தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM
தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் படமான 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது
தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட "எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது

பட மூலாதாரம், Getty Images
கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விழா மேடையிலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை அந்த பாடல் வென்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு சந்திரபோஸ் வரிகள் கொடுத்துள்ளார். இந்திய மொழித் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான முதல் முழு நீளப் படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இதுகுறித்து உங்களுக்குத் தெரியாத ஒரு தகவல் உள்ளது.
நாட்டுக்கூத்து பாடலின் காணொளி யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK
முதல்முறையாக அகாடெமி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 64 வயதான ஜேமி லீ கர்டிஸ் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். தனக்கு இந்த விருது கிடைத்ததன் பின்னணியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர்கள் குழுவில் அனைவருமே இந்த ஆஸ்கரை வென்றுள்ளோம்” என்று அவர் மகிழ்ச்சியுடன் சத்தமாகக் கூறினார்.

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
“இத்தனை ஆண்டுகளாக நான் உருவாக்கிய அனைத்து வகை திரைப்படங்களையும் ஆதரித்த அனைவருக்கும் ஆயிரக்கணக்கனா, நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.
அதே திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை கீ ஹூ குவான் பெற்றார். அவருடைய உணர்ச்சிகரமான வெற்றி உரையில், “அம்மா, நான் ஆஸ்கரை வென்றுள்ளேன்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “என்னுடைய பயணம் படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில் ஓர் ஆண்டைக் கழித்தேன். இதைப் போன்ற கதைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.
அரங்கம் அதிர எழுந்த கரகோஷங்களைத் தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் அமெரிக்க கனவு,” என்றவர் தனது தாயாருக்கும் அவரது தியாகங்களுக்கும் தனது காதல் மனைவிக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள்
தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் – ஒரு விருது (சிறந்த குறு ஆவணப்படம்)
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All Quiet on the Western Front) - சிறந்த இசை (ஒரிஜினல்)
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் – 2 விருதுகள் (சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை)
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட் – 2 விருதுகள் (ஒளிப்பதிவு, சர்வதேச முழுநீள திரைப்படம்)
தி வேல் – ஒரு விருது (சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்)
கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ – ஒரு விருது (சிறந்த அனிமேஷன் முழுநீள படம்)
ப்ளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர் – 1 விருது (ஆடை வடிவமைப்பு)
நல்வனி – ஒரு விருது (சிறந்த ஆவணப்படம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












