கிரீன்லாந்து: டிரம்பின் புதிய மிரட்டல் பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கூறுவது என்ன?

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், டிரம்பின் சுங்கவரி மிரட்டல், ஐரோப்பா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை எதிர்த்து, கிரீன்லாந்தில் சனிக்கிழமையன்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • எழுதியவர், ஹென்றி ஆஸ்டியர்
    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 கூட்டணி நாடுகள் மீது புதிய சுங்க வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று யுனைடட் கிங்டம் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், 'இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என விமர்சித்தார்.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 10% சுங்கவரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது 25% வரை உயர்த்தப்படலாம் என்றும் டிரம்ப் அறிவித்ததையடுத்து ஐரோப்பிய தலைவர்களின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. கிரீன்லாந்து விவகாரத்தில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

டென்மார்க் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்து, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதை ராணுவ பலம் கொண்டு பலவந்தமாக கைப்பற்றும் வாய்ப்பையும் அவர் நிராகரிக்கவில்லை.

இதற்கிடையில், அமெரிக்காவின் முன்மொழிவுக்கு எதிராக சனிக்கிழமை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கிரீன்லாந்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அது வளங்கள் செறிந்த பகுதி. வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் இடையிலான புவியியல் ரீதியான அதன் இருப்பு காரணமாக, ஏவுகணை தாக்குதல்கள் நிகழும் போது முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளுக்கும் (early warning systems), அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களை கண்காணிப்பதற்கும் இது மிகவும் உகந்த இடமாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு, கிரீன்லாந்தை அமெரிக்கா "எளிய வழியிலோ அல்லது கடினமான வழியிலோ" பெற்றுக்கொள்ளும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஒன்றிணைந்துள்ளன. ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, நேட்டோவின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், 'ரிக்கானிசன்ஸ்' (உளவு/ஆய்வு) பணியாகக் கூறப்படும் நடவடிக்கையின் கீழ், குறைந்த எண்ணிக்கையிலான படையினரை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளன.

சனிக்கிழமை தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் புதிய வரிகளை அறிவித்த டிரம்ப், அந்த நாடுகள் மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன என்று கூறியுள்ளார். இங்கு ஆபத்தில் இருப்பது நம் பூமியின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் உயிர்வாழ்தல் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள 10% வரி, ஜூன் மாதத்தில் 25% ஆக உயர்த்தப்படும் என்றும், கிரீன்லாந்தை முழுமையாக வாங்கும் ஒப்பந்தம் நிறைவேறும் வரை அந்த வரி தொடரும் என்றும் டிரம்ப் கூறினார்.

இதற்குப் பதிலளித்த கியர் ஸ்டார்மர், "நேட்டோ கூட்டாளிகளின் கூட்டு பாதுகாப்பை நோக்கி செயல்படுவதற்காக கூட்டணி நாடுகளுக்கு வரி விதிப்பது முற்றிலும் தவறானது. இதை அமெரிக்க நிர்வாகத்துக்கு நேரடியாக நாங்கள் எடுத்துச் சொல்வோம்" என்றார்.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், டிரம்பின் சுங்கவரி மிரட்டல், ஐரோப்பா

பட மூலாதாரம், Reuters

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், "இந்த சூழலில் வரி விதிப்பு மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எந்தவித அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அசரமாட்டோம்" என்று கூறினார்.

ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்சன், "நாங்கள் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்" என்று கூறினார்.

மேலும், "ஒருங்கிணைந்து பதில் தருவதற்காக ஸ்வீடன் தற்போது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே மற்றும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா, "சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் உறுதியாக இருக்கும். அது இயல்பாகவே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எல்லைகளிலிருந்து தொடங்குகிறது" என்று கூறினார்.

"இந்த மிரட்டல் ஆச்சரியமளிக்கிறது" என்று டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லொக்கே ராஸ்முசென் கூறினார்.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் தலைவரான ஜெர்மனியைச் சேர்ந்த மான்ஃப்ரெட் வெபர், டிரம்பின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையிலான இன்னும் அங்கீகரிக்கப்படாத வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு அமெரிக்கா 15% வரி விதிப்பதும், 27 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் சில அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரியுடன் தனது சந்தைகளை திறப்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வெபர், "இபிபி, ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால் கிரீன்லாந்து குறித்து டொனால்ட் டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களின் பின்னணியில், இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது" என்று பதிவிட்டார்.

மேலும், "அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரி விதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், "வடக்கு பிராந்தியத்தில் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்ள டென்மார்க்குக்கு தேவையான வளங்களோ திறனோ இல்லை" என்று கூறினார்.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், டிரம்பின் சுங்கவரி மிரட்டல், ஐரோப்பா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்க பாதுகாப்பின் கீழ் கிரீன்லாந்து மக்களின் வாழ்க்கை இன்னும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், செழிப்பானதாகவும் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப், சுங்கவரி என்பது தனக்கு மிகவும் பிடித்த சொல் எனப் பலமுறை கூறியுள்ளார். உலகின் பல நாடுகள் வெள்ளை மாளிகை விரும்பும் முடிவுகளுக்கு ஏற்ப தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்படி செய்ய, சுங்கவரியை ஓர் அழுத்தம் தரும் கருவியாகவே பார்க்கிறார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்ப்புகளை தாண்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சியை அவர் தீவிரமாக்கியிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் முதன்முதலில் சுங்கவரிகள் பற்றித் தெரிவித்தார். அந்த அறிவிப்புக்கான உடனடித் தூண்டுதல் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமீப வாரங்களில், ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உட்பட பல்வேறு தெரிவுகள் இன்னும் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். இருந்தாலும், அமெரிக்கா மற்றும் டென்மார்க் அதிகாரிகள், தீவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு உயர்நிலை பணிக்குழுவை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு சில நாட்களுக்குப் பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டனின் தூதரக மற்றும் அரசியல் வட்டாரங்களில், இந்த அறிவிப்பு டென்மார்க் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கான 'சிறந்த சாத்தியமான நிலை' (best-case scenario) என்று பலராலும் பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் வெள்ளை மாளிகையிலிருந்து எந்த முடிவோ அல்லது மேலதிக பதற்ற உயர்வோ (escalation) தள்ளிப் போகும் என்ற நம்பிக்கை அதில் இருந்தது.

ஆனால், புதிய சுங்கவரிகள் இந்த விவகாரத்தில் திடீரென அவசர உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் முக்கியமான நேட்டோ கூட்டாளிகள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளுடனான உறவுகளையும் பதற்றமடையச் செய்துள்ளன.

கிரீன்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், டிரம்பின் சுங்கவரி மிரட்டல், ஐரோப்பா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கோபன்ஹேகனில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள், கிரீன்லாந்து மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவாக கிரீன்லாந்தின் வெள்ளை மற்றும் சிவப்பு நிறக் கொடியை அசைத்தனர்

கருத்துக் கணிப்புகளின்படி, அமெரிக்காவுடன் இணைவதை 85% கிரீன்லாந்து மக்கள் எதிர்க்கின்றனர்.

டிரம்பின் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டங்களுக்கு எதிராக, சனிக்கிழமை கிரீன்லாந்தின் தலைநகர் நூக் உட்பட டென்மார்க்கின் பல நகரங்களில் (சுங்கவரி அறிவிப்புக்கு முன்பே) போராட்டங்கள் நடைபெற்றன.

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில், 'Hands Off Greenland' (கிரீன்லாந்தை விட்டுவிடுங்கள்), 'Greenland for Greenlanders' (கிரீன்லாந்து கிரீன்லாந்து மக்களுக்கே) என்று எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

"டென்மார்க்கின் அரச அமைப்புக்கும், கிரீன்லாந்தின் சுய நிர்ணய உரிமைக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்று கிரீன்லாந்து அமைப்புகளின் கூட்டமைப்பின்(Inuit) தலைவர் கமில்லா சீஸிங் தெரிவித்தார்.

நூக் நகரில், கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் போராட்டக்காரர்களுடன் இணைந்து, 'Greenland is not for sale' (கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல), 'We shape our future' (எங்கள் எதிர்காலத்தை நாங்களே வடிவமைப்போம்) என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்றார்.

இந்தப் பேரணிகள் அமெரிக்க நாடாளுமன்ற குழு கோபன்ஹேகனுக்கு வருகை தரும் நேரத்தில் நடந்தன. அதன் தலைவரான ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் கூன்ஸ், டிரம்பின் பேச்சு ஆக்கபூர்வமானது அல்ல என்று கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு