சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்குச் சென்ற கிராமம்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்குச் சென்ற கிராமம்
    • எழுதியவர், குர்ப்ரீத் சைனி மற்றும் ரித்திகா
    • பதவி, பிபிசி இந்தி மற்றும் ஃபெமினிஸம் இன் இந்தியா

நைனாவை முதன்முதலாக சந்தித்தபோது அவர் தனது அப்பாவிடம் ஆணித்தரமான பதிலை சொல்லியிருப்பார் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆனால் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்குள் இருந்தது.

”என் தந்தை மறுப்புத்தெரிவித்தபோது, நானும் ’படிக்க வேண்டும் என்றால் படிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்தேன். நான் தவறு செய்தால் என் கழுத்தை அறுத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன்" என்று நைனா கூறினார்.

கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும் கிராமத்தின் முதல் பெண் தான் அல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆனால் தன் கனவை நனவாக்குவதில் உறுதியாக இருந்த முதல் பெண் நிச்சயமாக அவர்தான்.

அவர் தனக்கும் தன்னுடைய 10 சகோதரிகளுக்கும் மட்டுமல்லாமல் கிராம பஞ்சாயத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்த வழியை உருவாக்கினார்.

டெல்லியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள தேவிபூர் கிராம பஞ்சாயத்தில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குடும்பம், கிராமம், அரசு அமைப்பு என்று போராடி கல்லூரி செல்லும் உரிமையை எப்படி அவர்கள் பெற்றார்கள்? இது நைனா மற்றும் அவரது பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 பெண்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தின் கதை.

இக்கட்டுரையானது, ஃபெமினிஸம் இன் இந்தியா இந்தி மற்றும் பிபிசி இணைந்து, பிபிசி ஷீ திட்டத்திற்காக உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெண்களின் ஆர்வங்களை நம் வாசகர்களிடம் சிறப்பாகப் பிரதிபலிக்க முடியும்.

சுதந்திரத்திற்கான முதல் அடி

பெண்கள், கல்வி

கிராமத்தின் மற்ற பெண்களைப் போலவே, நைனாவும் எப்படியோ பள்ளிப்படிப்பை முடித்தார்.

கல்லூரிக்குச் செல்வது என்பது அதிக சுதந்திரத்தை குறிக்கிறது. இதை குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. பல நிபந்தனைகளுடன் மட்டுமே இதைப்பெற முடியும்.

யாரிடமும் அதிகம் பேசக் கூடாது, போன் பயன்படுத்தவே கூடாது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு, கல்லூரியில் இருந்து நேராக வீட்டுக்குச் வரவேண்டும் என்று கூறப்பட்டது என்று நைனா கூறுகிறார்.

மேலும், முழு கிராமத்திடமும் பெண்களை கல்லூரிக்கு அனுப்பாததற்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது.

தேவிபூரிலிருந்து கல்லூரிக்கு செல்ல பொது போக்குவரத்து இல்லை. கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது, அதை கடப்பது பெரும் சவாலாக இருந்தது.

கடப்பதற்கு கடினமாக இருந்த பாலம்

பெண்கள், கல்வி

"பேருந்துகள் இல்லாததால் பெண்களை கல்லூரிக்கு அனுப்புவதை மக்கள் தவிர்த்து வந்தனர். பேருந்துக்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியதாயிற்று. பெண்களும் பயந்தனர். பாலத்தில் சிறுவர்கள் கேலியும், கிண்டலும் செய்வது வழக்கம்" என்கிறார் அந்த கிராமத்தின் ஒரு பெரியவர்.

தினமும் இந்த பாலத்தில் சிறுமிகளுடன் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கும். அவர்கள் மீது சேற்றை வீசுவார்கள். சில சமயம் சிறுவர்கள் செங்கற்களை வீசிவிட்டு சென்று விடுவார்கள். அசிங்கமான வார்த்தைகளை பேசுவது அன்றாட விஷயமாக இருந்தது.

ஆனால் சிறுவர்கள் வெளியே சென்றுவர எந்தத்தடையும் இல்லை. ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை வீட்டில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

இரண்டு மகன்கள் இருக்கும் நைனாவின் பெரியப்பா,“என் சகோதரனுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அத்தகைய ஒன்று நடந்து, அவன் எனக்கு நிகரானவனாக ஆகவேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்கிறார்.

அந்த ஒரு கடிதம்

கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்ற நைனாவின் பிடிவாதத்தைப் பார்த்து வேறு சில பெண்களும் தைரியம் பெற்றனர். கிராமத்திற்கு பேருந்து வந்தால் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று முடிவு செய்தனர்.

சிறுமிகள் ஒன்று சேர்ந்து ஊர் மக்களுடன் கூட்டத்தை கூட்டி அதையே சொன்னார்கள். இந்த சிறுமிகள் சேர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் கர்னாலின் தலைமை நீதிபதி ஜஸ்பிர் கெளருக்கு கடிதம் எழுதினார்கள்.

இந்த கிராம பஞ்சாயத்து பெண்கள் இன்று வரை கல்லூரிக்கு சென்றதில்லை என்பது ஜஸ்பிர் கெளருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ப்ரேக்த்ரூ (BREAK THROUGH) என்ற என்ஜிஓ மூலம் அந்தப்பெண்கள் அவரிடம் வந்தபோது, அடுத்த நாளே பேருந்தை இயக்க அவர் உத்தரவிட்டார்.

'பெண்கள் போதை மருந்து சாப்பிடுவதைப் பார்த்தீர்களா?'

பெண்கள், கல்வி

சிஜேஎம் தேவிபூர் கிராமத்திற்குச் சென்றபோது, பேருந்துடன் கூடவே மக்களின் சிந்தனையிலும் சிக்கல் இருப்பதைக் கண்டார்.

"எத்தனை பெண்கள் வெளியில் போதைப்பொருள் உட்கொள்வதைப் பார்த்தீர்கள் என்று கிராமவாசிகளிடம் கேட்டேன். கிராமவாசிகள் பார்த்ததில்லை என்று சொன்னார்கள். பள்ளியை விட்டு ஓடிப்போன எத்தனை பெண்களைப் பார்த்தீர்கள் என்று கேட்டேன்? கிராமத்தினர் அதற்கும் பார்த்தில்லை என்று சொன்னார்கள்.”

"பிறகு ஏன் கல்லூரிக்குச் செல்வது பெண்களைக் கெடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன். கிராம மக்கள் எனக்குக் கீழ்ப்படிந்து பெண்களை பேருந்தில் கல்லூரிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்."

"பாலத்தில் சம்பவங்களைத் தடுக்கவும், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒரு PCR ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இப்போது தினமும் ஒரு நாளைக்கு இரண்டு முறை முழு பகுதியையும் சுற்றி வருகிறது."

நைனாவின் போராட்டத்தில் ஜோதியின் பங்கு

பெண்கள், கல்வி

இன்று, பேருந்து வந்த பிறகு, நைனாவுடன் கூடவே தேவிபூர் கிராம பஞ்சாயத்தின் கீழ்வரும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 15 சிறுமிகளும் கல்லூரிக்கு செல்ல முடிகிறது.இந்த பெண்கள் கல்லூரிக்கு வருவதில் ஜோதிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஜோதி கர்னால் மாவட்டத்தில் உள்ள கடி கஜூர் கிராமத்தின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

“12வது படித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல நான் முடிவு செய்தபோது, எனது குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்தது. ஆனால், 12ம் வகுப்புக்குப் பிறகு நகரத்திற்குச் சென்று கல்லூரியில் சேர்ந்த ஒரே பெண் நான்தான். என் வயதுப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது," என்று ஜோதி கூறினார்.

12ம் வகுப்புக்குப் பிறகு பெண்களால் கல்லூரிக்கு ஏன் செல்ல முடியவில்லை என்ற எண்ணம் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஜோதியின் மனதில் எழுந்தது.

கல்லூரியில் படிக்கும் போது, அரசு சாரா நிறுவனமான வனித்ரா அறக்கட்டளையில் அவர் சேர்ந்தார். கிராமத்தின் 'ஹரிஜன் சௌபாலில்' கற்றல் மையத்தைத் தொடங்கினார்.

'இப்போது அவர் மேடமாகி எங்கள் மகள்களுக்கு கற்பிப்பார்'

ஒரு தலித் பெண் இப்போது 'மேடம்' ஆகி தங்கள் பெண்களுக்குப் பாடம் நடத்துகிறார் என்பதால் மேல்சாதி ஆண்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கோபமடைந்தனர்.

"ராஜ்புத் சிறுவர்கள் என்னைப் பற்றி கமெண்ட் அடிப்பார்கள். மாலையில் அவர்கள் மது அருந்திவிட்டு மையத்திற்கு வருவார்கள். தவறாக நடந்துகொள்வார்கள், பாடம் கற்பிக்க நீங்கள் யார் என்று சொல்வார்கள். என் பணி நிற்கக்கூடாது என்பதற்காக இந்த கற்றல் மையத்தை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றினேன்,” என்று ஜோதி குறிப்பிட்டார்.

தற்போது, கர்னால் மாவட்டத்தின் எட்டு கிராமங்களில் உள்ள பெண்களை உயர்கல்வியுடன் இணைக்க பிரேக்த்ரூவுடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார்.

கடி கஜூரின் ஷன்னோ தேவி, கல்லூரி அல்லது பள்ளியை பார்த்ததே இல்லை. ஆனால் அவரது பேத்தி சலோனி ஜோதியின் உதவியுடன் BA படிக்கிறார்.

“அவள் படித்தால் அடுத்த தலைமுறையும் முன்னேறும். திருமணம் எங்கு நடந்தாலும் அவள் மாற்றத்தை கொண்டு வருவாள். தன் சொந்த காலில் நின்றால் யாரிடமும் கைநீட்ட வேண்டிய அவசியம் இருக்காது,” என்று பேத்தி பெற்ற கோப்பையை பார்த்தபடி ஷன்னோ கூறினார்.

பேருந்தை இயக்குவது மட்டும் பிரச்னைக்கு தீர்வாகாது

பேருந்து வந்தபிறகு பெண்கள் கல்லூரிக்குச் செல்கிறார்கள். ஆனால் கிராம மக்கள் தங்கள் பெண்கள் இருட்டுவதற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தேவிபூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் கூறினார்.

கிராமத்திற்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே செல்கிறது, அதன் திரும்பும் நேரம் மாலை 6 மணி. இந்தப் பெண்கள் சீக்கிரம் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் சில வகுப்புகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பேருந்தின் நேர பிரச்சனை குறித்து நிர்வாகத்திடம் பேச முயற்சித்தோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று தேவிபூர் கிராம பஞ்சாயத்தின் தற்போதைய தலைவர் கிரிஷன் குமார் தெரிவித்தார்.

"பெண்கள் அதிகளவில் கல்லூரிக்கு சென்று வெற்றி பெற வேண்டும். தேவிபூரில் 12ம் வகுப்பு வரை பள்ளி கட்டப்பட்டதில் இருந்தே பெண்களை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். முன்பெல்லாம் 10ம் வகுப்பு வரை தான் கற்பித்தோம்."என்றார் அவர்.

எஞ்சியிருக்கும் நீண்ட போராட்டம்

பெண்கள், கல்வி

எனினும் அந்த சிறுமிகளை மீண்டும் சந்தித்து பேருந்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக சிஜேஎம் ஜஸ்பிர் கெளர் எங்களிடம் கூறினார்.ஆனால் கேள்வி என்னவென்றால், இவ்வளவு முயற்சிகள் இருந்தும், இன்றும் வெறும் 15 பெண்கள் மட்டுமே ஏன் கல்லூரிக்கு செல்கிறார்கள் என்பதுதான். பல பெண்களுக்கு இது இன்னும் கனவாகவே இருக்கிறது.

ஜனவரி மாதத்தின் ஒரு குளிரான காலை பொழுது. நைனாவும் அவள் சகோதரி ராக்கியும், நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடையில் பேருந்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

"இன்று நாங்கள் கல்லூரிக்கு செல்கிறோம், எங்கள் தங்கைகளும் வருங்காலத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும், கிராமத்தில் உள்ள மற்ற பெண்களும் செல்ல வேண்டும். கல்வி மிகவும் முக்கியம்,” என்று ராக்கி கூறினார்.

சிறிது நேரம் கழித்து பேருந்து வந்தது பெண்கள் இருவரும் கல்லூரிக்கு புறப்பட்டனர்.பின்தங்கிவிட்டவர்களுக்கு இன்னும் வருத்தம் இருக்கிறது. 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த கோமல், “நைனாவைப் பார்த்து கல்லூரிக்கு செல்லவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை” என்கிறார்.

இதே கேள்வியை அருகில் நின்ற காஜலிடம் கேட்டபோது, அவர் ஏறக்குறைய அழுதுவிட்டார்.

"மாற்றம் ஒரே இரவில் வராது, யாரையும் கட்டாயப்படுத்தியும் வராது. கல்லூரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 15 இல் நின்றுவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று ஜஸ்பிர் கெளர் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் - சுசீலா சிங்; BBCShe தொடர் தயாரிப்பாளர்: திவ்யா ஆர்யா, பிபிசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: