உ.பி இரட்டை கொலை: மற்ற இடங்களில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?

அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியில் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியில் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்
    • எழுதியவர், அனந்த் ஜனாணே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

முன்னாள் எம்பியும் மாஃபியா கும்பல் தலைவனுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமதின் பரபரப்பான கொலைகளைத் தொடர்ந்து பிரயாக்ராஜ் உட்பட உத்தர பிரதேசத்தின் எல்லா மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு சகோதரர்களின் உடல்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) கசாரி-மசாரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இதன் போது அதிக் அகமதுவின் இரு மைனர் மகன்களை உ.பி.போலீசார் அங்கு அழைத்து வந்தனர். இதன்போது பதிவான காணொளிகளில் மகன்கள் இருவரும் கறுப்பு ஆடைகள் அணிந்துள்ளதை பார்க்கமுடிகிறது.

கசாரி - மசாரி மயானத்தில் புதைகுழி தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நடைபெற்று வந்தது. ஆனால், அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரின் உடல்களை அடக்கம் செய்யும் பணி மாலைக்குள் முடிக்கப்பட்டது.

பிரயாக்ராஜ் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நிலைமை எப்படி உள்ளது

இந்த படுகொலைகளை அடுத்து உத்தரபிரதேசத்தின் எல்லா மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மவ், ஃபரூக்காபாத், காஸியாபாத் மற்றும் கோரக்பூர் போன்ற மாவட்டங்களின் பதற்றமான பகுதிகளில் நடத்தப்பட்ட கொடி அணிவகுப்புகளும் இதில் அடங்கும்.

இந்தக்கொலை சம்பவத்தை நடத்தியவர்களின் வீடுகள் உள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்படுகிறது என்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலைத்தாக்குதல் நடத்திய சன்னியின் வீட்டுக்கு வெளியே போலீசார் நிற்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

இந்த படுகொலை நடத்தப்பட்ட பிரயாக்ராஜில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு பிரயாக்ராஜில் இணைய சேவைகள் மூடப்படும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட மூவரின் இந்த புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட மூவரின் இந்த புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது

மாஃபியா மற்றும் பாகுபலி என்று மக்களால் அறியப்பட்ட அதிக், ஊடகத்தினர் முன்னிலையில் மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த பரபரப்பான கொலையின் வீடியோ காட்சிகள் பிரயாக்ராஜில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் பார்க்கப்பட்டன.

தாக்குதலாளிகளான லவ்லேஷ், சன்னி மற்றும் அருண் ஆகிய மூவரும் ’அதிக் மற்றும் அஷ்ரஃப் கும்பலை அழித்து, மாநிலத்தில் தங்களுக்கு ஒரு பெயரை சம்பாதிக்க விரும்பினர்’ என்று இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.

துப்பாக்கியால் சுடும் லவ்லேஷ் திவாரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, துப்பாக்கியால் சுடும் லவ்லேஷ் திவாரி

லவ்லேஷ் திவாரியின் குற்ற வரலாறு

மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெற பிபிசி முயன்றது. பாந்தாவைச் சேர்ந்த 22 வயதான லவ்லேஷ் திவாரி மீது நான்கு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

மூன்று வழக்குகள் அடி உதை நடத்தியது தொடர்பானது. மற்றொன்று சிறுமியை கிண்டல் செய்த வழக்கு. லவ்லேஷின் தந்தை யுக் குமார் திவாரியும் உள்ளூர் ஊடகங்களிடம் பேசும் போது இந்த குற்ற வழக்குகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

லவ்லேஷ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

லவ்லேஷ் மீதான எல்லா வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் ஜாமீன் பெற்று அவர் சிறைக்கு வெளியே உள்ளார்.

இந்த நான்கு வழக்குகளில் எதிலும் லவ்லேஷிடம் இருந்து ஆயுதம் எதுவும் மீட்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

போலீஸின் பிடியில் சன்னி சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, போலீஸின் பிடியில் சன்னி சிங்

சன்னி சிங்கின் குற்ற வரலாறு

இரண்டாவது குற்றவாளியான 23 வயதான சன்னி சிங் ஹமிர்பூரில் வசிப்பவர். சன்னி மீது மொத்தம் 14 வழக்குகள் உள்ளன.

ஆயுதச் சட்டம், கொலைத்தாக்குதல், கொள்ளை, கேங்ஸ்டர் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் போன்ற கடுமையான பிரிவுகள் இதில் அடங்கும்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் பிறகு திரும்பி வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

சன்னியை 2022 ஆம் ஆண்டு முதல் காணவில்லை. மேற்கு உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷெஹரில் செயல்பட்டு வரும் சுந்தர் பாட்டி கும்பலில் அவர் சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சுந்தர் பாட்டி கும்பல் மீது நொய்டா மற்றும் காஸியாபாத்தில் பல வழக்குகள் உள்ளன.

அவர் மீதான 14 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தார், ஆனால் அவர் திரும்பவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

போலீஸ் காவலில் அருண் மெளரியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, போலீஸ் காவலில் அருண் மெளரியா

அருண் குமார் மௌரியா யார்?

காஸ்கஞ்சைச் சேர்ந்த 18 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட அருண் குமார் மெளரியாவைப் பற்றி அறியவும் பிபிசி விரும்பியது. ஆனால் காஸ்கஞ்சில் அருண் மௌரியா மீது குற்றவியல் வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று காஸ்கஞ்ச் காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆறு மாதங்களாக அவர் காஸ்கஞ்சில் வசிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதன் போது அவர் ஹரியானாவின் பானிபத்தில் வசித்து வந்தார்.

காஸ்கஞ்ச் காதர்வாடியில் உள்ள அவரது குடும்பத்தினரையும் போலீசார் விசாரித்துள்ளனர்.

அருண் மௌரியா மூன்று சகோதரர்களில் இளையவர். அவரது சகோதரர்கள் இருவரும் டெல்லியில் ஸ்கிராப் டீலர்களாக பணிபுரிந்தனர் என்று கிராமத் தலைவர் கூறினார்.

அருணின் பெற்றோர் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர் என்று கிராமத் தலைவர் விகாஸ் குமார் செளஹான் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

அருண் மெளரியா தனது தாத்தா மற்றும் சித்தப்பாவுடன் பானிபத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கூட பானிபத்தில் இருந்தார் என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது..

2022 பிப்ரவரி 4 ஆம் தேதி அருண் மௌரியா, சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியுடன் பானிபத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பானிபத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகலை பிபிசி பார்த்தது.

துப்பு கிடைத்ததன் பேரில் அருணை நாட்டுத் துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர் என்று எப்ஐஆர் தெரிவிக்கிறது.

அதிக் அகமது கொலை நடந்த விதம்

  • சனிக்கிழமை இரவு போலீசார் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகியோரை வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
  • ஊடகவியலாளர்கள் அவர்களை மருத்துவமனைக்கு வெளியிலேயே நிறுத்தி கேள்விகள் கேட்டனர், இதன் போது தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • தாக்குதலில் அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் அகமது கொல்லப்பட்டனர். ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் காயமடைந்தனர்.
  • தாக்குதல் நடத்திய மூவரும் கைத்துப்பாக்கியை கீழே வீசி சரணடைந்தனர், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
  • இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டது.
  • மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து யோகி அரசை தாக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் நடந்தவிதம் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
  • தாக்குதல் நடத்திய மூவரும் ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
  • அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் அகமதுவின் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குப்பிறகு அடக்கம் செய்யப்பட்டன.
  • உத்தர பிரதேச அரசு, முழு விவகாரம் தொடர்பான நீதி விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: