உடல் எடை 130 கிலோ இருந்தால் மாடல் ஆகக் கூடாதா? - இன்ஸ்டாவில் கலக்கும் திவ்யா விக்ரம் - தடைகளை உடைக்கும் பெண்கள்

திவ்யா விக்ரம்

பட மூலாதாரம், SNAZZYTAMILACHI / INSTAGRAM

வாழ்கை எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு அவரவருடைய தனிப்பட்ட உரிமையும்கூட.

இந்திய சமூகத்தில் ஒவ்வொரும் தமது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் குடும்பம், உறவுகள், சுற்றம், சமூகம் எனப் பல்வேறு அம்சங்கள் பங்கு வகிக்கின்றன.

அத்தகைய அம்சங்கள் விதிக்கும் தடைகள் பல நேரங்களில் ஒருவரது சுய விருப்பு, வெறுப்புகளை, இயல்பை மீறியதாகவே, அவற்றை மறைத்துக்கொண்டு வாழக் கட்டாயப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றன.

அத்தகைய தடைகளை உடைத்து, தங்களது இயல்பு, அடையாளம், உரிமை, விருப்பு வெறுப்புகளை அவதானித்து வாழும் முடிவை எடுக்கும் அனைவருமே நிஜ உலக ஹீரோக்கள்தான். அத்தகைய ஹீரோக்களின் கதைகளை உங்களிடம் கொண்டு வருவதே பிபிசி தமிழின் "Being Me" தொடர். அதில் வெளியான அனைத்து கட்டுரைகளையும் நீங்கள் இங்கு படிக்கலாம்.

"என் அன்பை வைத்து பணம் பறித்தார்கள்"

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா, தான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என்பதைத் தனது குடும்பத்தினரிடமும் வெளியுலகுக்கும் வெளிப்படுத்தியபோது எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். ஒரு லெஸ்பியன் பெண்ணாக பல இன்னல்கள், பாகுபாடுகளைக் கடந்து நிஜ உலக ஹீரோவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

சௌந்தர்யா

பட மூலாதாரம், SOUNDARYA

அலுவலகத்தில் பாகுபாடு, மேலதிகாரியின் தவறான அணுகுமுறை, தனது பாலின தேர்வை, புறக்கணிப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தன் அன்பை வைத்துப் பணம் பறித்தவர்கள் என்று சமூகத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார், சௌந்தர்யா.

இருந்தும் தன் அடையாளத்தை, தனது வாழ்க்கையை தன் விருப்பத்தின்படி, உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சௌந்தர்யாவை போன்ற ஒரு லெஸ்பியன் பெண்ணின் வாழ்வு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.வ்

40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண்

"திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை.

"திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்கள் எப்போதும் அழுதுகொண்டு கவலையுடன், தனிமையில் இருப்பார்கள் என்றில்லை. வாழ்க்கையை நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது," என குரலில் உற்சாகம் ததும்பப் பேசுகிறார் ஐஸ்வர்யா.

சிங்கிள் பெண் ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம், AISHWARYA SAMPATH

தன் வாழ்வில் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ள ஐஸ்வர்யா, உலகம் சுற்றும் பயணப் பிரியராகத் தன் வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் ருசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி விரிவாகப் படிக்க,

பாலியல் சீண்டல்களை மீறி முன்னேறிய திருநங்கை ரோஜா

தமது பள்ளிப்பருவத்திலும், இளம் பருவத்திலும் சொல்ல முடியாத பாலியல் சீண்டல்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்ட ரோஜா, சமூகத்தில் தமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த நடந்த போராட்டங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"பெண்ணுக்கு என சில கூறுகள் இருக்கு. குழந்தை பெத்துக்க முடியாதுன்னாலும் அந்தத் தாய்மை உணர்வு, பெண்மை உணர்வு எங்க கிட்ட சராசரி பெண்ணைவிட அதிகமாகவே இருக்கு. அந்த உணர்வே எங்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையைத் தரும். அந்த அடையாளம்தான் எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது," என்கிறார் ரோஜா.

திருநங்கை ரோஜா

"இது எனக்கான வாழ்க்கை. என் விருப்பப்படியே வாழ்கிறேன். அந்த சுதந்திரம் எனக்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று தன்னம்பிக்கையுடன் கூறும் ரோஜாவின் கதையைப் படிக்க,

"கந்துவட்டி கொடுமையால் பாலியல் தொழிலுக்கு வந்தேன்"

"பாலியல் தொழிலை மோசமாகப் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இந்த வேலை எனக்கு வசதியாக உள்ளது. எனக்கு அதுதான் முக்கியம்," என்கிறார் பாலியல் தொழிலாளியான ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பாலியல் தொழிலாளி

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தொழிலாளிகள் மீதான சமுதாயத்தின் அணுகுமுறை பெரும்பாலும் மோசமானதாகவே இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால், இதுவும் மற்ற வேலைகளைப் போல் வாழ்வாதாரத்திற்கான ஒரு தொழிலே என்று கூறும் பாலியல் தொழிலாளியான ஆனந்தி, அந்த வேலையைச் செய்பவர்களும் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

கணவரை இழந்தபிறகு ஏற்பட்ட வறுமை, கடன், கந்துவட்டிக் கொடுமையால் தோழி ஒருவரது ஆலோசனையின் பேரில் பாலியல் தொழிலாளியான ஆனந்தியின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள:

சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர்

அதீத உடல் எடையில் இருந்தவர் அதைக் குறைக்கத்தான் ஆரம்பத்தில் ஜிம்முக்கு சென்றுள்ளார் வெரோனிகா அன்னமேரி. ஆரம்பத்தில் அதை ஊக்குவித்த கணவர், குடும்பத்தினரும் உறவினர்களும் தவறாகப் பேசவே அவரும் ஜிம்முக்கு செல்வதை எதிர்க்கத் தொடங்கினார்.

மதுரை பெண் பாடி பில்டர் வெரோனிகா அன்னமேரி

அதைத் தொடர்ந்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, தனிமையையும் வெறுமையையும் போக்க ஜிம்மே கதியென கிடந்தார்.

கூடவே அவரது குழந்தைகளும் ஊக்கமளிக்க, அசாத்திய சாதனைகளைப் படைத்து இன்று சர்வதேச அரங்கில் கால் பதித்துள்ளார் வெரோனிகா அன்னமேரி. அவரைப் பற்றிப் படிக்க,

உடல் எடை 130 கிலோ இருக்கும் 'பிளஸ் சைஸ்' மாடல்

ஒரு மாடலாக இருப்பதற்கு சமூகத்தில் சில எழுதப்படாத வரையறைகள் உள்ளன. நிறம், உடல்வாகு ஆகியவை அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், 130 கிலோ எடையுடன் இருக்கும் திவ்யா விக்ரம், சமூக ஊடக ராணியாக வலம் வருகிறார்.

திவ்யா விக்ரம்

பட மூலாதாரம், SNAZZYTAMILACHI / INSTAGRAM

அவரது வீடியோக்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றன. ஒருவர் விரும்பியபடி வாழ்வதற்கு உடல் எடை ஒரு பொருட்டல்ல எனக் கூறும் திவ்யா, தன் அதீத எடையால் எதிர்கொண்ட கிண்டல், கேலிகளைக் கடந்து இன்ஸ்டாவில் கலக்கி வருகிறார்.

"ரோட் ரோலர்', 'யானைக்குட்டி' என ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நானே அதனால் 'ரௌடி பேபியாக' மாறி, எதிர்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்," எனக் கூறும் திவ்யாவின் சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள,

பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை

ஆட்டோ ஓட்டுநரான அப்பாவுடன் செல்லும்போது ஆட்டோ ஓட்டிப் பழகிய ஷர்மிளாவுக்கு காலப்போக்கில் டிரைவிங்கையே தனது வாழ்வாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியம் வந்தது.

ஷர்மிளா

கனரக வாகனங்களை ஓட்ட வெண்டும் என்று விரும்பும் ஷர்மிளாவை, "எலிக்குட்டி மாதிரி இருக்க நீ பஸ்ஸெல்லாம் ஓட்டிருவியா, டயர் சைஸ் தான் இருக்க உனக்கு பஸ் வேணுமா" என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.

ஆனால், "வாய்ப்பு கிடைத்தால்தான் எவராலும் அடுத்த நிலைக்கு வர வேண்டும்," என்று கூறும் அவர் அந்த வாய்ப்புக்கான முயற்சிகளை ஒரு பக்கம் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்துக்கொண்டே எடுத்து வருகிறார். அவருடைய லட்சியப் பாதையை விரிவாகப் படிக்க,

"கேலிகளுக்கு அஞ்சி என் பெண்மையை மறைத்தேன்"

"நீங்கள் யாராக இருந்தாலும் முதலில் உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய உடலுக்கு, உணர்வுக்கு, ஆன்மாவிற்கு நீங்கள் அறம் செய்யத் தொடங்குங்கள்," என்கிறார் திருநங்கை மரக்கா.

மரக்கா தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்ததே தனது 40களில் இருக்கும்போதுதான். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சீண்டல்களும் வல்லுறவு சம்பவங்களும் அவருக்கு மனதளவில் ஏற்படுத்திய மோசமான தளும்பு, வாழ்வின் பெரும்பகுதியை அச்சத்துடன் தனது இயல்பை மறைத்து ஆணாக இந்தச் சமூகத்தின் முன் வாழ வைத்தது.

திருநங்கை மரக்கா

ஆனால், அதை மீறி தனது 40 வயதில் அவர் தன்னை ஒரு திருநங்கையாக வெளிப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். அதற்காக அவர் தனது ஆசிரியர் வேலையை இழந்தார், நண்பர்களை இழந்தார், பாகுபாடுகளை எதிர்கொண்டார். ஆனால், வாழ்வில் இறுதியாகத் தனது அடையாளத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்தினார் மரக்கா.

இன்று முழு நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அவர் வாழக் காரணமான அந்த முடிவை மரக்காவை எடுக்க வைத்தது என்ன?

விரிவாகப் படிக்க...

50 வயதை நெருங்கும்போது பிறந்த 2வது குழந்தை

"அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி அழுதாங்க. உன்கிட்ட கடந்த சில மாதங்களா நாங்க ஒரு உண்மைய மறைச்சிட்டோம்னு சொன்னாங்க.

எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன்," என்று மலையாளம் கலந்த தமிழில் குதூகலமான குரலில் கூறினார் கேரளாவை சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் ஆர்யா பார்வதி.

கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆர்யா பார்வதி, அவருடைய பெற்றோருக்கு கடந்த 23 ஆண்டுகளாக ஒரே மகளாக இருந்தார். ஆனால், இப்போது அவர் அக்காவாகியுள்ளார். அவருடைய அம்மாவுக்கு 48 வயதில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

ஆர்யா பார்வதி

பட மூலாதாரம், ARYA PARVATHY

திருமண வயதில் முதல் பெண் இருக்கும்போது அம்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது விமர்சனங்களையும் வரவேற்புகளையும் கலவையாகப் பெற்றது. ஆனால், "50 வயதை நெருங்கும் நேரத்தில் 2வது குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் என்ன தவறு? அதற்கு ஏன் என் அம்மா வெட்கப்பட வேண்டும்?" என்று கேட்கிறார் மகள் ஆர்யா பார்வதி.

விரிவாகப் படிக்க...

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

"அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது," என்கிறார் செல்வி.

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கரும் விவேக்கும் படித்துக் கொண்டிருக்கும்போதே தந்தையை இழந்தார்கள். அப்போதிருந்து பல ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த தனது தாய்க்கும் ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதை உணர்ந்த மகன்கள், பல்வேறு சமூகப் போராட்டங்களைக் கடந்து தங்கள் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்கள்.

செல்வியின் மறுமணத்திற்காக நடந்த பல்வேறு போராட்டங்களையும் உணர்ச்சிகரமான சம்பவங்களையும் தெரிந்துகொள்ள,

"நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்"

"என்னுடைய சுதந்திரத்தையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தாத உறவும், வாழ்க்கையும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் 10 ஆண்டு காதல் தராத புரிதலையும் நெருக்கத்தையும் லிவ்-இன் வாழ்க்கை தந்துள்ளது" என்கிறார் கவிதா கஜேந்திரன்.

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம், KAVITHA GAJENDRAN

சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்துப் பெண்ணான இவர், பழைமைவாதமும் ஆணாதிக்கமும் மிகுந்த, ஆண்-பெண் இடையே இயல்பாக அரும்பும் காதலைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது சமூகத்தில், லிவிங் டுகெதர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

திருமணத்தைத் தவித்து லிவிங் வாழ்க்கையை அவர் தேர்வு செய்யக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள,

"லிவிங் டுகெதர் வாழ்க்கையும்கூட ஏற்றுக் கொள்ளப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த என்னை இந்த சமூகம் அடங்காத ஆளாகவே பார்த்தது.

கல்யாணம் செய்தவர்களை மட்டுமே பெண்ணாகப் பார்க்கும் பார்வை இருக்கிறது," என்று கூறும் கவிதா, காதல் திருமணத்தின் மீதான பார்வை மாறியதைப் போலவே இந்த நிலையும் மாறும் என்று நம்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: