மசோதாவை நிறுத்திவைத்தால், அது கொல்லப்பட்டதாக பொருளா? ரவி என்ன சொன்னார்? சட்டம் என்ன சொல்கிறது?

ஆர்.என்.ரவி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைத்திருப்பதால், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்றும் அந்த மசோதாக்கள் இறந்துவிட்டன என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைப்பதன் மூலம் நிராகரிக்க முடியுமா?

இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து தெரிவித்த கருத்துகள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன.

"மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.

முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். இரண்டாவது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம் (The Bill is dead). இதை உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வுகள் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளன.

மூன்றாவது மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். ஆளுநர் மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்த காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார். " என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருக்கிறார்.

இதில் குறிப்பாக, "அரசமைப்புச் சட்டத்தின் 200வது விதியின்படி ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். இரண்டாவது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம்" என்ற பகுதிதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஆளுநரின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு என்ன சொல்கிறது?

"ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தால் ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, இரு அவைகள் இருந்தால், இரு அவைகளாலும் நிறைவேற்றப்படும்போது அந்த மசோதா ஆளுநரின் முன் சமர்ப்பிக்கப்படும். ஆளுநர் அந்த மசோதாவை ஏற்பதாக அறிவிக்கலாம் அல்லது ஏற்பளிப்பதாக சொல்லாமல் இருக்கலாம் (he withholds assent therefrom) அல்லது குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பலாம்.

ஒரு மசோதா நிதி மசோதாவாக இல்லாத நிலையில், ஆளுநரிடம் அந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சட்டமன்றம் அந்த மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவர் அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பலாம். அல்லது சில திருத்தங்களைக் கோரி திருப்பி அனுப்பலாம்.

அப்படி மசோதா திருப்பி அனுப்பப்படும்போது, சட்டமன்றம் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆளுநர் குறிப்பிட்ட திருத்தத்தைச் செய்தோ, செய்யாமலோ சட்டமன்றம் அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அந்த சட்டத்தை நிறுத்திவைக்க முடியாது.

மு.க.ஸ்டாலின் - வில்சன்

பட மூலாதாரம், wilson

அருணாசலப் பிரதேச வழக்கு - சுவாரசிய பின்னணி

ஆளுநரைப் பொறுத்தவரை, அந்த மசோதா சட்டமானால் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு சேதம் விளைவிக்கும் எனக் கருதும்பட்சத்தில் அவர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பலாம்" என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு.

இதில் "ஆளுநர் ஏற்பளிக்காமல் இருக்கலாம்" அதாவது "he withholds assent therefrom" என்ற வாசகத்தைப் மையப்படுத்தித்தான் தற்போதைய சர்ச்சை எழுந்துள்ளது.

ஆளுநரின் அதிகாரம் குறித்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு குறித்த மிக முக்கியமான வழக்காக கருதப்படுவது, Nabam Rebia And Etc. Etc vs Deputy Speaker And Ors என்ற வழக்குதான். 2015ஆம் ஆண்டு நவம்பரில் அருணாசலப்பிரதேசத்தில் அப்போதைய காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக அவருடைய கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட்டார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது நிகழ்சி நிரலில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து சபாநாயகர் நபம் ரெபியா, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தார்.

ஆனாலும், அவரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதனை எதிர்த்து நபம் ரெபியா நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கில் ஆளுநரின் அதிகாரங்களை பெருமளவுக்கு வரையறை செய்தது உச்சநீதிமன்றம். ஐந்து நீதிபதிகள் விசாரித்த அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, சட்டப்பேரவையை மத்திய அரசு கலைத்தது.

அரசமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், முதலமைச்சர் நபம் டூகியை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஆளுநர், மாநில அரசின் கலந்தாலோசனைப்படியே நடக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆளுநரின் விருப்புரிமை என்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது என்றும் எல்லையில்லாத அதிகாரங்களைக் கொண்டதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 163 மற்றும் 174வது பிரிவுகள் மட்டுமே விரிவாக விவாதிக்கப்பட்டன. பிரிவு 200ஐப் பொறுத்தவரை, ஒரு மசோதாவை நிறுத்திவைப்பதைப் பற்றி விரிவாகப் பேசவில்லை.

ஆனால், 2020ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென கோரி அந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, மசோதா ஆளுநரிடம் அளிக்கப்பட்டவுடன் அவர் அது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

ஆளுநரின் பணிகளிலோ, குடியரசுத் தலைவரின் பணிகளிலோ நீதிமன்றம் தலையிடமுடியாது என்று பிரிவு 361ஐ சுட்டிக்காட்டி வாதிட்டபோது, ஆளுநரும் குடியரசுத் தலைவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஆனால், இந்த வழக்கிலும் ஆளுநருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

"ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்திவைத்தால், அது இறந்துவிட்டதாக அர்த்தம் என அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஒரு மசோதாவைக் கொல்ல முடியாது. இவருக்கு அடுத்து வரும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம். ஆகவே, ஆளுநர் சொல்வதுபோல, மசோதாவை நிறுத்திவைத்தாலே அது இறந்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது" என்கிறார் தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பி. வில்சன்.

உச்ச நீதிமன்றம்.

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும்?

சில சட்ட நிபுணர்கள், ஆளுநர் சொல்லும் கருத்து சரியானதுதான் என்கிறார்கள். "ஒரு மசோதாவைக் காலவரையின்றி நிறுத்திவைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாக, செல்லுபடியாகாமல் செய்ததாகத்தான் அர்த்தம். நடைமுறையில் அந்த அர்த்தம்தான் வருகிறது. ஆகவே ஆளுநர் சொல்வது சரிதான்" என்கிறார்கள்.

ஆனால், "மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர் தன் விருப்பப்படி நிறைவேறாமல் செய்யலாம் என அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. பிரிவு 200ன் நோக்கம் அதுவல்ல. அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும்" என்கிறார் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் தற்போது இது தொடர்பாக அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஆளுநர்கள் தங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என ஒரு தனிநபர் மசோதாவை வில்சன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாத எதிர்க்கட்சிகளால் இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் சாதிக்க முடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: