சென்னை சூப்பர் கிங்ஸில் அப்படி என்ன சிறப்பு? மற்ற அணிகளில் ஜொலிக்காத வீரர்கள் இங்கே பிரகாசிப்பது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸில் என்ன ஸ்பெஷல்?

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே ஆடும் ருத்ர தாண்டவம் பலருக்கும் புதுமையானது. டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட ரஹானேவின் சூறாவளி ஆட்டத்தை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. மெதுவாக ஆடுகிறார் என்று கூறி மற்ற அணிகளால் நிராகரிக்கப்பட்ட அவரை சென்னை அணி வாங்கி மேட்ச் வின்னராக மாற்றியுள்ளது.

இவ்வாறு, மற்ற அணிகளால் வெளியேற்றப்பட்ட வீரர்கள் சென்னை வந்ததும் ஜொலிப்பது இதுவே முதல் முறையல்ல. ஷேன் வாட்சன், மொயீன் அலி, ராபின் உத்தப்பா என்று அந்த பட்டியல் நீள்கிறது. இத்தகைய வீரர்கள் பெரும்பாலும் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருந்தவர்கள் அல்லது இருப்பவர்கள். கிரிக்கெட்டில் உச்சக்கட்ட பார்மில் இருந்த போது அவர்களது ஆட்டத்தை பயன்படுத்திக் கொண்ட அணிகள், அவர்கள் பார்மை இழந்து தவிக்கும் போது வெளியேற்றி விடுவது வழக்கம்.

வயது அதிகம், பார்மில் இல்லை என்பன போன்ற காரணங்களால் ஐ.பி.எல். ஏலத்தில் அத்தகைய வீரர்களை எந்தவொரு அணியும் வாங்கத் துணிவதில்லை. ஆனால், சென்னை அணியோ, அவர்களின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு ஏலத்தில் வாங்கி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, களத்தில் சரியான இடத்தில் பயன்படுத்தி மீண்டும் ஜொலிக்கச் செய்துவிடுகிறது.

இந்த வீரர்கள் சென்னை அணிக்கு வந்ததும் மேட்ச் வின்னர்களாவது எப்படி? சென்னை சூப்பர் கிங்ஸில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கேப்டன் தோனி ஆகியோரிடம் ஏதேனும் மந்திரக்கோல் இருக்கிறதா?

ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஷேன் வாட்சன். வேகப்பந்துவீச்சுடன், பேட்டிங்கிலும் கலக்கக் கூடியவர். அறிமுக ஐ.பி.எல். தொடரிலேயே களம் கண்டுவிட்ட அவர், முதல் 8 தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற அவர், 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

சிறந்த வேகப்பந்துவீச்சு, ஆல்ரவுண்டராக கருதப்பட்ட ஷேன் வாட்சன், அப்போது 37 வயதை எட்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருந்தார். ஆர்.சி.பி.யுடன் அவர் இணைந்திருந்த முந்தைய இரு தொடர்களிலும் பெரிதாக ஜொலிக்காத அவர், என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆடினார்.

2 ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் ஐ.பி.எல். திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அந்த ஆண்டு கோப்பையை வென்று அசத்தியதில் ஆல்ரவுண்டராக அசத்திய ஷேன் வாட்சனுக்கு பெரும் பங்கு உண்டு. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதம் அடித்த அவர், சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இதேபோல், 2019-ம் ஆண்டு அடுத்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் ஆடிய ஆட்டம் இன்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனதில் பசுமையாக நினைவிருக்கும்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

மும்பைக்கு எதிரான அந்தப் போட்டியில் 150 ரன்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு மிக அருகில் ஷேன் வாட்சன் அழைத்துச் சென்றார். பேட்டிங்கின் போது தொடக்க ஓவர்களிலேயே அவரது காலில் காயம்பட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. போட்டியை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அது தெளிவாக புலப்பட்டது. ஆனால், அந்த காயத்தையும் பொருட்படுத்தாமல், காலில் ரத்தம் வழியவழிய சென்னைக்காக களத்தில் கடைசி வரை போராடினார் வாட்சன். ஆனால், வெறும் ஒரே ஒரு ரன்னில் மும்பையிடம் கோப்பையை பறிகொடுத்தது சென்னை அணி. அடுத்த நாள் மருத்துவமனையில் ஷேன் வாட்சனுக்கு அந்த காயத்திற்காக 6 தையல்கள் போடப்பட்டன என்பது தனிக்கதை.

அதிரடி பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சில ஹீரோயிச இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள ராபின் உத்தப்பா, அறிமுக ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் அணிகளுக்காக விளையாடிய அவர், 2014-ம் ஆண்டு முதல் 6 தொடர்களில் கொல்கத்தா நைட்ரைடர்சுக்காக ஆடினார். 2014-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மோசமான பார்ம் காரணமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கழற்றிவிட, அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அங்கும் ஜொலிக்கத் தவறிய ராபின் உத்தப்பாவை அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

அதன் பிறகு ராபின் உத்தப்பா விளையாட்டிலும் ஏற்றம் கண்டார். சென்னை அணிக்காக சில முக்கியமான மேட்ச் வின்னிங் ஆட்டங்களை அவர் ஆடினார். பவர் பிளேவுக்குப் பிறகு மிடில் ஓவர்களில் ரன் ரேட் குறைவதைத் தடுத்து, அதே வேகத்தில் ஸ்கோர் போர்டில் ரன்கள் சேர்வதை உறுதிப்படுத்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி பயன்படுத்திக் கொண்டது. கடந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஷிவம் துபேவுடன் இணைந்து உத்தப்பா ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. 165 ரன்களை சேர்த்த இந்த சாதனை ஜோடியில் உத்தப்பா, 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்களைக் குவித்தார். உத்தப்பாவின் இந்த விஸ்வரூப ஆட்டம் அவரது வெறுப்பாளர்களால் கூட மறக்க முடியாது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

ஆல் ரவுண்டர் மொயீன் அலி

ஐ.பி.எல்.லில் 2018-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமான மொயீன் அலி, அந்த அணிக்காக 3 தொடர்களில் விளையாடிய போதெல்லாம் கவனிக்கப்படும் வீரராக உருவெடுக்கவே இல்லை. தொடர்ந்து இருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி, 2020-ம் ஆண்டு சற்று பின்தங்கவே அணி சேர்க்கையில் இருந்த பிரச்னைகளை சரிக்கட்ட ஆல் ரவுண்டரான மொயீன் அலியை வாங்கியது.

அது முதல் ஐ.பி.எல்.லில் மட்டுமல்ல, மொயீன் அலியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலுமே ஏற்றம்தான். சுழற்பந்து வீச்சில் கலக்கிய அவரை, பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிரடி காட்டவும் சென்னை அணி பயன்படுத்தியது. பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் கலக்கிய மொயீன் அலி, அந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வென்றதில் மிகப்பெரிய பங்கு வகித்தார். அது முதல் சென்னை அணியின் மதிப்பு வாய்ந்த வீரர்களில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார்.

சென்னை அணியில் சேர்ந்த பிறகு கிடைத்த அனுபவம் சர்வதேச கிரிக்கெட்டிலும் சாதிக்க உதவியதாக அவரே தெரிவித்துள்ளார். குறிப்பாக, இங்கிலாந்து அணிக்காக 7-வது வரிசையில் களம் கண்டு வந்த தன்னை, பேட்டிங் ஆர்டரில் மூன்றாவதாக சென்னை அணி களமிறக்கியது நம்பிக்கையை பன்மடங்கு அதிகரித்ததாகவும், இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் அதிகம் பங்களிக்க அதுவே காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸில் என்ன ஸ்பெஷல்?

பட மூலாதாரம், BCCI/IPL

கிளாசிக் பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக அவ்வப்போது வழிநடத்தியவர், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நீண்ட காலம் பதவி வகித்தவரான அஜிங்கியா ரஹானே 2008-ம் ஆண்டு அறிமுக ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக களம் கண்ட ரஹானேவை, 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் வாங்கி கேப்டனாக நியமித்தது. 2 தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரஹானே, பின்னர் டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என்று மாறினார்.

பேட்டிங் நுட்பங்களில் தேர்ந்த கிளாசிக் பேட்ஸ்மேனான அஜிங்கியா ரஹானேவை டெஸ்ட் பேட்ஸ்மேன், மெதுவாக விளையாடுபவர், டி20 கிரிக்கெட்டிற்கு பொருத்தமில்லாதவர் என்று கூறி அவரை வாங்கிய அணிகளே பின்னர் கைவிடுவது வாடிக்கையாக இருந்தது. டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று முத்திரை குத்தப்பட்ட ரஹானேவை கடந்த ஐ.பி.எல். ஏலத்தின் போது மற்ற அணிகள் வாங்க தயக்கம் காட்டியதால் முதல் சுற்றில் அவர் ஏலம் போகவில்லை. பின்னர் இரண்டாவது சுற்றில் அடிப்படைத் தொகையான 50 லட்ச ரூபாய்க்கு அவரை சென்னை அணி வாங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸில் என்ன ஸ்பெஷல்?

பட மூலாதாரம், BCCI/IPL

நடப்புத் தொடரில், சென்னை அணிக்காக தனது அறிமுக போட்டியில் மும்பைக்கு எதிராக களம் கண்ட ரஹானே தன் மீதான அத்தனை கணிப்புகளையும் பொய்யாக்கினார். முதல் பந்தில் இருந்தே சரவெடியாக வெடித்த ரஹானே வெறும் பத்தொன்பதே பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தார். ஏனென்றால், ரஹானேவிடம் இருந்து அப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஐ.பி.எல்.லுடன் ஓய்வு பெற்றுவிட்ட ராபின் உத்தப்பா செய்த அதே பணியை, தற்போது ரஹானேவுக்கு கொடுத்திருக்கிறது சென்னை அணி. சொந்த ஊரான மும்பையில், சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆச்சர்யங்களை நிகழ்த்திக் காட்டிய ரஹானே, இதே அதிரடியை அடுத்து வரும் ஆட்டங்களிலும் தொடர்வார் என்று சென்னை அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.

சென்னை அணி செய்யும் மாயம் என்ன?

கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இளமையும், பார்மும் ஒருங்கே இருக்கும் போது ஜொலிக்கும் வீரர்களை பயன்படுத்திக் கொள்ளும் மற்ற அணிகள், அதே வீரர்கள் பார்மை இழந்து தடுமாறும் போது கைவிட்டு விடுகின்றன. ஏனெனில், வணிகமாகிவிட்ட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கிளப் நிர்வாகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். அந்த கால கட்டத்தில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக் காலத்தை நெருங்கிவிடும் அத்தகைய வீரர்கள் ஏலத்தில் வரும் போது மற்ற அணிகள் அவர்களை வாங்க தயாராக இருப்பதில்லை.

ஆனால், சென்னை அணியோ துணிச்சலாக அந்த வீரர்களை வாங்குவதுடன், அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றிகரமாகவும் பயன்படுத்திக் கொண்டு விடுகிறது என்பதற்கு மேற்சொன்ன 4 வீரர்களே உதாரணம். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த இந்த வீரர்களின் திறமைகளை பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இல்லை, பார்மை இழந்து தவிக்கும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினாலே போதுமானது, அவர்கள் களத்தில் மீண்டும் ஜொலிப்பார்கள் என்பது சென்னை அணியின் பாலிசியாக இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் பேசிய ரஹானேவின் பேச்சு இதனை உறுதிப்படுத்தியது.

"பயிற்சியின் போது என்னைச் சந்தித்த தோனி, 'நீங்கள் உங்களது ஆட்ட பாணியை மாற்றி, மற்றவர்களைப் போல விளையாட முயற்சிக்க வேண்டாம். பேட்டிங் நுணுக்கங்களில் சிறந்தவரான நீங்கள் பந்துவீச்சின் வேகத்தையும் பீல்டிங் இடைவெளிகளையும் பயன்படுத்தி கிரிக்கெட் இலக்கணம் பிசகாமல் உங்கள் இயல்புப் படியே ஆடுங்கள்' என்று உற்சாகமூட்டினார். களத்தில் நானும் அதையே செயல்படுத்தினேன். அது வெற்றிகரமாக அமைந்தது" என்றார் ரஹானே நெகிழ்ச்சியுடன்.

சென்னை சூப்பர் கிங்ஸில் என்ன ஸ்பெஷல்?

பட மூலாதாரம், Getty Images

ஐ.பி.எல்.லில் கோலி மற்றும் தோனி ஆகிய இருவர் தலைமையின் கீழும் விளையாடிய அனுபவம் குறித்து ஷேன் வாட்சன் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

"ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தாலும் அந்த அணியில் உணர்வு ரீதியிலான பிணைப்பு உருவாகவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸிலோ அப்படியே நேர்மாறான நிலை இருந்தது. நான் கண்ட பயிற்சியாளர்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கையே சிறந்தவராக சொல்வேன். ஏனெனில், அணி சூழல், ஒவ்வொரு வீரரையும் தனித்தன்மை, மனிதர்களை கையாளும் திறமை, கிரிக்கெட் குறித்த நிபுணத்துவம் என அனைத்து வகையிலும் அவர் என்னை வியக்க வைக்கிறார்."

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

"கேப்டன் தோனியுடனான அனுபவமும் மிகவும் சிறப்பானது. களத்தில் அவரது செயல்பாடும், ஆட்டத்தின் போக்கை கணிக்கும் திறனுமே அவரை சிறந்த தலைவராக்கியுள்ளன. தோனியின் தலைமையே சென்னையை வெற்றிகரமான அணியாக்கியுள்ளது. சிறந்த உடல் தகுதியை எப்போதும் பேணக் கூடிய தோனி, இன்னும் 3 - 4 ஆண்டுகள் விளையாடும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார். " என்று மற்றொரு பேட்டியில் ஷேன் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஷேன் வாட்சன் குறிப்பிடுவது போல், நல்ல உடல் தகுதியுடன் சமீபத்திய போட்டிகளில் பேட்டிங் பார்மையும் மீட்டுள்ள தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் சில கோப்பைகளை வென்று தர வேண்டும் என்று மஞ்சள் படை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: