வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: நீதிக்காக 30 ஆண்டுகளாக காத்திருக்கும் மலைக்கிராமம்

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான மதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 30 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கிறார். 1992, ஜூன் மாதம் 20ம்தேதி தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவர்தான் மதி.

சென்னையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வாச்சாத்தி கிராமம். இந்த பழங்குடி கிராமத்தில் நடைபெற்ற வன்முறையின் சாயல் தற்போதும் அங்கு தென்படுகிறது. வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், அந்தக் கிராம மக்களின் நிலை எவ்வாறு மாறியுள்ளது என்று அறிந்துகொள்ள நாம் அங்கு நேரில் சென்றோம். அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அங்குள்ள பலரும் நம்மிடம், விசாரணைக்கு வந்திருக்கிறீர்களா என்று தான் கேட்டார்கள். முதலில் நம்மிடம் பேச வந்தவர் மதி. தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறிய அவர், தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் நம்மிடம் விவரித்தார். வாச்சாத்தி கிராமத்தின் அடையாளமான சடைவிரித்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அவர் நம்மிடம் பேசினார்.

''எனக்கு அப்போது 13 வயதுதான் ஆகியிருந்தது. பாலியல் வண்புணர்வுச் சம்பவம் நடந்த அந்த நாளுக்குப் பின்னர் என் வாழ்க்கை வேறுவிதமாக மாறிவிட்டது. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், மூன்று மாதம் சிறையில் இருந்ததால், படிப்பைத் தொடரமுடியவில்லை. அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தைச் சூறையாடியிருந்தார்கள். எங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருந்தது. என் படிப்பும் பாதியில் நின்றுவிட்டது. ஒருவேளை இந்தச் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், நான் மேல்படிப்பு கூட படித்திருப்பேன்,'' என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது என்ன?

வன்முறை நடந்த அன்று இரவு நேரத்தில் லாரியில் பெண்கள் ஏற்றப்பட்டு, வாச்சாத்தி கிராமத்தில் இருந்து, அரூர் வனத்துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். ''அந்த இரவு முழுவதும் நாங்கள் தூங்கவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்குக்காகப் பல முறை நாங்கள் சாட்சி சொல்லியிருக்கிறோம். நாங்கள் சந்தித்த ஒவ்வொரு பிரச்சனையும் மனப்பாடமாக எங்கள் நினைவில் இருப்பதால், அவ்வப்போது இந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு பேசும்போது எப்படி எங்கள் வழக்கில் தீர்ப்பு வரும் என்று பேசிக்கொள்வோம். சில நாட்கள் இரவு நேரத்தில் நாங்கள் பேசும்போது, அந்த இரவு எவ்வளவு பயமாக இருந்தது என்று நினைத்துப் பார்க்கும்போது மிகவும் சோகமாக இருக்கும். ஆனால் எங்களைப் போலப் பெண்கள் பேச முன்வந்ததால் தான், எங்கள் பழங்குடி மக்களுக்கு நேர்ந்த அவல நிலையை நாடு முழுவதும் மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் நாங்கள் நிம்மதி அடைகிறோம்,'' என்கிறார் மதி.

விவசாயக் கூலி வேலை செய்யும் மதி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அறிய ஆவலுடன் இருக்கிறார். ''நாங்கள் 100 நாள் வேலை, விவசாயக் கூலி வேலை செய்கிறோம். கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக வாழ்கிறோம். நான் மேல்படிப்பு படிக்கவில்லை என்றாலும், என் இரண்டு குழதைகளும் படிக்கிறார்கள் என்பதில் பெருமை. எங்கள் கிராமத்தில் அடுத்த தலைமுறை மிகவும் தைரியமான தலைமுறை குழந்தைகளாக உள்ளனர். எங்களின் அனுபவத்தைச் சொல்லி வளர்த்திருக்கிறோம். பழங்குடி மக்கள் என்ற அச்சத்தை விடுத்து, உரிமைகளை கேட்டு பெறவேண்டும் என்ற நம்பிக்கை எங்கள் மக்களிடம் ஏற்பட்டுள்ளது'' என்கிறார் மதி.

மதியுடன் நின்றிருந்த பிற பெண்கள் குழுவாகப் பேச வந்தனர். ''நாங்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட பெண்கள்..எங்க வழக்குல தீர்ப்பு எப்ப வருது?'' என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்

வாச்சாத்தி வழக்கில் பேசத் துணிந்த பெண்கள்

பெண்கள் பலரும் விவசாயக் கூலி வேலையில் ஈடுபட்டிருப்பதால், ஒரு கையில் மண்வெட்டி, சிறிய கோடரி உள்ளிட்ட பொருட்களுடன் வயல் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். நம்மிடம் பேச வந்த பெண்கள், மற்ற பெண்களையும் அழைத்தார்கள். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் ஒருவகையான பாதிப்பை தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட மற்ற பெண்கள் மோசமாகக் கட்டைகளால் தாக்கப்பட்டதாகச் தெரிவித்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை தங்களுக்கு நடந்த சம்பவத்தை ஆலமரத்து நிழலில் பலரிடம் பேசிவிட்ட களைப்பு அந்த பெண்களிடம் தெரிந்தது. அவர்கள் சம்பவங்களை விவரிக்கும்போது, கண்களைச் சுருக்கி, கைகளைக் கட்டிக்கொண்டு பேசும்போது, அந்த நாளின் தாக்கத்தை நம்மால் உணரமுடிந்தது.

முதலில், சந்தனமரக் கடத்தல் புகாரில் வனத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தனர். சோதனையின் போது, அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இடையில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அந்தத் தகராறு, வன்முறையாக மாறியது. இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். சில மணிநேரத்திற்குப் பின்னர், நூற்றுக்கணக்கான வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கிராமத்தில் நுழைந்தனர். அவர்கள் கிரமத்தைச் சூறையாடி, 18 இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக 1995ல் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணை அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையை மையமாகக் கொண்டு தான் இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

சித்ரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வுக்குத் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வன்கொடுமை நடந்த அந்தச் சமயத்தில் அவர் வயலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ''எங்களுக்கு நடந்த மோசமான அனுபவத்தை வெளிநபர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை. நாங்கள் சிறைக்குச் சென்ற ஒரு மாதம் கழித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களை வந்து பார்த்தார்கள். எங்களின் நிலைமையைப் பார்த்து,எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்கள். எங்களைச் சிறையில் இருந்து விடுவிக்க எல்லா முயற்சியும் எடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் வழக்கு நடந்தபோது, எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கிராமத்திற்குத் திரும்புவதற்கு உதவினர்கள். எங்களுக்கு தேவையான உதவிகளை அளித்ததால், எங்களுக்கு நடந்த மோசமான பாலியல் வன்முறையை நீதிமன்றத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பிறந்தது,''என்கிறார் சித்ரா.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்

சித்ராவின் கணவர் விக்னேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)பலமுறை கட்டையால் தாக்கப்பட்டார். தனது மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த அவர், பலமுறை ஆறுதல் சொல்லியிருக்கிறார். ''எனக்கு நேர்ந்த மோசமான நிகழ்வைப் பற்றி நான் ஒரு நாளும் வருத்தப்படக்கூடாது என்று என் கணவர் சொல்லிவிட்டார். எங்கள் கிராமத்துப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் பேசியதால் தான், 2011ல் விசராணை நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைத்தது. 269 அரசு அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைத்தது. பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி ரூ.15,000 அளிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தாலும், அதைப் பெறுவதற்குக் கூட மூன்று ஆண்டுகள் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், நாங்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மேல்முறையீட்டிலும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.30 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறியாமையில் நாங்கள் இல்லை. இந்த வழக்கு நடந்த சமயத்தில் நாங்கள் எங்களின் உரிமைகளை அறிந்துகொண்டோம், எப்படி எங்கள் வாழக்கையை தகவமைத்துகொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொண்டோம். எங்கள் மக்களிடம் ஒற்றுமை ஓங்கியுள்ளது,''என்கிறார் சித்ரா.

சித்ரா உள்ளிட்ட 18 பெண்களுக்கும் மாநில அரசின் திட்டங்களின் கீழ், வீடு கட்டுவதற்கு உதவி கிடைத்தது. அதனால் இந்த 18 பெண்களும் குடிசை வீட்டில் இருந்து கான்கிரீட் வீட்டுக்கு மாறியுள்ளனர். தற்போது ஒரு சில குடிசைகள் மட்டும் தான் அந்தக் கிராமத்தில் உள்ளன.

வன்முறை நடந்த சமயத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தவர் இந்திராணி (45). அவரும் மோசமான தாக்குதலுக்கு ஆளானதாகச் சொல்கிறார். அவரிடம் பேசும்போது, சில பள்ளிக்கூடக் குழந்தைகள் புத்தகப்பையுடன் சென்றுகொண்டிருந்தார்கள். ''அரூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த நேரத்தில், தண்ணீர் கூட அளிக்கப்படவில்லை. பசியில் துடித்தோம். சந்தனமரக் கடத்தலுக்கு உடந்ததையாக இருப்பதாகக் கூறி எங்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள். இரண்டு மாதம் கழித்து எனக்கு மகள் பிறந்தாள். ஜெயிலில் இருந்த காலத்தில் பிறந்ததால், அவளுக்கு ஜெயில் ராணி என்றே பெயரிட்டேன். ஜெயில் ராணி பிறந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தான் நான் கிராமத்திற்கு வந்தேன். சூறையாடப்பட்ட கிராமத்தில் எந்த வசதியும் இன்றி, எனது குழந்தையை மண்தரையில் இலைகளில் படுக்க வைத்தேன்' 'என்று தனது அனுபவத்தைச் சொல்லும்போது, அவரது கண்கள் குளமாகின.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்

வன்முறைச் சம்பவம் அவரைப் பாதித்திருந்தாலும், ஒரு நாளும் வழக்கில் இருந்து அவர் விலகிக் கொள்ளவில்லை. ''எங்களுக்குக் கிடைத்த சட்ட உதவியால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. நான் தொடர்ந்து வயல் வேலையைச் செய்தேன், வந்த வருமானத்தைச் சேமித்தேன். ஒரு விளைச்சலுக்கு ராகி எடுப்போம், ஒரு விளைச்சலுக்கு சிறுதானியங்கள் எடுப்போம். எங்கள் வாழக்கையை இந்த வழக்குடன்தான் வாழவேண்டும் என்று தெரியும். ஆனால் என் மகனைப் படிக்க வைத்தேன். ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்குச் சென்றுவந்தபோதும், வெளிஉலக நடப்புகளை என் குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டேன். அரசு அதிகாரிகள் பற்றிய பயம் எங்கள் ஊர் மக்களுக்கு இப்போது இல்லை. யார் இங்கு வந்தாலும், எதற்கு, என்ன காரணத்திற்காக வந்துள்ளர்கள் என்று நாங்கள் விசாரிக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உச்சநீதிமன்றம் போனாலும், எங்களுக்குச் சாதகமான தீர்ப்புதான் வரும்,'' என்கிறார் இந்திராணி.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்
படக்குறிப்பு, ராஜ்

வனத்தில் பதுங்கிய ஆண்கள் நிலை என்ன?

பல ஆண்கள் அதிகாரிகளின் தாக்குதலுக்குப் பயந்து,சித்தேரி மலையில் ஒளிந்திருந்தனர். பல நாட்கள் பசியில் வாடியதாகவும், தங்களது குடும்பத்தாருக்கு என்ன நேர்ந்தது என்று தவித்துப்போனதாகவும் சொல்கிறார்கள். தனது வனவாசம் பற்றி பேசிய ராஜ், பெண்கள் சிறையில் இருந்தார்கள், தன்னை போன்ற ஆண்களுக்கு அவர்கள் பதுங்கி இருந்த இடமே சிறையாகிப்போனது என்கிறார்.

''நாங்கள் பிறந்து, வளர்ந்த கிராமத்திற்கு வருவதற்கு அச்சமாக இருந்தது. தொலைவில் இருந்து பார்த்தபோது, அதிகாரிகள் எங்கள் ஊரில் இருந்தார்கள், எங்கள் ஊருக்கு அதிகாரிகளின் ஜீப் வருவதும், போவதுமாக இருந்தது. அதனால், காட்டில் தங்கிவிட்டோம். சாப்பாடு இல்லை, தினமும் விடியல், மீண்டும் இரவு, இடையில் வனப்பகுதியில் இன்னும் மறைவாக ஒதுங்க இடம் தேடுவது என்பதே வாழ்க்கையாக இருந்தது. ஐந்து மாதங்கள் கழித்து வந்து பார்த்தேன். என் வீடு இருந்த இடம் புதர் போல இருந்தது. என் மனைவியும், இரண்டு குழந்தைகளும் வதங்கிப் போயிருந்தார்கள்'' என்று கூறி வெடித்து அழுதார் அவர்.

ராஜ் உள்ளிட்ட பல ஆண்கள், அவர்கள் பதுங்கி இருந்த சித்தேரி மலையில் தற்போது சந்தன மரங்கள் எதுவும் தென்படுவதில்லை என்கிறார்கள். வனப்பகுதியாக இருந்தாலும், 30 ஆண்டுகளுக்கு முன்னர் வளமுடைய மலையாக இருந்த சித்தேரி மலை தற்போது அவ்வாறு இல்லை என்கிறார்கள். ''நாங்கள் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சொன்னார்கள். அப்படி நாங்கள் ஈடுப்பட்டிருந்தால், எங்கள் கிராமத்தில் பலரும் பணக்காரர்கள் ஆகியிருப்பார்கள். நாங்கள் தொடர்ந்து கூலி வேலை செய்வதும், இங்குள்ள வயலில் வேலை செய்வதும் என்று வாழ்கிறோம். எங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த தலைமுறையில் நாங்கள் சட்ட அறிவை பெற்றுள்ளோம். அடுத்ததலைமுறையில் எங்களின் பொருளாதாரமும் மேம்படும். கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியால் எங்கள் கிராமத்தில் தற்போது 12 வகுப்பு வரை படிக்கும் பள்ளிக்கூடம் உள்ளது, குடிநீர்க் குழாய் வசதி, சாலை வசதி என எல்லாம் வந்தன'' என்கிறார் ராஜ்.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்
படக்குறிப்பு, பி.சண்முகம் - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

வாச்சாத்தி கிராமத்தில் என்ன மாற்றம்?

வன்கொடுமை நடந்த சமயத்தில் இடிக்கப்பட்ட சில வீடுகள் அப்படியே இருக்கின்றன. சிதிலமடைந்த அந்த வீடுகளைச் சீரமைக்கத் தேவையான நிதி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அந்த வீடுகளை அப்படியே விட்டுச்சென்றுவிட்டனர். ஒரு சிலர், அந்த , மீண்டும் மீளாத்துயரை ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தும் என்பதால், அதனைப் புனரமைக்கவில்லை என்கிறார்கள்.

வாச்சாத்தி வழக்கு காரணமாக, பலமுறை, பல நீதிமன்றங்களுக்குச் சென்ற காரணத்தினால், வாச்சாத்தி கிராமத்துப் பெண்கள் பலருக்கும் நீதிமன்ற நடைமுறைகள் தெரிந்திருக்கிறது. இந்த முறை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் நாளை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வன்முறை நடந்த பின்னர் அந்தக் கிராமத்திற்கு குடிநீர் குழாய், பழுதாகியிருந்த மின்சாரக் கம்பங்களைப் புனரமைப்பது, சாலை அமைப்பது எனப் பல அடிப்படை வசதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் விளைவாகத் தான் தங்களுக்குக் கிடைத்ததாக வாச்சாத்தி கிராமத்து மக்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்தக் கிராமத்தில் 12-ஆம்வகுப்பு வரை படிக்கும் வசதியுள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல குழந்தைகள் மத்தியில் இடைநிற்றல் இல்லை என்பதை கண்கூடாகபார்க்கமுடிந்தது. பெற்றோர்கள் வேலைக்கு செல்வதற்கு முன், குழந்தைகளை பள்ளிகளில் விட்டுச்செல்வதை பார்க்கமுடிந்தது. 30ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த பெரும்பாலான ஓலைக் குடிசைகள் ஓட்டு வீடுகளாக மாறியுள்ளன. நீண்ட தெருக்களில் வரிசையாகக் காரை வீடுகள் நிற்கின்றன. இளம் ஆண்கள் நீண்டதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். கல்லூரியில் படிக்கும் கனவை விடுத்த இளவயது தாய்மார்கள் இருக்கிறார்கள். அங்கன்வாடியில் நல்ல பராமரிப்பு இருப்பதால் பல குழந்தைகள் அங்கு விளையாடுகிறார்கள்.

சிறிய பெட்டிக்கடைகள் உள்ளன. குறைந்தபட்சம் எல்லோரிடமும் அலைபேசி உள்ளது. யாராவது ஊருக்குள் வந்தால், அவர்கள் யார், என்ன காரணத்திற்காக விசாரிக்கிறார்கள் என்று அங்குள்ள பழங்குடி மக்கள் கேட்கிறார்கள்.

படித்து முடித்த சில இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமையின்போது, காவல்துறை அதிகாரிகள் அடித்ததால் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் லட்சுமி அம்மாவின் இரண்டு தோள்பட்டைகளில் உள்ளன. ஆனால் அவரது பேரன் ஒருவர், காவல்துறையில் தற்போது சேர்ந்திருக்கிறார் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி தான்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்
படக்குறிப்பு, பாலமுருகன் - எழுத்தாளர், வழக்கறிஞர்

வழக்கு நடைபெற்ற விதம்

1992-ஆம் ஆண்டு வன்முறைச் சம்பவம் நடந்திருந்தாலும், 1995-ல்தான் இந்தச் சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை பதிவானது. இந்த வழக்கு பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தான் நீதிமன்றத்திற்கே வந்தது. இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிய வைக்கப் பல முறை போராட்டம் நடத்தப்பட்டது என்றும் மத்தியப் புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணையின் மூலம்தான் வழக்கு பலம்பெற்றது என்றும் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரான பி.சண்முகம். கிராம மக்கள் பலரும் வாச்சாத்திக்குத் திரும்பி வந்து பழைய வாழ்க்கையை வாழப் பல ஆண்டுகள் ஆயின என்றும் ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்காகவும் வழக்கு போடவேண்டியிருந்தது என்றும் நினைவு கூர்கிறார் சண்முகம்.

''கிராமத்தைச் சேர்ந்த பல பழங்குடி மக்கள் கைதானது பற்றிக் கேள்விப்பட்டு, நாங்கள் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கிராமத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை, மொத்த கிராமமும் சுடுகாடு போலத் தெரிந்தது. அரசு அதிகாரிகள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ள முடியுமா என்று திகைத்துப்போனோம். பழங்குடிப் பெண்கள் மூன்று மாதச் சிறைவாசத்திற்குப் பிறகு, கிராமத்திற்கு வந்த பின்னர் தான், 18 பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தைச் சொல்வதற்குப் பல மாதங்கள் ஆயின. அவர்களுக்கு நம்பிக்கை உள்ள நபர்களிடம் சொல்லவே பல வாரங்கள் ஆகியிருந்தன என்பதால், அதை உறுதி செய்து தனி வழக்காகப் பதிவு செய்தோம். ஆனால் இந்த வழக்கைப் பதிவு செய்ய விரும்பாத அதிமுக அரசு, பல காரணங்களைச் சொன்னது. முடிவில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், சிபிஐ விசாரணை நடைபெற்ற பின்னர் தான், முதல் தகவலறிக்கை பதிவானது'' என்கிறார் சண்முகம்.

நீதி கிடைக்காமலே இறந்துபோன கொடுமை

கிருஷ்ணகிரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1996-ல் வாச்சாத்தி வழக்கில் விசாரணை தொடங்கியது. ஆனால் இந்த வழக்கில் 269 அதிகாரிகள், கிராம மக்களில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பதால், நீதிமன்ற நடைமுறைகளின்படி, ஒவ்வொருவரின் பெயர்களும் வாசிக்கப்பட்டு, அவர்கள் வந்துள்ளதை உறுதிப்படுத்தவே பாதி நாள் முடிந்துவிடும் என்பதால், ஆரம்ப கட்ட விசாரணையில் ஆறு ஆண்டுகள் உருண்டோடின.

வழக்கில் விரைவில் நீதி வேண்டுமென்று மலைவாழ் சங்கத்தினர் கோரியதால், 2002-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் ஆஜராகவேண்டும் என்பதால், கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டது என்று 2002-ல் செய்தித்தாள்களில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பலமுறை அதிகாரிகள் ஆஜராகவில்லை என்று நீதிபதிகள் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார் எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் பாலமுருகன்.

''தமிழ்நாட்டில் பல வனப்பகுதிகளில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிகாரிகள் தங்களது பலத்தை மோசமான முறைகளில் பிரயோகம் செய்தார்கள். அதே போல வாச்சாத்தியில் நடைபெற்ற கொடுமை, ஒரு மோசமான உதாரணம். ஆனால் பழங்குடி மக்கள் பேச முன்வந்ததால் தான், பாலியல் வன்புணர்வு என்ற நடைமுறை மக்களை அச்சுறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது வெளியுலகத்திற்குத் தெரிந்தது. அந்தப் பெண்கள் பேசியதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழக்கை நடத்த முடிந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் பேசத் துணிந்ததால் தான், மிக மோசமான வன்முறை வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் கழித்து, 2011ல் தான் வன்கொடுமையில் ஈடுபட்ட 269 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள் போயிருந்தனர். அதை விடக் கொடுமை, பாதிக்கப்பட்டவர்களில் 20 நபர்கள் வரை நீதி கிடைக்காமலேயே இறந்து போனார்கள்'' என்கிறார் பாலமுருகன்.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்
படக்குறிப்பு, வழக்கறிஞர் காந்திகுமார்

அதிகாரிகள் தரப்பினர் சொல்வது என்ன?

வாச்சாத்தி வன்முறை வழக்கில் தொடர்புடைய 54 அதிகாரிகள் இறந்துவிட்டனர் என்றாலும், மீதமுள்ள அதிகாரிகள் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளனர். பலமுறை தொடர்பு கொண்டபோதும், வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் பலரும் பேச முன்வரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 43 அதிகாரிகளின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் காந்திகுமாரைச் சந்தித்தோம். 1992-ல் ஜூனியர் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் காந்திகுமார். தற்போது சீனியர் வழக்கறிஞராக வளர்ந்துள்ளார். அன்றிலிருந்து வழக்கு குறித்த எல்லா ஆவணங்களையும் தனிப் பெட்டியில் அடுக்கி வைத்திருக்கிறார்.

''அதிகாரிகள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யச் சென்றார்கள். ஆனால் ஊர்மக்கள் குவிந்து, அதிகாரிகளை முதலில் தாக்கிவிட்டார்கள். தாக்கிய நபர்களைக் கைது செய்யச் சென்ற சமயத்தில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஆனால், அதிகாரிகள் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை. அதற்கான தேவையும் இல்லை. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. வன்புணர்வு நடந்ததாகச் சொல்லும் பெண்கள், அடையாள அணிவகுப்பில் ஒருவரைக் காட்டுகிறார்கள், நீதிமன்றத்தில் வேறு நபரைக் காட்டுகிறார்கள். இது போல இந்த வழக்கில் குறைபாடுகள் உள்ளன. அதனால், விசாரணை நீதிமன்றம் இரண்டு முதல் 10ஆண்டுகள் தண்டனை அளித்திருந்தாலும், எந்த அதிகாரியும் முழு தண்டனைக் காலத்தை அனுபவிக்கவில்லை, ஜாமீனில் வந்துவிட்டார்கள்'' என்கிறார் காந்திகுமார்.

வாச்சாத்தி வழக்கும் பின்னணியும்

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் அதிகாரிகள் விடுதலை பெறுவார்கள் என்று நம்புவதாகக் கூறும் காந்திகுமார், தவறும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சந்தனமரக்கடத்தலில் ஈடுபட்ட ஆண்களைக் கைது செய்வதற்காக, அவர்களைத் தேடியபோது, பலர் மலைப்பகுதிக்குச் சென்று ஒளிந்துகொண்டதால் தான், பெண்களை அதிகாரிகள் கைது செய்தனர் என்கிறார் காந்திகுமார். ''இன்றளவும் காவல்துறையில் இதுபோன்ற நடைமுறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். குறைந்தபட்சம் தங்களது மனைவி,குழந்தைகளைப் பார்க்க வரும் நேரத்தில் ஆண்களைக் கைது செய்யலாம் என்று அதிகாரிகள் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்தது, மற்றபடி, அவர்கள் தங்களது கடமையைச் செய்தார்கள், அதற்கு எப்படி தண்டனை தரமுடியும்?,''என்று கேள்வி எழுப்புகிறார் காந்திகுமார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: