அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்'

பட மூலாதாரம், sportzpics
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கேட்ச்களை கோட்டை விட்டு, ஃபீல்டிங்கில் சொதப்பிக் கொண்டிருக்க ஒரு வீரர் மட்டும் ரசிகர்களிடம் 'வாவ்' பாராட்டு பெற்றார்.
அவர் அஜிங்க்ய ரஹானே.
மேக்ஸ்வெல்லும் டு பிளசியும் சென்னை பந்துவீச்சாளர்களை தண்டித்துக் கொண்டிருந்த வேளையில், ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை வீசினார் ஜடேஜா. அந்த ஓவரில் இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார்.. அந்த பந்தை ருதுராஜ் எகிறி தடுக்க முயன்றார். ஆனால் அவரது விரல்களால் பந்தை முத்தமிட மட்டுமே முடிந்தது. எல்லைக்கோட்டை பந்து வெற்றிகரமாக தாண்டியது.
அதே ஓவரில் ஐந்தாவது பந்தை லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றார் மேக்ஸ்வெல். ஆனால் அந்த பந்தால் எல்லைக்கோட்டைத் தாண்டி விழ முடியவில்லை. அதற்கு காரணம் அங்கே 'பறந்து கொண்டிருந்த' ரஹானே.
இடது கால் இடுப்பு மேல் அந்தரத்தில் இருக்க, இடது கையால் அந்த பந்தை அந்தரத்தில் இருந்தபடியே தட்டிவிட்டார்.
சிக்சருக்குச் செல்ல வேண்டிய பந்து பௌண்டரியை கூட அடைய முடியவில்லை. மேக்ஸ்வெலால் ஒரு ரன் மட்டுமே ஓடி எடுக்க முடிந்தது. ஐந்து ரன்களை காப்பாற்றினார் ரஹானே.
226 ரன்கள் அடித்தும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே சென்னையால் வெற்றியடைய முடிந்தது. ரஹானே ஃபீல்டிங்கில் காட்டிய பாய்ச்சல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஃபீல்டிங்கில் மட்டுமல்ல, பேட்டிங்கில் ரஹானே இந்த சீசனில் காட்டிவரும் அதிரடி தான் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
ரஹானே ஒரு டெஸ்ட் பிளேயர், அவருக்கு ஸ்ட்ரைக் ரேட்டில் பிரச்னை இருக்கிறது, வயது 35 ஆகப்போகிறது, சென்னையில் ஏற்கனவே இளம் தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், இப்போது ஏன் ரஹானேவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் எழாமலில்லை.
அந்த விமர்சனங்களுக்கு காரணம் சமீப இரண்டு ஆண்டுகளில் ரஹானேவிடம் இருந்து 'மெச்சத்தக்க இன்னிங்ஸ்' ஏதும் வரவில்லை என்பதே.
ஆனால், ஒப்பீட்டளவில் குறைவான தொகையில், அதாவது வெறும் 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஹானே சென்னையின் அதி முக்கியமான துருப்புச்சீட்டாக உருவெடுத்திருக்கிறார்.
இந்த சீசனில் தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் விளாசியவர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் பட்டாசாய் வெடித்தவர் 20 பந்துகளில் மூன்று பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்தார்.

பட மூலாதாரம், sportzpics
இந்த மூன்று போட்டிகளிலும் ரஹானே பவர்பிளேவில் அசத்தல் ஆட்டம் விளையாடியிருக்கிறார். இந்த சீசனில் பவர்பிளேவில் 200 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே வீரர் அவர்தான்.
அது மட்டுமல்ல இந்த மூன்று போட்டிகளின் முடிவில் அவரது சராசரி ஸ்ட்ரைக் ரேட் 195-ல் இருக்கிறது.
ரஹானே சுழன்று சுழன்று பேட்டிங் செய்து மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிடுபவர் அல்ல. பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்டுகளைத் தான் ஆடுகிறார். ஆனால் அத்தனையும் நேர்த்தியாக தீர்க்கமாக இருக்கிறது என சிலாகிக்கிறார்கள் வர்ணனையாளர்கள்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் இர்பான் பதான், இந்த சீசனில் அஜிங்க்ய ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் மலைப்பூட்டுகிறது. தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அவருக்கு உதவியிருக்கிறது என எழுதியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ரஹானே ஒரு குட்டி ஆச்சர்யம் தான். ஆனால் ரஹானேவின் ஆக்ரோஷமற்ற போர்க்குணம் இதற்கு முன்பும் பலமுறை வெளிப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், 2020 - 2021 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறிப்பிட வேண்டும்.
ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 36 ரன்களுக்குச் சுருண்டு அதிமோசமான தோல்வியை சந்தித்தது இந்திய அணி.
அப்போது விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் மனைவி அருகில் உறுதுணையக இருக்க விடுமுறையில் செல்ல வேண்டியிருந்த சூழல்.

பட மூலாதாரம், sportzpics
புஜாரா, ரஹானே தவிர அணியில் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் என இளம் பேட்ஸ்மேன்களே இருந்தனர். இந்த இளம் படையை வைத்துக் கொண்டு மிச்செல் ஸ்டார்க், ஹெஸில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லியன் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்களை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவிருந்தது இந்திய அணி.
அப்போது அந்த இளம் படைக்கு தலைமை தாங்கிய ரஹானே அதிமோசமான அந்த சொதப்பல் இன்னிங்க்ஸுக்கு பிறகு மெல்பர்ன் டெஸ்டில் விளையாடினார்.
அந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் ரன் கணக்கை துவங்கும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்தது. மிகவும் சோர்ந்திருந்த இந்திய அணிக்கு அப்போது ரஹானே தனது பேட்டிங் மூலம் நம்பிக்கையூட்டினார்.
நங்கூரம் பாய்ச்சி களத்தில் நின்ற ரஹானே, அபாரமாக ஆடி சதமடித்தார்.
முதல் இன்னிங்சில் ரன் அவுட் ஆனவர், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடிகோலினார்.
ஒரே டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணி அந்த தொடரில் கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் பிரிஸ்பேன் கப்பா ஆடுகளத்தில் 32 ஆண்டுகளாக எந்த அணியாலும் தோற்கடிக்க முடியாத ஆஸ்திரேலியாவை ரகானே தலைமையிலான இந்திய அணி தோற்கடித்து டெஸ்ட் தொடர் கோப்பையை கைப்பற்றியது வரலாறு.

பட மூலாதாரம், sportzpics
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2018 பிப்ரவரிக்கு மேல் ரஹானேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தனது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஐந்து அரைசதம் விளாசியிருந்தார்.
டி20 போட்டிகளில் கிட்டதட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
அந்த மெல்பர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஒரு சதம் கூட விளாசததால் டெஸ்ட் அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு இடமில்லை.
ஐபிஎல்லில் ஒரு காலத்தில் அணித்தலைவராகவும், ராஜஸ்தான் அணிக்கு நம்பகமான தொடக்க வீரராகவும் விளையாடிய ரஹானேவை கடந்த ஐபிஎல் ஏலத்தில் பலர் கண்டுகொள்ளவில்லை.
இத்தகைய சூழலில் தன்னை ஏலத்தில் எடுத்து வாய்ப்பு வழங்கிய சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டம் மூலம் தனது இருப்பின் தேவையை உணர்த்தியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, தன் மீதான விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் உரிய பதிலை அழுத்தம் திருத்தமாக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். ஆனால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்...
இந்த சீசனில் ரஹானேவிடம் அதிரடியான ஆட்டபாணியை யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி முத்திரை பதித்திருக்கிறார்.
இப்போது இனி வரும் ஆட்டங்களில் ரஹானே ஆட்டத்தை ரசிகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள், எதிரணியினர் அவரை பெவிலியனை நோக்கி நடக்கவைக்க திட்டம் தீட்டுவார்கள், பெரும் எதிர்பார்ப்பு எனும் அழுத்தம் அவரது தோளில் இறங்கக்கூடும். இந்த புதிய சவால்களை 34 வயது ரஹானே எப்படிக் கடக்கப்போகிறார் என்பதில் சுவாரஸ்யம் காத்திருக்கிறது.
ஒருவேளை, அது ஒரு உத்வேக கதையாக கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












