யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Twitter
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று திஹார் ஜெயிலில் இருந்த இரண்டு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.
காலை ஐந்து மணிக்கு இருவரும் எழுந்த்தும், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் எதாவது பதிவு செய்ய விரும்புகிறார்களா என்று இறுதியாக அவர்களிடம் கேட்கப்பட்டது.
தேவையில்லை என்று இருவரும் மறுத்துவிட, தண்டனை வழங்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
'பிளேக் வாரண்ட் கன்ஃபெசன்ஸ் ஆஃப் திஹாட் ஜேலர்' என்ற புத்தகத்தை எழுதிய சுனில் குப்தா சொல்கிறார், "ரங்கா மிகவும் ஜாலியான பேர்வழி. ஐந்தடி பத்து அங்குலம் உயரம் கொண்டவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றியும் அவனுக்கு கவலையில்லை. ஒரு பாலிவுட் திரைப்படத்தின் பிரபல வசனம் ரங்கா குஷ் (ரங்கா மகிழ்ச்சியாக இருக்கிறான்) தன்னுடையது என்று அவன் சொன்னான்.

பட மூலாதாரம், SUNDAY STANDARD
"பில்லா டாக்ஸி ஓட்டுநர். சுமார் ஐந்தரை அடி உயரம் இருந்த அவர், எப்போதும், சீரியஸாகவே இருப்பார். ரங்காதான் என்னை மாட்டிவிட்டார் என்று சொல்லி, அழுதுகொண்டே இருப்பார். ஆனால், ரங்காவோ, பில்லாதான் தனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டான் என்று சொல்வார். இப்படி இருவருக்கும் இடையில் எப்போதும் மோதல் இருந்துக் கொண்டே இருக்கும்.
சிறையில் பேட்மிண்டனும், கால்பந்தும் விளையாடுவார்கள்
"சிறை நடைமுறைகளை பொறுத்தவரையில், தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் வரை, அவர்களும் பிற கைதிகளை போன்றவர்கள் தான். அதன்பிறகு தான் அவர்கள் கொடும்சிறைக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள்.
"அந்த சிறைக்கு நான் சென்றபோது, இருவரின் கருணைமனுவும் பரிசீலனையில் இருந்தது. எனவே சாதாரணக் கைதிகளைப் போலவே இருவரும் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்."
மிகவும் கொடூர குற்றவாளிகள்
சரி, இவர்கள் செய்த குற்றம் என்ன? இவ்வளவு பீடிகை ஏன் என்று தோன்றுகிறதா? அவர்கள் செய்த மாபாதக செயலுக்கு எப்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று நாடே காத்துக் கொண்டிருந்தது.
"பிளாக் வாரண்ட்" புத்தகத்தின் சக எழுத்தாளரும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் செய்தித் தொடர்பாளருமான சுனேத்ரா செளத்ரி இதுபற்றி கூறுகிறார்." இந்த தலைமுறை செய்தியாளர்களிடையே மிகவும் கொடுமையான குற்றம் என்பது நிர்பயா கொடுமை. அந்த காலகட்டத்தில் மிகவும் கொடுமையான குற்றவாளிகள் என்றால் பில்லாவும் ரங்காவும் தான் என்று சொன்னால், ஓரளவு நிலைமை புரியும் என்று நினைக்கிறேன்".
"1978இல், டெல்லியில் 16 வயது கீதா சோப்ரா என்று பெண்ணும், அவரது 14 வயது தம்பி சஞ்சய் சோப்ராவும் ஒரு காரில் லிஃப்ட் வாங்கிக் கொண்டு, ஆகாஷவாணிக்கு சென்றார்கள். அங்கு யுவவாணி என்ற நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துக் கொள்ள வேண்டியிருந்தது. பாம்பேவில் இருந்து டெல்லி வந்த இரு ரவுடிகளின் காரில் அவர்களுக்கு லிஃப்ட் கிடைத்தது துரதிருஷ்டம் என்றே சொல்லலாம். சிறிய அளவில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்கள் இருவரும், யாரையாவது கடத்தி, குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த சிறார்களை கடத்தினால், பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால், இளம் பெண்ணை பார்த்ததும், அவர்கள் மனது மாறிவிட்டது".
ஆகாஷவாணியில் நிகழ்சி நடத்த சென்ற இளம் கலைஞர்கள்
சிறுமி கீதா சோப்ராவை பலாத்காரம் செய்து, அவரையும், சகோதரனையும் கொடூரமாக கொலை செய்த வழக்கு, இந்தியா முழுவதையும் அதிரச் செய்தது.

இந்தியா டுடே பத்திரிகையில் 1978, செப்டம்பர் 30ஆம் தேதி இதழில் திலீப் பாப் இவ்வாறு எழுதினார்: "கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா இருவரும் தெளலகான் ராணுவ குடியிருப்புப் பகுதியில் இருந்து சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு கிளம்பியதாக அவர்களின் தந்தை கேப்டன் எம்.எம்.சோப்ரா தெரிவித்தார். கீதா, ஜீசஸ் அண்ட் மேரீஸ் கல்லூரியில் இளங்கலை வணிக பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி. மாலையில், வானொலியில் யுவவாணி பிரிவில், 'இன் த க்ரூவ்' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது".
"ஐந்து அடி, பத்து அங்குல உயரம் இருந்த சஞ்சய், பத்தாம் வகுப்பு மாணவன். வானம் இருண்டு கிடந்தது. காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, வானொலி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதாக தந்தை சொல்லியிருந்தார்".
அவர் கூறியபடி, இரவு ஒன்பது மணிக்கு வானொலி நிலைய வாயிலுக்கு சென்றபோது, குழந்தைகள் அங்கு இல்லை. அவர் உள்ளே சென்று விசாரித்தபோது, கீதாவோ, சஞ்சயோ அங்கு வரவில்லை என்ற தகவல் தெரிந்தது.

பட மூலாதாரம், GEETA SANJAY CHOPRA
காருக்குள்ளேயே கத்தியால் தாக்குதல்
காணமல் போன இருவரையும் தேடுவதற்காக பல மாநில போலீசாரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.
பகவான் தாஸ் என்பவர் போலீசாரிடம் சொன்ன தகவல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. மாலை சுமார் ஆறரை மணியளவில் லோஹியா மருத்துவமனைக்கு அருகில் மிகுந்த வேகத்தில் ஒரு பியட் கார், தனது ஸ்கூட்டரை கடந்துச் சென்றதை பார்த்ததாக அவர் தெரிவித்தார். அதில் இருந்து ஒரு பெண்ணின் கூச்சல் கேட்டது. ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச் சென்று அருகில் நெருங்கியபோது, முன்புற இருக்கையில் இரண்டு பேரும், பின்புற இருக்கையில் ஒரு இளைஞனும், இளைஞியும் இருந்ததைப் பார்த்ததாக அவர் சொன்னார்.
சிக்னல் அருகில் காரின் வேகம் குறைந்தபோது, "ஏய், என்ன நடக்குது?" என்று தான் சப்தமிட்டதாக தெரிவித்தார் பகவான்தாஸ். அப்போது, காரில் இருந்த இளைஞன், காரின் கண்ணாடியை பார்த்து திரும்பி, தனது ரத்தம் தோய்ந்த டீ-ஷர்டை சுட்டிக்காட்டினான். அந்த இளைஞன், பின்புறமிருந்து, வண்டியை ஓட்டியவனின் தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்" என்று அவர் தெரிவித்தார்.
"டிரைவர் ஒரு கையால் வண்டியை ஓட்டியபடி, மற்றொரு கையால், அந்த பெண்ணை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார். மந்திர் மார்க் மற்றும் பார்க் ஸ்ட்ரீட் சாலைகள் இணையும் இடத்தில், கார் மீண்டும் வேகம் பிடித்தது. பிறகு சிக்னலில் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த இளைஞனின் முகத்தை பார்த்தால் வெளிநாட்டவரைப் போல் இருந்தது. மஸ்டர்ட் நிற காரின் பதிவெண் எச்.ஆர்.கே.8930" என்று பகவான் தாஸ் தெரிவித்திருந்தார்.
சஞ்சயை கொன்ற பிறகு கீதா பலாத்காரம்
ரங்காவும், பில்லாவும் புத்தா கார்டன் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்கள். டெல்லியில் ரிட்ஜ் பகுதி என்பது மிகவும் வெறிச்சோடிய பகுதி. அங்கு காரை நிறுத்திவிட்டு, முதலில் சஞ்சயை கொலை செய்தார்கள். பிறகு கீதாவை பலாத்காரம் செய்தார்கள்.
ரங்கா பின்னர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், "நான் அந்த பெண்ணை, அவளுடைய தம்பியின் உடல் கிடந்த பக்கமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். நான் அவளுடைய வலது பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். பில்லா எனக்கு சமிக்ஞை காட்டியதும், நான் சற்று முன்னே நகர்ந்துவிட்டேன். அவன் அந்த பெண்ணின் கழுத்தில் வாளால் வெட்டினான். அந்தப் பெண் இறந்துவிட்டாள். உடலை தூக்கி அருகில் இருந்த புதரில் வீசினோம்" என்று தெரிவித்தான்.

பட மூலாதாரம், Getty Images
சோப்ரா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வீட்டிற்கு சென்ற மொரார்ஜி தேசாய்
சம்பவம் குறித்த செய்தி பரவியதும் மக்களின் கோபம் வெடித்தது. ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரி மாணவிகள் போட் கிளப்பில் பேரணி நடத்தினர். அப்போதைய வெளியுறவு அமைச்சர் அங்கு வந்தபோது, மாணவர்கள் கல் வீசத் தொடங்கினர்.
அதில் ஒரு கல் வாஜ்பாயின் தலையில் பட்டு, அவரது தலையில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. "அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது இரங்கலைத் தெரிவிக்க, பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க பிரதமரே நேரில் செல்வது அரிதான நிகழ்வு" என்கிறார் சுனில் குப்தா.
கீதா சோப்ராவின் உடலில் ஐந்து காயங்கள் இருந்தன பிரேதப் பரிசோதனை அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. சஞ்சயின் உடலில் மொத்தம் 21 காயங்கள் இருந்தன. கீதாவின் பேன்ட் பாக்கெட்டில் அவளது அடையாள அட்டை பாதுகாப்பாக இருந்தது. அவர்களிடமிருந்து ஒரு பணப்பையும் மீட்கப்பட்டது, அதில் 17 ரூபாய் இருந்தது.
கல்கா மெயில் ரயிலில் டெல்லி வரும் போது பிடிபட்ட குற்றவாளிகள்
இந்த சம்பவத்திற்குப் பிறகு பில்லாவும் ரங்காவும் டெல்லியில் இருந்து மும்பை தப்பிச் சென்று, பிறகு அங்கிருந்து ஆக்ராவுக்கு தப்பிச் சென்றனர்.
ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு வரும்போது, தற்செயலாக கால்கா மெயிலில் ராணுவத்தினர் இருந்த பெட்டியில் அவர்கள் ஏறியபோது, அவர்கள் இருவரும் பிடிபட்டனர். பிறகு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
சுனேத்ரா சவுத்ரி கூறுகிறார், "குற்றச் செயலை செய்த பிறகு, பயம் ஏற்பட்டதால், வேறு நகரங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அவர்கள் ஏறிய ரயிலில் ராணுவ வீரர்கள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சண்டை ஏற்பட்டபோது, அவர்கள் அடையாள அட்டை கேட்டார்கள். அப்போது, பில்லாவிடம் ஒரு 'ஃபில்ட் ஐ கார்டு' கொடுக்குமாறு ரங்கா சொன்னார். ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த ராணுவத்தினர், அவர்களை பிடித்து கட்டி வைத்து விட்டனர். டெல்லி ஸ்டேஷனுக்கு வந்ததும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர்."
மரண தண்டனையை நிறைவேற்ற அழைக்கப்பட்ட ஃபகிரா மற்றும் காலு
பில்லாவுக்கும், ரங்காவுக்கும் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தன.
அவர்களுடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி நிராகரித்தார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர்கள் சிறை எண் 3-ல் உள்ள தூக்கு தண்டனை கைதிகள் வைக்கப்படும் கடும்சிறை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இருவரையும் தூக்கிலிடுவதற்காக, ஃபரீத்கோட்டைச் சேர்ந்த ஃபகிரா மற்றும் மீரட்டிலிருந்து காலு என்ற இருவரும் வரவழைக்கப்பட்டனர். இதுபற்றி சுனேத்ரா செளத்ரி விளக்குகிறார், "காலு மற்றும் ஃபகிரா இருவரும் இந்த வேலையில் மிகவும் அனுபவம் பெற்றவர்கள். தூக்கிலுடும் பணியை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் குடிப்பதற்கு 'ஓல்ட் மாங்க்' மதுபானம் வழங்கப்பட்டது. இதுவொரு நடைமுறை.
ஏனென்றால் எந்தவொரு நபரும், அவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக சட்டப்படி நியமிக்கப்பட்ட பணியாளராகவே இருந்தாலும்கூட, தனது சுயநினைவில் இருக்கும்போது, கொலை செய்யக்கூடாது என்று நம்பப்பட்டது. சிறையின் பதிவேடுகளில் மரணதண்டனை நிறைவேற்றிய பணியாளருக்கு 150 ரூபாய் கொடுத்ததாகவும் இது மிகக் குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. "
தூக்கில் இடுவதற்காக சிறப்பு கயிறு
இந்த இருவரையும் தூக்கிலிட பீகாரின் பக்ஸர் சிறையில் இருந்து ஒரு கயிறு கொண்டுவரப்பட்டது.
சுனில் குப்தா விளக்குகிறார், "இந்த குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட கயிறு சந்தையில் இருந்து வாங்கப்படவில்லை. அது, பீகார் பக்ஸர் சிறையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. கயிறு மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும் என்பதால், அதில் மெழுகு அல்லது வெண்ணெய் பூசப்பட்டிருக்கும். மரண தண்டனை நிறைவேற்றும் சிலர், இந்த கயிற்றில் பழுத்த வாழைப்பழங்களை பிசைந்து கயிற்றில் பூசுவார்கள். தண்டனையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் கயிற்றின் நீளம் 1.8 மீட்டர் முதல் 2.4 மீட்டர் வரை இருக்கும். "
"மரண தண்டனை நிறைவேற்றுபவர்களில் ஒருவரான ஃபகிரா அடர் கறுப்பு நிறத்தில் இருப்பார். தன்னை எமராஜன் என்று காட்டிக் கொள்ள அவர் முயன்றார். பெரிய தொந்தியுடன் காணப்பட்டார் காலு. இருவருமே வேண்டுமென்றே தங்கள் தோற்றத்தை பயங்கரமாக காட்ட முயன்றனர். "
பத்திரிகையாளர்களை சந்தித்த பில்லா
தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பத்திரிகையாளர்கள் ரங்கா மற்றும் பில்லாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் அப்போது நேஷனல் ஹெரால்டில் பணிபுரிந்த பிரகாஷ் பத்ரா.

பட மூலாதாரம், Getty Images
அந்த நாளை நினைவு கூர்ந்தார் பிரகாஷ். "ரங்கா எங்களை சந்திக்க மறுத்துவிட்டார், ஆனால் பில்லா சுமார் 20 நிமிடங்கள் வரை எங்களிடம் பேசினார். எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடல் முழுவதும் நடுங்கியது. இந்தக் குற்றத்தை தான் செய்யவில்லை என்று கடவுளுக்குத் தெரியும் என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை, தன்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள் என்றே அவர் கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் பொய் சொல்கிறார் என்பதை அவருடைய உடல் மொழி காட்டிக்கொடுத்தது".
தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கறுப்பு துணி பையால் முகம் மூடப்பட்டது
தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாள் இரவில், ரங்கா வழக்கம்போல் உணவை சாப்பிட்டு விட்டு, சாதாரணமாகத் தூங்கினார். பில்லா உணவும் சாப்பிடவில்லை, ஒரு நிமிடம் கூட தூங்கவுமில்லை.
இரவு முழுவதும் அவர் இருந்த இடத்திலேயே சுற்றித் திரிந்தார்.
1982 ஜனவரி 31. காலையில் பில்லா மற்றும் ரங்காவின் முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த நாளை நினைவு கூர்ந்தார் சுனில் குப்தா. "நாங்கள் 5 மணிக்கு அவர்களை எழுப்பிவிட்டோம், குளிக்கச் சொன்னோம். ரங்கா குளித்துவிட்டார், ஆனால் பில்லா குளிக்க மறுத்துவிட்டார். தூக்கில் போடுவதற்கு முன்னர், வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டாம் என்பதற்காக அவர்களின் முகங்கள் ஒரு வகை கருப்பு துணி பையால் மூடப்பட்டன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நேரத்தில் பில்லா துடித்துக் கொண்டிருந்தார். ரங்கா கடைசி வரை மிகவும் உற்சாகமாக இருந்தார், மரண தண்டனைக்கு முன்பு அவர் 'ஜோ போலா சோ நிஹால், சத் ஸ்ரீ ஆகல்' என்று உரக்க கூச்சலிட்டார்.
"மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, இருவரின் முகங்களையும் நான் உன்னிப்பாக கவனித்தேன். இருவரின் முகத்தின் நிறமும் மாறிப்போயின. அச்சத்தினால் அவர்களின் முகம் இருண்டுவிட்டது போல தோன்றியது."

பட மூலாதாரம், AFP
கால்களின் துடிப்பு அடங்க, சுவாசமும் நின்றது
திட்டமிட்ட நேரத்தில், சிறை கண்காணிப்பாளர் ஆர்யா பூஷன் சுக்லா ஒரு சிவப்பு கைக்குட்டையை அசைத்தார். ஃபகிராவின் உதவியுடன் காலு, மரணதண்டனையை நிறைவேற்றும் கருவியின் நெம்புகோலை இழுத்தார்.
பின்னர் பல ஆண்டுகள் வரையில், பில்லா மற்றும் ரங்காவை தூக்கிலிட உத்தரவிட்ட அந்த சிவப்பு கைக்குட்டையை சுக்லா தனது நண்பர்களுக்குக் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார்.
இரண்டு மணி நேரம் கழித்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, பில்லா இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் ரங்காவின் துடிப்பு இன்னும் இருந்தது.
"இதற்கு காரணம் குற்றவாளியின் எடை. அவர் உயரமாக இருந்ததால், மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நேரத்தில் தனது மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டார். இதனால், அவர் உடனடியாக இறக்கவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சிறை ஊழியர் அவர்கள் இருந்த குழியில் இறக்கப்பட்டார். ரங்காவின் கால்களை இழுத்தார். அதன் பிறகுதான் அவருக்கு மரணம் சம்பவித்தது. அந்த சமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றியவர்களின் பிரேதங்களை உடல் பரிசோதனை செய்யும் நடைமுறை வழக்கத்தில் இல்லை. இல்லையெனில் ரங்கா 'வெளி உதவியுடன்' கொல்லப்பட்டார் என்று செய்திகள் பரவியிருக்கும்.. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷத்ருகன் செளஹானின் தீர்ப்புக்கு பிறகே, தூக்கிலிடப்பட்ட நபருக்கு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்ற நிலை ஏற்பட்டது. "
"தூக்கு தண்டனை வரலாற்றில் நெம்புகோல் மிகவும் அழுத்தமாக இழுக்கப்பட்டு உடல் இரண்டு துண்டுகளாக பிளந்து, கழுத்து மேலேயும், உடல் துண்டாக கீழே இருந்த குழியிலும் விழுந்த சம்பவங்களும் நடைபெறுள்ளன. தூக்கு போட்ட பிறகு முகம் பயங்கரமாகிறது. சில நேரங்களில் இறந்தவரின் நாக்கும் கண்களும் வெளியே பிதுங்கிக் கொண்டிருக்கும். சிறை மொழியில் இதற்கு 'கழுத்தின் நீட்சி' என்று பெயர். இருந்தாலும், அந்த நேரத்தில் எந்த வெளிநபருக்கும் இந்த விஷயங்கள் தெரியாது அல்லது யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை."
பில்லா மற்றும் ரங்காவின் உடல்களை பெற்றுக் கொள்ள அவர்கள் உறவினர்கள் முன்வரவில்லை. எனவே, அவர்கள் இருவரது உடல்களும் சிறையிலேயே எரியூட்டப்பட்டன.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: சுய ஊரடங்கு - முற்றாக இந்தியா முடக்கப்பட இருப்பதன் தொடக்கமா?
- கொரோனா வைரஸ்: 11,397 மரணங்கள், இளைஞர்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் - விரிவான தகவல்கள்
- கனிகா கபூருக்கு கொரோனா: நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை வரை படர்ந்த அச்சம்
- கொரோனா வைரஸ்: ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












