பொன்னியின் செல்வனில் வரும் ஆயிரம் ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம் இப்போது எங்கே இருக்கிறது?

பொன்னியின் செல்வன் கலங்கரை விளக்கம்
படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலில் மந்தாகினி தேவி இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி, குதித்து உயிரிழப்பதாக சுந்தர சோழர் கருதுகிறார்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குழகர் கோவில் ஆகியவை இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அங்கே எப்படிச் செல்வது ?

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் குறிப்பிடப்படும் இடங்கள், தற்போது பலரும் சென்று பார்த்துவரும் இடங்களாக மாறியுள்ளன. ஆனால், அந்தக் கதையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கமும் குழகர் கோவிலும் இன்னும் பலரது பார்வையில் படாத நிலையில்தான் இருக்கின்றன.

'பொன்னியின் செல்வன்' நாவலில் வீர நாராயணம் ஏரிக்கரை, கடம்பூர் அரண்மனை, கோடியக்கரை கலங்கரை விளக்கம், குழகர் கோவில், பழையாறை, தஞ்சாவூர், திருப்புறம்பியத்தில் உள்ள பிருத்வீபதியின் பள்ளிப்படை கோவில், நாகப்பட்டனத்தில் இருந்ததாகக் கூறப்படும் புத்த விகாரை, இலங்கையில் மதோட்டம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.

அவற்றில் நாகப்பட்டனம் புத்த விகாரையும் கடம்பூர் அரண்மனையும் முற்றிலும் அழிந்துவிட்டன. மீதமுள்ள இடங்களில் அதிகம் அறியப்படாதவையாக கோடியக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் குழகர் கோவிலும் இருக்கின்றன.

"அதோ கலங்கரை விளக்கத்தின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகிவிட்டது. தீ ஜுவாலைவிட்டு எரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்துகொண்டிருக்கும்" என்று அந்தக் கலங்கரை விளக்கத்தை கல்கி நமக்கு பொன்னியின் செல்வன் நாவலில் அறிமுகப்படுத்துகிறார்.

பொன்னியின் செல்வன் கலங்கரை விளக்கம்
படக்குறிப்பு, இந்த கலங்கரை விளக்கத்தை பராந்தகச் சோழன் கட்டியதாக கூறப்பட்டாலும் இதன் செங்கற்கற்களை வைத்துப் பார்க்கும்போது பல்லவர்கள் கட்டியதாக இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்

இந்த நாவலில், தான் கந்தர்வ மணம் புரிந்துகொண்ட மந்தாகினி தேவியை தேடி சுந்தரசோழர் கோடியக்கரைக்கு வருகிறார். ஆனால், ஓர் அமாவாசை தினத்தன்று அந்தக் கலங்கரை விளக்கத்தை கடல் நீர் சூழ்ந்திருந்தபோது, கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி, கடலில் குதித்து மந்தாகினி தேவி உயிரிழந்துவிட்டதாக அவரிடம் சொல்லப்படுகிறது.

நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையில் அமைந்துள்ள வன உயிரின சரணாலயத்தின் உட்பகுதியில் சில கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கடற்கரையை நெருங்கினால், இந்த பிரசித்தி பெற்ற கலங்கரை விளக்கத்தின் அடிப்பாகத்தை மட்டும் தற்போது காண முடியும்.

இந்தக் கலங்கரை விளக்கம் முதலாம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-953) கட்டப்பட்டதாக பலரும் கருதினாலும், அதற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

"அதில் உள்ள செங்கல் கற்கள், கட்டப்பட்ட முறை ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், அது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்" என்கிறார் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பு தொல்லியலாளரான டி. சத்தியமூர்த்தி.

'பொன்னியின் செல்வன்' நாவலை எழுதுவதற்கு முன்பாக கல்கி இந்த இடத்தை வந்து பார்த்தபோது, அந்தக் கலங்கரை விளக்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி பாழடைந்த நிலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. "அதன் பெரும் பகுதி எஞ்சியிருந்தது ஆவணங்களில் பதிவாகியுள்ளது" என்கிறார் டி. சத்தியமூர்த்தி. 1960களில் வீசிய புயலில் முற்றிலுமாக அந்தக் கலங்கரை விளக்கம் அழிந்துபோய், அடிப்பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.

பொன்னியின் செல்வன் கலங்கரை விளக்கம்
படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் கதை நடக்கும் காலத்தைப் போலவே, இப்போதும் இந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மான்கள் காணப்படுகின்றன.

அந்த எஞ்சியுள்ள பகுதியை வைத்துப் பார்க்கும்போது, அந்தக் கலங்கரை விளக்கம் பெரும் உயரம் கொண்டதாக இருந்திருக்க முடியாது என்பது புலப்படுகிறது. தற்போது புதிய கலங்கரை விளக்கம் இந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

கலங்கரை விளக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மான்கள் திரிவதைப் பற்றியும் குறிப்பிடுகிறார் கல்கி. இப்போதும் இந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மான்களைப் பார்க்க முடியும். அதனால், இந்தப் பகுதியே வன உயிரின சரணாலயமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இப்போது எஞ்சியுள்ள கலங்கரை விளக்கத்தின் சிதிலத்தைப் பார்க்க, வனத்துறையின் அனுமதி பெற்று, அவர்கள் வாகனத்தில் மட்டுமே செல்ல முடியும். செல்லும் வழியின் இரு புறமும் மான்களையும் பிற வன உயிர்களையும் பார்க்க முடியும்.

பொன்னியின் செல்வன் கோடியக்கரை குழகர் கோவில்
படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கோடியக்கரை குழகர் கோவில்

கோடியக்கரை குழகர் கோவில்

'பொன்னியின் செல்வன்' நாவலில் கோடியக்கரையில் இருந்து இடம்பெறும் இன்னொரு முக்கியமான தலம், அங்குள்ள குழகர் கோவில். கதை நடக்கும் காலகட்டத்தில் ஒரு காட்டின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது அந்தக் கோவில் ஒரு சாலையின் ஓரமாக இருந்தாலும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புகூட அந்தப் பகுதி நிச்சயம் காடாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது சுலபம்.

இந்தக் கோவிலின் மூலவர் குழகேசுவரர். இந்தக் கோவிலைப் பற்றி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடியிருப்பதால், குறைந்தது ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழைய கோவிலாக இது கருதப்படுகிறது.

தேவாரத்தின் ஏழாம் திருமுறையில் வரும் "கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்

குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ

கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்

அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே." என்ற பாடல் இந்தக் கோவிலைப் பற்றியதுதான்.

"இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றி தனியே இருக்கிறீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங்கூட்டமாக உமது புகழைப் பாடிக் கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!" என்பது இந்தப் பாட்டின் பொருள்.

பொன்னியின் செல்வன் கோடியக்கரை குழகர் கோவில்
படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலில் பூங்குழலி குழகர் கோவில் பிரகார மதில் சுவர்மேல் ஏறி நந்தியின் சிலை மீது சாய்ந்துகொள்வதைப் போல வர்ணிப்பார் கல்கி.

நாவலின் நாயகிகளில் ஒருவரான பூங்குழலி இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவதாக நாவலில் கூறப்படுகிறது. பூங்குழலி முதன்முதலில் அறிமுகமாகும்போது, கோவில் பிரகாரத்தின் மதில் சுவர்மேல் ஏறி, நந்தியின் சிலை மீது சாய்ந்துகொள்வதைப் போல வர்ணிப்பார் கல்கி.

இந்தக் கோவிலின் மதிலை இப்போது பார்த்தாலும், பூங்குழலியைப் போல எளிதில் ஏறக்கூடியதாகத்தான் இருக்கிறது.

சுமார் ஏழாம் நூற்றாண்டுவாக்கில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் பிறகு பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர்கள் ஆகியோரால் மேம்படுத்தப்பட்டது. மூன்றாம் ராஜராஜனின் 14ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இந்தக் கோவிலில் கிடைக்கிறது.

பராக்கிர பாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் இங்கே கிடைக்கிறது. ராஜகோபுரத்தின் நுழை வாயிலில் பாண்டியர்களின் சின்னமான இணை கயல்களும் சென்டும் இடம்பெற்றுள்ளன.

நாகப்பட்டனத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் கோடியக்காடு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தப் பழமையான குழகேசுவரர் கோவில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: