ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்கல்வி கற்க தாலிபன் தடை; ஐ.நா. கவலை

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தெரிவிக்கிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்தத் தடை, அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும். தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபின், மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடையே வகுப்பறையில் ஒன்றாகக் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகளை சேர்த்துக்கொள்ள மறுக்கும் நிலையில், பெண்கள் முறைப்படுத்தப்பட்ட கல்வியைப் பெறுவதை இந்தப் புதிய உத்தரவு தடுக்கிறது. இந்தச் செய்தி வெளியானதில் இருந்து தாம் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாக காபூல் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
''என் எதிர்காலத்துடன் நான் தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பாக இருந்த ஒரே பாலத்தை அவர்கள் தகர்த்துவிட்டனர். இதற்கு நான் எப்படி எதிர்வினையாற்றுவது?''
''நான் படித்து என் எதிர்காலத்தை மாற்ற முடியும் அல்லது என் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று நான் நம்பினேன். ஆனால், அதை அவர்கள் அழித்துவிட்டனர்,'' என்று அந்த மாணவி தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்லாயிரம் மாணவிகளும் பெண்களும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதினர். ஆனால், அதன் பின்னர் பொருளாதாரம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், இதழியல் உள்ளிட்ட பாடங்களை உயர்கல்வியில் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தாலிபன்களை ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வமான அரசாக மேற்கத்திய நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. தாலிபன் அமைப்பின் ஆப்கானிஸ்தான் அரசை தாங்கள் முறைப்படி அங்கீகரிக்க வேண்டுமானால் தாலிபன்கள் அந்நாட்டு பெண்கள் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்சாதா மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தினர் நவீன கல்விக்கு எதிராக இருக்கின்றனர். குறிப்பாக அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி கற்பதை எதிர்க்கின்றனர். தாலிபன் அரசின் சமீபத்திய உத்தரவு ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
''கல்வி என்பது அடிப்படை மனித உரிமை; பெண்களின் கல்விக்கான கதவு மூடப்பட்டால் அது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தின் கதவு மூடப்பட்டதாகவே பொருள்,'' என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளரின் ஆப்கானிஸ்தானுக்கான துணை சிறப்பு பிரதிநிதி ரமீஸ் அலெக்பாரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்பு அந்நாட்டு அரசைக் கைப்பற்றிய தாலிபன்கள் இதற்கு முந்தைய தாலிபன் ஆட்சி போல் இல்லாமல் ஒப்பீட்டளவில் மிதமான ஆட்சியே வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இஸ்லாமியவாதத்தில் தீவிரமாக இருப்பவர்கள் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பின்னோக்கியே இழுத்துச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொது இடங்களான பூங்காக்கள், ஜிம்கள், பொது குளியலறைகள் உள்ளிட்டவற்றுக்கு பெண்கள் செல்ல கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது உயர்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








