நடராஜனின் 'யார்க்கர்கள்' எங்கே போயின? அர்ஜுன் டெண்டுல்கரை 'இளவரசர்' போல பாதுகாக்கிறதா மும்பை இந்தியன்ஸ்?

பட மூலாதாரம், Getty Images
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோற்கடித்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன், மும்பை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தந்தையால் சாதிக்க முடியாததை தனது 2-வது போட்டியிலேயே சாதித்துக் காட்டியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளனர்.
நடப்புத் தொடரை அடுத்தடுத்த தோல்விகளுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத டெல்லி கேபிட்டல்ஸ் அணி மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
மும்பை சிறப்பான தொடக்கம் - மிடில் ஓவர்களில் திலக் வர்மா கைவரிசை
நடப்புத் தொடரில் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி மீண்டும் ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி ஐந்தாவது ஓவரிலேயே பிரிந்துவிட்டாலும் கூட, அதற்குள் 41 ரன்களை சேர்த்துவிட்டிருந்தது. 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா, அதற்குள்ளாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் நம்பிக்கையை குலைத்துவிட்டிருந்தார்.
வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ரோகித், நடராஜன் வீசிய ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இஷான் கிஷன் இம்முறை சற்று நிதானம் காட்டினார். 31 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களை அவர் சேர்த்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மிடில் ஓவர்களில் திலக் வர்மா மீண்டும் ஒரு சிறப்பான கேமியோவை ஆடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் ஜொலித்த மார்க்கோ ஜேன்சனை ஒரே ஓவரில் திலக் வர்மா கலங்கடித்தார். அவர் வீசிய 15-வது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சராக்கி பிரமாதப்படுத்தினார் திலக் வர்மா. அவர் 17 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
கடந்த சீசனில் அறிமுகமான பிறகு, மிடில் ஓவர்களில் மும்பை அணிக்கு அவர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2022-ம் ஆண்டுக்குப் பின் நடந்த ஐ.பி.எல். போட்டிகளை மட்டும் கணக்கில் கொண்டால், மிடில் ஓவர்களில் அதிக ரன் சேர்த்த வீரர் திலக் வர்மா தான். மிடில் ஓவர்களில் மட்டும் 479 ரன்களைக் குவித்துள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 137.64 என்கிற அளவில் சிறப்பானதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆல்ரவுண்டராக கலக்கிய கேமரூன் கிரீன்
மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்திருந்த கேமரூன் கிரீனிடம் இருந்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் செயல்பாடு வெளிப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் மும்பை அணிக்கு பேட்டிங்கில் அவர் கைகொடுத்தார். தொடக்கத்தில் களத்தில் தன்னை சரிவர பொருத்திக் கொள்ள முடியாமல் தடுமாறிய அவர், 5-6 ஓவர்களுக்குப் பிறகு இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார்.
ரோகித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க ஜோடி அளித்த சிறப்பான தொடக்கத்தால் கிடைத்த ரன்ரேட்டை கடைசி வரை அப்படியே மும்பை அணி பராமரித்ததில் கேமரூன் கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மும்பை அணியின் ரன்ரேட் 8-க்கும் மேலாகவே தொடர்ந்தது. ஒன் டவுன் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார். இதில், 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் இக்கட்டான நேரத்தில் அணிக்கு அவர் கைகொடுத்தார். நல்ல பார்மில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் நன்றாக களத்தில் நிலைத்து, பின்னர் அதிரடிக்கு மாறிய சிறிது நேரத்திலேயே அவரை வெளியேற்றி மும்பை அணியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார் கிரீன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவையாக இருந்த போது, 19-வது ஓவரை வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மும்பை அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்ததும் கேமரூன் கிரீன் தான்.

பட மூலாதாரம், Getty Images
சேஸிங்கில் தொடக்கத்திலேயே தடுமாறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐதராபாத் மைதானத்தில் 192 ரன்களை சேஸ் செய்வது என்பது சற்று சவாலான காரியம்தான். அதனை செய்து முடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி புரூக்கின் அதிரடியை அதிகம் நம்பியிருந்தது. கடந்த முறை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நேற்று 2 பவுண்டரிகளை அடித்த திருப்தியுடன் வெளியேறிவிட்டார். ராகுல் திரிபாதி மீண்டும் ஏமாற்றம் தர நான்காவது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓவர் பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. சவாலான இலக்கை துரத்துகையில் பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பது முக்கியம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதனைச் செய்யத் தவறியது. அதன் பிறகு வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் மிகவும் அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட நெருக்கடியே அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
மார்க்ரம் அதிரடியும் மும்பைக்கு கைகொடுத்த ரோகித் வியூகமும்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணியின் பிரமாஸ்திரமான சுழல் மும்மூர்த்திகளை கவனித்துக் கொண்ட மார்க்ரம், நேற்றும் மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். ஹிரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா வீசிய ஏழாவது, எட்டாவது ஓவர்களில் சிக்சர் மற்றும் பவுண்டரியை அவர் விளாசினார்.
அதற்குப் பிந்தைய உத்தி இடைவேளைக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் தனது வியூகத்தை மாற்றிக் கொண்டார். ஒன்பதாவது ஓவரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனுக்குக் கொடுக்க, அது எதிபார்த்த பலனைத் தந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய மார்க்ரம் நான்காவது பந்தை தூக்கி அடித்து மிட்விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மார்க்ரம் அவுட்டான பிறகே மும்பை இந்தியன்ஸ் அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பட மூலாதாரம், Getty Images
கிளாசனின் சிறப்பான கேமியோவும் மீண்டும் ஏமாற்றிய அப்துல் சமதும்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹெயின்ரிச் கிளாசன் மிடில் வரிசையில் அசத்தினார். பியூஷ் சாவ்லா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை அடித்து மிரட்டிய அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்விடச் செய்தார்.
ஆனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க லாங் ஆன் திசையில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்த கிளாசன் வெளியேறினார். அmவர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 36 ரன்களை துரிதமாக சேர்த்தார். அவர் அவுட்டான போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற 6 ஓவர்களில் 66 ரன்கள் தேவையாக இருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
அந்த ரன்களை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இம்பாக்ட் பிளேயராக அப்துல் சமதை அந்த அணி களமிறக்கியது. ஆனால் அவர் களத்தில் எந்தவொரு இம்பாக்டையும் ஏற்படுத்தத் தவறிவிட்டார். அதிரடியாக ரன் சேர்த்து அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ரன்அவுட்டானார்.
இக்கட்டான நேரத்தில் மோசமாக அவுட்டான வாஷிங்டன் சுந்தர்
நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பெரிய அளவில் சாதிக்காத தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் மிக மோசமாக அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஜேசன் பெஹரெண்டார்ஃப் வீசிய 18-வது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்த வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது பந்தில் ரன் அவுட்டானார்.
லாங் ஆன் திசையில் நின்றிருந்த டிம் டேவிட் நேராக ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்து வாஷிங்டன் சுந்தரை வெளியேற்றினார். வாஷிங்டன் சுந்தர் எளிதாக கிரீசுக்குள் பேட்டை வைத்திருக்க வேண்டிய அந்த நேரத்தில், சற்று அசட்டையாக செயல்பட்டதால் விக்கெட்டை தாரை வார்த்து அணியை மேலும் இக்கட்டில் தள்ளினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மீண்டும் ஏமாற்றம் தந்த நடராஜன் - யார்க்கர்கள் எங்கே போயின?
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் இம்முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய அளவில் பங்களிக்கத் தவறிவிட்டார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதும், சுதாரித்துக் கொண்டு அடுத்த பந்தை லோ கட்டர் வீசி அவரை காலி செய்தார் நடராஜன். ஆனால் அதன் பிறகு நேற்றைய ஆட்டத்தில் அவர் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
டெத் ஓவர்களில் அவரை, குறிப்பாக அவரது யார்க்கரை நம்பியிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று ஏமாற்றம் அடைந்தது. அவர் வீசிய 18-வது ஓவரில் கேமரூன் கிரீன் ஹாட்ரிக் பவுண்டரி, சிக்சருடன் 21 ரன்கள் குவித்தார். நடராஜனின் டிரேட் மார்க்கான யார்க்கர்கள் அவரிடம் இருந்து இன்னும் வரவில்லை. நேற்றைய ஆட்டத்தில் வெறும் 2 யார்க்கர்களை மட்டுமே அவர் வீசினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
2017-ம் ஆண்டு ஐ-பி.எல்.லில் அறிமுகமான பிறகு அதிக யார்க்கர்களை வீசிய பவுலர் பும்ராவுக்குப் பிறகு நடராஜன் தான். அதானாலேயே யார்க்கர் கிங் என்று பெயரெடுத்த நடராஜன், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இன்னும் தனது இயல்பான பார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். அவரது பந்துவீச்சில் இன்னும் 'ரிதம்' கைகூடி வரவில்லை.
யார்க்கருக்கு முயற்சிக்கையில் புல்டாசாகும் ஆபத்து அதிகம் என்றாலும், உச்சக்கட்ட பார்மில் இருக்கும் போது, டெத் ஓவர்களை வீசுகையில் 3 அல்லது 4 யார்க்கர்களை சாதாரணமாக வீசிய நடராஜன் தற்போது அந்த நிலையை எட்ட முடியாமல் தடுமாறுகிறார். யார்க்கருக்கு முயற்சிக்கும் போது அது புல்டாசாக மாறி பேட்ஸ்மேன்கள் அடிக்க எளிதாகி விடுகிறது. இதனால், அவரது பந்துவீச்சில் ரன்கள் அதிகம் எடுக்கப்பட்டு விடுகின்றன. நேற்று 2 யார்க்கர்களை மட்டுமே வீசிய நடராஜன் 8 புல்டாஸ் பந்துகளை வீசினார். அந்த பந்துகளில் மட்டும் 19 ரன்கiள மும்பை அணி சேர்த்தது.
அர்ஜூன் டெண்டுல்கரை இளவரசர் போல் பாதுகாக்கிறதா மும்பை?
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டம் நேற்றும் ஒப்பீட்டளவில் சிறப்பானதாகவே அமைந்தது. அந்த அணியின் முதல் ஓவரையும், மூன்றாவது ஓவரையும் வீசிய அவர் 15 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசிய அர்ஜூன் டெண்டுல்கர் ஓரிரு யார்க்கர்களையும் சிறப்பாக வீசியிருந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கின் போது, மார்க்ரம்மும், கிளாசனும் களத்தில் இருந்த போது மட்டுமே அந்த அணியின் கை ஓங்கியிருந்தது போல் தெரிந்தது. அதன் பிறகும் 6 ஓவர்களில் 66 ரன்கள் என்பது பெங்களூரு மைதானத்தில் எட்டக் கூடிய இலக்காக இருந்தாலும், பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைக்கும் பெரிய அரங்கமான ஐதராபாத்தில் அது சவாலான இலக்குதான்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருக்கும் போது பந்துவீச அர்ஜூன் டெண்டுல்கர் மீண்டும் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மும்பை அணிக்கு நேற்று கதாநாயகனாக ஜொலித்த கேமரூன் கிரீன், யார்க்கர்களை வீசி மிரட்டிய இம்பாக்ட் பிளேயர் ரிலே மெரிடித் ஆகியோரையே சவாலான கட்டத்தில் கேப்டன் ரோகித் பயன்படுத்தினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் என்றிருந்த நிலையில்தான் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச அழைக்கப்பட்டார். அப்போதுதான் களத்திற்குள் வந்திருந்த புவனேஷ்வர் குமாரும் - மயங்க் மார்க்கண்டேவும் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்காதவர்கள் என்பதால் கிட்டத்தட்டட அப்போதே மும்பை அணியின் வெற்றி உறுதியாகிவிட்டிருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி ஓவரை அவுட்சைட் ஆப்சைடில் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 2 யார்க்கர்களையும் வீசி ரசிகர்களை மகிழ்வித்தார். அத்துடன், கடைசி விக்கெட்டாக புவனேஷ்வர் குமாரையும் அவர் வெளியேற்றினார். ஐ.பி.எல்.லில் இரண்டாவது ஆட்டத்தில் ஆடும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இதுவே முதல் விக்கெட்டாக அமைந்தது. சர்வதேச போட்டிகளில் பேட்டிங்குடன் பல நேரங்களில் பந்துவீச்சிலும் ஜொலித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த அவரது சச்சின் டெண்டுல்கர், ஐ.பி.எல்.லில் 5 தொடர்களை ஆடியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், தனது இரண்டாவது ஆட்டத்திலேயே அதனை அர்ஜூன் டெண்டுல்கர் சாதித்துக் காட்டியுள்ளார்.
இருப்பினும் அர்ஜூன் டெண்டுல்கரை இக்கட்டான நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்துவதே இல்லை. இரண்டு ஆட்டங்களிலுமே முதல் 2 ஓவர்களை வீசிய பிறகு அவரை அந்த அணி மீண்டும் பந்துவீச அழைப்பதே இல்லை. நேற்றைய ஆட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த பின்னரே கடைசி ஓவரை வீச அவருக்கு அந்த அணி வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் ஒரு இளவரசரைப் போல அர்ஜூன் டெண்டுல்கரை அந்த அணி பொத்திப் பொத்தி பாதுகாக்கிறதோ என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர் ஆடிய முதல் ஆட்டத்தில் அவர் பந்துவீசுகையில் டக் அவுட்டில் இல்லாமல் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து நேரலையில் ஆட்டத்தைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேற்று பெவிலியனில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.லில் மகன் பந்துவீசுவதை அவர் முதன் முறையாக நேரடியாக கண்டு களித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












