தனக்குத் தானே பாசிட்டிவ் ஆக பேசிக் கொள்பவராக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம், Getty Images

நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும், நம்மிடம் நாமே நேர்மறை கருத்துக்களை பேசிக்கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்று இணையதளங்களில் நிறைய மோசமான செய்திகள் கொட்டி கிடந்தாலும், அந்த எதிர்மறை கருத்துகள் அனைத்தையும் சமன் செய்யும் வகையில் அங்கே நேர்மறை செய்திகளும் இடம்பெறுகின்றன.

ஆங்கிலத்தில் இன்று நீங்கள், Inspiration, Motivation போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேட துவங்கினால், எண்ணிலடங்கா கணக்குகளில் நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் நேர்காணல்களும், உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளும், கட்டுரைகளும் உங்கள் முன் தோன்றும்.

அதில் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், ”அறிவை விட கற்பனைதான் சிறந்தது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்துக்களையும், நிக்கி மினாஜின் “எல்லோரும் இறக்கிறார்கள்; ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா” என்ற பாடல் வரிகளையும் நீங்கள் காணலாம்.

பெரிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இவ்வளவு ஏன் இன்றைய இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை அனைவரும் நேர்மறை கருத்துக்களையும், வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

தான் சந்தித்த இனவெறி தாக்குதல்கள் குறித்து, மாயா ஏஞ்சலோ தன்னுடைய வசீகரமான எழுத்துகளில் எழுதியிருப்பதை, இந்த உலகத்தின் எந்த மூலையிலிருந்து எவர் படித்தாலும், அவர்களால் அதனை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடியும். ”உங்களிடமிருந்து பிரகாசிக்கும் ஒளியை எந்த சக்தியாலும் மங்க செய்ய முடியாது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையில் இப்படி சாதனை புரிந்திருக்கும் எவருடைய கதைகளையும், அனுபவங்களையும் கேட்கும்போதும், படிக்கும்போதும் நமக்குள் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை உணர்ந்திருப்போம்.

இத்தகைய எண்ணங்களில் நம்மை நாம் தொடர்ச்சியாக தக்கவைத்துகொள்ளும்போது, நமது வாழ்க்கை உண்மையிலேயே நேர்மறையான பாதையில் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேர்மறை உணர்வுகளை பெறுவது எப்படி?

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம், Getty Images

நேர்மறையான உணர்வுகளுக்கு அதிகளவிலான சக்திகள் இருக்கிறது. உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்ச்சி மற்றும் பிற வகையான நேர்மறையான எண்ணங்களை நாம் முதன்மையாக கொண்டிருக்கும் நிலையை,”விரிவாக்கப்பட்ட சிந்தனை செயல்திறன்” (expanded thought-action repertoires) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள், புதிய சாத்தியங்கள் மற்றும் புதிய முயற்சிகள் மேற்கொள்வது குறித்து அதிகமான கற்பனை திறன் கொண்டிருப்பார்கள் எனவும், ஒரு பிரச்னையில் அவர்களால் எளிதாக தீர்வு காணமுடியும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க உளவியல் மருத்துவரான மார்டின் செலிக்மென், PERMA (Positive Emotion, Engagement, Relationships, Meaning, Achievement) என்னும் மாதிரி நல்வாழ்வு முறையை உருவாக்கினார். நேர்மறை எண்ணங்களை எளிதாக பின்பற்றுவதற்கு இந்த வாழ்க்கை முறை உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சாவல்கள் நிறைந்த சூழ்நிலைகளிலும் நேர்மறை கருத்துக்களை உள்வாங்கி கொள்வதற்கும், அன்பானவர்களுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், கடினமான சூழ்நிலைகளை எளிமையாக புரிந்து கொள்வதற்கும் இத்தகைய நல்வாழ்வு முறைகள் உதவுவதாக கூறப்படுகிறது.

பலனளிக்கும் மதசார்பற்ற பிரார்த்தனைகள் :

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம், Getty Images

வாழ்வில் நாம் நேர்மறையான வகையில் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளும்போது, அது நமது வாழ்வின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. செய்திகளில் உள்ளடக்கியிருக்கும் தார்மீக கருத்துக்களையும், அது சார்ந்த நினைவுகளையும் பலப்படுத்துவதற்கு இத்தகைய நேர்மறையான உறுதிமொழிகள் நமக்கு உதவுகின்றன.

”உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலில் ஈடுபடுவதை விட, செயல்பாட்டின் மூலம் ஒரு உணர்ச்சியை நீங்கள் மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் பர்னர் கூறுகிறார்.

அதேபோல சாதனை புரியும் மனிதர்கள் குறித்து மிச்செல் ஒபாமா கூறும்போது, ”உண்மையிலேயே சக்திவாய்ந்த மனிதர்கள் மற்றவர்களையும் வாழ்க்கையில் உயர்த்திக் கொண்டு செல்வார்கள்; வலிமையான மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பார்கள்” என குறிப்பிடுகிறார்.

இந்த விதத்தில் நாம் நேர்மறை உறுதிமொழிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, அது மதசார்பற்ற பிரார்தனைகளுக்கு நிகராகிறது. அதாவது நீங்கள் சத்தமாக பிரார்த்தனைகள் மேற்கொள்ளும்போது, அந்த பிரார்த்தனைகள் உங்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும், ஆறுதலையும் அளிக்கும். அதேபோல நேர்மறையான கருத்துக்கள் கொண்ட மேற்கோள்களை நீங்கள் வாசிக்கும்போதும், உத்வேகமளிக்கும் பாடல்களை பாடும்போதும் அது உங்களுக்கு அதிக ஆற்றல்களை கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதேபோல நமக்கு ஏற்படும் ஏமாற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளித்து, நமது லட்சியங்களை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதற்கு, நாம் எடுத்துக்கொள்ளும் நேர்மறையான உறுதிமொழிகள் உதவிபுரியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “ தன்னை தானே நேர்மறை வார்த்தைகளால் உத்வேகப்படுத்தி கொள்கிறவர்கள்தான், வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும், அவர்களே தங்களது வாழ்க்கையிலும் வேலையிலும் நிறைவான திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையை அழகாக்கும் நுண்ணிய உணர்வுகள் :

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம், Getty Images

மேற்கூரிய அனைத்தையும் விட, வாழ்க்கையை நாம் எந்த மனநிலையில் அணுகுகிறோம் என்பதே நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதும், நமது மனநிலையை சார்ந்தே அமைகிறது.

நீங்கள் சமூக நீதிக்காக போராடுபவராக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை மகிழ்ந்து அனுபவிக்க விரும்பும் ஒரு சாமனிய மனிதராக இருந்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கை நினைவுகள் அனைத்தையும் உங்களது மனநிலைதான் தீர்மானிக்கிறது.

அதனால் எப்போதும் உங்களை உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளை படியுங்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பாடல்களை கேளுங்கள். உங்களுடைய படுக்கறை சுவர்களிலோ, எப்போதும் நீங்கள் வைத்திருக்கும் பைகளிலோ நேர்மறையான சிந்தனைகளை பிரதிபலிக்கும் குறிப்புகளை வைத்துகொள்ளுங்கள். எப்போதெல்லாம் நீங்கள் சோர்வடைகிறீர்களோ அப்போதெல்லாம் அதனை எடுத்து படியுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேளுங்கள். அப்போது உங்களின் லட்சியங்கள் குறித்தும், உங்களது வாழ்க்கையின் நோக்கங்கள் குறித்தும் பெரிதாக கற்பனை செய்ய துவங்குங்கள். அது உங்களது எண்ணங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்களது நேர்மறையான எண்ணங்களை மற்றவர்களிடமும், சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்காக உங்களை நீங்களே அவ்வபோது பாராட்டி கொள்ளுங்கள்.

நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பேசும்போது, அது உங்களிடமும், உங்களை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்தும் மாற்றங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் உங்களால் முழுமையாக உணர முடியும். மீண்டும் மீண்டும் நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது உங்களிடம் ஏற்படுத்தும் ஆதித ஆற்றல்களை கண்டு நீங்கள் நிச்சயம் ஆச்சரியமடைவீர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: