"50 வயதை நெருங்கும்போது 2வது குழந்தையை பெற்றெடுக்க என் அம்மா ஏன் கூச்சப்பட வேண்டும்?"

ஆர்யா பார்வதி தனது அம்மாவுடன்

பட மூலாதாரம், ARYA PARVATHY

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

“அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி அழுதாங்க. உன்கிட்ட கடந்த சில மாதங்களா நாங்க ஒரு உண்மைய மறைச்சிட்டோம்னு சொன்னாங்க.

எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன்,” என்று மலையாளம் கலந்த தமிழில் குதூகலமான குரலில் கூறினார் கேரளாவை சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் ஆர்யா பார்வதி.

கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆர்யா பார்வதி, அவருடைய பெற்றோருக்கு கடந்த 23 ஆண்டுகளாக ஒரே மகளாக இருந்தார். ஆனால், இப்போது அவர் அக்காவாகியுள்ளார். அவருடைய அம்மாவுக்கு 48 வயதில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

“23 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கென ஓர் உடன்பிறப்பு இந்தக் குடும்பத்திற்குள் வரப் போகிறது. இந்தச் செய்தி ஏற்படுத்தியுள்ள மகிழ்ச்சிக்கு அளவில்லை.

மூத்த சகோதரியாகவும் அம்மாவாகவும் பொறுப்புகளைச் சுமக்கவும் அன்பையும் ஆதரவையும் அள்ளித் தரவும் ஆவலோடு தயாராக இருக்கிறேன்,” என்று ஒரு பதிவிட்டிருந்தார்.

"ஏன் கூச்சப்பட வேண்டும்?"

அவருடைய இந்தப் பதிவு பேசுபொருளானதைத் தொடர்ந்து கேரள ஊடகங்களில் ஆர்யாவும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தாயாக இருந்த அவருடைய அம்மாவும் அதிகமாகப் பேசப்பட்டார்கள்.

அவர்களது குடும்பத்திற்கு வரவுள்ள அந்தப் புதிய குழந்தை குறித்துப் பலரும் வாழ்த்து மழை பொழிந்தாலும், திருமணமாகி கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆன பிறகு அவரது தாய் கர்ப்பமாகியிருப்பதைப் பலர் விமர்சிக்கவும் செய்தார்கள்.

ஆனால், “நாங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்? யார் என்ன பேசினாலும் சரி, நாங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அன்புப் பரிசை இரு கை விரித்து வரவேற்கவே செய்கிறோம்,” எனக் கூறுகிறார் ஆர்யா.

இதுகுறித்துப் பேசிய ஆர்யாவின் தாய், “நான் கர்ப்பமடைந்திருப்பது தெரியாமல் நிறைய பயணித்துக் கொண்டிருந்தேன். என் மகள் விருது ஒன்றை வாங்கினாள். அதைப் பார்ப்பதற்காகச் சென்னை சென்றிருந்தேன்.

பிறகு குருவாயூர் கோயிலுக்குச் சென்றேன். ஆனால், ஆரம்பத்தில் எனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாததால், எனக்கு அப்படியொரு எண்ணமே வரவில்லை,” என்று கூறுகிறார்.

தனது பெற்றோருடன் ஆர்யா பார்வதி

பட மூலாதாரம், ARYA PARVATHY

மலையாளத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ள ஆர்யா, இப்போது பெங்களூருவில் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் என்ற கலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் மோகினியாட்ட அரங்கேற்றத்திற்காக, பல ஊர்களுக்கும் பயணித்துக் கொண்டே இருந்ததால் அவர் சொந்த ஊருக்குச் சென்றே ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்தது.

இறுதியாக ஒரு நீண்ட விடுப்பு கிடைக்கவே அவர் தனது பெற்றோரைப் பார்க்க மிகுந்த ஆவலோடு இருந்தார். அதுகுறித்து அவர்களிடம் கூறுவதற்கு அழைத்தபோது, “ஆர்யா, நாங்கள் உன்னிடம் கடந்த சில மாதங்களாக ஓர் உண்மையை மறைத்துவிட்டோம். அதைக் கேட்டு நீ எங்களைத் தவறாக நினைத்துவிடக் கூடாது,” என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்யாவிடம் அவருடைய அம்மா தீப்தி 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தந்தை சங்கர் கூறியுள்ளார். “இந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், இன்ப அதிர்ச்சி.

நான் சிறு வயதில் எனக்கென உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லையே என வருந்தியுள்ளேன். உடன் பிறப்பு இருந்தால் நன்றாக இருக்குமென ஆசைப்பட்டுள்ளேன். அது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதில் எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

‘அம்மா இதற்காக ஏன் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் உடனே ஊருக்குக் கிளம்பி வருகிறேன்,” என்று அம்மாவிடம் கூறியவர், தனது எர்ணாகுளம் கிளம்பிச் சென்றுள்ளார்.

தனது பெற்றோருடன் ஆர்யா பார்வதி

பட மூலாதாரம், ARYA PARVATHY

அம்மாவின் மனப் போராட்டம்

தனது வீட்டிற்குச் சென்ற ஆர்யா, 8 மாதம் கர்ப்பமாக தனது சகோதரியைச் சுமந்திருந்த அம்மாவை கட்டியணைத்து, முத்தமிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் போட்ட சமூக ஊடக பதிவு டிரெண்டானது.

ஆனால், இந்த விஷயம் ஐந்து மாதங்கள் வரை தனக்கே தெரியவில்லை என்கிறார் ஆர்யாவின் அம்மா தீப்தி. தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாகவும் பல மாதங்களாக மாதவிடாய் ஏற்படாமல் இருந்ததால் அது ஏற்படுவது நின்றுவிட்டதோ என்றெல்லாம் தனது தாய் கவலையுற்று தன்னிடம் முன்பு பேசியதாகக் கூறும் ஆர்யாவுக்கு அப்போது இதுகுறித்துத் தெரியவில்லை.

“ஒருமுறை நானும் என் கணவரும் குருவாயூர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே மருத்துவரை நாடினோம்.

அப்போதுதான் எங்களுக்கு நான் 24 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதே தெரிய வந்தது. அதற்கு ஒன்றிரண்டு மாதங்கள் எங்களுக்கு அப்படியொரு சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும், அதற்கு வாய்ப்பில்லை எனக் கருதி அந்தச் சிந்தனையையே தவிர்த்திருந்தோம்.”

“என் மகள் என்னைப் பற்றி என்ன நினைப்பாளோ என்று நான் மிகவும் வருந்தினேன். ஆனால், ஆர்யா இதை நேர்மறையாகவும் மகிழ்ச்சியோடும் எடுத்துக்கொண்டாள். அதுதான் எனக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது,” என்கிறார் தீப்தி.

“என்னுடைய முதல் பிரசவம் மிகவும் சிக்கலானதாக இருந்தது. அதற்குப் பிறகு நான் 10 மாதங்கள் படுக்கையிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், நாங்கள் இன்னொரு குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.

இருந்தும் இந்த வயதில் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பம் தரித்திருப்பது, வயது மற்றும் சமூக சிக்கல்களைக் கொண்டிருந்ததால், மருத்துவர்களே இதை வெளியில் சொல்ல வேண்டாம் எனச் சொல்லியிருந்தார்கள்.

வேலைகளைச் செய்ய ஒரு பணியாளை நியமிக்க நினைத்தபோது கூட, அவரால் வெளியே தெரிந்துவிடுமோ என்று நாங்கள் தவிர்த்துவிட்டோம்,” என்று தாங்கள் எதிர்கொண்ட மனரீதியிலான நெருக்கடிகள் பற்றிக் கூறிய தீப்தி, ஆர்யா இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைப் பொறுத்தே தங்களுடைய பார்வையும் மாறியதாகக் கூறுகிறார்.

“ஆர்யாதான் எனது உலகமாக இருந்தாள். அவளைக் கவனித்துக் கொள்வதற்காக எனது வேலையை விட்டேன். என் மொத்த உலகத்தையும் அவளுக்காகவே வாழ்ந்தேன். ஆடை எடுப்பதாக இருந்தாலும்கூட பெங்களூருவில் இருந்து கேரளா வரும்போது என்னுடன் சென்றுதான் எடுப்பாள்.

அவள் என்னை மிகவும் அதிகமாகச் சார்ந்திருந்தாள். அதனால், இந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வாளோ என அஞ்சினேன். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே மிகப்பெரிய மன அழுத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது.

அம்மாவுடன் ஆர்யா பார்வதி

பட மூலாதாரம், ARYA PARVATHY

அதிலும் கணவர் வேலைக்குச் சென்றுவிடுவார். நான் மட்டும் தனியாக இருக்கையில் அந்த அழுத்தம் இன்னும் அதிகமானது. இறுதியாக அதை அவளிடம் சொல்ல முயன்றபோது எங்களுக்குள் மிகப்பெரிய மனப் போராட்டமே நடந்தது.

ஆனால் ஆர்யா அதை மிகச் சாதாரணமாகவும் நேர்மறையாகவும் எடுத்துக்கொண்டாள். மனதில் இருந்து மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப் போல் இருந்தது,” என்று கூறினார் தீப்தி.

தீப்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆர்யா தனக்கு தங்கை பிறந்துள்ளதைக் கொண்டாடித் தீர்க்கிறார். ஆனால், இன்னமும் விமர்சனங்களைச் சிலர் முன்வைக்கவே செய்கின்றனர். அதற்கு ஆர்யா கூறுவது ஒன்று மட்டும்தான்.

“இது என்ன அதிசயமா இருக்கு. இந்த வயதில் அப்பா, அம்மா என்ன காரியம் பண்ணிருக்காங்க, என்று பல்வேறு பேச்சுகள் வரத்தான் செய்தன. அதனால் நாங்கள் கவலைப்படவில்லை.

என் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள். இது அவளுடைய வாழ்க்கை. அதுமட்டுமின்றி, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கொரு தங்கை கிடைத்திருக்கிறாள். யார் என்ன சொன்னாலும் சரி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே செய்கிறோம்.”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: