BBCShe: செய்திகளில் பெண்களின் பங்களிப்பு எப்படி அதிகரிக்கிறது?

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
காலை டீயுடன் நாளிதழ் படிக்கும்போது நடக்கும் விவாதமாக இருந்தாலும் சரி, இரவு தூங்கும் முன் ட்விட்டரில் அன்றைய தினத்தின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துச் சொல்லும் போதும் சரி, தெரிந்தோ தெரியாமலோ செய்திகள் இரண்டு வகைகளாக பிரிந்து கிடப்பதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா?
அரசியல், பொருளாதாரம், தேர்தல்கள், சர்வதேச தூதாண்மை... பொதுவாக முக்கியமான தலைப்புகளாகக் கருதப்படும் விவகாரங்கள் ஆண்களின் தேர்வாகவும், இலகுவானதாகக் கருதப்படும் சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, போன்றவை பெண்களின் தேர்வாகவும் சொல்லப்படுகின்றன.
இந்த செய்திகளின் வரிசையும் அவற்றைப் படிக்கும் நபர்களைப் பற்றிய இந்த புரிதலும் காலம்காலமாக வந்தவை. அதன்படி ஆண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பணம் சம்பாதிப்பார்கள். எனவே அவர்களின் சிந்தனைகள் விசாலமானது மற்றும் அவர்களின் ஆர்வமும் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பெண்கள் வீட்டை நடத்துபவர்கள். எனவே அவர்களின் உலகம் சிறியது மற்றும் அவர்களின் ஆர்வம் வீட்டைப்பற்றியதாகவே இருக்கும்.

பட மூலாதாரம், Triloks
பெண்களை விட படித்த ஆண்களின் விகிதம் அதிகம். இன்டர்நெட்,மொபைல் போன்ற வசதிகள் அவர்களுக்கு அதிகமாக கிடைக்கின்றன என்பதால் செய்திகளை அவர்களே உருவாக்குகிறார்கள் மற்றும் அவர்களுக்காகவே செய்திகள் உருவாக்கப்படுகின்றன.
குறைந்த அனுபவம் காரணமாக பல விஷயங்கள் பிடிபடாமல் இருக்கும் அந்த வாசகர்கள் பற்றி செய்திகளைத் தேர்ந்தெடுத்து எழுதுபவர்கள் சிந்திப்பதில்லை.
பெண்கள் இரண்டாம் இடத்தில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக நமது பத்திரிக்கையியல் அந்த கடினமான பாடங்களை அவர்களுக்கு எப்படி எளிதாக்க முடியும்?
செய்திகளின் தேர்விலும், அவை அளிக்கப்படும் விதத்திலும் இந்த 'ஜெண்டர் லென்ஸை' கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.
இப்போது உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் பத்திரிக்கைத் துறையில் தங்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். செய்திகளின் பழைய கட்டமைப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
பிபிசியின் முன்முயற்சியான BBCShe இன் இரண்டாவது பதிப்பில், செய்திகளின் சுழற்சியில் சிக்கிக் கொள்ளாமல், பெண்களின் ஆர்வங்கள், மற்றும் முக்கிய நிகழ்வுகளும் கொள்கைகளும் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக்காட்டும் கதைகள் ஆகியவை தொடர்பாக மற்ற ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
பிபிசிஷீ என்றால் என்ன?

பட மூலாதாரம், LWA/Dann Tardiff
இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் மொழிகளிலும் பணிபுரியும் ஊடக நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, பத்திரிகைத் துறையில் 'ஜெண்டர் லென்ஸ்' பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிய முயன்றோம்.
பரஸ்பர விவாதத்திற்குப் பிறகு, ஏதேனும் ஒரு விஷயத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம், பெண்கள், ஆண்கள் மற்றும் எல்லா மக்களுக்காகவும் எழுதப்பட்ட ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் இணைந்து பணிபுரிந்த ஆறு நிறுவனங்கள் :
பாய்மானுஸ் - ஒளரங்காபாத்தில் இருந்து இயங்கும் இந்த மராத்தி மொழி செய்தி இணையதளத்தின் நோக்கம், பாரம்பரிய பத்திரிகையின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று, சாதாரண பெண்கள் தங்கள் வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை முன் வைக்கும் வாய்ப்பை வழங்குவதாகும். பிரதான ஊடகங்களில் குறைந்த இடத்தைப் பெறும் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கவலைகளை முன்னிலைப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஃபெமினிஸம் இன் இண்டியா (இந்தி) – ஆங்கிலம் மற்றும் இந்தியில் இயங்கி வரும் இந்த இணையதளத்தின் நோக்கம் பெண்ணியம் பற்றிய புரிதலை வளர்ப்பதாகும். ஆராய்ச்சி தவிர இது நடப்பு செய்திகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறது. பெண்கள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை பிரதான நீரோட்டத்துடன் இணைத்து அவர்களின் குரலை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
தி பிரிட்ஜ் – விளையாட்டு செய்திகளில் பத்திரிகையியலை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி எல்லா விளையாட்டுகள் மற்றும் வீரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒலிம்பிக்ஸ் மற்றும் பிற சர்வதேச போட்டிகளை ஊடகங்கள் பெரும்பாலும் கவனிக்கின்றன. ஆனால் ஆண்டு முழுவதும் விளையாட்டு செய்திகளையும், விளையாட்டு வீரர்களின் போராட்டங்களையும் அனைவருக்கும் முன்னால் கொண்டு வருவது இதன் நோக்கமாகும்.
குர்காவ் கி ஆவாஸ் - தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய என்சிஆர் (தேசிய தலைநகர் மண்டலம்) ஆகியவற்றில் பொது சமூகத்தால் நடத்தப்படும் ஒரே சமூக வானொலி நிலையம் இதுவாகும். குர்காவ் பகுதியில் இந்த வானொலியை கேட்பவர்களில் உள்ளூர் கிராமவாசிகளைத் தவிர, புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். இவர்களது ஒலிபரப்பில் கல்வி, சுகாதாரம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளன.
தி நியூஸ்மினிட் - நாடு முழுவதும் செய்திகள் மற்றும் பிரச்சனைகளை கண்காணிக்கும் இந்த டிஜிட்டல் மீடியா அமைப்பு, தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதன் அதிகபட்ச செய்தியாளர்கள் அங்குதான் உள்ளனர். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த இணையதளத்தின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன. இருப்பினும் இது தமிழில் வீடியோக்களை வெளியிடுகிறது.
விமன்ஸ்வெப் - இந்த இணையதளத்தின் முக்கிய மந்திரம் பாரம்பரிய ஊடகங்களிடமிருந்து வேறுபட்டு இருப்பது. பெண்கள் உண்மையில் எல்லா வகையான செய்திகளிலும் ஆர்வமாக உள்ளனர். ஆங்கிலத்தில் கட்டுரைகளை வெளியிடும் இந்த இணையதளம், பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் உண்மைக் கதைகளையும் பகிர்ந்து கொள்ள இடமளிக்கிறது. கூடுதலாக, அவர்கள் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்.

பட மூலாதாரம், Vikram Raghuvanshi
இந்த எல்லா ஊடக நிறுவனங்களையும் கலந்தாலோசித்ததன் மூலம், பெண்களின் வாழ்க்கையையும் ஆர்வங்களையும் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு செய்திகளை வழங்குவதற்கும் தெரிவிப்பதற்கும், என்ன வழிகள் இருக்க முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
இவர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்த ஆறு கதைகள் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீங்கள் வரும் நாட்களில் பிபிசியின் இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய எல்லா இந்திய மொழிகளின் இணையதளம் மற்றும் சமூக ஊடக ஹேண்டில்கள் மற்றும் இந்த ஊடக அமைப்புகளின் இணையதளத்திலும் படிக்கலாம் மற்றும் பார்க்கலாம்..
ஜெண்டர் லென்ஸ் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும் முயற்சி இது. பெண்களின் ஆர்வங்கள் பற்றிய செய்திகளை சொல்லும் விதத்தில் மேம்பாட்டை கொண்டு வருவது எங்கள் நோக்கம். இந்த முயற்சி தொடரும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு BBCShe இன் முதல் பதிப்பில், நாங்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்குச் சென்று பிபிசியில் என்னென்ன கதைகளைப் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று சாதாரண பெண்களிடம் கேட்டு, அவர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












