"வக்கிரமான ஆண்கள் முன்பாக நடனம் ஆடுகிறேன், என் மகளும் அதையே செய்ய விடமாட்டேன்"

- எழுதியவர், அனகா பதக்
- பதவி, பிபிசி மராத்தி
- எழுதியவர், அஷே யெக்டே
- பதவி, பாய்மானுஸ்
சமூகத்தின் பெரும்பாலான பகுதிகளைப் போல அல்லாமல், பெண் குழந்தைகள் பிறந்தால் இங்கு கொண்டாடுகிறார்கள். ஆனால் குழந்தையின் தாய் புலம்புகிறார்.
இது சங்கீத் பாரி. கோலாட்டி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரியமாக இங்கு லாவணி நடனமாடுகிறார்கள்.
இந்தப் பெண்கள் நடனமாடுவதற்காக இங்கேயே வாழ்கின்றனர். இவர்களின் குடும்பத்தில் யாரும் வேலை செய்வதில்லை. இவர்கள் மட்டுமே அந்தக் குடும்பங்களின் ஒரே ஆதாரம்.
இது லாவணி நடனமாடும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் கதை.
இந்தச் செய்தி பாய்மானுஸ் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்த முன்னெடுப்பு.

மகாராஷ்டிராவின் இரண்டு நகரங்களான அகமத்நகர் மற்றும் பீட் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை, ஜாம்கேத் என்ற தூசி நிறைந்த சிறிய நகரத்தின் வழியாக செல்கிறது.
இங்கே பகல் வேளைகள் மிகவும் அமைதியாக இருக்கின்றன. ஆனால் இரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன. பெண்கள் நடனமாடுவதைக் காண அருகிலுள்ள நகரங்கள், சிறுநகரங்களில் இருந்து ஆண்கள் இங்கு வருகிறார்கள். இது லாவணி உலகம்.
ஜாம்கேத்தில் மட்டும் 10 பொழுதுபோக்கு தியேட்டர்கள் உள்ளன. அங்கே அட்டகாசமான நிகழ்ச்சிகள், பண மழை மற்றும் 'தனியார்' காட்சிகள் அரங்கேறுகின்றன.
தலைமுறை தலைமுறையாக, ஆண்களை மகிழ்விப்பதற்காக இந்தப் பெண்கள் இந்தத் தியேட்டர்களில் நடனமாடி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் பாலியல் ரீதியிலான சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில், அவர்களின் வறுமை அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறது.
இதை நினைத்து இந்தப் பெண்கள் கவலையுடன் இருக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் தனியாக வாழும் பெற்றோராக உள்ளார்கள். இப்போது வரை அவர்களின் மகள்களும் இதே தொழிலில்தான் தள்ளப்பட்டு வந்தனர். ஆனால் இன்று, தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காக எந்தக் கஷ்டங்களையும் தாங்க அவர்கள் தயாராக உள்ளனர்.
செவிலியராக ஆகவேண்டும் என்று ஆசைப்படும் கீதா பார்டே என்ற 18 வயது பெண்ணை நாங்கள் அங்கு சந்தித்தோம். நடனத் தொழிலில் ஈடுபட்டுள்ள தன் தாயை அந்தத் தொழிலின் தளைகளில் இருந்து விடுவித்து தங்கள் இருவருக்கும் மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புகிறார்.
இது அவ்வளவு சுலபம் அல்ல.
நடனமாடும் இடம்தான் வசிப்பிடம்

ஒரு மாலை நேரத்தை கீதா நினைவு கூர்ந்தார். "ஒரு தனியார் நடன நிகழ்ச்சியில் என் அம்மா நடனமாட வேண்டும். அப்போது மழை பெய்தது, அதனால் அறையில் அவர் காத்திருந்தார். யாரோ என்னைப் பார்த்து 'யார் நீ?' என்று கேட்டார்கள். அம்மா, என் மகள்தான் என்றார். அதற்கு அவர்கள், நீ ஏன் நடனமாடப் போக வேண்டும், அவளை அனுப்பி வை என்று சொன்னார்கள்," என்று கீதா குறிப்பிட்டார்.
தாய்மார்களுக்கு அருகில் மகள்கள் இருப்பது இங்கு ஒரு தனித்துவமான சவாலாக உள்ளது. வேலை செய்யும் இடமும் வீடும் ஒன்றுதான். எனவே இவர்கள் எளிதாக ஆண்களின் கண்களில் சிக்குகிறார்கள். நடனமாடுமாறும் பாலியல் வேலைகளில் பங்கேற்குமாறும் இவர்களிடம் சொல்லப்படுவது எளிதாக நடக்கிறது.
சங்கீத் பாரி ஒரு நிரந்தர நாடக அரங்கம். நடனக் கலைஞர்கள் நீண்ட நேரம் அங்கேயே இருப்பார்கள். இதுவொரு தங்குமிடம். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும், நிகழ்ச்சி நடத்துவதற்குமான இடம்.
ஒவ்வொரு தியேட்டரிலும் 8-10 நடனக் குழு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 4-5 நடனக் கலைஞர்கள், ஒரு பாடகர் மற்றும் இசைக்கலைஞர்கள் உள்ளனர்.
ஒரு சங்கீத் பாரியில் குறைந்தபட்சம் 70-80 பேர் வசிக்கின்றனர்.
ஒவ்வோர் இரவும் பெண்கள் அலங்கரித்துக் கொள்கிறார்கள். வளாகத்தின் பெரிய இரும்புக் கதவுகள் அகலமாகத் திறக்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
எனவே தாயுடன் தங்காமல் இருப்பதே மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
கீதாவின் தாய் உமா தனது கணவர் இறந்த பிறகு நடனமாடத் தொடங்கினார். இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவர் தலைக்குமேல் இருந்தது.
வயது ஏறிக்கொண்டிருக்கும் உமா இப்போது தன் மகள் கீதாவை நடனமாடச் செய்ய வேண்டும் என்ற அசட்டுச் சிரிப்புடன் கூடிய கிண்டலான வார்த்தைகள் தொடர்ந்து வரத்தொடங்கின.
"எங்களைப் பார்த்து சிரிப்பவர்களின் வாயை உடைக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே விருப்பம். இதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இவள் ஒரு பலவீனமான பெண். யாருடைய துணையும் இல்லாமல் 2 குழந்தைகளை வளர்க்கிறாள்.
தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அவள் என்ன செய்ய முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் அவர்களை என் அருகில் வர விடமாட்டேன். என் குழந்தைகளின் கல்விக்காக நான் எதையும் செய்வேன். வக்கிரமானவர்கள் மற்றும் குடிகாரர்கள் முன் நான் நடனமாடினேன். நான் என் மகளை இந்தக் குப்பைக்குள் கொண்டு வரமாட்டேன்,” என்று உமா கூறுகிறார்.
இதுவொரு கடினமான முடிவு. ஆனால் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க, அவர்களைத் தங்களிடமிருந்தே விலக்கி வைக்க வேண்டும் என்பதை இந்தத் தாய்மார்கள் உணர்ந்துள்ளனர்.
பண மோகம்

சங்கீத் பாரி ஒரு சிக்கலான உலகம்.
இங்கு நடனமாடுபவர்கள் முக்கியமாக கொல்ஹாட்டி பழங்குடியினர். இவர்கள் ’தாய்வழி’ முறையைப் பின்பற்றுகின்றனர். குடும்பத்தில் எல்லா முடிவுகளை எடுப்பதும் பணத்தைக் கையாள்வதும் பெண்களே என்று இந்த சமூகம் கூறுகிறது.
ஆனால் உண்மையில், தங்கள் சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லோருக்காகவும் நடனமாடி அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் அதிகாரம் பறிக்கப்படுகிறது.
அவர்கள் உணவளிப்பவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவர்களின் உழைப்பு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தில் யாருமே வாழ்வாதாரத்திற்காக வேலை செய்வதில்லை.
அவர்கள் பல தசாப்தங்களுக்கு நடனமாடுகிறார்கள்.
“யாராவது வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் சகோதரர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பாக்கெட் உப்பாவது வாங்க வேண்டும்,” என்று ஒரு நடுத்தர வயது நடனக் கலைஞரும் நடனக் குழுவின் உரிமையாளருமான பபிதா அக்கல்கோட்கர் கூறுகிறார்.
இரண்டு இடங்களிலுமே லாவணி நடத்தப்பட்டாலும், சங்கீத் பாரிக்கும் தமாஷா பார்ட்டிகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. தமாஷா பார்ட்டிகள் தங்கள் கலைஞர்கள் மற்றும் உபகரணங்களுடன் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குச்சென்று தினமும் மாலையில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
முன்பு லாவணி நடனம், வெகுஜன பொழுதுபோக்கு என்று கருதப்பட்டது. பார்வையாளர்கள் வருவார்கள், பெயரளவு விலையில் டிக்கெட்டுகளை வாங்கி, பெண்கள் நடனமாடுவதைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
ஆனால் பெரும்பாலும் இதுபோன்ற தியேட்டர்களில் இப்போது இது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது, .
மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சிறிய அறையில் இந்தப் பெண்கள் நிகழ்த்தும் ‘தனியார் நிகழ்ச்சிகளிலிருந்து’ பணம் வருகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளின் கட்டணம், அறையின் ஆடம்பரம், நிகழ்ச்சியின் கால அளவு மற்றும் மிக முக்கியமாக நடனக் கலைஞர்களின் வயதைப் பொருத்து மாறுபடும்.
நடனமாடுவர்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறார்களோ, அத்தனை அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். இங்குள்ள நடனக் கலைஞர்களுக்கு தங்கள் மகள்களைப் பற்றிய பயம் இதுதான்.
“என் மகளை என்னுடன் தங்க அனுமதித்திருந்தால், அவள் இங்குள்ள கலாசாரத்தால் பாதிக்கப்பட்டிருப்பாள். நாங்கள் மேக்கப் அணிந்து வாடிக்கையாளர்களிடம் பழகுவதை அவர்கள் பார்க்கிறார்கள். மகள்கள் தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வதை பல தாய்மார்கள் பார்த்துள்ளனர். என் மகளுக்கு அப்படி நடக்க நான் விரும்பவில்லை. அதனால், நான் அவளை என்னிடமிருந்து எப்போதுமே ஒதுக்கி வைத்தேன்,” என்கிறார் லதா.
வெளியேறும் வழி

இப்போது இந்தப் பெண்களில் சிலர் ஒன்றுசேர்ந்து, தங்களின் சொற்ப சம்பாத்தியத்தில் இருந்து சேமித்து, தங்களுடைய குழந்தைகள் குறிப்பாக மகள்கள் பாதுகாப்பான சூழலில் வசிக்கவும் வளரவும், பள்ளிக்குச் செல்லவும், குடியிருப்பு விடுதியைக் கட்டுவதற்கு பங்களித்துள்ளனர்.
இந்தப் பெண்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் பள்ளிப் பொருட்களை அளிக்கவும் முயற்சி செய்கிறார்கள். விடுதியின் இயக்குநர் அருண் ஜாதவை நாங்கள் சந்தித்தோம்.
“இதைக் கட்டிய பெண்கள், சிந்து குலாப் ஜாதவ், காந்தா ஜாதவ், அல்கா ஜாத்வா ஆகிய எல்லோருமே நடனக் கலைஞர்கள். தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் தங்கும் விடுதிக்கு நிதி உதவி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புனேவில் ஆர்யபூஷண் என்று ஒரு கலா கேந்திரா உள்ளது. அங்குள்ள சவிதா என்ற சகோதரி தனது தனிப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் நன்கொடை சேகரித்து வந்தார். ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் 500 ரூபாய் பெற்றுக் கொள்வார். அவர் மட்டுமே 50-60 ஆயிரம் ரூபாய் திரட்டினார்,” என்று அவர் தெரிவித்தார்.
நடனக் கலைஞர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஹாஸ்டல் வேறுபட்டுள்ளது.
நடனக் கலைஞர்கள் வசிக்கும் அந்தக் குடியிருப்புகள் நெருக்கமானவை. ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்று அல்லது இரண்டு அறைகள் இருக்கும். பொதுவாக இந்த இடங்களில்தான் பெண்கள் இருப்பார்கள். ஆண் இசைக் கலைஞர்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
அங்கு சில ஆடம்பர அறைகளும் இருக்கும். சிலவற்றில் ஏசி இருக்கும், சிலவற்றில் ஏர் கூலர்கள் இருக்கும். வசதியான மெத்தைகளும் பளபளக்கும் டைல்ஸ்களும் போடப்பட்டிருக்கும். இவை ’தனிப்பட்ட’ நிகழ்ச்சிகள் நடக்கும் அறைகள்.
பெண்கள் காலையில் தாமதமாக, சில நேரங்களில் மதியத்தில் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு சமையல்காரர் மற்றும் துப்புரவு வேலை செய்யும் பெண்மணி இருக்கிறார்கள். ஏனென்றால் நடனக் கலைஞர்களும் வேலை செல்லும் பெண்கள். அவர்களுக்கும் வீட்டு வேலைகளில் உதவி தேவை.
மதியம் 4 மணிக்கு மேல் அவர்கள் தயாராகத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்கள் முன் அறையில் அமர்ந்து வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்கள். ஆண்கள் சில நேரங்களில் தங்கள் முகத்தை மறைத்தபடி வருவார்கள். தங்களுக்குப் பிடித்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்வார்கள்.
இந்த ஆண்கள் பெரும்பாலும் நடனக் கலைஞர்கள் மீது பணத்தைப் பொழிகிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 4 மணி வரை நடைபெறும்.
சில நேரங்களில் நடனக் கலைஞர்கள் வாடிக்கையாளர்களுடன் 'வெளியே' செல்வார்கள். அதாவது அவர்கள் வாடிக்கையாளருடன் பாலுறவில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. மேலும் அவர்கள் அதை தியேட்டர் உரிமையாளர் அல்லது இசைக்கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
மறைந்து கொண்டிருக்கும் கலை

லாவணி, மகாராஷ்டிராவின் நாட்டுப்புற நடனமாகக் கருதப்படுகிறது. இது கதக்குடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இதுவொரு கடினமான நடன வடிவம். ஏனெனில் இது முகபாவனைகள், நடிப்பு மற்றும் ஒரு சில கை அசைவுகளில் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
லாவணி என்பது சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டக்கூடிய நடனம். எனவே பல காலமாக இந்தக் கலை வடிவம் இழிவாகப் பார்க்கப்பட்டது. ஆயினும்கூட இதில் தேர்ச்சி பெற்ற நடனக் கலைஞர்கள் இருந்தனர். அவர்களின் நடன அழகுக்காக இப்போதும் அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.
ஆனால் இப்போது இந்தக்கலை மங்கி வருகிறது. இசைக் கலைஞர்கள் தாளம் தவறுகிறார்கள். நடனக் கலைஞர்களிடம் துடிப்பைக் காணமுடியவில்லை. எல்லாவற்றிலுமே நேர்த்தி இல்லை.
“ஒரு காலத்தில் பார்வையாளர்கள் எங்கள் கலையை மதித்தனர். ஆனால் இப்போது அவர்கள் பார்க்க விரும்புவது சதையை மட்டும்தான். எனவே கலையைக் கற்றுக்கொள்வது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இப்போது இதுவொரு வியாபாரம் மட்டுமே,” என்று மூத்த நடனக் கலைஞரும் பாடகியுமான லதா பர்பானிகர் கூறினார்.
பெண்கள் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள், ஆனால் எல்லோராலும் இது முடியாது. ஏனென்றால் இதற்கு உதவி செய்யும் தாய்மார்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
வீட்டில் இருக்கும் வறுமை, துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் தீய வட்டத்திலிருந்து வெளியே வர இங்குள்ள பல பெண்கள் பணம் சம்பாதிக்க வேண்டும். அந்தப் பெண்களுக்கு சங்கீத் பாரிதான் வீடு.
ஜெய் அம்பிகா கலா கேந்திராவில் இது மற்றொரு மாலை. சலசலப்பு, வண்ணங்கள், அலங்காரம் செய்துகொண்டுள்ள பெண்கள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பதைக் பார்க்க முடிகிறது. வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
வெகு தொலைவில் விடுதியில் குழந்தைகள் மாலை பிரார்த்தனை பாடலைப் பாடிக்கொண்டிருப்பார்கள். தங்கள் மகள்களை இந்த வாசலைக் கடக்க அனுமதிக்க மாட்டோம் என்ற மன உறுதியுடன் இருக்கிறார்கள் சங்கீத் பாரியில் இருக்கும் தாய்மார்கள்.
BBCShe தொடர் தயாரிப்பாளர்: திவ்யா ஆர்யா, பிபிசி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













