'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் தலித் மாணவரை அரை நிர்வாணம் ஆக்கியதா தமிழக காவல்துறை?

அரவிந்தசாமி
படக்குறிப்பு, அரவிந்தசாமி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் 'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் பாதுகாப்பு பணியில் இருந்த சில காவலர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவரும் பட்டம் பெற வந்தவருமான அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அறையில் பூட்டி வைத்து அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். அரவிந்தசாமி அவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி.

அரவிந்தசாமி எம்ஏ., எம்.பில் (MA M.Phil) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021ஆம் ஆண்டு முடித்து விட்டு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் (Mass Communication) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் 13வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும், காலை 8 மணிக்கு அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து அரவிந்தசாமி பட்டம் பெற சக மாணவர்களுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தார்.

ஆனால், அரவிந்தசாமி ஆளுநருக்கு எதிராக கருப்பு பேட்ச் மற்றும் கருப்பு மாஸ்க் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு ஆளுநர் வளாகத்தை விட்டு வெளியே சென்றவுடன் அவர் விடுவிக்கப்பட்டு பின் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

சர்ச்சை என்ன?

அரவிந்தசாமி

ஆனால், அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அவரது ஆணுறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சில ஊடகங்களில் தகவல்கள் வெளி வந்த நிலையில், நடந்தது என்ன என்று அரவிந்தசாமியிடம் பிபிசி தமிழ் கேட்டதும் விரிவாக நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

"நான் தஞ்சை மாவட்டம் இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டு பட்டபடிப்பை முடித்து விட்டு கடந்த திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்க சென்றிருந்தேன்.

எங்கள் கிராமத்தில் தலித் சமூகத்தினர் தனியாக குடியிருப்புகளில் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் நான் தான் 'முதல் பட்டதாரி' என்பதால் எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துச் சென்று அரங்கில் பார்வையாளர்கள் பகுதியில் அமர வைத்து விட்டு நான் கத்திரிப்பூ கலர் (ஊதா) சட்டைக்கு மேல் வெள்ளை கலர் பட்டமளிப்பு உடை அணிந்து சக மாணவர்களுடன் அமர்ந்திருந்தேன்.

காலை சரியாக 9.15க்கு முதலில் காவலர்கள் சிலர் வந்து என்னை விசாரித்துச் சென்றனர். பின்னர் மாநில உளவுத்துறை (எஸ்பிசிஐடி) அதிகாரிகள் எனது அருகே வந்தனர். எனக்கு தலையில் சுருட்டை முடி என்பதால் எனது தலைக்குள் கை விரல்களை விட்டு தூக்கிப் பார்த்து எதுவும் இருக்கிறதா என கேட்டுக் கொண்டே எனது கைக்குட்டையை எடுத்து உதறிப் பார்த்தனர். பிறகு என்னை அவர்கள் சோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸார் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறை மின்சார கட்டுப்பாட்டு அறை என்பதால் மிகவும் வெப்பமாக இருந்தது.

எனது மேல் சட்டை மற்றும் பேண்டை கழற்றச் செய்தனர். நான் கருப்பு நிறத்தில் உள்ளாடைகள் அணிந்திருப்பதை பார்த்த காவல்துறையினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தது போல் தெரிகிறதே என கேட்டு என் ஆணுறுப்பிற்கு மேல் கையை வைத்து சோதனை செய்தார்கள்," என்று அரவிந்தசாமி கூறினார்.

கருப்பு நிற உள்ளாடை அணிந்தது குற்றமா?

அரவிந்தசாமி

தொடர்ந்து பேசிய அரவிந்தசாமி, "குடும்பத்துடன் பட்டம் பெற வந்துள்ள நான் எப்படி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றேன். ஆனால் அதை ஏற்க மறுத்த போலீஸார், பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல போராட்டங்களை செய்ததால் அளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கூறி அந்த அறையிலேயே என்னை இருக்கச் செய்தனர்.

காவல் துறையினர் சொல்வதை போல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பலமுறை குடிதண்ணீர், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்காக இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து மனுக்களை அளித்துள்ளேன். ஆனால், போராட்டம் நடத்தியதில்லை.

பின்னர் சரியாக 12:10க்கு என்னை டிஐஜி சிறப்பு பிரிவு போலீசார் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை அதே அறைக்குள் பிற்பகல் 1:30 மணி வரை பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லும்போது, நான் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார்கள் என குரல் எழுப்பினேன். உடனடியாக இடதுசாரி கட்சியினர் ஒன்றிணைந்து காவல்துறையிடம் என்னை அழைத்துச் செல்வதற்கு காரணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில் மாலையில் நான் விடுவிக்கப்பட்டேன்.

ஆளுநர் ரவி

பின்னர் பல்கலைக்கழகத்திற்கு வந்து என்னுடைய பட்டத்தை கேட்கும்போது நான் உட்பட என்னுடன் சேர்ந்து நான்கு மாணவிகள் பட்டத்தை காணவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

நான் படித்த பாடப்பிரிவு துறையின் ஆசிரியர்களிடம் கேட்டதற்கு பல்கலைக்கழக தேர்வு மைய துறையிடம் இருந்து பட்டத்தை வாங்கிக் கொடுத்தனர்.

எனது குடும்பத்துடன் பட்டம் வாங்க வந்த என்னை தனி அறையில் அடைத்து வைத்து சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் கூட, மூன்று காவலர்களை உடன் அனுப்பி சிறுநீர் கழிக்கும் வரை அருகிலேயே இருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இது எனக்கு மிகவும் மன வேதனையை அளித்துள்ளது.

இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன். வழக்கு தொடர தயாராகி வருகிறேன் என்று அரவிந்தசாமி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் படிக்கும் போது கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் அவர்கள் இத்தனை ஆண்டு கஷ்டப்பட்டு படித்ததற்கு வாங்கும் மகிழ்ச்சியான தருணம். பட்டமளிப்பு விழாவில் எதிர்ப்பு தெரிவிக்க விரும்ப மாட்டார்கள். என் குடும்பத்துடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் வாங்க வந்த என்னை காவல்துறை வேதனை அடையச் செய்தனர்.

எனக்கு நடந்ததை போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது, யாருடைய சட்டையும் கழட்ட படக் கூடாது என் அரவிந்தசாமி கூறினார்.

பல்கலைக்கழகம் விளக்கம்

தஞ்சை பல்கலைக்கழகம்

அரவிந்தசாமியின் குற்றச்சாட்டு குறித்து தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

"ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தகுதியான மாணவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. துணை வேந்தர் ஆளுநருடன் விழா மேடையில் இருந்ததால் மாணவர்கள் அமர்ந்திருந்த அரங்கில் என்ன நடந்தது என பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கு தெரியாது. மாணவர் அரவிந்தசாமி பட்டமளிப்பு அரங்கில் அமர்ந்திருந்ததாகவும், அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அழைத்துச் சென்றதாகவும் நிகழ்ச்சி முடிந்ததற்கு பின்னர் ஆசிரியர் சொல்லி துணை வேந்தர் கவனத்திற்கு வந்தது.

காவல்துறை சார்பில் எவ்வித முன்னறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு மாணவரையும் வெளியேற்றுமாறு பல்கலைக்கழகம் உத்தரவிடவில்லை.

மாணவர் அரவிந்தசாமியை அரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல எந்த அனுமதியும் போலீசார் பல்கலைக்கழகத்திடம் கேட்கவில்லை. இதுவரை காவல்துறை சார்பில் உயர் அதிகாரிகளோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கவில்லை.

மேலும் அந்த மாணவர் பட்டம் காணாமல் போனதாக மாணவர் புகார் தெரிவித்துள்ளதாக அறிகிறோம். மாணவர்களுக்கு இரண்டு வழிகளில் பட்டம் வழங்கப்படும். ஒன்று பட்டமளிப்பு விழாவில் நேரடியாக வந்து பட்டத்தை பெற்று கொள்வது அல்லது தபால் மூலம் அனுப்புவது.

இதில் மாணவர் அரவிந்தசாமி தபால் மூலம் பட்டத்தை பெற்றுக் கொள்வதாக பாடப்பிரிவு துறையில் எழுதி கொடுத்துள்ளார். எனவே அவரை போன்ற சில மாணவர்களுக்கு தபாலில் பட்டத்தை அனுப்புவதற்கு தனியாக வைக்கப்பட்டிருந்தது.

அரவிந்தசாமி திடீரென முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் பட்டம் பெற வந்ததால் அவரது பட்டத்தை தனியாக எடுத்து வைத்திருந்தோம். நேரடியாக வந்து கேட்டதால் உடனடியாக பட்டம் வழங்கப்பட்டது," என்று பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் என்ன சொல்கிறது?

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பானை கொடுத்து அதற்கான வரிசைப்படி மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் ஆளுநர் நேரடியாக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அடுத்த பகுதியில் துணைவேந்தர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

ஆளுநர் பட்டம் அளிக்கும் பகுதியில் கலந்து கொண்ட இருவர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பிரச்னைக்குரிய நபர்கள் என கருதப்பட்டதால் அவர்களை ஆளுநர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது பகுதியில் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதில் ஒரு மாணவன் போலீசார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இரண்டாவது பகுதியில் பட்டத்தை பெற்று சென்றார். ஆனால் மாணவர் அரவிந்தசாமி ஆளுநரிடம் தான் பட்டம் வாங்குவேன் என கூறியதால் பாதுகாப்பு கருதி அவரை தனி அறையில் வைத்திருந்தோம்.

போலீசார் திட்டமிட்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர் அரவிந்தசாமியை பட்டம் வாங்க விடாமல் தடுத்து அவமரியாதை செய்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே ஆளுநரிடம் இருந்து அவர் பட்டம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் வழங்கிவிட்டது என்று காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

ஆளுநர் தரப்பு பதில்

இந்த நிலையில், அரவிந்தசாமி சம்பவம் தொடர்பாக ஆளுநருக்கு தெரிய வந்ததா என்று அவரது ஆலோசிகர் திருஞானசம்பந்தத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

"நிகழ்ச்சி நடந்த தினத்தன்று மாலையில்தான் அப்படியொரு சம்பவம் நடந்ததாக எங்களுடைய கவனத்துக்கு வந்தது. ஆளுநருக்கு உடனடியாக இதை கூறியபோது, மாணவர் அரவிந்தசாமியை விடுவித்து அவருக்குரிய பட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் கூறினார். உடனடியாக பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பேசப்பட்டது," என்று ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்தார்.

மேலும், "அரவிந்தசாமியை ஆளுநர் சார்பில் நான் தொடர்பு கொண்டு பட்டத்தை வழங்கினார்களா என்பதை பேசி உறுதிப்படுத்தினேன். அப்போதுதான் தனக்கு நடந்தது குறித்து அரவிந்தசாமி விவரித்தார்," என்று ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: