உடல் எடை 130 கிலோ இருக்கும் 'பிளஸ் சைஸ்' மாடல்: கிண்டல், கேலிகளை கடந்து அசத்தும் திவ்யா விக்ரம்

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
சிறு வயதிலிருந்தே தன் உடல் குறித்து மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், இன்று சமூக ஊடகங்களில் செல்வாக்குமிக்க நபராகவும் (Influencer) 'பிளஸ் சைஸ்' (Plus Size) மாடலாகவும் திகழ்ந்து வருகிறார், திவ்யா.
Snazzy Tamilachi என்ற பெயரில் சமூக ஊடகங்களில் இயங்கிவரும் இவரை, யூடியூபில் சுமார் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
திவ்யாவின் உடல் எடை130 கிலோ, அவரது கணவர் விக்ரமும் அதே உடல் எடை கொண்டவர். இருவரும் சேர்ந்தே பல சினிமா பாடல்களுக்கு ஆடுவது, பிரபலமான திரைப்பட காட்சிகளுக்கு நடிப்பது என இணையத்தில் பிரபலமான 'பிளஸ் சைஸ்' ஜோடியாக வலம் வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் முகம் தெரியாதவர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளி, தன்னைப் போன்று உடல் எடை அதிகமாக இருப்பவர்களும் மகிழ்ச்சியாக தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்று நம்பிக்கை அளிப்பதற்காகத்தான் தான் சமூக ஊடகங்களில் இத்தகைய வீடியோக்களை பதிவிடுவதாகக் கூறுகிறார், திவ்யா விக்ரம்.
"ஏதோவொரு காரணத்தால் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்கள், உடல் எடையைக் குறைக்கும் இடைவெளியில் அதீத உடல் எடையுடன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாதா? தங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடக்கூடாதா?" எனக் கேட்கிறார், திவ்யா. 'பிளஸ் சைஸ்' மாடலாக தன்னுடைய அனுபவங்களை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
திருச்சியைச் சேர்ந்த 32 வயதான திவ்யா ஒரு பொறியியல் பட்டதாரி. பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அவர், திருமணத்திற்குப் பிறகு சென்னையில் வசித்து வருகிறார்.
"கேலி, கிண்டல்கள் புதிதல்ல"
"பிறக்கும்போதே 4.5 கிலோ எடை இருந்தேன். மற்றவர்கள் நினைப்பது போன்று, அதிகம் சாப்பிடுவதால் எனக்கு எடை கூடவில்லை. மரபுரீதியாகவே என் குடும்பத்தில் எல்லோரும் பருமனாகத்தான் இருந்துள்ளனர். எனக்கு குழந்தை பிறந்த பிறகு இன்னும் எடை கூடிவிட்டது," என்கிறார், திவ்யா.
சிறு வயதில் கேலி, கிண்டல்களை எதிர்கொண்டது எப்படி என்ற கேள்விக்குப் பதிலளித்த திவ்யா, "சிறு வயதில் இந்த கிண்டல், கேலிகள், புதிதாகவும் வருத்தமாகவும்தான் இருந்தது. பலமுறை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்துகூட அழுதிருக்கிறேன்.

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
'ரோட் ரோலர்', 'யானைக்குட்டி' என ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நானே அதனால் 'ரௌடி பேபியாக' மாறி, எதிர்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். பல்வேறு போட்டிகளில் தானாகவே கலந்துகொண்டு அதில் ஜெயிக்க ஆரம்பித்தேன். அதனால் என்னைக் கண்டு மற்றவர்களுக்கு பயம் இருந்தது. நாம் ஒன்றைப் போட்டியாக எடுத்துக்கொண்டு அதில் சாதிக்க ஆரம்பித்தால் நம்மை குறித்த அடையாளம் மாறும் எனத் தெரிந்தது.
'இந்த கிண்டல், கேலிகளுக்காக எடையைக் குறைக்க வேண்டும் என நினைக்காதே, நீயாக உணர்ந்து குறைக்க வேண்டும் என நினைத்தால்தான் அதைச் செய்ய முடியும். நீ முதலில் உன்னை அன்பு செய்' என என்னுடைய பெற்றோர்தான் எனக்கு நம்பிக்கை ஊட்டினர். குடும்பத்தினரின் உதவி இருந்ததால் என்னால் இதிலிருந்து மீள முடிந்தது. ஆனால், எல்லோருக்கும் இந்த உதவி கிடைக்காது," என்றார்.
'பிளஸ் சைஸ்' மாடலானது ஏன்?
முழு நேர 'பிளஸ் சைஸ்' மாடலாகவும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவராகவும் ஆக வேண்டும் என முடிவெடுத்தது ஏன் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார் திவ்யா.
"நான் அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். முறையாக பரதம் கற்றுக்கொண்டு, 8ஆம் வகுப்பு படிக்கும்போதே அரங்கேற்றம் செய்தேன். அதில் 'பார்ட் டைமாக' இளங்கலை பட்டமும் முடித்துள்ளேன். இதனால் எனக்கு மற்ற நடனங்களும் எளிதாகவே வந்தது. பரதநாட்டியத்தால் எனக்கு நளினமும் வந்தது.

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
நடனத்தின் மூலம் மக்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன். குண்டாக இருப்பது வெறும் 'எண்' தான் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒரு 'பாசிட்டிவிட்டி'யை கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால், அதில் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை.
டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்டவற்றில் சிறிய வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தேன். பின்னர், டிக் டாக்கை தடை செய்துவிட்டனர். எனக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது வெகுநாள் கனவாக இருந்தது.
கர்ப்ப காலம் எனக்குச் சிக்கலானதாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தபோது வேலையிலிருந்து பிரேக் எடுத்தேன். அதன்பிறகு திரும்பவும் பிடிக்காத வேலையைப் பார்க்க விரும்பவில்லை.
பிரசவத்திற்குப் பிறகு, யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நுழைந்தேன். அதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் எல்லாம் நான் பயன்படுத்தியதே இல்லை. அப்போதுதான் 'ரீல்ஸ்' எல்லாம் புதிதாக வந்த ஒன்று. சிறுசிறு வீடியோக்களை பதிவிட்டேன்.
ஆரம்பத்தில் வீடியோக்களுக்கு பெரிதாக பார்வையாளர்கள் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக முயன்று இப்போது சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களும் பார்வையாளர்களும் அதிகரித்துள்ளனர்," எனத் தெரிவித்தார்.
இவருடைய வீடியோக்கள் பல, இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளன. குழந்தை இல்லாதவர்களுக்கு என்று பரதநாட்டிய வடிவிலேயே ஒரு நாடகம் தயாரித்து நீண்ட வீடியோ ஒன்றை யூடியூபில் பதிவிட்டார் திவ்யா. அதுதான் யூடியூபில் முதன்முதலாகப் பெரிதாக வரவேற்கப்பட்ட வீடியோ.
சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை அந்த வீடியோ பெற்றது. இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை 'திருச்சிற்றம்பலம்' படத்தில் வரும் 'பழகப் பழக' பாடலுக்கு கணவருடன் இணைந்து ஆடிய வீடியோவுக்கும் 'எனிமி' படத்தில் வரும் 'மாலை டும் டும்' பாடலுக்கு ஆடிய வீடியோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், 'மாலை டும் டும்' வீடியோவை மட்டும் சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
"2020ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் நுழைந்த எனக்கு முதல் ஆண்டில் பெரிய வருமானம் இல்லை. கணவர்தான் அப்போது சப்போர்ட் செய்தார். இப்போது யூடியூபில் வருமானம் கிடைக்கிறது. தவிர, பல ஸ்பான்சர்கள் மூலம் வருமானம் வரும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலந்துகொள்கிறோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் குறித்த மனநிலை மாறி இருக்கிறது. 4 எக்ஸ்.எல், 5 எக்ஸ்.எல். வரை உடைகள் இப்போது விற்பனையில் உள்ளன. ஒருபுறம் மாற்றம் நிகழ்கிறது என்றுதான் நினைக்கிறேன்," எனத் தெரிவித்தார் திவ்யா.
கணவரின் ஆதரவு
தன் திருமணம் குறித்தும் கணவரின் ஒத்துழைப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
"நானும் கணவரும் ஒரே எடைதான், 130 கிலோ. பிறந்தபோதும் ஒரே எடைதான். திருமணத்தின்போது இருவருமே 106 கிலோ இருந்தோம்.
2018ஆம் ஆண்டில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு இருவருக்கும் காதல் தோல்வி இருந்தது. பின்னர், மேட்ரிமோனியலில் பார்த்துதான் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே பிடித்திருந்தது.

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
எங்களுக்கு காதல் உறவு சரிவராததற்குக்கூட எங்களின் உடல் எடை ஒரு காரணமாக இருந்திருக்கிறது. திருமணம் என்று வரும்போது, 'நீ உடல் எடையைக் குறைக்க வேண்டும், அப்போதுதான் எங்கள் வீட்டில் ஒத்துக்கொள்வார்கள்' எனக் கூறுவார்கள். நம்மை நாமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எந்த விஷயத்தைப் பிடித்து காதலித்தார்களோ, அதுதான் பின்னால் அவர்களுக்குப் பிரச்னையாகத் தெரியும். என் கணவரும் அதை எதிர்கொண்டுள்ளார். அதனால்தான் இருவருடைய உணர்வுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என நினைக்கிறேன்.
டிக் டாக்கில் இருக்கும்போது சேர்ந்து சில காமெடி வீடியோக்கள் இருவரும் இணைந்து பதிவிட்டுள்ளோம். ஆனால், அவர் என்னுடன் சேர்ந்து ஆடுவது இப்போதுதான். அவர் டான்சர் கிடையாது. எனக்காக அதைச் செய்கிறார்.
வார இறுதியில் அவர்தான் என்னுடைய வீடியோக்களை எடுப்பார். அவராகவே ஆர்வத்தில் 'நானும் ஆடவா' என்று கேட்டார். அவருக்கு சில நடன அசைவுகள் வரவில்லை என்றால் விட்டுவிடலாம் என்று சொன்னால்கூட முயற்சி செய்து ஆடுவார்" என்கிறார்.
"குண்டாக இருப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் இல்லை" எனக் கூறும் திவ்யா, "சாப்பிடுவதால் மட்டுமே ஒருவர் குண்டாக இருப்பது கிடையாது. மரபியல் ரீதியாக, ஹார்மோன் பிரச்னை, மன அழுத்தம், சரியான தூக்கமின்மை எனப் பல காரணங்கள் அதற்கு இருக்கலாம்" என்றார்.
"எதிர்மறை விமர்சனங்கள் பாதித்ததில்லை"
உறவினர்கள், சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் எனக் கேட்டோம்.
"எனக்குப் பிடித்த விஷயத்தை நான் செய்கிறேன். எனக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அதில் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நெகட்டிவ் கமெண்ட்களை பார்ப்பேன், ஆனால் அதை மனதுக்கு எடுத்துச் செல்ல மாட்டேன். அவை என்னை பாதிக்காது. எனக்குப் பிடித்ததை ஜாலியாக செய்கிறேன். 50 கமெண்ட்கள் என்னைப் பாராட்டி வந்தால், 50 கமெண்ட்கள் எதிராக வரத்தான் செய்யும். அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.
'யானை', 'டிரம்', 'உனக்கு கல்யாணம், குழந்தைலாம் தேவையா?"ன்னு கூட கமெண்ட்ல கேட்டிருக்காங்க. ஆனால், அதைப் பொருட்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
நீண்ட முடி வைத்திருப்பது, இங்கு சொல்லப்படும் 'பெண்மை' என்ற வரையறைக்குள் இருப்பது எனக்குப் பிடிக்காது. 'வெஸ்டர்ன் லுக்'தான் எனக்குப் பிடிக்கும். அதனால் புடவை, சல்வார் பிடிக்காது என்பது இல்லை. மாடர்னாக உடை அணிவதெல்லாம் பெரும்பாலான உறவினர்களுக்குப் பிடிக்காது. ஆனால், என்னிடம் இதையெல்லாம் நேரடியாக அவர்கள் கேட்பதில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
"இதுதான் 'ஃபிட்"
'பிளஸ் சைஸ்' மாடலாக, உடல் பருமனுடன் இருப்பதை ஆரோக்கியமாகவும் நேர்மறையாகவும் காட்டுவது உடல்நலனுக்கு எதிரானதாக இருக்காதா என்ற விமர்சனம் குறித்து பதிலளித்தார் திவ்யா.
"கர்ப்ப காலத்தில் நான் சில ஹார்மோன் ஊசிகள், ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொண்டதால்கூட எனக்கு எடை கூடியிருக்கலாம். குண்டாக இருந்தால் கல்யாணம் ஆகாது, குழந்தை பிறக்காது என எல்லாம் கூறுவார்கள். ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனால், குண்டாக இருப்பவர்களுக்கு ஒரு தைரியம், நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதைச் செய்கிறேன். அவர்களும் எந்த உடை வேண்டுமானாலும் அணியலாம், தங்களை அழகாகக் காட்டிக்கொள்ளலாம் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு உண்டான கால இடைவெளியில் பிடித்த எதையுமே செய்யக் கூடாதா? பிடித்த உடைகளை அணியக்கூடாதா?
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நானும் நினைத்திருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு எனக்கு 145 கிலோ வரை கூடிவிட்டது. என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு என்னாலேயே நடக்க முடியவில்லை. அப்போது உணர்ந்தேன். கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையயையாவது குறைக்க வேண்டும் எனக் கருதி 15 கிலோ எடையை குறைத்தேன்.
குண்டாக இருப்பவர்கள் 'ஃபிட்'டாக இருப்பதற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், நாமாக உணர்ந்து உடல் எடையைக் குறைக்க வேண்டும். மற்றவர்களுக்காகக் குறைத்தால் மன அழுத்தம் தான் வரும்.

பட மூலாதாரம், snazzytamilachi / Instagram
என்னால் ஜிம்முக்கு சென்று உடல் எடையைக் குறைக்க முடியாது. அரை மணிநேரம் பாடலை போட்டுவிட்டு ஆடுவேன். ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்களின் மூலம் எடையைக் குறைக்கலாம். சந்தோஷமாக உடல் எடையைக் குறைக்கலாம். மன அழுத்தத்துடன் அதைச் செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்" என்றார்.
தன்னைப் பொருத்தவரை 50-60 கிலோ எடையில் இருப்பதுதான் 'ஃபிட்' என்பது இல்லை, 36-24-36 என்ற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது என்பது இல்லை என்கிறார் திவ்யா.
"உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கும் உடல்நல பிரச்னைகள் உண்டு. குண்டாக இருப்பதால் நான் நெகிழ்வாக (Flexible) இல்லை என்பது கிடையாது. என்னால், ஒரு இடத்தில் வெறுமனே அமர்ந்திருக்கவே முடியாது. நான் ஒல்லியாக இருந்தால்தான் நான் ஆக்டிவ் என நம்புவீர்களா?" எனக் கேட்கிறார்.
"என்னுடைய வீடியோக்களைப் பார்த்து பலருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 'மாடர்ன் டிரெஸ் என்னால் போட முடியுமா என நினைத்திருக்கிறேன், உங்களைப் பார்த்து அவற்றை அணிகிறேன்' என்று கூறுவார்கள். இன்னொருவர் 'திருமணமானவுடன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்பதால், டான்ஸ் ஆடுவதையே விட்டுவிட்டேன், உங்களைப் பார்த்து திரும்பி நடனம் ஆடுகிறேன்' என ரீல்ஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதுதான் என்னுடைய வெற்றி எனக் கருதுகிறேன். என்னிடம் இருக்கும் பாசிட்டிவிட்டியை என்னைப் போன்று இருப்பவர்களுக்கு கடத்துகிறேன்," என நம்பிக்கையுடன் முடித்தார் திவ்யா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













