AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்து படிக்கலாமா? எதிர்காலம் எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், உயர்கல்வியில் எந்த படிப்பில் சேரலாம் என பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்தியாவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு அடுத்து பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஒரு டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவதை விரும்புகிறார்கள்.
அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொறியியல் துறையில் உயர்கல்வி பயில வேண்டும் என்று பல மாணவர்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக பொறியியல் படிப்புகளில் AI, Machine Learning, Quantum computing போன்ற துறைகளை தேர்வு செய்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த படிப்புகளை எங்கு படிக்கலாம், படித்த பிறகு எந்த துறைகளில் வேலைக்குச் செல்ல முடியும் என கல்வியாளர்கள் வழிகாட்டுகின்றனர்.
AI படிக்க என்ன தகுதி வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) என்பது மென்பொருள் துறையின் ஒரு நீட்சியாகும். இதை முழுநேர பாடமாக எடுத்துப் படிக்க இதை வழங்கும் ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் இளங்கலை(B.E, B.Tech) அல்லது முதுகலை(M.E,M.Tech) படிப்பில் சேர வேண்டும்.
இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
IIT, NIT போன்ற நிறுவனங்களில் artificial intelligence சார்ந்த B.Tech படிப்புகளில் சேர அந்த கல்லூரிகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் ஆன்லைன் கலந்தாய்வின் மூலமாக இந்த படிப்புகளில் சேர முடியும்.
முதுகலை படிப்பில் artificial intelligence துறையை தேர்வு செய்து படிக்க வேண்டுமென்றால், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இளங்கலை(B.E, B.Tech) பட்டம் முடித்திருக்க வேண்டும்.
சில கல்லூரிகளில் EEE, ECE போன்ற பிற துறைகளை சார்ந்த மாணவர்களும் முதுகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால் தேர்வு செய்யும் கல்லூரியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகுதியை பார்த்து இதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
எங்கு படிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
Artificial intelligence துறையில் B.E, B.Tech படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, இந்தியாவில் உள்ள பல கல்லூரிகள் இந்த படிப்பை வழங்குகின்றன.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT போன்ற கல்லூரிகளில் AI, Machine Learning, Data Science தொடர்பாக இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்புகள் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல தன்னாட்சி(autonomous) பெற்றக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் AI தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே B.E, B.Tech படிப்புகளில் AI தொடர்பான பாடங்களை வழங்குகின்றன.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் AI, Machine Learning, Data Science சார்ந்த பிரிவுகள் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் 450க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகளில், B.E, B.Tech படிப்புகளின் அனைத்து பிரிவுகளிலும் AI, Machine Learning, Big Data சார்ந்து 3 பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று பிபிசி தமிழிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.
"கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் பிரிவுகள் மட்டுமல்லாது, மெக்கானிக்கால், சிவில் என பல துறைகளிலும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படையை கற்றுக் கொடுக்கும் நோக்கில், 2021ஆம் ஆண்டு முதல் AI, Machine Learning, Big Data சார்ந்து 3 பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.
AI போன்ற துறைகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடு செய்யும் விதத்தில் பாடத்திடங்களை வகுக்க, ஐ.டி துறையில் சிறப்பாக செயல்படும் நபர்களின் ஆலோசனைகளை பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடத்திடங்கள் உருவாக்கப்படுகின்றன என்று வேல்ராஜ் தெரிவித்தார்.
AI படிப்பை தேர்வு செய்வது சிறந்த முடிவா?

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய நவீன உலகின் மாற்றங்களை பார்க்கும் போது அடுத்து வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு AI, Machine Learning, Data Science போன்ற படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்று பிபிசி தமிழிடம் பேசும் போது உயர்கல்வி ஆலோசகர் மாணிக்கம் தெரிவித்தார்.
"தானியங்கி கார்கள், பெர்சனல் ரோபாட், Augmented Reality, Virtual Reality போன்ற மெய்நிகர் தொழில்நுட்பம் என தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. இதனுடன் 5G,6G இணைய வேகம் சேர்ந்தால், மனித குலம் புதிதாக பரிணமிக்கும். இதற்கு செயல்வடிவம் கொடுப்பதில், Quantum computing, AI, Machine Learning போன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்து படிப்பது நல்ல முடிவு," என்றார்.
ஜெர்மனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் தினேஷ்கார்த்திக், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்னும் தொடக்க நிலையில் மட்டுமே இருக்கிறது. இந்த துறை இன்னும் முதிர்ச்சி அடைய அதிக காலம் ஆகும் என தெரிவித்தார்.
"இன்னும் பல நிறுவனங்கள் AI சார்ந்த தொழில்நுட்பத்தை தங்கள் நிறுவனங்களில் தகவமைத்துக் கொள்ளவில்லை. அதனால் இன்றைய காலக்கட்டத்தில் AI துறைக்கான வேலை சற்றுக் குறைவாக மட்டுமே கிடைக்கிறது. அதனால் இந்த துறை வளர்ச்சி அடைந்த பிறகு வேலைவாய்ப்புகள் விரிவடையும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
AI படிப்புகளை எங்கு படிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
Artificial intelligence துறையின் வளர்ச்சி இன்னும் இந்தியாவில் முழுமையாக வரவில்லை என்கிறார் உயர்கல்வி ஆலோசகர் மாணிக்கம்.
"வெளிநாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 90% கல்லூரிகளுக்கு AI சார்ந்த படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கும் அளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகள், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை. ஐஐடி போன்ற சில அரசு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே உலகத் தரத்திலான வசதிகள் இருக்கிறது. அதனால் இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் B.E(CSE, IT) படித்துவிட்டு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்கு சென்று முதுகலை படிக்கலாம்," என்று பேராசிரியர் மாணிக்கம் தெரிவித்தார்.
சென்னை சேர்ந்த வெளிநாட்டு கல்வி ஆலோசகர் சதிஷ்குமார், இந்தியாவை விட கனடா, அமெரிக்கா, ஸ்வீடன், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்புகள் சிறப்பாக உள்ளன என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"ஐரோப்பாவின் பல நாடுகளில் தினசரி வாழ்கையில் AI சார்ந்த பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்தால் ஆராய்ச்சி, பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். மேலும் இந்தியாவை விட வேலைவாய்ப்பும் அங்கு அதிகமாக கிடைப்பதால், AI சார்ந்த படிப்புகளுக்கு இந்தியாவில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்," என்று தெரிவித்தார்.
பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பார்ப்பு

பட மூலாதாரம், Getty Images
பிளஸ் 2 முடித்துள்ள திருச்சியைச் சேர்ந்த குகன் நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரின் தந்தை திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையில், குகன் பொறியியல் படிப்பில் Artificial intelligence துறையை தேர்வு செய்து படிக்க விரும்புகிறார்.
"என்னுடைய அப்பாவிடம் வேலூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து AI சார்ந்து படிக்க போகிறேன் என்று சொன்னேன். 5 ஆண்டுகள் dual degree படிப்பான இதைத் தேர்வு செய்து படிக்கிறேன் என்று சொல்லி அவரது ஒப்புதலை பெற எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. வழக்கமான பொறியியல் படிப்பு போல இல்லாமல், வித்தியாசமான இந்தத் துறையை தேர்வு செய்வதை என் அப்பா விரும்பவில்லை. மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்து படித்தால், அவருடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று என்னிடம் சொன்னார். ஆனால் நான் இந்த துறை பற்றி இன்டெர்நெட்டில் பார்த்த தகவலை விளக்கி அப்பாவிடம் சம்மதம் வாங்கினேன்," என்று தெரிவித்தார் குகன்.
சென்னையைச் சேர்ந்த முருகேசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் ஒரு நிறுவனம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தனது மகனை B.Tech - Artificial Intelligence படிப்பில் சேர்த்தார்.
"3ஆம் ஆண்டு படித்து வரும் என் மகன் கடந்த செமஸ்டர் விடுமுறையின் போது புனேவில் உள்ள நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்று வந்தான். அடுத்த ஆண்டு அவனது பிராஜக்ட் முடித்த பிறகு, கல்லூரி வளாக நேர்முகத் தேர்விலேயே(campus interview) அவனுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்," என்றார்.
இன்றைய தலைமுறை மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்க வேண்டும், எந்த படிப்பில் சேர்ந்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பள்ளியில் படிக்கும் போதே விவாதித்துக் கொள்கின்றனர்.
இன்டர்நெட்டின் உதவியுடன் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மிக எளிமையாக பல விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர், என்கிறார் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியை தனலட்சுமி.
"எங்கள் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் முன்பே வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர். ஒருசில மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் கிடைத்து இருக்கிறது. இளம் வயதிலேயே இந்த மாணவர்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் மாணவர்களின் விருப்பப்படி கல்லூரிகளை தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்," என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












