பணமும் புகழும் கொடுத்த பணியை விடுத்து ஹோட்டல் துறையை தேர்ந்தெடுத்தது ஏன்? - செய்தி வாசிப்பாளர் சொல்லும் வெற்றி ரகசியம்

உணவகம், சென்னை, ஊடகம்

பட மூலாதாரம், VASANTH SUBRAMANIAN/FACEBOOK

    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

”கொரோனா பெருந்தொற்று காலத்தில் உணவகத் தொழில்கள் பெரும் பாதிப்பை கண்டுவந்தன. ஆனால் அதேநேரத்தில்தான் உணவகத் தொழில் தொடங்க வேண்டுமென நான் தீர்க்கமாக முடிவு செய்தேன். ஏனெனில் அப்போது நிலவிய சூழ்நிலைகள் ஏற்படுத்திய அச்சத்தை விட, என் சமையல் மீது எனக்கிருந்த நம்பிக்கையே என் கண் முன் பெரிதாக விரிந்தன” என்கிறார் ஊடகவியலாளரும், உணவகத் தொழிலில் கலக்கி வருபவருமான வசந்த்.

தமிழ் ஊடகத்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த செய்தி வாசிப்பாளர் வசந்த், தற்போது சென்னையில் வெற்றிகரமாக உணவகத் தொழிலை நடத்தி வருகிறார். எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், எத்தனை பெரிய சம்பளம் வாங்கி வந்தாலும் சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் முன்னேறுவது பெரும் திருப்தியை அளிக்கும் என்கிறார் வசந்த்.

“என்னுடைய சொந்த ஊர் சிவகாசி. சிறு வயதிலிருந்தே எனக்கு சமையலில் ஆர்வம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் எங்களுடைய கூட்டுக்குடும்பம்தான். எங்கள் குடும்பத்தில் எப்போதும் குறைந்தது 20 பேருக்குத் தேவையான சமையல் வேலைகள் நடைபெறும். அதை பார்த்து, ரசித்து வளர்ந்தவன் நான். அதனால் இயல்பாகவே சமையலில் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது.

பசிக்கு சாப்பிடுகிறோம் என்பதை தாண்டி, ஒரு உணவை சாப்பிடும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சியான உணர்வும், ரசனையும் ஏற்பட வேண்டும். நம்முடைய உணவின் ருசியும், தரமும் சிறப்பாக இருந்தால் அத்தகைய உணர்வு தானாகவே தோன்றும். என் உணவை ருசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் வசந்த்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “2012ஆம் ஆண்டிலிருந்து நான் ஊடகத்துறையில் இருக்கிறேன். அது மிகவும் சிறந்த அனுபவம். ஊடகத்தில் வேலை செய்வதையும், தினமும் தொலைக்காட்சியில் என்னை காண்பதையும் என் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவரும் பெருமையாக நினைத்தனர்.

செய்தி வாசிப்பது தொடங்கி, நேர்காணல்கள் மற்றும் நேரலைகளை கையாள்வது என அனைத்து வேலைகளையும் மிகுந்த அர்பணிப்போடு செய்துவந்தேன். அதேபோல் வேலை நாட்களில் விடுமுறை எடுப்பதையும் நான் தவிர்த்து வந்திருக்கிறேன். ஏனென்றால் எந்த வேலை செய்தாலும் அதை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

ஊடகத்துறையில் செயல்பட்டு வந்த அதேசமயம், சொந்தமாக தொழில் துவங்க வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இதுகுறித்த சிந்தனைகள் இருந்தாலும், 2017ஆம் ஆண்டிற்கு பின்னர்தான் அந்த எண்ணம் தீவிரமடைந்தது” என்று கூறுகிறார் வசந்த்.

உணவகம், சென்னை, ஊடகம்

ஊடகத்துறை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில், சமையல் மேல் தனக்கிருக்கும் ஆர்வம் குறித்தும் அவர் விவரிக்கிறார்.

”சமையல் செய்வதை நான் மிகவும் நேசிக்கிறேன். பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு சமைப்பது எனக்கு ஒன்றும் கடினமான காரியமல்ல. 20, 30 பேர்களுக்குத் தேவையான உணவை என்னால் எளிதாக சமைத்துவிட முடியும். அதற்காகவே பெரிய, பெரிய பாத்திரங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன்.

ஏனெனில் அடிக்கடி என் நண்பர்களையும், உறவினர்களையும் வீட்டிற்கு அழைத்து, நானே சமையல் செய்து அவர்களுக்கு பரிமாறுவது என்னுடைய வழக்கம்.

பிடித்த வேலைகளை எவ்வளவு நேரம் செய்து வந்தாலும் அது நமக்கு களைப்பை ஏற்படுத்தாது என்பார்கள். அத்தகைய ஒரு உணர்வு எனக்கு சமையல் செய்வதில்தான் கிடைக்கிறது. கரண்டி பிடித்து சமைத்து பரிமாறுவது எனக்கு அத்தனை உற்சாகத்தை அளிக்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதேசமயம் அதைத் தொழிலாக செய்ய முடிவு செய்து துணிந்து இறங்கியதற்கு தன்னுடைய மனைவி மிர்னாலியின் நம்பிக்கையான வார்த்தைகள்தான் காரணம் என்றும் வசந்த் கூறுகிறார்.

” 2019ஆம் ஆண்டு சொந்தமாக தொழில் துவங்குவது குறித்து என் மனைவியிடம் ஆலோசனை செய்தபோது, நாம் ஏன் நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்ல விழாக்களுக்கு சமைத்து தரக்கூடாது என்று அவர் என்னிடம் கேட்டார். அது மிகவும் சரியான யோசனையாக எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் என் மனைவியின் உறவினர் ஒருவருடைய வீட்டில் பிறந்தநாள் விழா வந்தது. அந்த விழாவிற்கு நாங்களே சமைத்து தருகிறோம் என்று அவர்களிடம் கூறினோம். அவர்களும் சம்மதித்தனர்.

என் மனைவி மற்றும் மாமியாரின் உதவியுடன் சுமார் 100 பேருக்கு நான் உணவு சமைத்து வழங்கினேன். சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி அன்றைய உணவுப்பட்டியலாக இருந்தது. அங்கே சாப்பிட்ட அத்தனை பேருக்கும் என்னுடைய சமையல் பிடித்துவிட்டது. அன்று சாப்பிட்டதில் இரண்டு பேர் அடுத்தடுத்து எங்களுக்கு ஆர்டர் கொடுக்க முன்வந்தனர்.

உணவகம், சென்னை, ஊடகம்

அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் மூலமாக, மற்ற சில ஆர்டர்களும் வந்தன. இந்த நேர்மறையான விஷயங்கள் அனைத்தும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எனவே அதுவரை அவ்வபோது செய்துவந்த சமையல் தொழிலை 2020ஆம் ஆண்டில் முழுநேரத் தொழிலாக துவங்க வேண்டும் என முடிவு செய்தோம்” என்று விவரிக்கிறார் அவர்.

2020ஆம் ஆண்டு உணவகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை இவர்கள் முழுவீச்சில் செயல்படுத்த துவங்கியபோது, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால் தங்களது முயற்சிகளுக்கு ஊரடங்கு சிறு தடங்கலாக அமைந்ததே தவிர, தடையாக மாறவில்லை என்று கூறுகிறார் வசந்த்.

”அந்த சமயத்தில் ஒரு சிறு சேமிப்பு பணத்தினை கையில் வைத்திருந்தோம். அதை முதலீடாக போட்டுதான் உணவகத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கினோம். அது ஊரடங்கு காலம் என்பதால், காலையில் அரசு அனுமதித்திருந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்கி வந்தோம். மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய குழந்தைக்கு அப்போது ஒரு வயதுதான். நாங்கள் வெளியே சென்று வரும்போது எங்களுக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால், அது எங்களுடைய குழந்தையையும் பாதிக்கும். எனவே கவனமாக இருந்தோம்.

பின் ஒருவழியாக உணவகத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தோம். கொரோனா பரவல் தீவிரமாக இருந்த சமயத்தில் முழுமையாக செயல்பட முடியவில்லை. ஆனால் உணவு வேண்டும் என்று கேட்போருக்கு மட்டும் சமைத்து கொடுத்து வந்தோம். பின் தொற்று எண்ணிக்கை குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது உணவகத்தை திறக்க முடிவு செய்தோம்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உணவகத் தொழில்கள் பெரும் பாதிப்பை கண்டுவந்தன. ஆனால் அதேநேரத்தில்தான் உணவகத் தொழில் தொடங்க வேண்டுமென நான் தீர்க்கமாக முடிவு செய்தேன். ஏனெனில் அப்போது நிலவிய சூழ்நிலைகள் ஏற்படுத்திய அச்சத்தை விட, என் சமையல் மீது எனக்கிருந்த நம்பிக்கையே என் கண் முன் பெரிதாக விரிந்தன” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் வசந்த்.

உணவகம், சென்னை, ஊடகம்

அதேபோல் உணவகம் திறக்கப்பட்ட அதே நாளில்தான், தன்னுடைய ஊடக வேலையிலிருந்தும் விலகியதாக அவர் கூறுகிறார். உணவகத் தொழிலில் முழுமையாக இறங்கிய பிறகு ஊடக வேலையில் ஈடுபடுவது சாத்தியமல்ல என்று தோன்றியதால் வேலையிலிருந்து விலகிவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

“2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னை முகப்பேரில் உணவகம் திறக்கப்பட்ட அந்த முதல் நாளில் மாலை வரை யாருமே கடைக்கு வரவில்லை. ஆனால் நாங்கள் பொறுமையாக இருந்தோம். கடைக்கு வெளியே பெயர்ப்பலகை அருகே ஒரு பல்ப் போட வேண்டுமென்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அப்போது யாரோ ஒருவர் சொல்லிதான், உடனடியாக பல்ப் ஒன்றை மாட்டினோம். அதன்பின் சிறிது நேரம் கழித்து வந்த ஒருவர் மூன்று சாப்பாத்திகள் மட்டும் வாங்கினார்.

அப்போது என் மனைவி, கடை திறக்கப்பட்ட முதல் நாள் சிறப்பு விலையாக 50% தள்ளுபடி அறிவிக்கலாம் என்று கூறினார். அதுவும் நல்ல யோசனையாக இருந்ததால் உடனடியாக பலகையில் எழுதி வைத்தோம். அது நல்ல பலன் அளித்தது. அதற்கு பிறகு கூட்டம் வர தொடங்கியது. முதல் நாள் விற்பனையாக 3000ரூபாய் கிடைத்தது.

எங்களுடைய தனித்துவ அடையாளமாக கறி இட்லியை வழங்குகிறோம். அதுதவிர கறிதோசை, சப்பாத்தி போன்ற உணவுகளையும்; மட்டன் , சிக்கன் போன்ற அசைவ உணவுகளையும் வழங்கி வருகிறோம். எங்களுடைய உணவுகளின் சுவை மக்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் தொடர்ச்சியாக நல்ல வியாபாரம் நடைபெற்றது என்றெல்லாம் கூறமுடியாது. ஒரு தொழில் துவங்கும்போது அப்படியான எதிர்பார்ப்பும் நம்மிடம் இருக்கக்கூடாது.

எனவே வியாபாரம் நடக்கவில்லையென்றாலும், சில நஷ்டங்களை சந்தித்து வந்தாலும், நானும் என் மனைவியும் அதை கையாள்வதற்கான பக்குவத்தை அடைந்திருந்தோம். என் மனைவியும் ஊடகத்துறையில் இருந்தவர்தான். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். எனவே வாழ்க்கையின் அனைத்து சூழல்களையும் எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் எங்களுக்குள் அதிகமாகவே இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார் வசந்த்.

உணவகம், சென்னை, ஊடகம்

சில தடுமாற்றங்களுக்கு பிறகு தற்போது இவர்களது உணவகம் சீராக நடைபெற்று வருகிறது. முதல் கடைக்கு கிடைத்த வரவேற்பையொட்டி, அரும்பாக்கத்தில் உணவகத்தின் இரண்டாவது கிளையையும் இவர்கள் திறந்திருக்கிறார்கள்.

“தொழில் ஆரம்பித்த புதிதில், எங்கள் உணவின் சுவை மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் தற்போது படிப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் கற்று வருகிறோம். கொரோனா பேரிடரை தொடர்ந்து பொருளாதார மந்தநிலை வரும் என கூறப்பட்ட நிலையிலும், மக்களின் மனிதத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அது என்னை கைவிடவில்லை. என் உணவின் தரத்தையும், சுவையையும் அவர்கள் தொடர்ந்து அங்கீகரிக்கிறார்கள். தினமும் சீரான அளவு மக்கள் கூட்டம் எங்களது கடையைத் தேடி வருகிறது.

அதேபோல் இன்றைக்கு தமிழகம் முழுவதும் உணவகம் நடத்திவரும் ஒரு பெரும் தொழிலதிபர் எங்களது கடைக்கு வந்து சாப்பிடுகிறார். உணவகத்தை எப்படி மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் தருகிறார். அவ்வளவு பெரிய மனிதர், எங்கள் கடையின் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டுகிறார் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அதேசமயம் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் ஒரு கதாநாயகனும் எங்கள் கடையின் வாடிக்கையாளர். அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் எங்கள் கடையிலிருந்து அவ்வபோது உணவு பார்சல்கள் அனுப்பப்படும்.

தற்போது இரண்டு கிளைகளில் வேலை செய்துவரும் ஐந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறேன். எங்களது தரத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுடைய உணவகத்தில் முதலீடு செய்வதற்கும், பார்ட்னராக இணைவதற்கும் நிறைய பேர் எங்களிடம் கேட்டு வருகின்றனர். 2021ஆம் ஆண்டில் துவங்கி தற்போது 2023ஆம் ஆண்டிற்குள்ளாக இத்தகைய நிலையை அடைந்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கிறேன். ஆனால் என்னுடைய கனவு இன்னும் பெரியது. அதற்கு வரையறை இல்லை. அதை நோக்கி எங்களது பயணம் மேலும் தொடரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வசந்த்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: