கொரோனாவில் அழிந்த முதல் வியாபாரம் - பாட்டி கொடுத்த ஐடியாவால் லட்சங்களில் ஈட்டும் இளைஞர்

பட மூலாதாரம், SAMEER KHAN/BBC
- எழுதியவர், சமீர் கான்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக, இந்தூரில் இருந்து
கொரோனா காலத்தில் பொது சுகாதாரம் எப்படி பாதிக்கப்பட்டதோ, அதைப் போல பொதுமுடக்கம் காரணமாகப் பல தொழில்களும் நஷ்டத்தால் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்த வீழ்ச்சியைக் கடந்து மீண்டும் வளர்ச்சி பாதைக்குச் சென்றனர்.
அப்படி ஒரு வெற்றியாளரின் கதைதான் இது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள், கொரோனா காலத்தில் மாத வருமானம் முடங்கியதால், தொழில்முனைவோராக வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு புதிய தொழிலை தொடங்கினர்.
இந்தூரைச் சேர்ந்த பொறியாளர்களும், நண்பர்களுமான சுபத்ரா உபாத்யாய், ஹரிஓம் யாதவ் ஆகீயோர் இருவரும் இணைந்து மக்களின் ஆரோக்கியம் சார்ந்து ஒரு தொழிலை தொடங்கினர். இப்போது அத்தொழில், வெற்றி படிக்கட்டுகளில் ஏறுகிறது.
ஐடியா எப்படி வந்தது?
கொரோனா காலத்தின் போது, சுபாத்ராவின் 81 வயதான பாட்டிக்கு தொற்று ஏற்பட்டது. பலரையும் உயிர்பலி வாங்கிய அந்த வைரஸ் தொற்றிடம் இருந்து 10 நாட்களுக்குள் பாட்டி மீண்டார். அதற்கு உதவியாக இருந்தது, 'பழைய தூய்மையான உணவு' என்று பாட்டி கூறினார். இந்த உணவு எங்கு கிடைக்கும் என்றும் சுபாத்ராவிடம் பாட்டி விவரித்தார்.
இந்தூர் நகரத்தைச் சேர்ந்த சுபாத்ரா உபாத்யாய், ஹரிஓம் யாதவ் ஆகிய இரண்டு பொறியாளர்களின் மனதில் மக்களுக்கு 'தூய்மையான உணவு' வழங்க வேண்டும் என்ற எண்ணம் இங்கிருந்துதான் வந்தது.
இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூருக்கு நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சுத்தமான இயற்கை உணவுப் பொருட்களைக் கொண்டு வர வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.
சுபாத்ரா உபாத்யாய், ஹரிஓம் யாதவ் ஆகிய இருவரும் ஒரு வருடம் முழுவதும் நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள 90 நகரங்களுக்கு பயணம் செய்தனர். இந்த நகரங்களிலிருந்து தினை, ராகி, பார்லி, உலர் பழங்கள், மசாலாப் பொருட்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட சுத்தமான இயற்கை உணவு வகைகளைத் தேர்வு செய்தனர்.
அங்குள்ள உள்ளூர் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, இந்த பொருட்களை இந்தூருக்கு கொண்டு வந்தனர்.
நாட்டின் ஒவ்வொரு நகரத்தின் பிரசித்தி பெற்ற பொருட்களை அடையாளம் கண்டு அந்த ஊரிலிருந்து பொருட்களை கொண்டு வந்தனர். மங்களூரு முந்திரி பிரபலமானது என்பதால், அங்கிருந்து முந்திரி தேர்வு செய்யப்பட்டது.
மேலும் நாசிக்கில் இருந்து திராட்சை, காஷ்மீரில் இருந்து அக்ரூட் பருப்புகள், கன்னியாகுமரியில் இருந்து கிராம்பு, ராஜஸ்தானில் இருந்து அஸ்வகந்தா, தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய், மிளகு என தேர்வு செய்தனர்.
அதே நேரத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கேழ்வரகு, சாமை, கங்கினி, சான்வா, கோடோ, சென்னா போன்ற தானியங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
சத்தீஸ்கரில் இருந்து அரிசியை ஆர்டர் செய்தனர். இந்த விளைபொருளின் 'தூய்மை'யை தொடர, இடைத்தரகர்கள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் போடப்பட்டது.
இப்படித்தான் இவர்களின் 'ரூட்ஸ்' நிறுவனம் தொடங்கியது.

பட மூலாதாரம், SAMEER KHAN/BBC
கொரோனாவால் முடங்கிய முதல் தொழில்
'ரூட்ஸ்' நிறுவனம் தொடங்குவதற்கு முன்பே, பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் ஃபிட்னஸ் தொழில் ஒன்றை நடத்தி வந்தனர்.
2019-20ஆம் ஆண்டு, மக்களின் தினசரி வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர இந்தூரில் உள்ள 60 உடற்பயிற்சி(gym) கூடங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஜிம் புக்கிங், யோகா பயிற்சி, புரோட்டீன் டயட் உள்ளிட்ட சேவைகளை வழங்கினர்.
ஆனால் பொது முடக்க காலத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால், இதற்காக முதலீடாகப் போட்ட 5 லட்சம் ரூபாய் நஷ்டமானது.
பின்னர் அந்த தொழிலை நிரந்தரமாக மூடிவிட்டு, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் எந்த ஒரு தொற்றுநோயாலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்தனர்.
'ரூட்ஸ்' நிறுவனத்தின் பிறப்பு முதல் லாபம் வரை
'ரூட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்கள் சுபாத்ரா உபாத்யாய், ஹரிஓம் யாதவ் ஆகியோர், 2021-ல் ஆரோக்கியமான உணவு எங்கே கிடைக்கும் என்பதையும், அதை இந்தூருக்கு எப்படிக் கொண்டு வருவது என்பதையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு முழுமையான திட்டமிடல் செய்யப்பட்டது. அந்த பயணம் காஷ்மீரில் இருந்து தொடங்கியது.
"காஷ்மீரில் இருந்து தொடங்கி, மகாராஷ்டிராவை அடைந்தோம். அங்கு, அரசு சார்பாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் பேசினோம். அவர்களுக்காக முழுமையான ஒரு திட்டத்தை உருவாக்கினோம்," என்று ஹரிஓம் கூறினார்.
"நாங்கள் இந்தியா முழுவதும் 16 மாநிலங்களுக்குச் சென்றோம். விவசாயிகளின் தயாரிப்புகளை எப்படி இந்தூருக்கு கொண்டு சேர்க்கலாம் என பல்வேறு விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். பொருட்கள் விளை நிலத்தில் விளைவது முதல், கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு சேர்ப்பது வரை ஒரு முழுமையான விநியோகச் சங்கிலியை உருவாக்கினோம். இதை செய்து முடிக்க எங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது."
"எங்கள் பட்ஜெட் ஆரம்பத்தில் 25 முதல் 30 லட்சம் ரூபாயாக இருந்தது, ஆனால் இதுவரை 38 முதல் 40 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம்" என்கிறார்.
இப்போது இருவரும் இந்தத் தொழிலில் லாபம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக தனியாக ஒரு இணையதளமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
"கடந்த நான்கு மாதங்களாக ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை மூலமாக எங்களின் நிகர லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் மாதந்தோறும் 10 லட்ச ரூபாய் வரை விற்பனை நடக்கும் என கணித்திருக்கிறோம். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தால் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும்," என்றார்.

பட மூலாதாரம், SAMEER KHAN/BBC
சுத்தமான எண்ணெய்
'ரூட்ஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹரிஓம் யாதவ் கூறுகையில், தற்போது இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்னை என்பது சகஜமாகி விட்டது.
மண்ணுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை பொருட்களால் ஆன சுத்தமான உணவுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த பொருட்களில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ளது.
"உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது எண்ணெய். அதில் 30 சதவீதம் வரை பாமாயில் கலக்கலாம் என அரசின் வழிகாட்டுதல் இருக்கிறது. ஆனால் அதில் என்ன கலக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது", என்று ஹரிஓம் கூறினார்.
"எந்தவொரு ரசாயனமும் இல்லாத சுத்தமான கடுகிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் எண்ணெய் சுத்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படி பிரித்தெடுக்கும் எண்ணெய் மிக ஆரோக்கியமானது," என்றார்.
நண்பர்களான கதை
சுபாத்ரா உபாத்யாய், ஹரிஓம் யாதவ் இருவரும் 2012 ஆம் ஆண்டு ஒரே பேருந்தில் ஒரே கல்லூரிக்கு சென்றதாகவும், ஒரே கிளையில் ஒன்றாக வேலை செய்ததாகவும் கூறுகிறார்கள்.
"நாங்கள் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்யும் போது அருகருகே ஒன்றாக அமர்ந்திருப்பதால் மிக விரைவாக நெருங்கிவிட்டோம்."
"நாங்கள் பொறியியல் படித்தோம், ஆனால் வேலை கிடைக்கவில்லை. அதனால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணினோம்," என்று கூறினர்.
சுபாத்ரா தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு உடனடியாக வேலை கிடைக்கவில்லை என்று கூறுகிறார். அதே நேரத்தில் ஹரிஓம் யாதவ் தனக்கு இந்தூரில் உள்ள அமேசானின் அலுவலகத்தில் தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரியாக வேலை கிடைத்ததாக கூறினார்.

பட மூலாதாரம், SAMEER KHAN/BBC
ஆரோக்கியமான தயாரிப்புகளை விரும்பும் வாடிக்கையாளர்கள்
'ரூட்ஸ்' கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த இல்லத்தரசி மோனிகா சர்மா, கொரோனாவுக்கு பிறகு முன்பை விட ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்பை விட ஆரோக்கியமான உணவுகளை உண்கிறோம். ரொட்டி, காய்கறி, பருப்பு, தானியம் போன்ற நல்ல உணவை எடுத்துக் கொள்கிறோம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












