ரசியா முராடி : இந்திய பல்கலைக்கழகத்தில் தங்கம் வென்ற ஆப்கானி பெண்

பட மூலாதாரம், RAZIA MURADI
தன்னுடைய சிறந்த செயல்திறனுக்காக பல்கலைக்கழகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட விருதினை பெறுவதற்கு ரசிய முராடி சென்றபோது, அவரது முகத்தில் சோகமும், மகிழ்ச்சியும் ஒருசேர காணப்பட்டன.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 27 வயதான ரசியா முராடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி படித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய சிறந்த செயல்திறனுக்காக பல்கலைக்கழகத்தில் இவர் தங்கப்பதக்கம் பெற்றது, தலைப்பு செய்தியாகியிருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்ததற்காக அவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு, அவரது குடும்பத்தினர் அவருடன் இல்லை.
இதுகுறித்து முராடி கூறும்போது, ”பதக்கம் வென்றது ஒருபுறம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், எனது குடும்பத்தினர் என்னோடு இல்லாதது எனக்கு வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
”அதேசமயம் ஆப்கானிஸ்தானில் தற்போது என்னை போன்ற மற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து அவர்களது அடிப்படை உரிமையான கல்வி பறிக்கப்பட்டிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது” என்று கூறுகிறார் ரசியா.
ஆப்கானிஸ்தானில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, பெண்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே பெண் குழந்தைகள் மேல்நிலை பள்ளி படிப்புகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கே சூழ்நிலைகள் சற்று வேறுபட்டு இருந்தது. அத்தகைய ஒரு சாதாரணமான சூழலின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரசியா முராடி இந்தியாவிற்கு வந்தார். அதனால் அவருக்கு அவரது கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவில் உயர் படிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால், தன்னுடைய உயர்கல்விக்காக இங்கே வந்ததாக ரசியா கூறுகிறார். அதேபோல்இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு சில கலாசார ஒற்றுமைகள் இருப்பதால், இங்கே தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், DHARMESH AMIN / BBC
`ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே படித்திருப்பதாகவும், அவர்கள் இந்த கல்லூரி குறித்து நல்ல விமர்சனங்களை கூறியிருந்ததால், தானும் இங்கு மேற்படிப்பை தொடர முடிவு செய்ததாக` தெரிவிக்கிறார் ரசியா. நிர்வாகம் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக பொது நிர்வாகவியல் துறையில் மேற்படிப்பை தொடர்ந்ததாகவும், தனது படிப்பின் மூலம் ஆப்கானிஸ்தானின் அரசு நிர்வாகத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டுமெனவும் அவர் கூறுகிறார்.
`என்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பச் சென்று, எனக்கு விருப்பமான நிர்வாகத்துறையிலேயே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கும்` என்று கூறும் ரசியா, ஏற்கனவே பல சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து மனிதாபிமான அடிப்படையிலும், பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும் சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை ஆளுநரின் கைகளால் தங்கப்பதக்கத்தை பெற்ற ரசியா முராடி, தன்னுடைய துறைச் சார்ந்த படிப்பில் ஒட்டுமொத்த சராசரி தரப்புள்ளியாக 8.60 புள்ளிகளை பெற்றிருக்கிறார்.
ஆனால் இத்தனை நல்ல மதிப்பெண்களை அவ்வளவு எளிதாக பெற்றுவிடவில்லை என்கிறார் ரசியா. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டதால், தன்னுடைய குடும்பத்தினர் அங்கே வசித்து வருவது தனக்கு மிகுந்த கவலையளித்தாக அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், DHARMESH AMIN / BBC
”ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவதால், அது ஆபாத்தான பகுதியாக கருதப்படுகிறது. அங்கே நடக்கும் குண்டு வெடிப்புகள் குறித்தும், தாக்குதல்கள் குறித்தும் எனக்கு தொடர்ந்து தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. அதனால் என்னுடைய குடும்பத்தினர் அங்கே பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை தொடர்ந்து உறுதி செய்துக்கொண்டே இருந்தேன். இதில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலையற்ற இணைய சேவை எனக்கு கூடுதல் சிரமத்தை அளித்தது” என்று கவலையுடன் கூறுகிறார் ரசியா.
”அதேசமயம் எனக்கு எப்போதெல்லாம் கவலையும், அச்சமும் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் , என்னை நானே உத்வேகப்படுத்தி கொள்வேன். எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்காக அவர்கள் எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கிறார்கள், அவர்களுக்காக நான் எனது படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எனது படிப்பை தொடர்ந்து வந்தேன்” என்கிறார் அவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் குடும்பத்தினரை சந்திக்கவில்லை என்றும், தற்போது படிப்பை முடித்த பிறகும் கூட அங்கே நிலைமை சீராக இல்லாததால், வீட்டிற்கு திரும்ப செல்ல முடியாத சூழலில் தான் இருப்பதாகவும் ரசியா கூறுகிறார்.
தற்போதைய சூழலின்படி, ஆப்கானிஸ்தானில் தனக்கு நல்ல எதிர்காலம் இல்லையென்றும் அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், RAZIA MURADI
அங்கே மக்கள் வேலையை இழந்து வருகிறார்கள். வளர்ச்சிக்கான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் முன்னேறுவதற்கான பாதையை விட்டுவிட்டு, மிகவும் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஆப்கானிஸ்தானின் அரசியல் சூழலை சுட்டிக்காட்டி பேசுகிறார் ரசியா.
தனது நாட்டின் அரசியல் சூழல் குறித்து பேசும்போது, ரசியா கொஞ்சம் கூட தடுமாறவில்லை. நாட்டின் அரசியல் நிலை குறித்து உண்மையை பேச வேண்டியது தனது கடமை என அவர் கூறுகிறார்.
”இங்கே நாம் அமைதியாகவே இருந்தால், எதுவும் மாறிவிட போவதில்லை. தாலிபன்கள் மக்கள் எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு படித்த பெண்ணாக என்னால் அப்படி இருக்க முடியாது. இந்த சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசுவதை எனது பொறுப்பாக கருதுகிறேன்” என்கிறார் ரசியா.
ரசியா முராடி தற்போது அதே பல்கலைக்கழகத்திலேயே, பொதுநிர்வாகவியலில் முனைவர் படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.
”என்னுடைய கனவுகளுக்கு எனது குடும்பமும், எனது சமூகமும் எப்போதுமே உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவர்களுடைய ஆதரவால்தான் இன்றைக்கு ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் என்னால் செயல்பட முடிகிறது. எனவே என்னுடைய வெற்றிகள் அனைத்தையும் அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரசியா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












