"முத்தம் கொடுப்பாங்க, கட்டி பிடிப்பாங்க" - பாலியல் சீண்டல்களை மீறி முன்னேறிய திருநங்கை ரோஜா

திருநங்கை ரோஜா
படக்குறிப்பு, திருநங்கை ரோஜா
    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

"திருநங்கைகளும் ஒரு பாலினம் தான் என்ற அரசு அங்கீகாரம் கிடைத்து விட்டாலும் இன்னும் எங்களுக்கான கெளரவமும் மரியாதையும் எளிதாகக் கிடைப்பதில்லை," என்கிறார் புதுச்சேரியில் வாழும் ரோஜா. 

தமது பள்ளிப்பருவத்திலும், இளம் பருவத்திலும் சொல்ல முடியாத பாலியல் சீண்டல்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்ட ரோஜா, சமூகத்தில் தமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த நடந்த போராட்டங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். 

"விழுப்புரம் கோட்டைமேடுதான் என் பிறந்த ஊர். அப்பா மீன் வியாபாரி. அம்மா விவசாயம் செய்பவர். எங்களுடைய வீட்டில் எனது அண்ணன், அவருக்கு அடுத்தபடியாக நான், எனக்குப் பிறகு என் தம்பி என மூன்று பிள்ளைகள். 

சின்ன வயசுலயே எனக்குள்ள மாறுதல் இருந்தது. சகஜமாக மத்த ஆம்பளைங்ககூட விளையாட முடியாது. ஆனா பொன்னுங்ககூட இயல்பா இருப்பேன். அப்ப அது பெருசா தெரியலை. அப்பா, அம்மா விளையாட்டை ஆடும்போதுகூட நான் அம்மாவா இருக்கவே ஆசைப்படுவேன்.

ஆனால், என்னோட நடை, உடை, பாவனைகளைப் பார்த்துகூட படிக்குற பசங்க வித்தியாசமா நடந்துப்பாங்க. எனக்கு ஒத்துவராத சூழலாக பள்ளிக்கூடம் இருந்துச்சு. விழுப்புரத்துல ஐந்தாம் வகுப்பு வரை படிச்சேன். பிறகு வேறு இடத்துக்குப் போனோம். அங்க ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சேன். 

அங்கேயும் பசங்க சும்மா இருக்க மாட்டாங்க. சில பேர் என்னை கட்டிப்பிடிப்பாங்க, முத்தம் கொடுப்பாங்க, தொடக்கூடாத இடத்துல எல்லாம் கை வைப்பாங்க. இதை கவனிச்ச எங்க ஸ்கூல் டீச்சர், உன் கிட்ட ஏதோ வித்தியாசமா இருக்கு. நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் என்று அட்வைஸ் பண்ணுவாங்க," என்கிறார் ரோஜா.

தயங்கிய சமூகம், கைகொடுத்த 'அப்பா'

திருநங்கை ரோஜா

தமது திருநங்கை அடையாளம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் முன்பாக அவர் எதிர்கொண்ட பிரச்னைகளையும் ரோஜா விவரித்தார். 

"வீட்டுல ஒருமுறை புடவை கட்டி, மேக் அப் போட்டு அழகுபடுத்திக்கிட்டேன். வீட்டுல சந்தோஷப்பட்டாங்க. ஆனால், கூடவே அங்க பயந்து போனாங்க. அவங்க கிட்ட எனக்குள் இருக்குற உணர்ச்சி, இயல்பு என எல்லா விஷயத்தையும் சொன்னேன். ஆரம்பத்துல அவங்க பெரிசா கண்டுக்கலைன்னாலும் ஒன்பதாம் வகுப்பு சம்பவங்களைச் சொன்னபோதுதான் அவங்க கோபப்பட்டாங்க. 

எனது செயலை அவங்க பார்த்த கோணம் வேறு மாதிரி இருந்துச்சு. என்னை அடிச்சாங்க, ஒரு கட்டத்துல எனக்கு இரண்டு, மூன்று முறை மொட்டை அடிச்சு இப்படி எல்லாம் செய்யக்கூடாதுன்னு சொன்னாங்க. பொம்பளை மாதிரி நடந்துக்காதன்னு எச்சரிச்சாங்க. சொந்தக்காரங்க என்ன ஏத்துக்க முன்வரலை.

ஆனால், பெண்மையா நடந்துக்குறது எனது பிறப்பில் இருந்தே இருக்குங்குறத அப்ப என்னை சுத்தி இருந்தவங்க யாரும் புரிஞ்சிக்கலை. 

என்னை மாதிரி திருநங்கையா இருந்தவங்களோட நட்பு கிடைச்சுது. நான் இருக்குற விழுப்புரம் பகுதியில் திருநங்கைகள் இருந்ததால அவங்க என்னை பார்க்கும்போதெல்லாம், இவ நம்ம இனம்டீன்னு உற்சாகப்படுத்துவாங்க." 

கொஞ்ச நாளிலேயே எங்க அப்பா கிட்ட போய், "என்னால கஷ்டப்பட வேண்டாம். நான் பம்பாய்க்கு போறேன். அங்க என்ன மாதிரி நிறைய பேரு இருக்காங்கன்னு" சொன்னேன். 

அப்பா என்கூட மனம் விட்டு பேசுனாரு. என்னோட எல்லா பிரச்னைகளையும் கேட்டுக்கிட்டாரு. 

"நீ யாருக்காகவும் உன்னோட இயல்ப மாத்திக்காத. நாங்க உன்ன புரிஞ்சிக்குறோம்னு" தைரியம் கொடுத்தாரு. அப்புறம் அம்மா, அண்ணன், தம்பியும் ஒத்துழைப்பா இருந்தாங்க.

என்னோட 15வது வயசுல எனக்காக எங்க குடும்பமே விழுப்புரத்துல இருந்து இடம்மாறி பாண்டிச்சேரிக்கு வந்தாங்க. இங்க வந்தப்புறம் கலை, பண்பாட்டுத்துறைல திருநங்கை தோழிகளோட சேர்ந்து தெருக்கூத்து கட்டவும் நாடகம் ஆடவும் போவேன். எங்க அண்ணன், அம்மா பூ கட்டி தொழில் செஞ்சாங்க. அப்பாவுக்கு வயசாயிட்டதால உடம்பு சரியில்லாம போயிடுச்சு. எனக்கும் கொஞ்சம் வருமானம் வந்துச்சு. 

மரியாதையான உலகை காட்டிய சமூகம்

திருநங்கை ரோஜா

திருநங்கையா இருக்குறவங்களுக்காக ஒரு ஜமாத் இருக்கு, நமக்குன்னு ஒரு பெரியவங்க இருக்காங்கன்னு சொன்னாங்க. எங்க இனத்துல பெரியவங்கள பார்த்தா எப்படி மரியாதை செலுத்தனும்னு சொல்லிக் கொடுத்தாங்க. பொதுவா மத்தவங்க வணக்கம்னு பெரியவங்கள பார்த்தா சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி நாங்க யாரையாவது மரியாதையா வணக்கம் சொல்லனும்னா 'பாம்பர்த்திமா'ன்னு சொல்வோம்.

அவங்க வயசானவங்களா இருந்தா, 'பாம்பர்த்தி ஆயா'ன்னு சொல்வோம். வயசுல மூத்த பெண்மணியா இருந்தா 'பாம்பர்த்தி அக்கா'ன்னு சொல்வோம். இந்த பழக்க, வழக்கங்களை எல்லாம் புதுச்சேரி வந்துதான் கத்துக்கிட்டேன். 

என்னோட நிலைமையை எங்களுக்கு குருவாக இருக்கும் அம்மா கிட்ட சொன்னேன். அவங்க கைவிடப்பட்ட திருநங்கைகளை, தாய் மாதிரி வளர்க்குறாங்க. அவங்கதான் உனக்கான அடையாளம் பெண்மைன்னா பெண்ணா வாழு. அதுக்கு தயக்கப்படாத. உறுப்பு மாற்று சிகிச்சை செஞ்சுக்கிட்டா உனக்குள்ள இருக்குற தாழ்வு மனப்பான்மை முதலில் மறைஞ்சிடும்னு சொன்னாங்க. தைரியம் கொடுத்தாங்க.

கொஞ்ச வருஷயத்துலயே அவங்க ஆலோசனைப்படி கடலூருக்கு போய் அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன். இனி நாம பொன்னாயிட்டோம். அழகா வெளில மத்தவங்க மாதிரி போகலாம்னு குஷியா இருந்தேன். 

இந்தக் காலத்துல மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. 15 வருஷத்துக்கு முன்னாடி திருநங்கைன்னாலே 'பொட்டை', 'ஒம்போது', 'உஸ்' என்று ரொம்ப கேவலமா அழைப்பாங்க. இப்ப எல்லாம் யாராவது அந்த மாதிரி சொன்னாங்கனா, அப்படி சொல்றவங்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். 

அந்த நாட்கள்ல சகஜமா எங்களால இருக்க முடியாது. பயந்து, பயந்துதான் தாழ்வு மனப்பான்மையோட வாழ்ந்தோம்.

இப்போது எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டுன்னு எல்லாம் கிடைக்குது. பொம்பளைங்களுக்கு சமமாக திருநங்கைகளை நடத்துறாங்க. 

அறுவை சிகிச்சை முடிவை எடுத்தது ஏன்?

திருநங்கை ரோஜா

பிறப்பிலேயே ஆம்பிளையா இருந்திருந்தா எந்த பிரச்னையும் இல்லாம வளர்ந்திருப்பேன். ஆனால், ஆணா பிறந்து பெண் இயல்பா வளர்வது எனது பிரச்னை இல்லையே. இது இறைவனின் படைப்பு. அதனால பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்தால் எல்லாம் மாறும்னு நினைச்சேன். 

இங்க வந்த சில வருஷங்களிலேயே எங்க அப்பா இறந்துட்டாரு. எங்க அண்ணன் சமீபத்துல இறந்துட்டாரு. தம்பி இருக்கான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. இனி நான்தான் குடும்பத்த வழிநடத்தனும்.

அதனால், ஒரு குடும்பத்தலைவியா எங்க குடும்பத்துக்காக என்னை அர்ப்பணிக்க முடிவு செஞ்சேன். எனக்கு என ஒரு குடும்பம் இனி தேவையில்லை. என் பிறப்பின் நோக்கம் இப்போது எனக்குத் தெளிவாகி விட்டது.

இப்போது என்னை நம்பிய அம்மாவையும் தம்பியையும் காப்பாத்துவது, கடைசி வரை அவங்களுக்காகவே வாழுறது அப்படினு தெளிவான முடிவை எடுத்திருக்கேன்.

ரோஜாவின் சபதம்

திருநங்கை ரோஜா

"பிறப்பில் ஏற்பட்ட குறைபாட்டால் என்னைப் போன்றோர் திருநங்கை ஆகிவிட்டோம். அதற்காக எங்களை ஒதுக்கி விடாதீங்க. நாங்களும் உங்களை மாதிரிதான். எல்லா உணர்ச்சியும் இருக்கு.

ஆணையும் பெண்ணையும் பிரித்துக் காட்டுவது அடிப்படையில் அவங்களுடைய உறுப்புதானே. அந்த உறுப்பு சிகிச்சையையும் நான் செஞ்சிக்கிட்டேன்.

இது எனக்கான வாழ்க்கை. என் விருப்பப்படியே வாழ்கிறேன். அந்த சுதந்திரம் எனக்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் ரோஜா.

"பெண்ணுக்கு என சில கூறுகள் இருக்கு. குழந்தை பெத்துக்க முடியாதுன்னாலும் அந்தத் தாய்மை உணர்வு, பெண்மை உணர்வு எங்க கிட்ட சராசரி பெண்ணைவிட அதிகமாகவே இருக்கு. அந்த உணர்வே எங்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையைத் தரும். அந்த அடையாளம்தான் எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது," என்கிறார் ரோஜா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: