‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி: சங்கத்தமிழ் வசனம், ஆடை அலங்காரம் - ஐடியா எப்படி?

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், TWITTER/DHARANI RAJENDRAN

    • எழுதியவர், பொன்மனச்செல்வன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறிய பாண்டியர்கள் - எயினர்கள் இடையான போரை மையப்படுத்தி உருவான ‘யாத்திசை’ திரைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழர்களும், வேளிர், எயினர் போன்ற பழங்குடி இனக்குழுக்களும் சேர்ந்து போர் தொடுக்கின்றன. போர் முடிவில் ரணதீர பாண்டியன் தலைமையிலான பாண்டியர்கள் வெற்றியடைகின்றனர். அதனால், பாண்டிய பேரரசு சோழக் கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. ஒட்டுமொத்த மொத்த எதிரிகளையும் அழிக்கிறது.

சோழர்களோடு அவர்களுக்கு துணை புரிந்த எயினர்களும் தப்பி ஒளிகிறார்கள். 'ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் மீட்டுத் தருவேன்' எனச் சபதமேற்று, தன் சிறு படையுடன், சோழர்களையும் திரட்டி ரணதீரனை எதிர்த்து களமிறங்குகிறான் எயினர் குடி இளைஞன் கொதி. வரலாறும், புனைவும் கலந்து யாத்திசையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன்.

வரலாற்று திரைப்படங்கள் என்பது பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், பார்வையாளனுக்கு நெருக்கமானதாக, அந்த வரலாற்றை கிரகித்து கொள்ளும் வகையிலானதாக இருக்க வேண்டும். அந்தவகையில், யாத்திசை தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படைப்பு என்று படம் வெளியானது முதலே விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.

யாத்திசை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சங்கத் தமிழும், ஆடை வடிவமைப்பு, கலை, சண்டைக் காட்சியமைப்புகள் போன்றவையும் பார்வையாளர்களை கவனிக்க வைத்திருக்கின்றன.

யாத்திசை படத்திற்கான பெரும்பாலான குறிப்புகள் கோவில்கள் மற்றும் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய சங்க இலக்கிய, காப்பு இலக்கிய நூல்களில் இருந்தே எடுக்கப்பட்டதாக இயக்குநர் தரணி இராசேந்திரன் தெரிவித்துள்ளார். படத்தின் கதையோட்டத்தை தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப வசனங்கள் சங்கத் தமிழில் இருப்பதே பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்து அதற்காக சில ஆண்டுகளாகவே பணியாற்றியிருக்கின்றனர்.

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், DHARANI RAJANDRAN

திருமுருகன் காளிலிங்கம் என்பவரே தற்போதைய நடையில் எழுதப்பட்ட வசனங்களை சங்கத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இவர்கள் கூட்டணியிலேயே ஒன்பது – தொண்டு, பேசு – கிள, சுழியம் – பாழ், மனசு – உள், கடவுள் – கா, சிங்கம் – மடங்கல், திமிங்கலம் – கோரா என மாறி, இப்போது பார்வையாளர்களிடத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கத் தமிழ் வசனங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பு தங்கள் குழுவினருக்கு பெரும் அங்கீகாரம் என்று உவகையோடு தெரிவிக்கிறார் இயக்குநர்.

யாத்திசை படத்திற்காக பல்வேறு ஆய்வுகளை படக்குழுவினர் மேற்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் முக்கியமானது, ம.சோ.விக்டர் சொல்லாய்வு நூல் என குறிப்பிடுகிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன். அவரின் பல்வேறு நூல்களில் இருந்தே படத்தின் மொழி, கலை உள்ளிட்டவற்றிற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதை திரைக்கதைக்கு ஏற்ப மெருகேற்றி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். தென் திசை என்பதைக் குறிப்பிடும் ’யாத்திசை’ என்கிற தலைப்பும் ம. சோ. விக்டரிடன் இருந்தே பெற்றிருக்கின்றனர். அதேபோல், தேவநேய பாவணாரின் குறிப்புகளும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், DHARANI RAJENDRAN

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், DHARANI RAJENDRAN

தமிழ் நில அகழாய்வுகள் பண்டைய தமிழ் நாகரிகம் குறித்த பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில் ‘யாத்திசை’ அதற்கு மேலும் வலுகூட்டும் வகையிலேயே உருவாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். யாத்திசை படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் குறித்து இயக்குநர் குறிப்பிடுகையில், கோவில் சிற்பங்களின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளின் கோவில் சிற்பங்களில் இருந்தே படத்திற்கான ஆடைகளை வடிவமைத்திருக்கின்றனர். குறிப்பாக, படத்தின் நாயகி கதாபாத்திரம் பயன்படுத்தியிருக்கும் மணிகளால் உருவாக்கப்பட்ட மேலாடை, பல்லவ சிற்பங்கள் பலவற்றில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே, மற்ற கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்புகளையும் மேற்கொண்டதாகவும் இயக்குநர் தரணி ராசேந்திரன் குறிப்பிடுகிறார்.

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், DHARANI RAJENDRAN

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம், DHARANI RAJENDRAN

யாத்திசை திரைப்படம் மிக எளிமையாகவும், ஆழமாகவும் தமிழர்களின் வரலாற்றை கண்முன் விரித்துக் காட்டுகிறது. எயினர் குழுவினர் போருக்குத் தயாராகும் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கிறது. நடுக்காட்டில் தங்கள் தெய்வமான கொற்றவைக்கு பலிகொடுத்து வணங்கி, போரில் தங்களுக்கு துணைபுரிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்கள்.

இதுவரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்று புனைவுகள் பதிவு செய்திராத இந்தக் காட்சியை வெவ்வேறு நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் இது இப்படி நடந்திருக்கலாம் என்கிற யூக அடிப்படையிலுமே உருவாக்கியதாக குறிப்பிடுகிறார் இயக்குநர். அதேநேரம், ஒரு போர்க் காட்சிக்கு தயாராகும் முன்பு படைவீரர்களின் மனநிலை, அவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் மூர்க்கம், அவர்களின் நம்பிக்கை ஆகியவை பார்வையாளர்கள் மனம் விட்டு நீங்காத வகையில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படமாக்கியதாகவும் தெரிவிக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

பாண்டிய பேரரசனை அழித்தொழிக்கும் நோக்கும் எயினரின் சில நூறுபேர் கொண்ட சிறுகுழு ஒன்று கிளம்புவதும், அவர்கள் கையாளும் பிரத்யேகமான போர் யுத்திகளும் போர் ஆயுதங்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

இவற்றை குறிப்பிடுகையில், ஒரு போர் காலையில் தொடங்கி சூரியன் மறையும்போது நிறுத்தப்படும், விதிகள் கையாளப்படும் என்பதெல்லாம் கூட மிகைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள்தான் என கூறும் இயக்குநர், ஒரு போரில் எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்பதை தாண்டி எந்தவிதமான நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும் சாத்தியம் மிகவும் குறைவு எனவும் பதிவு செய்கிறார்.

மேலும், தமிழ் நில போர்கள் குறித்த துல்லியமான தெளிவுகள் இல்லாத நிலையில், சிற்சில குறிப்புகளை வைத்தே சண்டை வடிவமைப்பாளர் ஓம் சிவ பிரகாஷ் மற்றும் அவரது குழுவினருடன் ஆலோசித்து படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சண்டை முறைகள் ஆகியவற்றை வடிவமைத்தோம். அதனாலேயே, போரில் எந்தவிதமான இரக்கமும் இருக்காது என்கிற வகையில் இரத்தம் தெறிக்கதெறிக்க சண்டைக் காட்சிகளை படமாக்க முடிந்தது எனவும் தெரிவிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இது வரலாற்று புனைவுகளின் காலம். பொன்னியின் செல்வன் தொடங்கி வைத்ததை, ’யாத்திசை’ வேறு ஒரு பாதையில் பயணித்து கவனிக்க வைத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வியாபார ரீதியாக முன்னிறுத்திக் கொள்ளும் நிலையில், சிறு முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் யாத்திசைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இன்னுமின்னும் வரலாற்று படங்கள் எடுக்கும் ஆர்வத்தை படைப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

பிரமாண்டம் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றியடைய முடியும் நம்பிக்கையையும் ’யாத்திசை’ விதைத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: