பெங்களூருவில் இருந்து 1300 கி.மீ ஒடிஷாவுக்கு நடந்தே சென்ற 3 தொழிலாளர்களின் கதை

பட மூலாதாரம், SHESHADEB BEHERA
- எழுதியவர், சந்தீப் சாஹு
- பதவி, புவனேஷ்வரிலிருந்து (ஒடிஷா), பிபிசி இந்திக்காக
வேலை தேடி பெங்களூரு சென்ற ஒடிஷாவைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தங்கள் முதலாளியின் சுரண்டலை சகிக்கமுடியாமல் சுமார் 1300 கிலோமீட்டர் தூரம் நடந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் கிராமத்தை அடைந்தனர்.
காலஹண்டியைச் சேர்ந்த மொத்தம் 12 பேருக்கு வேலை வாங்கித்தருவதாக ஒரு ஏஜெண்ட் உறுதியளித்தார். ஆசைகாட்டி பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார் என்று இந்த மூவரும் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களால் அந்த ஏஜெண்ட் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியவில்லை.
காலஹண்டியின் ஜெயபாட்னா தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று தொழிலாளர்கள் (புது மாஞ்சி, காதாரு மாஞ்சி மற்றும் பிகாரி மாஞ்சி) மார்ச் 26 (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் இருந்து நடக்கத் தொடங்கினர். ஒரு வாரம் முழுவதும் நடந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 2 ஆம் தேதி தங்கள் கிராமத்தை அடைந்தனர்.
இந்த எட்டு நாட்களில் அவர்கள் சுமார் 1300 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார்கள். அதாவது தினமும் 160 கிலோமீட்டர்களுக்கு மேல் அவர்கள் நடந்துள்ளனர்.
இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இவ்வளவு தூரம் அவர்கள் எப்படி நடந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து செல்லும்போது சில நேரங்களில் லாரி டிரைவர், சில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
ஏன் திரும்ப நேர்ந்தது?

பட மூலாதாரம், SHESHADEB BEHERA
தங்கள் முதலாளி தங்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை என்று இந்த மூவரும் கூறுகிறார்கள். ஊதியம் கேட்டபோது தாங்கள் அடித்து உதைக்கப்பட்டதாகவும், அதனால் கிராமத்திற்கு திரும்ப முடிவு செய்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு உணவு கிடைத்தது, ஆனால் கூலி இல்லை. பணம் கேட்டவுடன் முதலாளி எங்களை அடிக்கத் தொடங்கினார். கிராமத்திற்கு திரும்பிவிடவேண்டும் என்று அந்த நேரத்தில் நாங்கள் முடிவு செய்தோம். டிக்கெட் வாங்க எங்களிடம் பணம் இல்லாததால் நாங்கள் நடந்து செல்லத் தொடங்கினோம்,” என்று பிபிசியிடம் தொலைபேசியில் பேசிய புத்து மாஞ்சி தெரிவித்தார்.
முதல் சில நாட்களுக்கு, காண்ட்ராக்டர் ஒவ்வொரு வாரமும் செலவுக்கு 100 ரூபாய் கொடுத்தார் என்றும் அவர் சொன்னார்.
"ஆனால் இந்த தொகையை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த சிரமமாக இருந்தது. சோப்பு, எண்ணெய் மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. அதனால், காண்ட்ராக்டரிடம் தொகையை உயர்த்திக்கொடுக்குமாறு கேட்டோம். அதன்பிறகு, வாரந்தோறும் 200 ரூபாய் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பணம் கிடைப்பதும் நின்றுபோனது. நாங்கள் அங்கு வாழ்வது கடினமாகிவிட்டது. நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தோம்,” என்று புத்து மாஞ்சி கூறினார்.
அவர்கள் சுரண்டல் மற்றும் அடி உதைக்கு ஆளான நிலையில், அவர்களுடன் சென்ற மற்றவர்கள் ஏன் திரும்பி வரவில்லை? இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன புத்து, "அவர்கள் வேறொரு இடத்தில் வேலை செய்கிறார்கள். பெங்களூரு வந்தவுடன் நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் மூவரும் கட்டிடம் கட்டும் வேலையில் இருந்தோம். பின்னர் அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை" என்று கூறினார்.
வழியில் சிலர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, சிறிது உணவளித்தனர். மூவரும் தொடர்ந்து முன்னேறினர்.
“பெங்களூருவில் இருந்து இரண்டு பாட்டில் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஒரு இடத்தில் டீக்கடைக்காரர் டீயும் கேக்கும் கொடுத்தார். அதேபோல் கிடைத்ததை சாப்பிட்டோம். முழு நாளும் எந்த உணவும் கிடைக்காமல் இருந்த நாட்களும் இருந்தன,” என்றார் அவர்.
இடையிடையே இந்த மூன்று தொழிலாளர்களும் டிரக் அல்லது வேறு வாகனத்தில் சிறிது தூரத்திற்கு லிப்ட் பெற்றனர். ஆனால் பயணத்தின் பெரும் பகுதியை அவர்கள் நடந்தே சென்றுள்ளார்.
உங்கள் கிராமத்தை எப்படி அடைந்தீர்கள்?

பட மூலாதாரம், SHESHADEB BEHERA
ஒடிஷாவின் எல்லைக்குள் நுழைந்ததும், கோராபுட்டின் படாங்கியில் சிலர், சோர்வாகவும் பசியுடனும் இருந்த இந்த தொழிலாளர்களை கவனித்தனர். அவர்கள் மூவருக்கும் உணவளித்து, கொஞ்சம் பணமும் கொடுத்து வண்டியில் அனுப்பி வைத்தனர்.
"எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த மூவரைப் பற்றி எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.
பின்னர் நாங்கள் மற்ற உறுப்பினர்களை அழைத்து, இந்த மூவரையும் சந்தித்து, அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்து, அவர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து,. பாப்டாஹாண்டி செல்லும் வண்டியில் ஏற்றி அனுப்பினோம்,” என்று ஒடிஷா வாகன ஓட்டிகள் சங்கத்தின் படாங்கி கிளைத் தலைவர் பகவான் படால் தெரிவித்தார்.
நவரங்பூரில் உள்ள பாப்டாஹாண்டியில் இருந்து, கால்நடையாக இந்த மூன்று தொழிலாளர்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கள் கிராமங்களை அடைந்தனர்.
இவர்களில் புத்து ஏற்கனவே ஒருமுறை பொதுமுடக்கத்தின்போது ஒடிஷாவிலிருந்து வேலைக்காக வெளியே சென்றிருந்தார். மற்ற இருவரையும் விட வெளி உலகத்தைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே அவருக்கு தெரியும்.
ஆனால் பெங்களூருவில் இருந்து ஒடிஷா செல்லும் சாலை எந்தெந்த இடம் வழியாகச்செல்லும் என்று புத்துவுக்கும் தெரியவில்லை. எனவே அவர் தனது புத்திசாலித்தனத்தால் அதற்கு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டுபிடித்தார். ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடக்க ஆரம்பித்தனர்.
"நாங்கள் பகல் முழுவதும் நடப்போம். இரவில் ஓய்வெடுப்போம், சில சமயங்களில் யாராவது சாப்பாடு கொடுத்தால் அதை சாப்பிடுவோம். இல்லையென்றால் தண்ணீர் குடித்துவிட்டு பசியுடன் தூங்கிவிடுவோம். நடந்து நடந்து காலில் கொப்புளங்கள் வந்துவிட்டன. ஆனால் நடப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,"என்று புத்து தெரிவித்தார்.
பெங்களூருரில் எங்கு, எந்த நிறுவனத்தில் வேலை செய்தோம் என்றுகூட படிப்பறிவில்லாத இந்த பழங்குடியினருக்கு தெரியாது. பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் பெயர் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேருடன் ஜனவரி மாதத்தில் தாங்கள் பெங்களூரு சென்றதாக அவர்கள் கூறினர்.
வீட்டின் மோசமான நிலை

பட மூலாதாரம், SHESHADEB BEHERA
இவர்கள் மூவரும் இல்லாதபோது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. "நான் காட்டில் இருந்து கீரைகளை பறித்துக்கொண்டுவருவேன். அரசு கொடுக்கும் ஐந்து கிலோ அரிசியை வைத்துக்கொண்டு சமாளிப்பேன். அவர் திரும்பி வரும்போது கொஞ்சம் பணம் கொண்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இனி என்ன செய்வோம் என்று தெரியவில்லை,” என்று பிகாரியின் மனைவி கூறினார்.
அவர்கள் பெங்களூரு செல்வது குறித்து உள்ளூர் பஞ்சாயத்து தலைவருக்குக்கூட எந்த தகவலும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
"இவர்கள் விதிமுறைகளின்படி பதிவு செய்வதில்லை. இதனால் அவர்கள் வெளியே செல்வது குறித்து எங்களுக்கு எந்த செய்தியும் வருவதில்லை" என்று தொலைபேசியில் பேசிய பகவதி நாயக் குறிப்பிட்டார்.
இந்த வேதனையான அனுபவத்திற்குப் பிறகு இனி வேலை தேடி வெளியே எங்கும் செல்லப்போவதில்லை என்று ஜாம்சுவா கிராமத்தை சேர்ந்த பிகாரி தெரிவித்தார்.
" நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால் இங்கே வேலை இல்லை. அதன் காரணமாக நாங்கள் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இனி என்ன நடந்தாலும் நான் போகமாட்டேன்,” என்று அவர் சொன்னார்.
இருப்பினும், இப்பகுதியில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை ஜெயபாட்னாவின் வட்டார வளர்ச்சி அதிகாரி ஸ்னிக்தாரணி பிரதான் மறுக்கிறார்.
"எங்கள் பகுதியில் வேலைகளுக்கு பஞ்சமில்லை. நரேகாவின் கீழ் செக் டேம் பணிகள் உள்ளன. அம்ரித் சரோவர் வேலை உள்ளது. வனத்துறையிலும் பல வகையான பணிகள் உள்ளன. ஆனால் இவர்கள் அதிக பணம் வேண்டும் என்ற பேராசையில் வெளியே சென்று அடிக்கடி சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். தரகர்கள் அவர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபாய் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். NREGA வின் கீழ் ஒரு நாளைக்கு 238 ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கு ஊதியம் சில நாட்களுக்கு பிறகு கிடைக்கும் என்பதும் அவர்கள் இங்கு வேலை செய்யாததற்கு ஒரு காரணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கலெக்டர் சொல்வது என்ன?

பட மூலாதாரம், SHESHADEB BEHERA
சுரண்டலுக்கு ஆளானவர்களின் கிராமங்களுக்குச் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்ளூர் பிடிஓவை கேட்டுக் கொண்டிருப்பதாக காலஹண்டி மாவட்ட ஆட்சியர் பி.அன்வேஷா ரெட்டி பிபிசியிடம் தொலைபேசியில் கூறினார். “அறிக்கை கிடைத்த பிறகு, அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுப்போம்” என்றார் அவர்.
பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன, ஆகவே இதுபோன்ற சம்பவங்களை யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களைச் சென்றடைந்த முதல் பத்திரிகையாளர் ஷேஷ்தேவ் பெஹெரா கூறினார்.
ஒடிஷாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெஹெரா, "இவர்கள் மூவரும் உயிருடன் திரும்பியது அதிர்ஷ்டம். பலர் பிணமாக திரும்பி வருகிறார்கள். அதை நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. போதுமான வேலை இருக்கிறது என்று நிர்வாகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பதிலாக ஒப்பந்தக்காரர்கள் இயந்திரங்கள் மூலம் வேலையைச் செய்கிறார்கள். அதனால் பயிற்சித்திறனற்ற தொழிலாளர்களுக்கு இங்கு வேலை கிடைக்காது. எனவே ஆபத்துகள் இருக்கும்போதிலும் அவர்கள் வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்." என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












