சோழர்கள் இலங்கையில் பௌத்த விஹாரைகளை நிறுவியது மத நல்லிணக்கமா? ராஜ தந்திரமா?

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை முழுவதும் சோழர்கள் சுமார் 77 வருடங்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்களின் அடையாளங்கள் பொலன்னறுவை மற்றும் அதன் சார்ந்த சில இடங்களில் மாத்திரமே இன்றும் காணப்படுகின்றன.

ஆனால், இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலப் பகுதியில் தமிழ் மொழியை அரச மொழியாகவும், இந்து மதத்தை அரச மதமாகவும் பின்பற்றியதுடன், அவர்கள் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளனர்.

சோழர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கியமைக்கான சான்று, அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விஹாரைகள் என்பது வரலாற்று ஆதாரங்களின் ஊடாக உறுதியாகின்றது.

இந்து ஆலயங்களை நிர்மாணித்ததை போன்றே பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும் சோழர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனூடாக பௌத்த மதத்திற்கு சோழர்களினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை உறுதியாகின்றது.

சோழர்கள் தென்னிலங்கையை ஆட்சி புரிந்த நிலையில், தென்னிலங்கையில் இந்து ஆலயங்களை அவர்கள் நிர்மாணித்துள்ளார்களா என பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்திடம் வினவியது.

தென்னிலங்கையில் இந்து ஆலயங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது என அவர் பதிலளித்தார்.

சில ஆலயங்கள் அழிவடைந்துள்ளதாகவும், சில ஆலயங்கள் அழிவடைந்து மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் அதனை உறுதிப்படுத்தும் என கூறிய அவர், தென்னிலங்கையில் நிச்சயமாக ஆலயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

தெற்கிலிருந்து வடக்கிற்கு வருவதற்கு முன்னர், மணி ஓசைகள், பூஜைகள் நடந்தது போன்ற பல குறிப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், ஆலயங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

அநுராதபுரத்தில் 20ற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களின் இடிபாடுகளை தொல்பொருள் திணைக்களம் 1850லிருந்து 1990 வரை கண்டுபிடித்துள்ளது.

பொலன்னறுவை பகுதியிலுள்ள ஆலயங்கள், பிரித்தானிய காலத்திலிருந்து பாதுகாக்கப்பட்டமையினால், அவற்றை ஆவணப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

மேலும், ஆவணப்படுத்த முடியாத பல இந்து ஆலயங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமை என்பதையும் மறுக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்

"சோழர்கள் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தார்கள்"

சோழர்களின் தந்திரோபயத்தின் ஒரு கட்டமாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

''சோழர்களுடைய ஒரு தந்திரோபாயமும் அதற்கு ஒரு காரணம். சோழர் காலத்தில் இந்து மதத்தை போல பௌத்தத்திற்கும் இடம்கொடுத்தார்கள். இந்து மதம் அளவிற்கு இல்லாவிட்டாலும், பௌத்த மதத்தை அவர்கள் நிராகரிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியில் படையெடுக்கும் போது, இந்து, பௌத்த, சமணம் என்று பார்ப்பதில்லை. அதேநேரத்தில் அவர்கள் ஒரு ராஜதந்திரத்தை கடைபிடித்தார்கள்.

மேற்கே இஸ்லாமியர்களின் வணிகத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் மேற்கு பகுதிகளை படிப்படியாக வெற்றிக் கொள்ளும் போது, தென்கிழக்காசியாவில் ஸ்ரீவிஜய பேரரசு, வணிகத்தில் போட்டியாக வந்ததனால், அவர்களை சமாதானப்படுத்துவதற்கு அவர்களுடைய மதத்தின் பௌத்த ஆலயங்களை தமிழகத்தில் அமைத்துக்கொண்டார்கள். சூடாமணி விகாரை மிக பிரபல்யமானது. வரலாற்று பழைமை வாய்ந்த ஒரு ஆலயம். எப்படி ஒரு ஸ்ரீவிஜய அரசை திருப்திப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம். சமய நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

தமிழகத்தில் பௌத்த கிராமங்களை உருவாக்கினார்களோ, அதேபோல தான் கிழக்கு இலங்கையில் இன்று வெல்கம் விகாரை என்று அழைக்கப்படுகின்ற விகாரை சோழர் காலத்தில், ராஜராஜ பெரும்பள்ளி என்று தான் அழைக்கப்பட்டது. தெற்காசியாவில் தமிழ் பௌத்தம் சார்ந்த திராவிட கழமரபில் கட்டப்பட்ட ஒரு உண்ணதமான பௌத்த விகாரை என்றால், அது ராஜராஜ பெரும்பள்ளி என நான் நினைக்கின்றேன். அவர்களுடைய காலத்தில் தான் அது அமைக்கப்பட்டது.

கடல் சார் வாணிபத்தில் கைப்பற்றிய சொத்துகளை வைத்து பெரும்பாலும் சிவாலயங்களை அமைத்துக்கொண்டார்கள். அதுவும் தங்களுடைய ஆதிக்கம் நிலவிய இடங்களில் தான் அவர்கள் அதையும் அமைத்துக்கொண்டார்கள். தமிழகத்தில் எப்படி பெரும் கோவில்களை அமைத்தார்களோ, அதேபோல தான் இலங்கையிலும் பொலன்னறுவை, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் அவர்களுடைய ஆலயங்கள் அமைக்கப்பட்டன." என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்
படக்குறிப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்

பொலன்னறுவையில் மாத்திரம் சோழர் அடையாளங்களை பாதுகாப்பது ஏன்?

பிரித்தானியாவைச் சேர்ந்த பெல் என்பவர் 1850ம் ஆண்டு முதல் நீண்ட காலம் பொலன்னறுவையில் ஆகழாய்வு செய்ததன் மூலம், அங்கு 12ற்கு மேற்பட்ட சிவன், விஸ்ணு, விநாயகர் வழிபாட்டு தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் பிரித்தானிய ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பிரித்தானிய ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட சோழர்களின் அடையாளங்களை, இலங்கை தொல்லியல் திணைக்களம் இன்றும் பாதுகாப்பதன் மூலம் சோழர்களின் பண்பாட்டு சின்னங்களை பொலன்னறுவையில் மாத்திரம் பார்ப்பதில் ஆச்சரியம் கிடையாது என அவர் கூறுகின்றார்.

ஆனால், பொலன்னறுவைக்கு வெளியில் பதவிய, கந்தளாய், திருகோணமலை போன்ற பகுதிகளில் சோழர்களின் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் பற்றிய சான்றுகளை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பாக மாந்தோட்டத்தில் சோழர்களினால் இரு சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்ற போதிலும், அந்த ஆலயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேவேளை, சில சோழர் காலத்து ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டாலும், அதை சரிவர பாதுகாக்கவில்லை என்பதையும் கூற வேண்டும்.

பொலன்னறுவையில் சோழர் அடையாளம்

''குமரன்கடவை என்ற பழைய பெயரில் அழைக்கப்பட்ட கோமாரங்கடவல பகுதியில் ஒரு பெரிய ஆலயமொன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை ஓரளவிற்கு தொல்லியல் திணைக்களம் பாதுகாத்திருந்தாலும், அதை பற்றி தகவல்கள் யாருக்கும் தெரியாது. அந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 22 வரிகளில் சிறிய தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டதன் நோக்கம், அங்கிருந்த சிவாலயத்தோடு, முதல் முறையாக சக்திக்கும், சிவனுக்கும் தனித்தனி கோவில்கள் அமைத்த செய்தி அந்த கல்வெட்டில் சொல்லப்படுகின்றது." என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரித்தானிய ஆட்சியில் பொலன்னறுவையில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டமையே, இன்றும் அவை அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றமைக்கான காரணம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: