தோனிக்காக ஆடிய வீரரை தனது துருப்புச் சீட்டாக மாற்றிய ஹர்திக் பாண்டியா

மோஹித்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவாஸ்தவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மொஹாலியில் வியாழக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின் 18வது பந்தயம் அதன் கடைசி ஓவருக்கு முன்பாக முற்றிலும் ஒருபக்கமாகவே இருந்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் அணிக்கு 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா சிறப்பான மற்றும் வேகமான தொடக்கத்தை கொடுத்தனர். கடைசி ஓவர் வரை பந்தயம் முற்றிலுமாக குஜராத்தின் கைக்குள் இருந்தது.

கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் சாம் கரனின் ஓவரின் முதல் பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் மொத்தம் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மீதமுள்ள இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்கும் சவால் இருந்தது. மேலும் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் ராகுல் தேவ்தியா பவுண்டரி அடித்தபோது குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று தோன்றிய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இது தொடர்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டி இவ்வளவு தூரம் சென்றிருக்கக் கூடாது என்றார் அவர். ”மிடில் ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுத்திருக்கலாம். இந்தப் பந்தயத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தால் முன்னோக்கி செல்வது கடினமாக இருந்திருக்கும். எனவே அதைப் பற்றி நாங்கள் கலந்து பேசுவோம். இந்தப் பந்தயத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

ஹர்த்திக்கின் துருப்புச் சீட்டு யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியில் ஷுப்மன் கில் 67 ரன்கள் பங்களிப்பை அளித்திருந்தாலும் , பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களுக்குள் கட்டிப்போட்ட பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மாதான்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் துருப்புச் சீட்டு தான் என்பதை அவர் நிரூபித்தார். மிகவும் அற்புதமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும் ஜிதேஷ் ஷர்மா மற்றும் சாம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகனாகவும் முடிசூட்டப்பட்டார்.

2023 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த இந்தப் பந்தயம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோஹித் ஷர்மா விளையாடிய முதல் பந்தயமாகும்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 இல் மோஹித் தனது முதல் ஐபிஎல் பந்தயத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடினார்.

மோஹித்

பட மூலாதாரம், Getty Images

பர்பிள் கேப் வென்றவர் மோஹித்

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்விங் மற்றும் மெதுவான பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்த மோஹித், தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் தனது அணியின் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக தன்னை நிரூபித்தார்.

அவரது இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அவரது எக்கானமி 6.50 ஆக இருந்தது, இது மற்ற பந்துவீச்சாளர்களை விட குறைவு.

இது மட்டுமின்றி ஐபிஎல் இன் முதல் சீசனில் 6.43 என்ற எக்கானமியுடன் 20 விக்கெட்டுகளை மோஹித் ஷர்மா கைப்பற்றினார். மோஹித் இத்துடன் நிற்கவில்லை. அடுத்த சீசனிலேயே 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.

மோஹித் உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்

2013 ஆகஸ்டில் மோஹித் ஷர்மாவுக்கு இந்திய அணியிலிருந்தும் அழைப்பு வந்தது. மோஹித் ஷர்மா 2014 டி20 உலகக் கோப்பை மற்றும் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

2015 வரை அவர் இந்திய அணிக்காக ODI மற்றும் T20 போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் இடது கணுக்கால் காயம் காரணமாக 2016 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் செல்ல முடியவில்லை.

இதே தொடரில்தான் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இணைந்தார். பும்ரா 21 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 8 டெஸ்ட்களில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதற்குப் பிறகு, மோஹித் ஷர்மா டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல், 2015 அக்டோபருக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது.

மறுபுறம், ஐபிஎல்லின் நான்கு சீசன்களில் (2013-2015) 57 விக்கெட்டுகளை வீழ்த்திய மோஹித், அடுத்த சீசனில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிரமப்பட்டார்.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் மோஹித், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். அவர் 2018 வரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரது அணிகள் (சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ) மாறிக்கொண்டே இருந்தன, மேலும் அவரது எக்கானமி விகிதம் 8.40 ஆக அதிகரித்தது.

2019-ல் ஒரே ஒரு பந்தயத்தில் மட்டுமே விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2020-ல் தான் விளையாடிய ஒரே ஒரு பந்தயத்தில் நான்கு ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்தார். ​​2017 முதல் 2019 வரையிலான உள்நாட்டுப் போட்டிகளில் அவரால் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோஹித் ஷர்மா நெட்டில் பந்துவீசினார். இந்த சீசனில், குஜராத் டைட்டன்ஸ் 50 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை அணியில் சேர்த்தது. இப்போது தனது முதல் ஆட்டத்திலேயே தான் ஹர்திக்கின் துருப்புச் சீட்டு என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

மோஹித்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்கில் குஜராத்தின் பலம் என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது என்பது உண்மை.

ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா, அணிக்கு நல்ல மற்றும் வேகமான தொடக்கங்களை வழங்குகின்றனர். மிடில் ஆர்டரும் மிகவும் வலுவாக உள்ளது.

எனினும் கேப்டன் ஹார்திக்கின் மட்டையில் இருந்து இன்னும் ரன்கள் வரவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களின் இதுவரையிலான செயல்பாடுகள் குறித்துப்பார்ப்போம்.

ஷுப்மன் கில்

இந்த பேட்ஸ்மேனை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவுதான். அவரது பேட்டிங் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கூட அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு அவரது பேட் இந்திய அணிக்காக தொடர்ந்து ரன்கள் குவித்தது. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் சதம் அடித்தார். அதே நேரத்தில் இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 63, 14, 39 மற்றும் 67 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆரஞ்சு கேப்புக்கான போட்டியில் ஷுப்மன் இப்போது மொத்தம் 183 ரன்களுடன் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார்.

விருத்திமான் சாஹா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹாவும் 19 பந்துகளில் வேகமான இன்னிங்ஸை விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் விருத்திமான் 30 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல்லில் இதுவரை அவர் 25, 14, 17 மற்றும் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் பேட் ரன்களை குவிக்கவில்லை.

கடந்த சீசனில் 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த சீசனில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் 8, 5 மற்றும் 10 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இந்த பந்தயத்தில் ஹார்திக் பந்துவீசவில்லை என்றாலும், பேட்டிங்கில் அவர் எடுத்த குறைவான ஸ்கோர், வரும் போட்டிகளில் அணிக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும்.

டேவிட் மில்லர்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் இறுதி வரை ஆடுகளத்தில் இருந்து அணியை வெற்றி பெறச்செய்யும் திறமை கொண்டவர்.

இந்தப் பந்தயத்திலும் அவ்வாறே செய்து இறுதிவரை நிலைத்து நின்று, ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார்.

எனினும் இந்த இன்னிங்ஸின் போது அவர் சற்று வேகமாக விளையாடியிருந்தால் கடைசி ஓவர் வரை பந்தயம் சென்றிருக்காது.

அவர் 18 பந்துகளை விளையாடினார். ஐபிஎல்லில் விளையாடும் மற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களைப் போல மில்லரும் முதல் பந்தயத்தில் விளையாடவில்லை.

அவர் அணியில் இணைந்தபிறகு முதல் பந்தயத்திலேயே 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தயத்திலும் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாய் சுதர்ஷன்

இந்த ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான இம்பாக்ட் வீரர்களில் ஒருவர் சாய் சுதர்ஷன். (ஒவ்வொரு அணியும் தனது 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக பந்தயத்தின் எந்த நேரத்திலும் ஒரு இம்பாக்ட் வீரை களம் இறக்கமுடியும். இந்த விதி 2023 ஐபிஎல் போட்டியில் அறிமுகமானது.) கடந்த சீசனில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 65 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த ஆண்டு, முதல் இம்பாக்ட் வீரராக களம் இறங்கி சென்னைக்கு எதிராக 22 ரன்கள் எடுத்தார்.

பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவரது பேட்டில் இருந்து அதிக ரன்கள் வரவில்லை. அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 156 ரன்களுடன் சாய் சுதர்சனும் ஆரஞ்சு கேப்புக்கான போட்டியில் 13வது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

குஜராத்தின் பந்துவீச்சில் பலம் அதிகம்

பேட்டிங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவாக இருக்கும் நிலையில், அதன் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையிலான முதல் 10 இடங்களில், மூன்று பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள ஒரே அணி குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே.

ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் ராஷித் கான் தான். இந்த ஐபிஎல்லில் அதிக டாட் பால்கள் போட்ட முதல் இரண்டு பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் அல்சாரி ஜோசப்.

மோஹித் சர்மா சிறந்த எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரஷீத் கான்

ரஷீத்

பட மூலாதாரம், ANI

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

இந்த ஐபிஎல்லில் இதுவரை ஹாட்ரிக் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் இவர்தான்.

அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். ஆனால் அந்த விக்கெட் மிக முக்கியமான பேட்ஸ்மேனுடையது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 36 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். இத்தகைய சூழ்நிலையில், ராஷித் தனது கூக்லி பந்தில் அவரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நிம்மதியைக் கொடுத்தார்.

அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார் மற்றும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராகவும் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

அதே நேரத்தில், சென்னையின் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை (பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி) பெவிலியன் திரும்பச்செய்தார்.

பர்ப்பிள் கேப்புக்கான (அதிக விக்கெட் எடுப்பவர்) போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்குப் பிறகு 9 விக்கெட்டுகளுடன் அவர், மார்க் வுட்டுடன் கூட்டாக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்.

அல்சாரி ஜோசப்

இந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் இந்தப் பந்தயத்தில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். ஆனால் இந்த சீசனில் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை அவுட் ஆக்கியுள்ளார்.

மேலும் ரஷீத் கானுக்குப் பிறகு அவர் அணிக்காக 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதிக டாட் பால்களை (46 டால் பால்களுடன்) போட்டதில், அவர் தனது சக அணி வீரர் முகமது ஷமிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஷமி

பட மூலாதாரம், ANI

முகமது ஷமி

இந்த ஐபிஎல் தொடரில் முகமது ஷமி இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டு பேட்ஸ்மேன்களையும், டெல்லி கேபிடல்ஸின் மூன்று பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்கினார்.

பர்பிள் கேப்புக்கான பந்தயத்தில் ஷமி ஆறாவது இடத்தில் உள்ளார். அதே சமயம், இந்த ஐபிஎல்லில் அதிகபட்சமாக 47 டாட் பால்களை வீசி, அந்தப் போட்டியிலும் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: