"உங்களை முடித்துவிடப் போகிறார்கள்" - நேரலை கேமராக்களுக்கு முன் அதிக் அகமது, அஷ்ரஃப் கொலை செய்யப்பட்டபோது நடந்தது என்ன?

பட மூலாதாரம், NURPHOTO
"இரண்டு வாரங்களுக்குள் உங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மீண்டும் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று உங்களை முடித்துவிடப்போவதாக இன்று அலகாபாத்தில் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒரு மூத்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்."
அதிக் அகமதுவுடன் கொல்லப்பட்ட அவரது சகோதரர் அஷ்ரஃப், மார்ச் 29 ஆம் தேதி போலீஸ் காருக்குள் இருந்து எட்டிப்பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.
சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 15 ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அதிக் மற்றும் அஷ்ரஃப் கொல்லப்பட்டனர்.
ஊடகவியலாளர்கள் போல வந்த மூன்று தாக்குதலாளிகளும், நேரலை கேமராக்களுக்கு முன்னால் அதிக் மற்றும் அஷ்ரஃப்பை கொன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கொலை பற்றி விசாரிக்க உத்தரபிரதேச அரசு 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச காவல்துறை சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழு மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்தும்.
குஜராத்தின் சாபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அகமது, விசாரணைக்காக பிரயாக்ராஜ் அழைத்து வரப்பட்டபோது, அவர் ’வாகனம் கவிழ்க்கப்படும்’ என்று ஊடகங்களில் ஊகங்கள் வெளியாயின.
மீடியா மொழியில் ' வாகனம் கவிழ்தல்' என்றால் போலீஸ் என்கவுண்டரில் மரணம்.
2020 ஜூலையில் கான்பூரில் பிக்ரு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டபோது என்கவுண்டர் என்று கூறப்படும் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
வாகனம் கவிழ்ந்தபோது விகாஸ் துபே ஓட முயன்றதாகவும், பின்னர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த என்கவுண்டர் குறித்து கேள்விகள் எழுந்தன. உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விகாஸ் துபே மற்றும் அவரது 5 கூட்டாளிகளின் என்கவுண்டரில் உத்தரபிரதேச காவல்துறை எந்த தவறும் செய்யவில்லை என்று விசாரணை கமிஷன் கண்டறிந்தது.

பட மூலாதாரம், ANI
போலீஸ் காவல்
மார்ச் 16 அன்று உமேஷ் பால் கொலை வழக்கின் விசாரணைக்காக அதிக் அகமது முதன்முறையாக சாபர்மதி சிறையில் இருந்து பிரயாக்ராஜுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
செய்தியாளர்களும் அவர் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு, ஏப்ரல் 11 ஆம் தேதி சாபர்மதி சிறையில் இருந்து அதிக் அகமது மீண்டும் பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டார். இம்முறை அவரை போலீஸ் காவலில் விட்டுத்தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஏப்ரல் 15 அன்று அதிக் அகமது கொலை செய்யப்பட்டபோது, அவர் போலீஸ் காவலில் இருந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட இருந்தார்.
போலீஸ் காவலில் இருந்த அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் கொலை செய்யப்பட்டதை அடுத்து பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தக் கேள்விகளை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, அதிக் அகமதின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சி ஒருவரிடமும் பிபிசி பேசியது.
இருவரும் இந்த சம்பவத்தை மிக அருகில் இருந்து பார்த்தனர். இருவரும் காவல்துறையின் இருப்பு மற்றும் அவர்களின் பதில் நடவடிக்கை தொடர்பான பல விஷயங்களை கூறினர்.
எஃப்ஐஆர் என்ன சொல்கிறது?
தாங்கள் இருவரும் மிகவும் பதற்றமாக இருப்பதாக அதிக் மற்றும் அஷ்ரப் கூறியதாக இருவரின் கொலையின் எஃப்ஐஆரில் எழுதப்பட்டுள்ளது. அதிக் கொல்லப்பட்ட அதே நாளன்று மதியம், அதிக்கின் மகன் ஆசாத் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரின் உடல் நிலையும் மோசமடைந்ததைக் கருத்தில் கொண்டு இரவு 10.19 மணிக்கு, குமங்கஞ்ச் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ. ராகேஷ் குமார் மெளரியா, 18 போலீசாருடன், பொலேரோ வாகனம் மற்றும் ஜீப்பில் கொல்வின் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
இரவு 10.35 மணியளவில் போலீசார் இரண்டு வாகனங்களில் கொல்வின் மருத்துவமனைக்கு அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்ததாக எஃப்ஐஆரில் எழுதப்பட்டுள்ளது.
இருவரும் ஒரே கைவிலங்கால் கட்டப்பட்டிருந்தனர். காரில் இருந்து இறங்கி 10 முதல் 15 அடிகள் நடந்து சென்றதும் அதிக் மற்றும் அஷ்ரஃப் இருவரும் செய்தியாளர்களால் சூழப்பட்டனர். அவர்களுடன் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிக் மற்றும் அஷ்ரஃப் பேசுவதற்காக அங்கே நின்றதாகவும், பின்னர் முன்னோக்கி செல்லுமாறு கூறி அவர்களை தாங்கள் தள்ளியதாகவும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் உடனடியாக துப்பாக்கி சூடு தொடங்கியது. அதிக் மற்றும் அஷ்ரஃப் தரையில் விழுந்தனர். அதன் பிறகு தாக்குதல் நடத்திய 3 பேரும் சரணடைந்தனர்.

அதிக்கின் வழக்கறிஞர் காவல்துறை மீது எழுப்பிய கேள்விகள்
அதிக் அகமதின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா அவருடைய நிழல்போல எப்போதும் இருப்பார். சாபர்மதியிலிருந்து அதிக் அகமது வாகனத்தில் புறப்பட்டபோது, அவர் தனது காரில் அந்த வாகன அணியை வழி முழுவதும் பின்தொடர்ந்தார்.
”அஷ்ரஃப்பின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரது பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது” என்று அவர் கூறுகிறார்.
உச்ச நீதிமன்றமும் அதிக் அகமதுவின் பாதுகாப்பு தொடர்பான மனுவை விசாரித்தது. ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
“உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மனுதாக்கல் மற்றும் விசாரணையைக் கோருவதற்கு முன்பே அதிக் கொல்லப்பட்டார்” என்று விஜய் மிஷ்ரா கூறுகிறார்.
அஷ்ரஃப் ஆஜராக வரும்போதெல்லாம் அவருடைய பாதுகாப்பைக்கருதி எப்போதும் வீடியோகிராஃபி இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பட மூலாதாரம், ANI
மூடிய வாகனத்திற்கு பதிலாக திறந்த போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ஏன்?
ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு, 17 காவலர்களின் பாதுகாப்புடன் திறந்த போலீஸ் ஜீப்பில் அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப், காவல் நிலையத்திலிருந்து கொல்வின் மருத்துவக் கல்லூரிக்கு கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜீப்பில் இருந்து இறங்கிய அதிக் மற்றும் அஷ்ரஃப் சில அடிகள் மட்டுமே நடப்பதற்குள் செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
ஊடகவியலாளர்கள் போல் வந்த மூன்று ஆயுதமேந்திய ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சகோதரர்கள் இருவரையும் கொன்றபோது அதிக்கின் பதில்கூட முழுமை அடைந்திருக்கவில்லை.
”அதிக் மற்றும் அஷ்ரஃப் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அங்கு போலீஸ் வீடியோ கேமரா இல்லை. 6 முதல் 7 போலீஸார் மட்டுமே இருந்தனர்," என்று கொலைச் சம்பவம் குறித்து விஜய் மிஷ்ரா தெரிவித்தார். விஜய் மிஷ்ரா கொலையை நேரில் பார்த்தவர்.
"நிறைய ஊடகவியலாளர்கள் அங்கு இருந்தனர். போலீஸ்காரர்கள் மிகவும் பின்னால் நடந்து கொண்டிருந்தார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
குறைவான எண்ணிக்கையில் போலீஸார் இருப்பது பற்றி தும்மங்கஞ்ச் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ ராகேஷ் குமார் மௌரியாவிடமும் தான் கூறியதாக விஜய் மிஷ்ரா கூறுகிறார்.
”இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று தும்மங்கஞ்ச் காவல் நிலைய எஸ்.எச்.ஓ.விடம் கூட சொன்னேன். இருபுறமும் தடுப்பு வேலி போடுமாறு கூறினேன். காவல் நிலைய போலீஸார் மட்டுமே இருந்தனர். இந்த விஷயத்தில் அவர்களுக்கு சம்மந்தமே இல்லை. நீங்கள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் சொன்னேன். நீங்கள் கவலையில்லாமல் இருங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம் என்று அவர் சொன்னார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் என்னிடம் உறுதியளித்தார்,” என்று விஜய் மிஷ்ரா குறிப்பிட்டார்.
"சம்பவத்தின் போது SHO மெளரியாவும் அங்கு இருந்தார். நானும் அங்கு இருந்தேன். அந்த நேரத்தில் மிகக் குறைவான போலீசார் மட்டுமே உள்ளனர் நான் அவரிடம் சொன்னேன். அதிக போலீசார் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்."
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் அதிக் அகமது, திறந்த போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது ஏன் என்றும்,அவரை ஊடகங்கள் நெருங்க எப்படி அனுமதிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மாநிலத்தின் பொறுப்பு
அதிக் அகமது தனது பாதுகாப்புக்காக பலமுறை கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் பலமுறை கூறி வந்தார்.
இருந்த போதிலும் அதிக் மருத்துவமனைக்குச் செல்லும் செய்தி ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி என்றும். செய்தியாளர்கள் அவர் அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
"போலீஸ் காவலின் பொருள் என்னவென்றால், அவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். கஸ்டடி விதிகளின்படி, எந்த வகையிலும் நம்பிக்கை மீறல் இருக்கக்கூடாது. ஆனால் அது நடந்துள்ளது. போலீஸால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை."என்று உத்தரப்பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் விக்ரம் சிங் கூறினார்.
"அலகாபாத்தில் அதிக் மற்றும் அவரது சகோதரர் கொல்லப்பட்டது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய கவனக்குறைவை காட்டுகிறது. அவர்கள் போலீஸ் காவலில் இருந்தனர். இது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை உயிருடன் வைத்திருக்க வெண்டியது மாநில அரசின் பொறுப்பு,” என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விபூதி நாராயண் ராய் குறிப்பிட்டார்.
" முழுமையான சோதனை செய்யாமல் யாரையும் அவரை நெருங்க அனுமதித்திருக்கக்கூடாது. ஆனால் மக்கள் அவரை நெருங்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு வகையான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்கள் போல் வந்து சில நொடிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். குவிக்கப்பட்டிருந்த போலீசார் வெறும் பார்வையாளர்களாக மாறினர்." என்று விக்ரம் சிங் கூறுகிறார்.
அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது கொலையை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி ஷெரீப் அகமது.

நேரில் கண்ட சாட்சி என்ன சொல்கிறது?
கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக மருத்துவமனை வாசலை ஒட்டிய கழிவறைக்கு அருகே தான் வசித்து வருவதாக ஷெரீப் அகமது கூறுகிறார்.
”வெள்ளியன்று அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இதுதான் பாதுகாப்பு ஏற்பாடா என்று நான் நினைத்தேன்!" என்றார் அவர்.
கொலை நடந்த ஒரு நாளுக்கு முன் (வெள்ளிக்கிழமை) இரவு, அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வந்தபோது, வாகனம் வெளியில் நின்றதாக ஷெரீப் அகமது கூறுகிறார்.
”வெள்ளியன்று சாவகாசமாக உள்ளே சென்றார்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு சௌகரியமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை வந்தபோது அலட்சியத்தைக் கண்டதாக அகமது கூறுகிறார். சுமார் 10 போலீசாரை மட்டுமே தான் பார்த்ததாக அவர் கூறுகிறார்.
”20 அல்ல, 10 பேர் மட்டுமே இருந்தார்கள்.”என்றார் அவர்.
கொல்வின் மருத்துவமனைக்கு ஒரு குற்றவாளியை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, வாயிலுக்கு வெளிலேயே வாகனம் நிறுத்தப்படுமா?
”இல்லை சார், குற்றவாளியும் வருவார். நிர்வாக அதிகாரிகளும் வருவார்கள். முழு வாகன அணியையும் உள்ளே கொண்டு செல்வார்கள்," என்று ஷெரீப் அகமது பதிலளித்தார்.
வெளியே கதவை சுட்டிக்காட்டி, "ஏன் அங்கே நிறுத்தினார்கள். நான் இதுவரை அப்படி எதையும் பார்த்ததில்லை" என்று அவர் சொன்னார் .
உள்ளே திரும்புவதற்கு போதுமான இடம் இருப்பதால் கார் உள்ளே கொண்டுவரப்படும் என்று அகமது கூறுகிறார்.
இவ்வளவு வசதிகள் உள்ளன. நீங்களும் அரசை சேர்ந்தவர்கள். பிறகு ஏன் உங்கள் வாகனத்தை உள்ளே கொண்டு வரவில்லை? அவர் ஒரு டான், மாஃபியா என்றால், இவ்வளவு பெரிய ரெளடியின் வாகனத்தை ஏன் உள்ளே கொண்டு வரவில்லை?”
ஊடகங்களை தூரத்தில் வைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று ஷெரீப் அகமது கூறுகிறார். "மீடியாக்காரர்கள் அனைவரும் வாய்க்கு அருகே மைக்கை திணித்தனர்,” என்கிறார் அவர்.
"ஒருமுறை கசாரி மசாரி விவகாரத்தில் அதிக பாதுகாப்பு படைகள் கொண்டுவரப்பட்டன. தங்களுடன் பிஏசியை அழைத்து வந்தனர்., சிறையில் இருந்து கொண்டு வரும்போது அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப்படைகள் இருந்தன.
ஆனால் இதில் ஏன் அப்படி செய்யப்படவில்லை,” என்று அகமது கேள்வி எழுப்பினார்.
போலீசார் ஷெரீப் அகமதுவிடம் பேசுகிறார்களா? அவர் இந்த சம்பவத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர் என்பதால் அவரது வாக்குமூலம் பெறப்பட்டதா?
இல்லை என்கிறார் அவர்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது காவல்துறையினரின் எதிர்வினை என்ன? தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் எப்படி கைது செய்தனர்?
”எல்லோரும் ஓடிவிட்டார்கள். இரண்டு போலீசார் வீட்டுக் காவலர்கள் போல நின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களை கீழே வீசிய பின் கோஷங்கள் எழுப்பினர். ஆயுதங்களை வீசிய பின் காவலர்கள் அவர்களைப் பிடித்தனர்,” என்று ஷெரீப் அகமது கூறினார்.

மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
அதிக் மற்றும் அஷ்ரஃப், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
"மருத்துவ பரிசோதனை செய்வது என்பது நீதிமன்றத்தின் வழக்கமான உத்தரவு. குறிப்பாக காவலில் இருக்கும்போது தாக்கப்படலாம் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அச்சம் தெரிவிக்கும் போது இது அவசியமாகிறது. அதிக்கின் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. ஆனால் இந்த பரிசோதனையை மருத்துவரை அழைத்து காவல் நிலையத்திலேயே செய்திருக்கலாம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சாதாரண பரிசோதனையை காவல்நிலையத்திலேயே செய்திருக்கலாம், வேறு ஏதாவது சிக்கலாக இருந்திருக்கலாம், அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறைவான பாதுகாப்புடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது மிகப்பெரிய கவனக்குறைவு,” என்று விபூதி நாராயண் ராய் கூறினார்.
"இது வழக்கமான பரிசோதனைதான், போலீஸ் ஸ்டேஷனிலும் செய்திருக்கலாம். உடல்நிலை சரியில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கோரும்போதுதான் இது செய்யப்படுகிறது. அப்படி எந்த கோரிக்கையும் அவர் வைக்கவில்லை. வழக்கமான பரிசோதனை என்ற பெயரில் தான் அங்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து விஜய் மிஷ்ரா கூறினார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஏன் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்கள், அவர்கள் ஏன் புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணியவில்லை?
அதிக் மற்றும் அஷ்ரஃப் மீது துப்பாக்கிச்சூடு நடந்தபோது காவல் துறையினர், தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுவதை பார்க்க முடிந்தது.
தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தோட்டாக்களை சுட்டனர், ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து துப்பாக்கியால் சுடப்படவில்லை.
பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸார் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டைக் கூட அணியவில்லை. முன்னதாக சாபர்மதி சிறையில் இருந்து அதிக் அழைத்து வரப்படும் போதெல்லாம், அவரது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் குண்டு துளைக்கமுடியாத ஜாக்கெட்டை அணிந்திருந்தனர்.
எனவே தற்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளார்.
" இது நடக்கும் என்று காவல்துறை எதிர்பார்க்கவில்லை. போலீசார் இரண்டு பாதுகாப்பு வட்டங்களை உருவாக்கியிருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டவுடன் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும். அதை போலீசார் செய்யவில்லை. காவல்துறை எதுவும் செய்யவில்லை என்பது இங்கே தெரிகிறது. ஐந்து விநாடிகளில் கேம் ஓவர்." என்று விக்ரம் சிங் கூறுகிறார்.
தாக்குதல்காரர்கள் காவல்துறை மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை?
மூன்று தாக்குதல்காரர்களும் அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோரை மட்டுமே குறிவைத்தனர்.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த எந்த போலீஸ்காரர் மீதும் தோட்டாக்களை சுடவில்லை.
இவ்வாறான நிலையில் போலீசார் தங்களை எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது அவர்களுக்கு முன்னரே தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொலையை செய்த உடனேயே ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, மத முழக்கங்களை எழுப்பிய அந்த நபர்களுக்கு, அதிக் மருத்துவமனைக்கு செல்வது குறித்த தகவல் எப்படி கிடைத்தது?
காரில் இருந்து அதிக் மற்றும் அஷ்ரஃப் இறங்கியவுடன், செய்தியாளர்கள் போல் வந்த தாக்குதல் நடத்தியவர்கள் அவர்கள் அருகே சென்று அவர்களைக் கொன்றனர்.
அதிக் அங்கு வரப்போவது குறித்து அவர்களுக்கு ஏற்கனவே தகவல் இருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை மருத்துவமனை நிர்வாகத்திற்கே இந்தத்தகவல் தெரியாத நிலையில், அவர்களுக்கு எப்படி இவ்வளவு துல்லியமான தகவல் கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தேவையில்லாத ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரிகையாளர்கள் போல் வந்து காவல்துறையின் அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்." என்றார் விக்ரம் சிங்.

பட மூலாதாரம், ANI
மூன்று தாக்குதல்காரர்களும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்கள்?
தாக்குதல் நடத்திய மூவரும் உத்திரபிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் இவர்கள் மூவரும் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள், இவர்களுக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
"பிடிபட்டுள்ள மூன்று பேரும் சங்கிலியின் மிகச் சிறிய கண்ணிகள். அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நபர் இருக்க வேண்டும். அதிக்கிடம் பல முக்கிய தகவல்கள் இருக்கும். அதிக்கின் வாயைமூடவும் இது செய்யப்பட்டிருக்கலாம். கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது முக்கியம். இந்த மூவரிடமிருந்து எல்லா தகவல்களையும் போலீசார் சேகரிக்க வேண்டும், அப்போதுதான் அதிக் போன்றவர்களுக்காக நிதி வசூலிப்பவர்களை பிடிக்கமுடியும்,” என்று விபூதி நாராயண் ராய் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தது?
தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை எளிதில் கிடைக்காதவை. நான்கு கைத்துப்பாக்கிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று தாக்குதலாளிகளும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு குற்ற வரலாறு உள்ளது ஆனால் இதுவரை கிடைத்த தகவலின்படி அவர்களுக்கு இதுவரை எந்த பெரிய கும்பலுடனும் தொடர்பு இல்லை.
இவ்வாறான நிலையில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடிய ஆயுதங்கள் கிடைத்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆயுதங்களின் வேர் வரை எட்ட வேண்டிய அழுத்தமும் காவல்துறைக்கு உள்ளது.
மூன்று தாக்குதல்காரர்களும் பயிற்சி பெற்றவர்கள் போல துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் தாக்கிய துல்லியம், இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
"காவல்துறையின் முன் பல பெரிய கேள்விகள் உள்ளன. முழுமையான மற்றும் நேர்மையான விசாரணையின் மூலம் மட்டுமே இதற்கு பதில் கிடைக்கும்.. இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது, எனவே நியாயமான மற்றும் முழுமையான விசாரணையை நடத்த வேண்டியது ஒரு காவல்துறைக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல, சவாலும் கூட,” என்று இது குறித்து விபூதி நாராயண் ராய் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
அதிக் அகமதின் குற்ற வரலாறு
• அதிக் அகமதின் குற்ற வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
•, 1979 ஆம் ஆண்டு முதல் முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அதிக் அகமது மைனர் என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
• பிகாரிலும் அதிக் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நான்கு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 1992 ஆம் ஆண்டில், அலகாபாத் காவல்துறை தெரிவித்தது.
• 1996 முதல் அதிக் அகமது மீது 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பிரயாக்ராஜின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்..
• 12 வழக்குகளில், அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப்பின் வழக்கறிஞர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பு கூறுகிறது.
• அதிக் அகமது, பகுஜன் சமாஜ் கட்சியின் MLA ராஜு பால் கொலையில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டவர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் இருந்தது.
• பிப்ரவரி 24 அன்று நடந்த உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்.
• ராஜு பால் கொலை வழக்கில் உமேஷ் பால் ஆரம்ப சாட்சியாக இருந்தார். ஆனால் பின்னர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவரை சாட்சியாக வைக்கவில்லை.
• மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏ நீதிமன்றம், 2006 இல் உமேஷ் பாலை கடத்திய வழக்கில் அதிக் அகமது குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












