சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு?

சீனா கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பாதிப்பு தென்படத் தொடங்கிய சிறிது காலத்திலேயே நாடு முழுவதும் வெகுவேகமாக பரவிவிட்டது. அதன் உச்சக்கட்டமாக ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வந்தனர்.

பொது முடக்கம், கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சாக அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

அதிவேகத்தில் பெருகிவிட்ட கொரோனா நோயாளிகளை கையாள முடியாமல் நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் திணறிப் போனது. நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் எழுந்தன.

குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கட்டமைப்பின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடிய வீடியோக்கள் வெளியாகி காண்போரை கலங்கடித்தன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?
படக்குறிப்பு, கோப்புப் படம்

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த, சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூட கொரோனா வைரசை சமாளிக்க முடியாமல் திண்டாடி விட்டன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தரவுகளின்படி, உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்காகவும், நிவாரணப் பொருட்களை வாங்கவும் மக்கள் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை காண முடிந்தது. 

ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலரும் ஆங்காங்கே பூங்காக்களில் சிகிச்சை பெற நேரிட்டது. சில இடங்களில் கொரோனா நோயாளிகள் தங்களது வீட்டில் இருந்தே படுக்கைகளை கொண்டு வந்து பயன்படுத்தியதும் கூட நடந்தேறியது. பல இடங்களில் விளையாட்டு மைதானங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஆய்வகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை முழுமையாக முடித்து கொரோனா தடுப்பூசியை முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரித்து, மக்களுக்கு பயன்பாட்டிற்கு விட்டது. அதனை பின்பற்றி, உலகின் பிற நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செலுத்த தலைப்பட்டன.

ஆக்ஸ்போர்ட் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு, உள்நாட்டிலேயே தயாரான கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொண்டு, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளையும் பெருமளவில் பயன்படுத்தியது. 

உலகம் முழுவதுமே கோர தாண்டவமாடிய கொரோனாவின் தாக்கம், தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகே மெல்லமெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. கொரோனா பரவல் இனி கட்டுக்குள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பிறகே இந்தியா உள்பட ஒவ்வொரு நாடும் பொது முடக்க கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்க முன்வந்தன. அதன் தொடர்ச்சியாக, இன்று பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டதால், மக்கள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர் என்றே சொல்லலாம். 

கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்த வழிமுறை

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

உலகமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில், சீனாவைப் பொருத்தவரை ஒப்பீட்டளவில் நிலைமை மேம்பட்டதாகவே இருந்தது.

அமெரிக்கா, இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படும் போது, சீனாவில் அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் சீனா கண்டுபிடித்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகளே.

அதன்படி, ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலே, அந்த பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. உணவு விற்பனை அல்லாத மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பல நாட்கள் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுப்பாடுகளை கைவிட்ட சீனா

தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகளை கண்ணுற்ற உலகின் பிற நாடுகள் அதில் இருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சீனாவிலோ கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் தொடரவே செய்தன. இதனால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லாமல் போகவே, அது வேலைவாய்ப்புச் சந்தையிலும் எதிரொலித்தது. சீனாவில் இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது.

இதனால் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் இறங்க அரசு இறங்கிவந்தது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்ட சீன அரசு, மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உதவும் செல்போன் செயலி பயன்பாட்டையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்திவிட்டது. 

சீனாவில் மீண்டும் உச்சத்தில் கொரோனா பரவல்

ஜீரோ கோவிட் பாலிசி தளர்த்திக் கொள்ளப்பட்டதுமே சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 2,097 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவானதாக தெரிந்தாலும், சீனாவில் கடந்த ஏப்ரல் மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்தான்.

கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கொரோனா பரிசோதனைகள் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டும் நிபுணர்கள், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?
படக்குறிப்பு, சீனாவில் கொரோனா பரவல் குறித்த ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவு.

“தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பு வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கக் கூடும். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 21-ம் தேதி முதல் சீனப் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட, பணிபுரியும் இடங்களில் இருந்து கோடிக்கணக்கான சீனர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த கோடிக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு கொரோனா இரண்டாம் அலைக்கு வழிவகுக்கலாம். 

புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி இரண்டாம் பாதியில் இருந்து மார்ச் முதல் பாதி வரை சொந்த ஊரில் இருந்து பணிபுரியும் இடங்களுக்கு சீனர்கள் பயணப்படுவார்கள். இந்த நேரத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும்,” என்று தொற்றுநோயியல் நிபுணரான வூ சூன்யு கூறுகிறார்.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சீனாவில் இந்த ஆண்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், வூ சூன்யு கருத்து மிகுந்த கவனம் பெற்றுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் கொரோனா மருத்துவ நிபுணர் குழு உறுப்பினருமான எரிக் ஃபைகல்-டிங்கின் கணிப்பு அச்சம் தருவனவாக உள்ளது. “அடுத்த 90 நாட்களில் சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடும், இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும்”என்பது அவரது கணிப்பு. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் சீன மருத்துவமனைகள் திணறும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “இது தொடக்கம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். 

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

உலகிற்கே நிவாரணம் தந்த கொரோனா தடுப்பூசிகள் சீனாவிற்கு பலன் தரவில்லையா?

சீனாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. எனினும், 80 வயதிற்கும் அதிகமானோரில் பாதிக்கும் குறைவாகவே 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்புகளுக்கு இலக்காவது இந்த வயதுப் பிரிவினரே. 

சீனாவில் மக்களுக்கு போடப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுமே உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டவை ஆகும். கொரோனாவை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைக் காட்டிலும் அவை குறைந்த செயல்திறனையே வெளிப்படுத்தியுள்ளன. ஆகவேதான், 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் கூட, கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. 

கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் பற்றாக்குறையாகி விட்டதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கார்களில் வைத்தே பலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரில் இருக்கும் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் காட்சிகள் சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீனர்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான ஐபுபுரூஃபென் மற்றும் குளிர்கால மருந்துகள், கொரோனா பரிசோதனை உபகரணங்களை சீனர்கள் அவசரஅவசரமாக வாங்கி சேமிப்பில் வைக்கின்றனர். 

வீட்டு வைத்தியத்தில் உதவும் எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற விட்டமின் சி நிரம்பிய கனிகள் எந்த கடையிலும் கிடைப்பதில்லை. இணையவழி வர்த்தக நிறுவனங்களிலும் கூட இருப்பு இல்லை. குளிர் மற்றும் காய்ச்சல் மருந்துகள், விட்டமின்கள், வலி நிவாரணிகளை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பெரும்பாலான மருந்துக்கடைகளில் அவை முற்றிலுமாக தீர்ந்துவிட்டன. அவற்றை அடுக்கும் அலமாரிகள் காலியாக காட்சி தருகின்றன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் உலகிற்கு என்ன பாதிப்பு?

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதால் ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதார வலிமையும் கொண்ட சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு உலகம் முழுமையும் எதிரொலிக்கும் ஆபத்து இருப்பதே அதற்குக் காரணம். 

சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா எதிரொலியாக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாக, 2.7 சதவீதமாகவே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதியை சீனா நிறுத்திவைக்கக் கூடும் என்பதால் உலகின் பிற இடங்களில் அவற்றிற்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உருவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களுள் ஒன்றாக சீனா திகழ்வதால், அங்குள்ள தொழிற்சாலைகள் முடங்குவது பிற நாடுகளிலும் தொழிற்துறையில் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ்

எல்லாவற்றிற்கும் மேலாக, “கொரோனா வைரஸ் வீரியத்துடன் பரவிக் கொண்டிருக்கும் போது எந்நேரமும் உருமாறி, உலகின் பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸின் கூற்று நம்மை பயமுறுத்துவதாக அமைந்துள்ளது. 

“கொரோனா வைரசால் மீண்டும் எழுந்துள்ள அச்சுறுத்தலை சீனாவால் திறம்பட எதிர்கொள்ள முடியும். கொரோனாவை எதிர்க்கும் வல்லமையுடன் சீனா திகழ்வது அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே நன்மை பயக்கும்” என்கிறார் நெட் பிரைஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: