லக்னோவை காப்பாற்றிய ஜெய்ப்பூர் ஆடுகளம்; வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் வெற்றியை கோட்டைவிட்டது எப்படி?

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மார்க்கஸ் ஸ்டாய்னிஷ், ஆவேஷ் கான் ஆகியோரின் கட்டுக்கோப்பான, நெருக்கடிதரும் பந்துவீச்சால், ஜெய்பூரில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் ராயஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இருப்பினும் நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

குறைந்த ரன்னில் சுருட்டல்

2023 ஐ.பி.எல். டி20 தொடரில் குறைந்த அளவு ஸ்கோர் செய்து, அதை லக்னோ அணி டிஃபண்ட் செய்துள்ளது. இதற்கு முன், நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை இதுபோல் குறைந்த ஸ்கோரில் ஆர்சிபி அணி சுருட்டி இருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து, டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களில் சுருட்டி ஆர்சிபி வென்றிருந்தது. இந்த ஸ்கோரைவிட குறைந்த அளவு அடித்த லக்னோ அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இந்த ஆட்டத்தில் வென்றுள்ளது.

1,460 நாட்களுக்குப்பின் நடந்த போட்டி

ஜெய்ப்பூர் சவான் மான்சிங் மைதானத்தில் கடைசியாக 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்தது. ஏறக்குறைய 1460 நாட்களுக்குப்பின் மீண்டும் இங்கு போட்டி நடந்தது என்றால் ஆடுகளத்தின் தன்மை கணிக்க முடியாத வகையிலேயே இருந்துள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2021ம் ஆண்டு, நவம்பர் 17ம் தேதி இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்துள்ளது.

இந்த ஆட்டத்திலும் இரு அணிகளும் குறைந்த ஸ்கோரையே அடித்தன. நியூசிலாந்து அணி அடித்த 164 ரன்களை இந்திய அணி 19.4 ஓவர்களில் சேஸிங் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப்பின் இதுவரை இந்த மைதானத்தில் எந்த ஆட்டமும் நடந்ததில்லை.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ஆடுகளத்தின் தன்மை

ஜெய்ப்பூர் ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமானது என்று கடந்த காலபோட்டிகளின் முடிவுகள் தெரிவித்தாலும், நேற்றைய ஆட்டத்தின்போது, ஆடுகளம் இரட்டைத் தன்மை உடையதாக இருந்ததால், இரு அணிகளாலும் பிட்ச்சின் தன்மையை கணிக்க முடியவில்லை.

ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் இதுவரை 47 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 32 ஆட்டங்களில், சேஸிங் செய்த அணிகளே வென்றுள்ளன, முதலில் பேட் செய்த அணிகள் 15 போட்டிகளில் மட்டுமே வாகை சூடியுள்ளன. இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் என்பது 157 ரன்கள்தான். இந்த ரன்களை வைத்து ஒரு அணியால் டிஃபெண்ட் செய்யவும் முடியும், சேஸிங்கும் செய்யலாம்.

மஞ்சரேக்கர் கூறியது என்ன?

ஆனால், ஜெய்ப்பூர் ஆடுகளத்தின் தன்மை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் பந்து வழுக்கிச் செல்லும், இருவிதமான வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும், சுழல்பந்துவீச்சுக்கு பெரிதாக சாதகமாக இருக்காது.

ஆதலால், டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்றால் சேஸிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

கணிப்பு மாறியது

ஆனால், மஞ்சரேக்கர் கணிப்புக்கு மாறாக நேற்று ஆடுகளத்தன்மை இருந்தது, மிகவும் மந்தமாக, பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத வகையில் இருந்தது. ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து பிட்ச்சானால் பவுன்ஸ் ஆகும், ஆகாது என்பதை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத வகையில் இருந்தது, சில நேரங்களில் பந்து பேட்ஸ்மேன்களின் முழுங்காலுக்கு மேல் எழும்பாமல் இருந்ததால், தூக்கி அடிக்கவும், பேட்டிங்கிற்கும் மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த சிரமத்தை ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் நேற்று உணர்ந்தார்கள். ஆனால், ஆடுகளத்தின் தன்மையை லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள்தான் கூடுதலாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

வெற்றியைப் பறிகொடுத்த ராஜஸ்தான்

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கரங்களே ஓங்கியிருந்தது, ராஜஸ்தான் அணி எளிதாக சேஸிங் செய்துவிடும் என்று ரசிகர்களால் நம்பப்பட்டது. 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 89 ரன்கள் என வலுவாக இருந்தது. வெற்றிக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன.

ஆனால், லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி, ஆடுகளத்தின் தன்மை போன்றவை ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

ஸ்டாய்னிஸ், ஆவேஷ் கான் அமர்க்களம்

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் மிதவேகப்பந்துவீச்சாளர்களான ஸ்டாய்னிஸ், ஆவேஷ் கான் இருவரும் ஆடுகளத்தின் தன்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை பெரிய நெருக்கடிக்குத் தள்ளினர்.

ஸ்டாய்னிஸ் 4 ஓவர்கள் வீசி 11 டாட் பந்துகளுடன் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 12 டாட் பந்துகள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆடுகளத்தின் நடுவில் பந்தை பிட்ச் செய்தால், பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருந்தது. இந்த நுணுக்கத்தை தெரிந்த ஸ்டாய்னிஷ், ஆவேஷ் கான் இருவரும் சரியாகப் பயன்படுத்தி பந்துவீசியதால், ராஜஸ்தான் அணியை சுருட்ட முடிந்து.

அதிலும் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் 20-வது ஓவரை கட்டுக் கோப்பாக வீசி, இரு விக்கெட்டுகளை வீழ்த்தி, 10 ரன்களில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

வரலாறு முக்கியம்

ஜெய்பூர் ஆடுகளம் கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது புலப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சோஹைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இந்த மைதானத்தில்தான்.

இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதைவிட, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே அதிகமாக ஒத்துழைத்துள்ளது என்பது கடந்த காலப் போட்டியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, வேகப்பந்துவீச்சாளர்களின் சராசரி 29.1 என்றநிலையில், சுழற்பந்துவீச்சாளர்களின் சராசரி 32.1 ஆக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட் 23.4 ஆக இருக்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட் 26 ஆக இருக்கிறது.

200 ரன்களைத் தொட்டதில்லை

பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானம் திகழ்வதால், இந்த ஆடுகளத்தில் இதுவரை எந்த அணியும் 200 ரன்களுக்கு மேல் அடித்தது இல்லை.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய பிட்ச்

ஜெய்பூர் ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமானது என்று கடந்த கால புள்ளிவிவரங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸனும் டாஸ் வென்று சேஸிங் செய்தார். ஆனால், அவரின் கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.

ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகினால், பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நான்கு திசைகளிலும் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், நேற்று போட்டி நடந்த ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் பந்தை கணிப்பதே கடினமாக இருந்தது.

இதைப் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் தொடக்கத்தில் இருந்தே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் தொடக்க வீரர்கள் மேயர்ஸ், கேஎல் ராகுலுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.

பவர்ப்ளேயில் குறைவான ஸ்கோர்

இதனால் பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த ஐ.பி.எல். சீசனில் பவர்ப்ளே ஓவரில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினர்.

இந்த ஆடுகளத்துக்கு ஒத்துவராமல் பந்துவீசும் பந்துவீச்சாளரின் ஓவரை குறிவைத்து விளாச லக்னோ பேட்ஸ்மேன் முடிவு செய்தனர். அந்த வகையில் சாஹல் வீசிய 9வது ஓவரில் 18 ரன்களையும், ஹோல்டர் வீசிய 9வது ஓவரில் 13 ரன்களையும் லக்னோ பேட்ஸ்மேன்கள் விளாசினர்.

இந்த ஆடுகளத்தின் தன்மை எந்த அளவுக்கு லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு எரிச்சலூட்டியதோ அதைவிட இரு மடங்கு ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கும் இருந்தது.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ராகுலுக்கு வந்த சோதனை

ஐ.பி.எல். தொடரில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைபுரிந்த கேஎல் ராகுல் நேற்றை ஆட்டத்திலும் ரன் சேர்க்க மிகவும் திணறினார். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மயர் இருவருமே ஷாட்களை அடிக்க முயன்றும் ஆடுகளத்தின் தன்மையால் கணித்து அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

"என் கனவு இன்னிங்ஸ் இதுவல்ல"

ஆடுகளத்தின் தன்மை குறித்து லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் தொடக்க வீரர் மேயர்ஸ் கூறுகையில் “ நான் விளையாட வேண்டும் என்று கனவு காணும் இன்னிங்ஸ் இதுவல்ல. இந்த ஆடுகளத்தில் பந்து எப்போது பவுன்ஸ் ஆகிறது, எந்த இடத்தில் பவுன்ஸ் ஆகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தை எங்கள் பந்துவீச்சாளர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டர்.

லைன்,லென்த்தில் சரியாகப் பந்துவீசி முயன்றால் அது சிரமமாக இருக்கும். பந்து வழுக்கிக்கொண்டு செல்வதால், பேட்ஸ்மேன்கள் விளையாடுவது சிரமமாக இருந்தது. நானும் பந்தை நேராக அடிக்க முயற்சித்தேன், ஆஃப் திசையில் அடிக்க முயன்றும், நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ராஜஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?

ராஜஸ்தான் அணி சேஸிங்கின்போது ஆடுகளத்தின் தன்மை வெகுவாக மாறியது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தைக் கொடுத்தது. ஆடுகளத்தின் மந்தமான தன்மையைப் புரிந்து கொண்ட லக்னோ பந்துவீச்சாளர்களும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் களத்தில் இருக்கும் வரை அந்த அணி வெற்றி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது என்றே ரசிகர்களால் நம்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்து சென்றபின், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நல்ல ‘கேமியோ’ ஆடாமல் இருந்ததன் விளைவுதான் ராஜஸ்தான் அணியை தோல்விக்கு இட்டுச் சென்றது.

சஞ்சு சான்ஸனின் எதிர்பாராத ரன்அவுட், ஹெட்மெயர் விரைவாக ஆட்டமிழந்தது போன்றவை ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கு தேவையான ரன்ரேட் அழுத்தத்தை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள், தேவ்தத் படிக்கல், ரியான் பராக் இருவருமே பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்த பேட்ஸ்மேன்கள் இல்லை, நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு, அணியை மீட்கும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும் இல்லை.

இதைப் புரிந்துகொண்ட லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தி ராஜஸ்தான் அணிக்கு தொடர்நெருக்கடிகளை அளித்தார். ஸ்டாய்னிஷ் வீசிய 18-வது ஓவரில் படிக்கல் 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்கள் சேர்த்தவுடன் ஆட்டத்தின் போக்கு மாறுவதுபோல் தெரிந்தது.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

இதனால், 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அற்புதமாகப் பந்துவீசினார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

ஆவேஷ் கான், வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரியான் பராக் பவுண்டரி அடித்தவுடன் அழுத்தம் அதிகரித்தது. 2வது பந்தில் பராக் ஒரு ரன் சேர்க்கவே, 3வது பந்தை படிக்கல் எதிர்கொண்டார். ஆப்சைடில் விலக்கி ஆவேஷ் கான் வீசிய பந்தை படிக்கல் அடிக்க முற்படவே அது விக்கெட் கீப்பர் பூரனிடம் தஞ்சமடைந்து கேட்சானது.

அடுத்துவந்த ஜூரெலும், வந்தவேகத்தில் லாங்ஆன் திசையில் தூக்கி அடிக்க, தீபக் ஹூடா, பவுண்டரி அருகே கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த அஸ்வினாலும் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாததால் ராஜஸ்தான் தோல்வி உறுதியானது.

"நினைத்தது ஒன்று நடந்தது வேறு"

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஆடுகளம் குறித்து கூறுகையில் “ இது சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். ஆனாலும் எங்களால் முடியவில்லை. ஆடுகளத்தை மிகவும் எதிர்பார்த்தேன், ஆனால் மாறுபட்டு அமைந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடமுடியாதவகையில் பந்து குறைவாக பவுன்ஸ் ஆகியது” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணங்களி்ல் ஒன்று அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களின் இயல்புத் தன்மையிலிருந்து விலகி நேற்று ஆடியதுதான். வழக்கம்போல் தொடக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து பவர்ப்ளேயை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை.

பட்லர், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து சென்றபின் வந்த சாம்ஸன், ஹெட்மயர், படிக்கல், ஜூரல் ஆகியோர் நல்ல கேமியோ ஆடி இருக்க வேண்டும். இவர்கள் நான்கு பேருமே சொதப்பிவிட்டனர். தேவ்தத் படிக்கலும், ரியான் பராக்கின் மந்தமான ஆட்டமும் ராஜஸ்தான் தோல்விக்கு முக்கியக் காரணம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: