செருப்பு தைப்பவர் காட்டிய பாதையால் மாறிய வாழ்க்கை: கறிக்கடை வைத்திருந்தவர் யூட்யூபர் ஆன கதை

- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- ''என் மதுவுக்கு ஆன மாதிரி வேறொரு 'குட்டிக்கு' ஆக வேண்டா. என் மதுவை காலை பிடிச்சு இழுத்து ஆத்துக்குள்ள முக்கி முக்கி சித்திரவதை செஞ்சு கொலை செஞ்சாங்க''
- "பணம் தந்து என்னுடன் உடலுறவு கொள்ள வந்தவர் என் சாதியைப் பற்றிக் கேட்டார்''
- ''நான் 42 வருசமா மரத்தடியில் திறந்தவெளில சலூன் கடை வச்சுருக்கேன்''
- ''வறுமை தாங்கல; பிள்ளைகளுக்கு சாப்பாடு போட என் கிட்னியை வித்தேன்; வாடகைத்தாயா அடுத்தவங்க கருவை சுமக்கிறேன்''
- "எனக்கு 63 வயசு; பிக்பாக்கெட்டுக்காக 100 தடவ ஜெயிலுக்கு போனேன்; இப்போ திருந்தி வாழுறேன்''
பசிக்கு அரிசி திருடிய குற்றச்சாட்டில், கும்பல் ஒன்றால் அடித்தே கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞரின் தாய் முதல் மூன்று தலைமுறையாக கரகாட்டம் ஆடும் பெண்கள் வரை வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு கதைகள் என எளிய மக்களின் வாழ்வியல் கதைகள், அவர்தம் சாதனைகள், துயரங்களை சம்பந்தப்பட்ட நபர்களுடனே அமர்ந்து பேசி எளிமையாக விவரிக்கிறார் ஒரு யூட்யூபர்.
மதுரையைச் சேர்ந்த புஹாரி ராஜா வேலை மீதான விரக்தியால் புதிய முயற்சியில் இறங்க முடிவெடுத்தார். கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் குடும்பத் தொழிலைக் கையில் எடுத்ததோடு, இரண்டாவது வருமானத்தை நோக்கி நகர முயன்றார். அப்போது ஆயிரக்கணக்கானவர்களை போன்றே இவரும் ஒரு யூட்யூப் சேனலை தொடங்கியிருக்கிறார்.
இருப்பினும், தனது சேனலில் என்ன மாதிரியான தனித்துவமான உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்திருக்கிறார். ஆனால், அவரது நோக்கம் நிறைவேறியதா? வெற்றிக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா?
திருப்பங்கள் நிறைந்த தனது பயணத்தையும் அனுபவத்தையும் ஐந்து பாகங்களில் பிபிசியிடம் விவரித்தார் புஹாரி ராஜா. அந்தக் கதையை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
வளைகுடா வேலையும் திடீர் விரக்தியும்
அது 2020ஆம் ஆண்டு. நான் ஒரு பொறியாளர். துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டதட்ட 2 ஆண்டுகளாக சொந்த மண்ணைப் பிரிந்திருந்த நேரம். வாழ்வின் மீதான வெறுமை அதிகரித்துக் கொண்டிருந்தது. ஊருக்கே போய்விடலாம் என எண்ணினேன்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சூழலைச் சந்தித்துள்ளேன். ஏனெனில் அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடாவில் நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை உதறிவிட்டு என் கனவுப் பயணமான சினிமாவை நோக்கிப் பயணிக்க முடிவெடுத்தேன்.
திருமணம் ஆகியிருந்தபோதும் அப்போது பணம் குறித்தெல்லாம் யோசிக்காமல் வேலையை விட்டுவிட்டேன். உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நேரத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் குடும்பம் சிக்கியது. அப்போதுதான் 'பணத்தின் தேவை' புரிந்தது.
அதையடுத்து, நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த இயக்குநரிடம் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டு மீண்டும் வளைகுடா வேலையில் இணைந்தேன்.
இந்த முறையும் பழைய தவறைச் செய்துவிடக் கூடாது எனும் கவனம் இருந்தது. வேறு வேலையைப் பார்க்க வேண்டும்; அது திருப்தி தரும் வேலையாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார சிக்கலில் மீண்டும் மாட்டிவிடக்கூடாது என எண்ணினேன்.

அப்போதுதான் நான் படம்பிடித்து வைத்திருந்த ஒரு பழைய வீடியோ நினைவுக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு வாக்கில் மதுரையைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியை நேர்காணல் செய்து படம் பிடித்து வைத்திருந்தேன். அவர் சொன்ன தகவல்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஆனால், அப்போது அந்த வீடியோவை வெளியிடுவதற்கான போதிய வாய்ப்பு வசதிகள் என்னிடம் இல்லை. ஏனெனில், வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்வது ஆகியவற்றுக்கான போன்ற வசதிகள் இல்லை. மேலும், ஒரு நிமிட வீடியோவை 'Out' எடுப்பதற்கே பெரிய தொகை தேவைப்பட்டது.
இப்போது அதை வெளியிடலாம் என முடிவு செய்து, ஒரு யூட்யூப் சேனலை தொடங்கி அதை வெளியிட்டேன். ஆனால் பெரிதாக யாரும் வீடியோவை பார்க்கவில்லை.
கொரோனா காலத்தில் உறவுகள் தமிழ்நாட்டில் இருக்க, வேலைக்காக பிரிந்து அயல் மண்ணில் இருப்பது தினசரி மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது. துபாயில் எனது மூன்று மாத சம்பளத்தை முழுமையாகச் சேமித்து வைத்தால், தமிழகத்தில் சுமார் ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என நம்பினேன்.
எனக்கு ஏற்கெனவே ஊடக அனுபவம் உண்டு, சுவாரஸ்யமான மனிதர்களின் வாழ்வியல் கதைகளைக் கட்டுரையாக்குவது பிடிக்கும். கூடவே குடும்பத் தொழிலான கறிக்கடையும் இருந்ததால் வேலையை உதறிவிட்டு 2021 மார்ச் மாதம் மதுரைக்கே திரும்பினேன்.
ஆனால் நான் எடுத்தது மீண்டும் ஒரு தவறான முடிவோ எனும் சந்தேகம் விரைவிலேயே எழுந்துவிட்டது.
தமிழகத்தில் காத்திருந்த 'அதிர்ச்சி'

இரண்டு ஆண்டுகள் நீண்ட விடுமுறை ஏதும் எடுக்கவில்லை என்பதால், தமிழகம் திரும்பியதும் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால் அது விறுவிறுவென ஓடி விட்டது.
துபாயில் இருந்த பொது முடக்க காலமும், இந்தியாவின் பொதுமுடக்கச் சூழலும் வேறுவிதமாக இருந்தது. குறிப்பாக கொரோனா பேரிடரின் முதல் அலையும், இரண்டாவது அலையும் முற்றிலும் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தின.
கொரோனா பொது முடக்கத்தால் கறிக்கடை இயங்குவது தொடர்பாக மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இருந்தன. தொழில் முடங்கியதால், கைவசம் இருந்த பணமும் மிக வேகமாகக் கரைந்தது. பொருளாதாரம் குறித்து பெரும் அச்சம் சூழ்ந்தது.
வியாபாரம் செய்வதிலும் கட்டுப்பாடு, மக்களின் வாங்கும் சக்தியிலும் பெரும் அடி, கையில் வேறு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை என ஒரு சூழலில் சிக்கினேன்.
தவறான சூழலில் வேலையை விட்டுவிட்டோமா, எனது விருப்பத்தை நோக்கிய பயணத்துக்காக, குடும்பம் குறித்து யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டேனோ என்றெல்லாம் குற்ற உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது.
செருப்பு தைப்பவர் காட்டிய 'பாதை'

பட மூலாதாரம், YOUTUBE/BUHARI JUNCTION
பயங்கர மன அழுத்தத்தில் பொதுமுடக்க காலகட்டத்தில் ஒரு நாள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உட்கார்ந்திருந்தேன். ஊரே வெறிச்சோடிக் கிடந்தது.
அப்போது ஒரு தேவாலயம் அருகே செருப்பு தைப்பவர் ஒருவர் மட்டும் கடை போட்டிருந்தார். அவர் பக்கம் யாருமே போகவே இல்லை.
கிட்டதட்ட இரண்டு மணிநேரமாக அவரைக் கவனித்தேன். பின்னர், மெல்ல நெருங்கி இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டமே சுத்தமாக இல்லை, இங்கே ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.
அதற்கு அவர், ''உன் காலில் 500 - 600 ருபாய் மதிப்புள்ள செருப்பு போட்டிருக்க; செருப்பு அறுந்துடுச்சுன்னா தூக்கிப்போட்டுட்டு வேறு செருப்பு வாங்குவ. இங்க காலைல அஞ்சு மணிக்கு மார்க்கெட்டுக்கு போவானுங்க, அங்க நரகல் எல்லாம் கிடக்கும். அவனுக்கு செருப்பு அறுந்துபோச்சுனா புதுசா வாங்குற அளவுக்கு எல்லாம் வருமானம் கிடையாது. அதைத் தைச்சு போடணும்னு என்னைத் தேடி ஒருத்தன் வருவான். எவனாச்சும் ஒருத்தன் வருவான். அவனுக்காக நான் உட்கார்ந்திருக்கிறேன்,'' என்றார்.
அவர் பேசிய வார்த்தைகள் எனக்கான வழியை அவர் காட்டியதாக உணர்ந்தேன்.
யாருமே வராத ஓர் இடத்தில் ஒரு நபர் நம்பிக்கையுடன் காத்திருப்பது சில புரிதல்களைக் கொடுத்தது. எனது திட்டங்கள் மீது நம்பிக்கை கொண்டேன். என் கையில் துபாயில் வாங்கிய ஐபோன் இருக்கிறது, அந்த காலகட்டம் போல இல்லாமல் இப்போது மொபைலிலேயே எடிட் செய்வதற்கு நிறைய நல்ல செயலிகள் உள்ளன. ஏன் தனி ஆளாக களமிறங்கக் கூடாது என முடிவு செய்தேன்.

அவரையே நேர்காணல் செய்து வீடியோ எடுத்து எனது சேனலில் பதிவேற்றினேன். இந்தியா திரும்பிய பிறகு முதன்முதலாக நான் பதிவேற்றிய வீடியோ அதுதான்.
இந்த சேனலில் வருமானம் வருமா வராதா என்றெல்லாம் தெரியாது, ஆனால் யாரைப் பற்றி வீடியோ தயாரிக்க வேண்டும், அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு ஐடியா கிடைத்தது.
கறிக்கடையில் நான் வேலை பார்க்கும்போது, நிறைய பேர் எனது வேலையை வேடிக்கை பார்ப்பார்கள். என் நண்பர்கள் எல்லோரும் எப்படி கறி வெட்டுகிறாய் என்றெல்லாம் கேட்பார்கள், நமது வாழ்க்கையை ஒரு சுவாரஸ்யமான விஷயமாகப் பார்ப்பார்கள்.
அதேபோல நான் பல்வேறு மனிதர்களின் வேலையை வேடிக்கை பார்ப்பது வழக்கம். போஸ்டர் ஓட்டுபவரின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆர்வமாகக் கவனிப்பதுண்டு. ஆனால் இவர்களின் வாழ்க்கையை எல்லாம் யாரும் பதிவு செய்யவில்லையே என யோசனை உதித்தது.
ஒரு காலத்தில் அநேகம் பேரின் கவனம் பெற்று பின்னால் காணாமல் போனவர்கள், எளிய மனிதர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையைப் பற்றி பதிவு செய்யலாம் என முடிவு செய்தேன். அப்படித்தான் புகாரி ஜங்சன் சேனல் உருவானது.

200 ரூபாய்க்கு விளம்பரம் கேட்டேன்
எனது ஐடியா குறித்து நெருக்கமான சிலரிடம் பகிர்ந்தபோது, இதையெல்லாம் யாரு பார்ப்பா, எந்த நம்பிக்கையில் இதைச் செய்கிறாய், இதில் என்ன கமர்ஷியல் வால்யூ இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினர்கள், இதில் நேரத்தை வீணடிக்காதே என்றுகூட சிலர் சொன்னார்கள்.
ஆகவே ஒரு விஷயம் முடிவு செய்தேன். இது என்னுடைய பிரதான வருவாய் ஆதரத்திற்கான தொழில் கிடையாது. ஆனால், இதுவே எனது ஆசை, நோக்கம். வருமானத்திற்காக கறிக்கடை பணிகளில் தீவிரம் காட்டுவது என முடிவெடுத்தேன்.
பின்னர் ஓரிரு மாதங்களில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டவுடன், காலை 4 மணி முதல் மதியம் ஒரு மணி வரை எனது கறிக்கடை பணிகளில் அதிக கவனம் எடுத்துக் கொண்டேன். இன்னொரு பக்கம் மதிய உணவுக்குப் பின் இரவு 10 மணி வரை யாரை பதிவு செய்வது என்பதற்கான தேடலில் இறங்குவது, சம்பந்தப்பட்ட நபர்களை நேர்காணலில் பதிவு செய்வது, எடிட் செய்வது என இரண்டு வேலைகளையும் தொடர்ந்தேன்.
பணம் என்பது அடிப்படை சிக்கலாகவே தொடர்ந்தது. ஓரிரு திரைப்படங்களில் பணியாற்றியவன் என்பதால் எந்தக் கோணத்தில் ஷாட் வைக்க வேண்டும் என்பதில் நிறைய ஆசை இருக்கும். ஆனால் அதற்குரிய சாதனங்களோ, துணைக்கு ஆட்களோ இல்லை என்பதால் கடினமாகவே இருந்தது.
சிலரின் கதைகளைத் தொடர்ந்து பதிவு செய்கையில் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். மனிதர்களின் உணர்வுகளை நேர்மையாக எந்தவித பூச்சுகளும் இன்றித் தொட முடிந்தால் போதுமானது, தொழில்நுட்பம் அதைத் தடுத்துவிட முடியாது என உறுதியாக நம்பினேன்.

பட மூலாதாரம், YOUTUBE/BUHARI JUNCTION
சில நிறுவனங்களில் 200-300 ரூபாய் விளம்பரம் கொடுங்கள் என்றெல்லாம் மணிக்கணக்கில் காத்திருந்தேன். ஆனால் எங்கே சென்றாலும் உங்க சேனல் சப்ஸ்கிரைபர் அளவு என்ன? எவ்வளவு வியூஸ் போகும் என்றே கேள்வி கேட்டார்கள். தொடர் கேள்விகள் காரணமாக விளம்பரம் கேட்டுச் செல்வதை நிறுத்திவிட்டேன்.
பிரதான பெரும் ஊடகங்களே தேடிக் கண்டுபிடிக்க முயலாத அல்லது கவனிக்க மறந்த நபர்கள் குறித்து எனது சேனலில் உரக்கப் பேசியதால் பின்னாளில் சிலர் எனது வீடியோவை சிறு சிறு தொகைக்கு வாங்கினார்கள். பின்னர் அந்த வருமானத்தை வைத்து மதுரையைத் தாண்டி பிற ஊர்களுக்கும் பயணித்து, பேசப்படாத மனிதர்களின் கதைகளைப் பேசினேன்.
நான் சிறு வயதில் தெருத் தெருவாகச் சென்று ஆட்டு ரத்தம் விற்ற காலம் உண்டு. எனது தாத்தா மாட்டுக்கு லாடம் அடிப்பார். இதெல்லாம் இயல்பாக செய்த விஷயங்கள். இது போலவே வெவ்வேறு தொழிலில் ஈடுபடும் மனிதர்களைப் பற்றி பதிவு செய்யத் தொடங்கினேன்.
நாட்டுப்புற பாடகி, வாத்துக்கறி விற்கும் கடை, தியேட்டர் ஆபரேட்டர், இன்னமும் பெட்ரோமாக்ஸ் லைட் கடை வைத்திருக்கும் நபர், தண்டோரா கலைஞர், பேனா மெக்கானிக், 50 ஆண்டுகளாக பஞ்சர் ஒட்டும் பெண்மணி, நாய்களுக்கு சிலை எழுப்பிய நபர் எனப் பல்வேறு தரப்பினர் அவர்தம் வாழ்க்கையை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஒருமுறை கோயம்புத்தூர் சென்றபோது அட்டப்பாடி எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மது குறித்து நியாபகம் வந்தது. மிகவும் சிரமப்பட்டு உதவி ஆட்சியர் ஒருவரின் உதவியோடு மது குடும்பத்தைத் தேடி கண்டுபிடித்தேன்.

பட மூலாதாரம், YOUTUBE/BUHARI JUNCTION
தனது மகனை எப்படி அடித்துக் கொன்றார்கள் என்பதை அவரது தாய் விவரித்தார். சாப்பாட்டுக்காக அரிசி திருடியதாகக் கூறி மதுவை அடித்துக் கொன்றார்கள். ஆனால் உடற்கூராய்வில் ஒரு பருக்கை அரிசி கூட அவரது வயிற்றில் இல்லை.
ஒரு பிரச்னையால் திடீரென சற்றே மன நலக் கோளாறு ஏற்பட்டதால் மது வீட்டுக்கு வருவதே அரிதாகி இருக்கிறது. ஆனால் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தனது மகன் அவனது தங்கைகளுக்காக தேனும் கிழங்கும் எடுத்து வருவான் என நினைவு கூர்ந்தார் அவனது தாய்.
'பூவெடுக்கப் போன நீ திரும்ப வருவியா மாட்டியா, தேனெடுக்கப் போன நீ திரும்ப வருவியா மாட்டியா' என பழங்குடி மொழியில் ஒரு பாடல் பாடினார். அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. மதுவின் தாய் பேட்டியை வீடியோவாக வெளியிட்டேன்.
எனது சேனலில் 'வியூஸ்' குறைவாக இருந்தாலும், நான் பேட்டி எடுத்த நபர்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. அது எனக்கு மிகப் பெரிய மன நிறைவைத் தந்தது. சில நேரங்களில் எனது சேனலில் வெளியாகும் வீடியோக்களை பார்த்துவிட்டு பெரிய ஊடகங்கள், வசதி படைத்த யூட்யூப் சேனல்கள் அந்த நபர்கள் குறித்து வீடியோ வெளியிடுவார்கள்.
சிலர் அந்த வீடியோவை முழுக்கக்கூட பார்க்காமல் என்னிடமே வந்து நம்பர் ஷேர் பண்ணுங்க ப்ரோ எனக் கேட்பார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேறு ஏதேனும் வழிகளில் உதவி கிடைக்குமே எனப் பகிர்வது வழக்கம்.
கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை அகற்றும் பணியில் ஈடுபடுபவரைத் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்தேன். அவரது பேட்டியைப் பார்த்துவிட்டு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டதாகக் கூறி ஒரு தம்பதி நீண்ட நேரம் பேசினார்கள்.
பின்னர், இன்னொரு முறை கோத்தகிரியில் ஆறு பெண் குழந்தைகள் கை கால் பக்கவாதத்தால் முடங்கிய நிலையில் இருந்த தங்களது தாயை, அன்போடு பார்த்துக் கொள்ளும் காணொளியை வெளியிட்டேன். நான் பார்த்த காட்சிகள் ஒரு கவிதையாக இருந்தது. எனது வீடியோவை பார்த்துவிட்டு அறக்கட்டளை ஒன்றின் மூலம் அந்தச் சிறுமிகளுக்கு கல்வி பயில உதவி கிடைத்தது.
வருமானம், வியூஸ் இதிலெல்லாம் பிரச்னை இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவரின் வாழ்வில் ஒரு நேர்மறை விளைவு ஏற்பட சிறு துரும்பாகப் பயன்படுவது என்னை மேற்கொண்டு இயங்க வைத்தது.
'பிசினஸ் மாடலை கண்டுபிடித்த தருணம்'

யூட்யூபில் எனது வருமானம் எவ்வளவு தெரியுமா? சேனல் தொடங்கிய ஆறு மாதத்துக்கு பிறகு எட்டாயிரம் ரூபாய்.
வெவ்வேறு நபர்களைப் பற்றி வீடியோ போட்டுக் கொண்டிருந்த நான் ஒரு முறை ஆட்டுக்கறி வாங்குவது எப்படி என்பது பற்றி நானே விளக்கமளித்து ஒரு வீடியோ போட்டேன். அதற்கு வரவேற்பு கிடைத்தது. கோழியை எப்படி சுத்தம் செய்வது, ஈரல் எப்படி செய்வது, எலும்புக்கறி vs தனிக்கறி இரண்டில் எது பெஸ்ட் என்றெல்லாம் போட்டேன். இதில் சில வீடியோக்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டன.
ஆனால் அது மூலமாக வருமானம் ஏதும் இல்லை. ஒருமுறை அதுபோலவே உப்புக்கண்டம் செய்வது எப்படி என ஒரு வீடியோ போட்டேன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஊரில் பலருக்கும் தெரியும் ஒரு டிஷ் தமிழகத்தின் பிற பகுதிகள் வேறு மாநிலங்களில் வசிப்பவர்களில் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அப்போதுதான் எனக்கான பிசினஸ் மாடலை கண்டுபிடித்தேன். உப்புக்கறி மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு சில சாம்பிள் கொடுத்தேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கினார்கள். தங்களது நண்பர்களுக்கும் பரிந்துரைத்தார்கள்.
எனது இரண்டாவது தொழில்தான் எனது முதன்மை தொழிலை விரிவடையச் செய்வதற்கான ஆதாரம் எனப் புரிந்துகொண்டேன். யூட்யூப் சேனலும் எனது கறிக்கடை வியாபாரமும் இப்படித்தான் ஒரு புள்ளியில் சந்தித்தன.
இப்போது எனது யூட்யூப் சேனலின் மொத்த பார்வைகள் 1 கோடியைக் கடந்துவிட்டன, சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 1 லட்சம் நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஓராண்டில் மாதம் சுமார் 1.5 லட்ச ரூபாய் வரை உப்புக்கண்டம் வியாபாரம் நடக்கிறது. இப்போதைக்கு மிகப்பெரிய லாபம் இல்லாவிட்டாலும் இந்தத் தொழிலை உலகளவிலும் விரிவடையச் செய்ய வேண்டும், ஏற்றுமதியில் களமிறங்க வேண்டும் எனும் ஆசை இருக்கிறது.
கூடவே எனது சினிமா கனவும் தொடர்கிறது. இரண்டு கனவையும் இறுகப் பற்றுகிறேன். அதற்கு நான் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளே உந்து சக்தியாக இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












