பெண்களின் 'எதிர்காலத்தை' அழிக்கும் தாலிபன்கள் - ஆப்கனின் கண்ணீர்க் கதைகள்

பட மூலாதாரம், SUPPLIED
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் சிறுமிகளும் பெண்களும் எதை நினைத்து அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அந்த உத்தரவு வந்துவிட்டது.
புதன்கிழமையன்று, ஹிஜாப் அணிந்த பெண்கள் தங்கள் பல்கலைக்கழக வளாகங்களுக்குச் சென்றபோது, தாலிபன் காவலர்களால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அப்படி திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் அழுதுகொண்டே செல்வதைக் காட்சிகள் காட்டுகின்றன.
கடந்த 16 மாதங்களில் பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து பெண்களை ஒதுக்கிய தாலிபன்கள், இந்த வாரம் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்வியையும் தடை செய்துள்ளனர்.
“என்னுடைய எதிர்காலத்துடன் என்னை இணைப்பதற்கு இருந்த ஒரே பாலத்தையும் அவர்கள் அழித்துவிட்டனர்,” என்று காபூல் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
“நான் இதை எப்படி எடுத்துக்கொள்வது? கல்வியின் மூலம் என் எதிர்காலத்தை மாற்ற முடியும், என் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டு வர முடியும் என்று நம்பினேன். ஆனால், அவர்கள் அதை அழித்துவிட்டார்கள்,” என்று கூறினார்.
அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். மறுநாள் இஸ்லாமிய மதப் பள்ளிகள் மற்றும் பல மாகாணங்களிலுள்ள தனியார் கல்லூரிகள் உட்பட பிற கல்விக்கூடங்களும் இந்த உத்தரவை நிறைவேற்றின.
வடக்கில் தகார், தென்கிழக்கில் கஜினி, தலைநகர் காபூல் ஆகிய மூன்று மாகாணங்களில் கிடைத்த தகவல்கள், அங்குள்ள தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதை தாலிபன்கள் தடுத்துள்ளதை பிபிசிக்கு உறுதி செய்தன.
பெண்கள் முறையான கல்வியை அணுகுவதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு வருகின்றன.
சில பெண்கள் புதன்கிழமையன்று காபூல் தெருக்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பெண்களைத் தடுத்து நிறுத்திய தாலிபன்களைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தான செயல். நடைபெற்ற சிறிய ஆர்ப்பாட்டங்கள் தாலிபன் அதிகாரிகளால் விரைவில் தடுக்கப்பட்டன.
தங்களுடைய மூத்த சகோதரிகள், அம்மாக்கள், உறவினர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில், இப்போதைய தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைத்தார்கள்.
ஆனால் அதற்கு மாறாக தங்கள் எதிர்காலம் சிதைக்கப்படுவதைக் காண்கிறார்கள்.
கடுமையான இஸ்லாமிய போராளிக் குழுவாகத் தொடங்கிய தாலிபன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பெண்கள் வேலை செய்யவோ படிக்கவோ முடியாத, 1996-2001 வரையிலான அவர்களுடைய முந்தைய ஆட்சியின் கொடூரத்திற்குப் பிறகு, இந்த முறை பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக உறுதியளித்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளியேறி, தாலிபன்கள் ஆட்சிக்குத் திரும்பிய பிறகு, பெண்களுக்கு வழங்கப்பட்ட சின்னச் சின்ன சுதந்திரங்கள், உரிமைகள் என்று அனைத்தையும் அவர்களுடைய சமீபத்திய ஆணை மீண்டும் பறிக்கிறது.
இருந்தும் மூன்று மாதங்களுக்கு முன்பு தான், தாலிபன்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதித்தனர்.
நாடு முழுவதும் உள்ள மாகாணங்களில் ஆயிரக்கணக்கான சிறுமிகள், பெண்கள் தேர்வு எழுதினார்கள். அதில் பலர், வீட்டிலிருந்தோ அல்லது பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மறைவான கல்லூரிகளுக்கு அபாயங்களுக்கு நடுவே சென்றோ ரகசியமாகப் படித்தவர்கள்.
ஆபத்து நிலவிக்கொண்டே இருந்தது. சில தேர்வுகளின்போது பள்ளிகளைக் குறிவைத்து வீசப்பட்ட வெடிகுண்டுகளால் மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஆனாலும் இளம்பெண்கள் விடாப்பிடியாக இருந்தார்கள்.
நவம்பர் மாத இறுதியில், தாலிபன்கள் கடைசி நேரத்தின்போது பாடங்கள் மீதான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். பொருளாதாரம், இதழியல் போன்ற படிப்புகளில் இருந்து பெண்களை அந்தக் கட்டுப்பாடுகள் தடுத்தன. அப்போதும், அவர்கள் தொடர்ந்து முயன்றனர். பலர் கற்பித்தல், மருத்துவம் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தனர்.
“எப்போதும் நாங்கள் ஏன் பலியாகிக் கொண்டிருக்க வேண்டும்? ஆப்கன் ஒரு ஏழை நாடு. ஆனால், இந்த நாட்டிலுள்ள பெண்கள் மற்ற அனைத்துப் பிரச்னைகளுடன் வறுமையையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதோடு அவர்கள் இன்னமும் கஷ்டப்பட வேண்டும்,” என்று ஒரு மாணவி பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், AFP
பெண்களின் பள்ளிப்படிப்பு நீண்ட காலமாக தாலிபனில் உள்ள பழைமைவாத, மிதவாத பிரிவுகளுக்கு இடையில் ஒரு சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வருகிறது.
பல்கலைக்கழகத் தடை இப்போது தாலிபனிலுள்ள அடிப்படைவாதிகளின் வெற்றியைக் குறிக்கிறது. அதன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா, குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கான இஸ்லாமிய போதனைகளின்படி நவீன கல்வி தவறானது என்று நம்புகிறார்.
இருப்பினும்கூட, ஆளும் தாலிபன் இயக்கத்திலுள்ள அனைவரும் அவரைப் போல் நினைக்கவில்லை. அதோடு காபூல் போன்ற நகரங்களில் உள்ள மிதவாத அதிகாரிகள் 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கல்வி பெறுவதை விரும்புவதாக செய்திகள் கூறுகின்றன.
உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளதன்படி, இந்த முடிவு மொத்த நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். “எந்தவொரு நாடும் அதன் மக்கள்தொகையில் பாதியை பின்னுக்குத் தள்ளினால் செழித்து வளர முடியாது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.
தாலிபன்கள் உலக அங்கீகாரம் பெற வேண்டுமென்றால், பெண் கல்வியை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தின. இருப்பினும் தாலிபன்கள் இதுவரை விமர்சனங்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
தங்கள் மகள்களின் எதிர்காலம் மீண்டும்”இருண்ட யுகத்தை” நோக்கிச் சறுக்குவது, நாட்டிலும் உலகமெங்கிலும் உள்ள ஆப்கானிய குடும்பங்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பல்கலைக்கழக தடை பற்றிய செய்தி சில ஆப்கன் பெண் ஆர்வலர்களை, தங்களுடைய பல்கலைக்கழக பட்டப்படிப்பு நாட்களின் நினைவுகளை வெளியிடத் தூண்டியது.
தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது சமீபத்திய நாட்களில் பெண்களின் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதி. நவம்பர் மாதம், காபூலில் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைவதும் தடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்படுவதற்கு நிகரான கொள்கைகளால், பெண்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்படுவது அதிகரிப்பதாக ஐநா கூறுகிறது.

பட மூலாதாரம், AFP
“ஏன் ஆண்களுக்கு இது கொண்டுவரப்படவில்லை?”
ஒரு சட்டக்கல்லூரி மாணவிக்கு, அவரது உயர்கல்வி பாதை இப்போது முடிந்துவிட்டது. அவருடைய பல்கலைக்கழக காலம் குளிர்கால இடைவேளை முடிவடைந்து மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இப்போது அவர் மீண்டும் வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படவில்லை. அவர் “அனைத்தையும் இழந்துவிட்டார்.” ஷரியா சட்ட அறிஞரான அவர், இஸ்லாமிய போதனைகளின்படி அதைப் புரிந்துகொள்ளப் போராடுவதாக பிபிசியிடம் கூறினார்.
“இஸ்லாமும் அல்லாஹ்வும் எங்களுக்கு வழங்கிய உரிமைகளை தாலிபன்கள் பறித்துள்ளனர்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“வேறு இஸ்லாமிய நாடுகளுக்குப் போய் அவர்களுடைய செயல்கள் இஸ்லாத்தின்படி இல்லையா எனப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்வதன்படி, இது ஷரியா. ஆனால் பெண்களிடம் மட்டும் இதை ஏன் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள்? ஏன் ஆண்களுக்கு இது கொண்டுவரப்படவில்லை?”
மற்ற மத அறிஞர்களும் அவரது கருத்தை ஆதரிக்கின்றனர். சில ஆப்கனிய பெண் மத அறிஞர்களில் ஒருவரான நவிதா குராசானி, இந்த உத்தரவு இஸ்லாமிய விழுமியங்களை மீறுவதாகக் கூறுகிறார். “இஸ்லாத்தில் இதற்கு இடமில்லை. ஏனெனில், இஸ்லாத்தின்படி ஆண்கள், பெண்கள் இருவரும் கல்வி கற்க வேண்டும்,” என்று இப்போது கனடாவில் வசிக்கும் நவிதா கூறினார்.
பிபிசியிடம் பேசிய மற்றொரு மத அறிஞரான, ஆப்கனில் வசிக்கும் ஓர் ஆண் இமாம், ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தின் கீழ் கல்வி கற்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பல ஆப்கன் அவதானிப்பாளர்களைப் பொறுத்தவரை, இஸ்லாமிய போதனைகளின் கீழ் தாலிபன்களின் செயல்களை விளக்க முயல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாலிபன் ஆட்சிக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பெண்களை முற்றிலுமாக ஒடுக்கி, அவர்களுக்கு இருந்த சுதந்திரத்தை அழிக்கும் இயக்கத்துடைய நோக்கங்களின் தொடர்ச்சி தான் பல்கலைக்கழகத் தடை என்று அவர்கள் கூறுகின்றனர்.
தாலிபன்கள் பெண்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை இறுக்குவதே, பல்கலைக்கழக கல்விக்கான கதவுகளை மூடும் செயல்.
“ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான நாடு இல்லை, பெண்களுக்கான கூண்டு,” என்று அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் கல்வியாளரும் ஆர்வலருமான ஹூமைரா காதேரி கூறினார்.
மேலும் அவர், “ஆப்கன் பெண்களுக்கு சமூக வாழ்க்கை எதுவுமில்லை. தெருக்களில் இப்போது ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இது தாலிபன்களால் செய்ய முடிந்த கடைசி விஷயம். ஆனால், அதையும் அவர்கள் செய்தார்கள்,” என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












