்த பாத்திரத்தின் வலிமை குறையாமல், திரைப்படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அரச குடும்பத்தில் பிறந்ததால் இயல்பிலேயே ராணிக்குரிய அம்சங்கள் குந்தவையிடம் இருக்க, மீனவ குலத்தில் பிறந்தாலும் ஒரு ராணிக்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்டவள் பூங்குழலி. சூறைக்காற்றும் துடுப்பால் புறந்தள்ளி, அருண்மொழி வர்மனை சேர்க்கும் வன்மையும், சொல்ல முடியா காதலை சுமந்திருக்கும் மென்மையும் என பூங்குழலி கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். பெண்ணியம் என்பது என்ன என்றால், தயங்காமல் பூங்குழலி என சொல்ல முடியும்.

குந்தவையின் ராஜ தந்திரம் எவ்வாறு சோழர்களின் வரலாற்றை தீர்மானிக்கும், அதனால் நிகழும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் என்ன, பூங்குழலி பொன்னியின் செல்வனிடம் காதலை சொல்வாளா என்பதை திரையில் காண ஆவலோடு காத்திருக்கிறேன். நாவல் மூலம் ஏற்கனவே முழுக் கதையும் தெரியும் என்றாலும், நாவலில் இல்லாததும் படத்தில் இருப்பதாக இயக்குநர் மணிரத்னம் சொல்லியிருப்பது மேலும் ஆர்வத்தை கூட்டியிருக்கிறது.

ச. கார்த்திக்- தொழில் முனைவோர், கோயம்புத்தூர்

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களில் எனக்குப் பிடித்தது நந்தினிதான். கல்கி அந்த நாவலை எழுதிய காலகட்டத்தில் அத்தனை துணிச்சல் மிகுந்ததாய் அந்த பெண் பாத்திரத்தை உருவாக்கியது இப்போதும் வியப்பாகவே இருக்கிறது. அதிகாரத்தின் மீதான போதையை ஒருவர் ருசித்துவிட்டால், அந்த வேட்கை எப்போதும் விடாது என்பதை நிறுவும் நந்தினியின் கதாப்பாத்திரம், நாவல் நெடுக துயரத்தையும் சுமந்தபடியே இருக்கும்.

கல்கி படைத்த நந்தினியை, இம்மி பிசகாமல் திரையில் உலவ வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். நந்தினி இப்படித்தான் இருப்பார் என வாசிப்பின்போது தோன்றிய எல்லா அம்சங்களும் பொருந்தும் ஐஸ்வர்யா ராயை, நந்தினி கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி கண்ட படக்குழு, அவர் திரையில் தோன்றியதும் மீதியையும் வசமாக்கிக் கொண்டது. அதிலும், குந்தவையை சந்திக்கும் காட்சியில் நந்தினியின் கண்களில் தெரியும் குரோதமும், பெரிய பழுவேட்டரையரை தழுவும்போது கண்களில் மிளிரும் வஞ்சமும் என நந்தினி தேவியின் எல்லா தந்திரங்களையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராயின் ‘நந்தினி’ கதாபாத்திரம் அடுத்தடுத்து என்ன செய்யும் என்பது நாவல் வழியாக ஏற்கனவே தெரியும் என்றாலும், திரையில் பார்க்கும் ஆர்வம் மிகுதியாகவே இருக்கிறது.

மணிரத்னம்

பட மூலாதாரம், LYCA Production

அமிர்தவள்ளி, குடும்பத் தலைவி, திருவாரூர்

பொன்னியின் செல்வன் நாவலை நான் என் கல்லூரி காலத்தில் வாசித்தேன். அப்போது, நான் உட்பட எங்கள் தோழிகள் பலருக்கும் பிடித்த கதாப்பாத்திரம் என்றால், அது வந்தியத்தேவன் கதாப்பாத்திரம்தான். நான் தஞ்சாவூர்காரி என்பதால், அந்த ஆடிப்பெருக்கும், காவிரி ஆற்றங்கரையும், குதிரையில் செல்லும் வந்தியத்தேவனும் நெருக்கமாக இருந்தது. பதின் பருவத்தில், வந்தியத்தேவன் போல் உண்மையில் ஒரு இளைஞன் இருப்பானா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அந்த துறுதுறுப்பும், வீரமும் எல்லோருக்கும் பிடிக்கச் செய்தது. வாசிக்கும்போது இருந்த வசீகரம், கொஞ்சம் குறைவுதான் என்றாலும் நடிகர் கார்த்தி, வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்திற்கு முடிந்தளவு உயிரூட்டியிருக்கிறார். இரண்டாம் பாகத்தில் நடக்கப் போகும் முக்கிய நகர்வுகள் பலவும் அந்தக் கதாப்பாத்திரத்தின் வழியாகவே இருக்கும் என்பதால், முதல்பாகத்தைக் காட்டிலும் வந்தியத்தேவன் இன்னும் விறுவிறுப்பாக இருப்பார் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

திரிஷா

பட மூலாதாரம், LYCA Production

ராம்குமார், திரைப்பட உதவி இயக்குநர், சென்னை

விக்ரம்

பட மூலாதாரம், LYCA Production

பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம்தான் ஒரு நங்கூரம் போல் பொன்னியின் செல்வன் கதையை தாங்கிப் பிடிக்கிறது. சிம்மாசனத்திற்கு எதிரானவராக அதே நேரம் நந்தினியின் சூழ்ச்சிக்குள்ளும் சிக்கிக் கொண்டு தடுமாறும் அந்தப் பாத்திரம் மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. சோழர்களுக்கு விசுவாசத்தை காட்டிக் கொண்டு, நந்தினியால் ஒருவித குற்றவுணர்ச்சியையும் சுமக்கும் பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தின் ஓட்டத்தை புரிந்துகொண்டால், மன்னராட்சி முறைகளையே முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நாவலில் இருக்குமளவிற்கு அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் திரையில் இல்லை என்றாலும், இனியான நகர்வுகள் பழுவேட்டரையருக்கு நெருக்கமானவை என்பதால் இரண்டாம் பாகத்தில் இன்னும் முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கும் சாத்தியம் அதிகம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தமிழ் வாசகர் பரப்பில் வெவ்வேறு வகையில், ரசிக்கப்பட்டுக் கொண்டே வரும் பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் திரையில் உயிர்பெற்றிருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ரசிக்கும்படியானதாக உலவும் என்பதை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உறுதிபடுத்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: