ஐ.பி.எல். சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லக்னௌவின் 'சூப்பர்' ஆட்டம் - பஞ்சாப் வியூகம் தகர்ந்து போனது எங்கே?

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மொஹாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய வெற்றியை லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பெற்றது. இதன் மூலம் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலிருந்து 2வது இடத்துக்கு முன்னேறி அனைத்து அணிகளுக்கும் சவால் விடுத்துள்ளது.

‘தோற்கப்போகிறோம்’ எனத் தெரிந்து கொண்டு சேஸிங்கில் ஒரு அணி களமிறங்கினால் அந்த ஆட்டம் ஸ்வாரஸ்யமாக இருக்குமா என்ன!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து 56 ரன்களில் தோல்வி அடைந்தது.

2வது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்த இமாலய வெற்றியின் மூலம் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. 8 போட்டிகளில் ஆடிய லக்னெள அணி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் அபாரமாக முன்னேறி 2வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அதேசமயம், 10 புள்ளிகளுடன் இருந்தாலும், சிஎஸ்கே அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3வது இடத்திலும் உள்ளன.

படைக்கப்பட்ட சாதனைகள் என்ன?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சேர்த்த 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் என்பது ஐபிஎல் வரலாற்றில் 2வது மிகப்பெரிய ஸ்கோராகும். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸுக்கு எதிராக ஆர்சிபி அணி 5விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் கெய்ல் 175 ரன்கள் அடித்தது ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நெருங்கக்கூட முடியாத சாதனையாக தொடர்கிறது.

இதேபோல், நடப்பு தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து 458 ரன்களை சேர்த்தன. ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 19 முறை அணிகள் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ளன. கடந்த சீசனில் 18 முறையாக இருந்தது.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் வெற்றி

லக்னெள அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பேட்ஸ்மேன்களுக்கான வெற்றியாகும். குறிப்பாக ஸ்டாய்னிஸ்(40 பந்துகளில் 72), மேயர்ஸ் (24 பந்துகளில் 54), பதோனி(24 பந்துகளில் 43), நிகோலஸ் பூரன்(19 பந்துகளில் 45) ஆகியோரின் அட்டகாசமான அதிரடி ஆட்டம்தான் இமாலய ஸ்கோருக்கு காரணமாகும்.

257 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிட்டபோதே, லக்னெள அணியின் வெற்றியும் உறுதியாகிவிட்டது.

இந்த ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் 27 பவுண்டரிகள், 14 சிக்ஸர்களை விளாசினர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த 3வது அணியாகும்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 45 பவுண்டரிகளும் 22 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய பாதிப்பை புள்ளிப்பட்டியலில் ஏற்படுத்தியுள்ளது. 8 புள்ளிகள் எடுத்திருந்த போதிலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 7வது இடத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

“கில்லர்” கைல்

கைல் மேயர்ஸ் தொடக்கத்தில் இருந்தே தனது சரவெடி ஆட்டத்தை காண்பித்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய மேயர்ஸ், அறிமுக வீரர் குர்னூர் பிரார் ஓவரில் ப்ரீஹிட்டில் மிட்விக்கெட்டில் இமாலய சிக்ஸரை விளாசினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர் சிக்கந்தர் ராசா வந்தபோதிலும், 5வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை மேயர்ஸ் குவித்து 20 பந்துகளில் அரைசதம் அடித்து 54ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் மேயர்ஸ் 4வது அரைசதமாகும், அதில் 2 அரைசதங்கள் பவர்ப்ளே ஓவருக்குள் அடிக்கப்பட்டவவை.

வாய்ப்பை தவறவிட்ட ராகுல்

கேப்டன் ராகுலுக்கு கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் தவறவிட்ட போதிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை. 12 ரன் அடித்த நிலையில் ரபாடா ஓவரில் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பவர்ப்ளே ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 74 ரன்கள் குவித்து.

அதன்பின், பதோனி, ஸ்டாய்னிஸ் கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பஞ்சு, பஞ்சாகப் பிய்த்து உதறியது. நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 12 ஓவர்களில் மட்டும் லக்னெள அணி ஒரு விக்கெட்டை இழந்து 126 ரன்களைக் குவித்தது. இதில் 10பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

ஸ்டாய்னிஷ் விளாசல்

இந்த ரன் சேர்ப்புக்கு ஸ்டாய்னிஸ், பதோனியின் விளாசல் முக்கியக் காரணமாகும். குறிப்பாக ஸ்டாய்னிஸ் இந்த சீசனில் 7 இன்னிங்ஸில் 5 இன்னிங்ஸ்களில் 21 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருந்தார்.

அனைத்துக்கும் சேர்த்துவைத்து இந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் வெளுத்து வாங்கினார். ஆர்சிபி அணிக்கு எதிராக 213 ரன்களை சேஸிங் செய்தபோது, 30 பந்துகளில் 64 ரன்களை சேர்த்ததுபோன்று இந்த ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் அனல் பறந்தது.

31 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்டாய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு பதோனி-ஸ்டாய்னிஸ் கூட்டணி 89 ரன்களைக் குவித்தனர்.

பதோனி, பூரனின் சரவெடி ஆட்டம்

ஆயுஷ் பதோனியின் ஆட்டத்திலும் நேற்று அனல் பறந்தது. இந்த சீசனில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை 180 ஆக வைத்துள்ள பதோனி, சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி பஞ்சாப் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார். 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பதோனி 3 பவுண்டரி 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

அடுத்துவந்த நிகோலஸ் பூரன் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை பூரன் விளாசி ரன்ரேட்டை எகிறச் செய்தார். நிகோலஸ் பூரன் 19பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், அவரின் ஆட்டம் மிகவும் ஸ்டைலாக இருந்தது. பீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி பார்த்து, டைமிங் ஷாட்டில் பவுண்டரிகளை பூரன் நகர்த்தினார். 7 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பூரன் விளாசினார். பூரன்-ஸ்டாய்னிஸ் கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், பதோனி, பூரன் ஆகியோரின் மெய்சிலிர்க்கும் அதிரடி ஆட்டத்தால் லக்னெள அணி 15.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களை விரைவாக எட்டிய 2வது அணி என்ற பெருமையை லக்னெள அணி பெற்றது. 2016-ல் ஆர்சிபி அணி பஞ்சாப் அணிக்கு எதிராக 14.1 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. 2013ல் ஆர்சிபி அணி 15.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் லக்னெள அணி 2 ஓவர்களைத் தவிர 18 ஓவர்களிலும் குறைந்தபட்சம் 2 பவுண்டரிகளை அடித்திருந்தது. குர்னூர் வீசிய முதல் ஓவரிலும் ராகுல் சாஹர் வீசிய 9-வது ஓவரிலும் பவுண்டரி இல்லாமல் லக்னெள இருந்தது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் பவர் ப்ளேயில் லக்னெள அணி 74 ரன்களையும், நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள்வரை 126 ரன்களையும், கடைசி 4ஓவர்களில் 57 ரன்களையும் விரைவாகச் சேர்த்ததே இமாலய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு காரணங்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவண், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இருவரும் காயத்திலிருந்து குணமடைந்து நேற்று விளையாடியும் மோசமான தோல்வியைச் சந்தித்தனர்.

லக்னெள அணியின் ரன் குவிப்பைப் பார்த்த கேப்டன் ஷிகர் தவண் முகத்தில் ஒருவிதமான பதற்றமும், அச்சமும் காணப்பட்டது. “இந்த ஸ்கோரை எப்படி சேஸிங் செய்யப் போகிறோம் என்ற அவரின் மைண்ட் வாய்ஸ்” அவரின் ஆட்டத்திலேயே தெரிந்தது. அதனால்தான், ஸ்டாய்னிஷ் வீசிய முதல் ஓவரிலேயே 2 ரன்னில் தவண் விக்கெட்டை இழந்தார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் நவீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளயேில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தனர்.

வள்ளல்களாகிய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் நேற்று மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது தோல்விக்கு முதல் காரணமாகும். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகமோசமான பந்துவீச்சாக இது அமைந்தது. ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சராசரியாக ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர்.

அதிலும் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். ரபாடா பந்துவீச்சும் நேற்று தப்பவில்லை, 4 ஓவர்களில் 52 ரன்களை ரபாடா வாரி வழங்கி வள்ளலாகினார். குர்னூர் பிரார் 42, சாம் கரன் 38 என வஞ்சகமில்லாமல் ரன்களை லக்னெளவுக்கு வாரிக் கொடுத்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நேற்று 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 184 ரன்களை வாரி வழங்கியிருந்தார்கள். இதற்கு முன் 2014ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொஹாலி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், மெதுவாகப் பந்துவீசுவோருக்கும் ஏற்றது. இதில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் தவண் களமிறங்கியது தவறாகும். ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக 3வது சுழற்ப்பந்துவீச்சாளர் இருந்திருந்தால், லக்னெள ரன் குவிப்பைக் குறைத்திருக்கலாம்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

அழுத்தம், நெருக்கடி

200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு ஒருவித அழுத்தம் ஏற்படும் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை துரத்தும் போது சொல்லவா வேண்டும்? நெருக்கடி, அழுத்தம், தேவைப்படும் ரன்ரேட் திரையில் தெரியும்போதெல்லாம் படபடப்பு ஆகியவை விக்கெட்டை பறிகொடுக்கவைத்து நிலை குலையச் செய்யும். அதுதான் இந்த ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களுக்கு நேர்ந்தது.

ஆறுதல் அளித்த அதர்வா ஆட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் ஆறுதலான ஒரு விஷயம் என்னவென்றால் அதர்வா டைடேவின் அதிரடி ஆட்டம்தான். மிகப்பெரிய ஸ்கோரை நெருங்க முடியாது என்றபோதிலும் அதை துரத்தும் முயற்சியில் இருந்த டைடே 36 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும்.

இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக பேட் செய்த சாம் கரன் 21 ரன்னில் நவீன் பந்துவீச்சில் ஸ்லோ பந்துக்கு விக்கெட்டை இழந்தார். சிக்கந்தர் ராசா 36, ஜிதேஷ் சர்மா 3 சிக்ஸர் உள்ளிட்ட 24 ரன்களைச் சேர்த்தாலும் இலக்கை எட்ட முடியவில்லை. ஆனாலும் 200 ரன்களைக் கடந்துவிட்ட மனநிறைவுடன் தோல்வியைத் தழுவியது பஞ்சாப் அணி.

முக்கியமாக தமிழக வீரர் ஷாருக்கான் சிறந்த ஹிட்டர். பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர். நின்ற இடத்திலேயே சிக்ஸர் அடிக்கும் வலிமை கொண்ட ஹிட்டர்களை 8வது இடத்தில் களமிறக்கி கேப்டன் தவண் வீணடித்தார். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கேமியோ ஆடுவதற்கு ஷாருக்கானை முன்கூட்டியே களமிறக்காமல் தவறவிட்டனர்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

ஏமாற்றம் அளித்த லிவிங்ஸ்டன்

பெரிய ஷாட்களை அடிக்கும் திறமையுடைய லிவிங்ஸ்டன், சாம் கரன், கேப்டன் தவண் ஆகியோர் நிலைத்து பேட் செய்திருந்தால், பஞ்சாப் அணி இலக்கை நெருங்கியிருக்கும், மனது வைத்திருந்தால் வென்றிருக்கவும் முடியும்.

10 ஓவர்களில் வெற்றிக்கு 165 ரன்கள், 7ஓவர்களில் 131 ரன்கள் என தேவைப்படும் ரன்ரேட் உயர, உயர பஞ்சாப் அணியின் விக்கெட் விழும் வேகம் அதிகரித்தது. 152 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி, அடுத்த 49 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

விலை கொடுத்துள்ளோம்

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “ அதிகமான ரன்கள் வழங்கியதற்கு விலை கொடுத்துள்ளோம். கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து ஆடியது எங்களுக்கு ஃபேக்பயராக மாறிவிட்டது. ராகுல் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்தினார்.

பல மாற்றங்களை பந்துவீச்சில் நான் கொண்டுவர முயன்றும் தோல்வியில் முடிந்தது, ஏதும் நடக்கவில்லை. எனக்கு நல்ல அனுபவப் பாடம், வலிமையோடு திரும்பி வருவோம். ஷாருக்கானை 8வது வீரராக களமிறக்க எந்த காரணமும் இல்லை. லிவிங்ஸ்டன், சாம் கரன் இருவருமே நல்ல ஹிட்டர்கள் என்பதால் ஷாருக்கான் 8வது வீரராக களமிறங்கினார். சில நேரங்களில் இம்பாக்ட் ப்ளேயர் திட்டம் வெற்றி பெறுகிறது, சில நேரங்களில் தோல்வி அடைகிறது” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே-வை எப்படி எதிர்கொள்ளும்?

மிகப்பெரிய ஸ்கோரை துரத்தி தோல்வி அடைந்து துவண்டுள்ள, பஞ்சாப் அணி, நாளை சிஎஸ்கே அணியை சென்னையில் சந்திக்கிறது. ஏற்கெனவே பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை வீழ்த்த பஞ்சாப் அணிக்கு சிறப்பான, சரியான திட்டமிடல் அவசியமாகும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம், BCCI/IPL

9 பந்துவீச்சாளர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்துவதற்காக லக்னெள கேப்டன் கேஎல் ராகுல் நேற்று 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். விக்கெட் கீப்பர் பூரன், கேப்டன் ராகுல், தீபக் ஹூடா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் நேற்று பந்துவீசினார்கள்.

இதில் யாஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

சேஸிங் செய்திருப்போம்

லக்னெள கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில் “ டாஸ் வென்றிருந்தால் நாங்கள் சேஸிங் செய்திருப்போம். கடந்த ஆட்டத்தில் எங்கள் நம்பிக்கை சிறிது தளர்ந்துவிட்டது, 4 நாட்கள் இடைவெளி எங்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. அனைவரின் மனதும் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்தது.

மொஹாலியில் நாங்கள் மீண்டும் விளையாட வந்தபோது, ஆடுகளம் மாறியிருந்தது. இதுபோன்ற ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உற்சாகத்தை வரவழைக்கும். 250 ரன்களுக்கு மேல் ரன் குவிப்பு என்பது எங்கள் பேட்டிங்கின் வலிமை. தொடக்கத்திலேயே பந்துவீச்சாளர்கள் மீது மேயர்ஸ் ஆதிக்கம் செலுத்தி, அடித்தளம் அமைத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக வியூகம் அமைக்க அதிகநேரம் செலவிட்டோம். கைல் மேயர்ஸ், பூரன், ஸ்டாய்னிஸ் ஆகிய 3 பவர் ஹிட்டர்ஸ் அவர்கள் பணியை சிறப்பாகச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்