மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம்

கொரோனா, வருமானம், விவசாயம்
    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

முட்டைகோஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெந்தயம், பச்சை கொத்தமல்லி போன்ற காய்கறிகள் வயலில் விளைந்திருப்பதை நாம் ஆச்சரியமாக பார்க்க மாட்டோம். சிலர் வீட்டு தோட்டத்தில், தொட்டியில் இத்தகைய காய்கறிகளை சிறிய அளவில் வளர்ப்பதும் உண்டு.

ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் தனது மூன்று மாடி வீட்டில் வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

அவரது குடும்பத்தினர் இதன் மூலம் லட்சக்கணக்கான வருமானம் பெறுகின்றனர் என்பதை கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக கூட இருக்கக் கூடும். ஆனால், அதுதான் உண்மை.

வீட்டுக்குள் செய்யப்படும் இந்த விவசாய முறையில் மற்றொரு அச்சரியமும் உள்ளது. நீரை மட்டுமே சார்ந்து செய்யப்படும் இந்த விவசாயத்துக்கு மண் தேவையில்லை. ஹைட்ரோபோனிக் எனப்படும் இந்த விவசாய முறை இந்தியாவுக்கு புதியது.

கொரோனா, வருமானம், விவசாயம்

தூரத்தில் இருந்து பார்க்குபோது மற்ற வீடுகளை விட ராம்வீர் சிங்கின் வீடு பசுமை போர்த்தியது போன்று தனித்து காணப்படுகிறது.

வீட்டின் ஒவ்வொரு மாடியிலும் விதவிதமான காய்கறிகளின் கொடிகள் பிளாஸ்டிக் குழாய்களில் வளர்வது தெரிகிறது.

வீட்டின் ஒவ்வொரு தளத்திலும், வெளியிலும், பிற இடங்களிலும் தடிமனான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் வெளிப்புற சுவர்களுக்கு இணையாக வைக்கப்படுகின்றன, அவை எல்லா நேரங்களிலும் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக் முறையில் எப்படி காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன?

கொரோனா, வருமானம், விவசாயம்

காய்கறி விதைகள் பிளாஸ்டிக் வாளிகள் போன்ற சிறிய கூடைகளில் தேங்காய் பட்டை மற்றும் மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வகையான பாசியுடன் வைக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, குழாயின் துளையில் வாளி வைக்கப்படுகிறது, அங்கு விதைகள் தண்ணீரில் மூழ்கிய பின் முளைக்கத் தொடங்கும்.

மூன்று நான்கு வாரங்களில் காய்கறிகள் கிடைக்க ஆரம்பிக்கும்.

ராம்வீர் சிங் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். துபாயில் விவசாய கண்காட்சி ஒன்றில் பங்கேற்க ராம்வீர் சிங்கிற்கு ஹைட்ரோபோனிக் குறித்து தெரியவந்தது.

தாய்லாந்துக்கு சென்று இது குறித்து மேலும் அறிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். இந்தியாவில் இதுபோன்ற முறையில் காய்கறி விளைவிக்கப்படுவது இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஹைட்ரோபோனிக் முறை பிரபலமானது.

இந்த முறை குறித்து இணையத்திலும் பிற இடங்களிலும் அறிந்ததைகொண்டு சோதனை முயற்சியாக தனது வீட்டிலேயே சிறு பகுதியை ஒதுக்கி ஹைட்ரோபோனிக் விவசாயத்தை அவர் தொடங்கியிருக்கிறார்.

அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததும், மொத்த வீட்டையும் பண்ணையாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

கொரோனா, வருமானம், விவசாயம்

மண் தேவையில்லை, தண்ணீர் மட்டுமே போதும்

கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம், ப்ரோக்கோலி மற்றும் பல காய்கறிகள் ரன்பீரின் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. குழாய்க்குள் இருக்கும் தண்ணீரில் இவை வளர்கின்றன. இவற்றுக்கு மண் தேவையில்லை. இந்த வகை விவசாயத்தில், தண்ணீரும் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.

“இந்த வகை விவசாயத்துக்கு தொடக்கத்தில் தண்ணீர் குழாய்கள் அமைப்பதற்கு செலவு ஆகும். அதன் பின்னர், காய்கறி விளைவிப்பதற்கான செலவு குறையும். ” என்று அவர் கூறுகிறார்.

காய்கறிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வீட்டின் கூரையில் பாலித்தின் கவர்களை பயன்படுத்துவதாகவும் காய்கறி, பழங்களை அணில், குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வீட்டை சுற்றை வலை அமைத்துள்ளதாகவும் ராம்வீர் சிங் தெரிவித்தார்.

கொரோனா, வருமானம், விவசாயம்

பல மைல் தூரத்தில் இருந்து வந்து காய்கறிகளை வாங்கி செல்லும் மக்கள்

இந்த முறை விவசாயத்தில் காய்கறிகளை பராமறிக்க அதிக கவனம் தேவை என்பதால், நாம் பயன்படுத்தும் சாதாரண காய்கறிகளை விட இவற்றின் விலை அதிகம் என்கிறார் ராம்வீர் சிங்.

காய்கறிகள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் சுத்தமான நீரில் வளர்வதால் மிகவும் ஃபிரஷ்ஷாக இருப்பதோடு, மற்ற காய்கறிகளை விட இவற்றின் தரம் மிக அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.

உறுப்பினர் சேர்க்கை மூலம் இந்த காய்கறிகளை பரோலியில் அவர் விற்பனை செய்து வருகிறார். இந்த காய்கறிகளை வாங்க மக்கள் குறிப்பிட்ட நாளில் அவரது வீட்டிற்கு வருகிறார்கள்.

பெரிய ஹோட்டல்களில் கூட சில நேரங்களில் ராம்வீர் சிங்கின் வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.

கொரோனா, வருமானம், விவசாயம்

லட்சக்கணக்கில் வருமானம்

இந்த தனித்துவமான விவசாய முறை மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறும் ராம்வீர் சிங், ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி பெரிய அளவில் விவசாயம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

ஹைட்ரோபோனிக் விவசாயம் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்றும் ராம்வீர் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஆண்டு முழுவதும் வேளாண்மை அறிவியல் மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் என் வீட்டுக்கு வந்த இந்த விவசாய முறை குறித்து கேட்டு அறிந்துகொள்கின்றனர். சமீபத்தில் இந்த விவசாய முறை தொடர்பாக பயிற்சி மையம் ஒன்றையும் தொடங்கியுள்ளேன் ” என்று அவர் குறிப்பிட்டார்.

இவரின் தனித்துவமிக்க விவசாயத்தின் புகழ் தற்போது எங்கும் பரவி வருகிறது. காய்கறிக் கொடிகள் சூழ்ந்திருக்கும் இவரின் வீட்டைக் காண ஊரின் வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: