'அவளை காப்பாற்ற முடியாததை மறக்க பிறருக்கு உதவுகிறேன்' - புற்றுநோயாளிகளுக்கு உதவும் சென்னை இளைஞர்
- எழுதியவர், கவியரசு வி
- பதவி, பிபிசி தமிழுக்காக

“கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமே என் நோக்கம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களையும் உதவ விரும்புபவர்களையும் ஒன்றிணைப்பது தான் என் பிரதான நோக்கம்” என்று சொல்கிறார் புற்று நோயால் தன் மனைவியை இழந்த வருண் விஜயபிரசாத்.
சென்னையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் வருண் விஜயபிரசாத். இவருடைய மனைவி டிஸ்மி மேத்யூ கடந்த 2022-ல் மூளை புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். மனைவியை இழந்த மன அழுத்தத்திலிருந்து மீள முடியாமல் தவித்த வருண், தற்போது மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு அவருடைய மன நலத்தை மட்டும் காப்பாற்றவில்லை; புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரின் உடல் நலத்தையும் காப்பாற்றி வருகிறது. தான் கடந்து வந்த கொடிய காலத்தையும், தன்னை வாழ உந்தும் லட்சியத்தையும் பற்றி பிபிசி தமிழிடம் வருண் பகிர்ந்துகொண்டார். இனி அவர் வார்த்தைகளில்;
“கேன்சர் நோய் என்பதே கொடியது. அதிலும் மூளை கேன்சர் இரக்கமற்றது. அதை கண் எதிரே பார்த்தவன் நான். நினைவுகள் மங்கும். தலை நொறுங்குவது போல் வலிக்கும். உடல் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக குலையும். பாதிக்கப்பட்ட என் மனைவி டிஸ்மி அடிக்கடி கூறியவை இவை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவிக்கு அவ்வப்போது தலைவலி வந்து கொண்டிருந்தது. சாதாரண சைனஸ் தலைவலி என்று நினைத்து பரிசோதனைக்காக சென்றோம். அப்போது அவள் க்ளியோபாஸ்டோமா (Glioblastoma) எனப்படும் 4-ம் நிலை மூளை கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளாள் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எவ்வளவு சிகிச்சை செய்தாலும் தீர்க்கமுடியாத கேன்சர் என்று கூறிவிட்டார்கள். இருந்தாலும் அவள் என்னுடன் வாழும் நாட்களை நீட்டிக்க என்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய முடிவெடுத்தேன்.
வாழ்வின் கொடுமையான நாட்கள்
முதலில் ஓர் அறுவை சிகிச்சை செய்தோம். தொடர்ந்து கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் (Chemotherapy & Radiation) சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் லட்சங்களில் செலவாகும். என் மனைவி வேலை செய்துவந்த ஐடி நிறுவனத்தின் இன்சுரன்ஸ் மற்றும் என் சம்பளத்தைக் கொண்டு சிகிச்சைக்கான செலவை சமாளித்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மூளையின் இடது பக்கம் இருந்த கேன்சர், வலது பக்கம் பரவ ஆரம்பித்தது. அவளுக்கு அடிக்கடி வலிப்பு வர தொடங்கியது. மருத்துவர்கள் குறிப்பிட்ட அந்த நாள் நெருங்குவதை புரிந்துகொண்டேன்.
நாம் விரும்புபவர்கள் நோய்வாய்ப்படும் போது, நிச்சயம் அவர்களை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கைதான் நமக்கு ஆறுதல் தரும். ஆனால் அப்படி கூட என்னை ஆறுதல் படுத்திக்கொள்ள முடியவில்லை. அவள் வலியில் துடிப்பதை கண்டு மனமுடைந்து போவேன். அவள் ஒரு குழந்தையாகவே மாறிப் போனாள். நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர தொடங்கினாள். அடிக்கடி சுயநினைவை இழக்க தொடங்கினாள். நெருங்கிய உறவுகளைக் கூட மறக்க தொடங்கினாள். ஒரு நாள் அவளுக்கு வலிப்பு வந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தோம். சுயநினைவை இழந்து 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தாள். அனைத்தும் பயனற்று போய் அவள் உயிர் பிரிந்தது. நான் என் மனைவியை இழந்தேன். வாழ்வின் மீதிருந்த மொத்த பற்றையும் இழந்து தீராத மன அழுத்தத்தில் முடங்கிவிட்டேன்.

மூளை கேன்சர் என்பது இத்தனை கொடியது. என் மனைவிக்கு இருந்தது குணப்படுத்த முடியாத கேன்சர். ஆனால் இங்கு எத்தனையோ பேர் குணப்படுத்தக்கூடிய கேன்சருக்கு கூட பொருளாதார சூழ்நிலை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். என் மனைவி சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவமனையில் பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பலர் சிகிச்சையைக் கைவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவர்களை பார்ப்பது என் மனதை உறுத்தியது. மற்றொரு பக்கம், என் மனைவியைக் காப்பாற்ற முடியாத சோகம் என்னை வாழவிடவில்லை.
என் வாழ்க்கைக்கு மீண்டும் அர்த்தம் கிடைத்தது
அப்போது முடிவு செய்தேன், சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு என்னால் முடிந்தவரை உதவ தீர்மானித்தேன். எங்களுடைய வருங்கால கனவுகளுக்காக நானும் என் மனைவியும் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு உதவ தொடங்கினேன். என் மனைவியின் பிறந்தநாளான மார்ச் 31-க்குள் அதை செய்ய தீர்மானித்தேன். கேன்சரால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளின் கீமோதெரபிக்கு உதவி செய்தேன். நண்பர்கள் மூலம் தெரியவந்த 2 பெரியவர்களின் கீமோதெரபி செலவையும் ஏற்றுக்கொண்டேன். இதுவரை 6 லட்சம் ரூபாய் கொண்டு இவர்களுடைய சிகிச்சைக்கு உதவியுள்ளேன். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நான் உதவியவர்கள் என்னிடம் நன்றி கூறியது என் வாழ்விற்கு மீண்டும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது போல் இருந்தது. என் மன அழுத்தம் குறைவதை உணர்ந்தேன். இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்போது என்னுள் ஊன்றிவிட்டது. கேன்சர் சிகிச்சைக்கு உதவி வேண்டுவோர் நம் நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம், உதவ விரும்புவோர்களைக் கண்டறிந்து உதவி வேண்டுபவர்களுடன் இணைக்க அறக்கட்டளை ஒன்றை உருவாக்குவது தான். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கேன்சர் நோயாளிகளிக்கு இதன் மூலம் உதவ வேண்டும் என்பது தான் தற்போது என் வாழ்விற்கு நான் கொடுத்துக்கொள்ளும் கடமை.
என் மனைவியை இழந்த பின் பற்றற்று வாழ்ந்து கொண்டிருந்த நான், இப்போது செய்யும் உதவிகள் மூலம் என் வாழ்வை அர்த்தம் கொண்டதாக உணர்கிறேன். நான் சம்பாதித்ததை எல்லாம் என் மனைவியிடம் கொடுத்து வந்ததை போல், இனி சம்பாதிப்பதை எல்லாம் இந்த முன்னெடுப்பில் விதைக்க போகிறேன். அனைவரையும் என்னால் காப்பாற்ற முடியாது. ஆனால் என்னால் யாரோ ஒரு கேன்சர் நோயாளி ஓராண்டாவது அதிகம் வாழ முடிந்தால், அதனால் அவருடைய குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை அவரால் செய்ய முடிந்தால், அதை கண்டு என் மனைவி எங்கிருந்தோ மகிழ்ச்சியடைவாள் என்று நம்புகிறேன். வாழ்க்கையின் நோக்கம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த லட்சியம்தான் நான் அடைய வேண்டிய கரையைக் காட்டியுள்ளது. என் காதல் என்னை கரை சேர்க்கும் என்று நம்புகிறேன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












