ஆராய்ச்சி படிப்பில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டு பெண்கள் - முந்தைய அரசுகளின் பங்கு காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இரா.சிவா
- பதவி, பிபிசி தமிழ்
2020-21ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள தகவல்களைக் கொண்டு பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
என்ன அறிக்கை?
ஏஐஎஸ்ஹெச்இ (AISHE) எனப்படும் அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்தால் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும்.
2020-21ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிக்கை 11ஆவது அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை. முதன்முறையாக இந்த அறிக்கை Web Data Capture எனப்படும் மின்னணு கோப்புகளில் இருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர் சேர்க்கை விகிதம், பாலின அடிப்படையில் சேர்க்கை விகிதம், மாநில வாரியாக உயர்கல்வி சேர்க்கை உட்பட கல்வித்துறை குறித்த பல விவரங்கள் அடங்கியிருக்கும்.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் புள்ளிவிவரங்களோடு உருவாக்கப்படும் விரிவான அறிக்கை என்பதால் இது பல ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையாகப் பார்க்கப்படுவதாக அண்மையில் வெளியான அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன?
இந்த அறிக்கையில் பல்வேறு விவரங்கள் அடங்கியிருக்கும் நிலையில், அதில் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிவாகியிருக்கும் எம்.ஃபில் மற்றும் பிஹெச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விகிதங்கள் குறித்துப் பார்ப்போம்.
2020-21 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 34,411 பேர் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதில், 17,443 பேர் ஆண்கள், 16,968 பேர் பெண்கள்.
பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திலேயே அதிக அளவிலான பெண்கள் பிஹெச்டி படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல அதற்கு முந்தைய கல்வியாண்டில் 14,823 பெண்கள் சேர்ந்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
எம்.ஃபில் படிப்பில் தமிழகத்தில் 6,703 பேர் சேர்ந்திருக்கும் நிலையில், அதில் ஆண்கள் 1,696 பேர், பெண்கள் 5, 007 பேர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே மொத்தம் 10,399 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கை சில வாரங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தாலும், தற்போதுதான் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பெண் கல்வி
இந்த அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் கல்வி மேம்பட்டிருப்பதை இந்த அறிக்கை காட்டுவதாகக் கூறினார்.
``பெண்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் இந்தியா முழுவதும் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் மகாத்மா சாவித்ரிபாய் பூலேவும் மகாத்மா ஜோதிராவ் பூலேவும் பெண்கள் படிக்க வேண்டுமெனப் பேசுகிறார்கள் என்பதற்காக தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அவர்களால் பெண்களும், அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து படிக்கக் கூடிய பொதுப்பள்ளி முறையை மகாராஷ்டிராவில் உருவாக்க முடிந்தது. தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் சுயமரியாதை இயக்கம் பெண் கல்வி குறித்துப் பெரிய அளவில் பேசியது. அதன் பிறகு வந்த அனைத்து அரசுகளுமே பெண் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன,`` என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

தொடர்ந்து பேசிய அவர், ``இன்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நாம் முன் வரிசையில் இருக்கிறோம் என்றால் அதற்குப் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட பெண் கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான் காரணம்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் பள்ளிக்குச் செல்வதை பெரும்பாலான பெற்றோர்கள் நிறுத்தி வந்தனர். உடனே, 8ஆம் வகுப்பு முடித்தால் திருமணத்தின் போது ஐயாயிரம் பணம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறையின் கீழ் முதல்வராக இருந்த போது கருணாநிதி அறிவித்தார்.
அந்த நேரத்தில் இடைநிற்றல் வெகுவாகக் குறைந்தது. பின்னர், மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பெண் கல்வியை ஜெயலலிதா ஊக்குவித்தார். தற்போது அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். பெண் கல்விக்காக தமிழக அரசு இப்படி பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது`` என்கிறார்.
அதிகரிக்கும் பிஹெச்டி ஆர்வம்
பிஹெச்டி படிப்பில் அதிக அளவு பெண்கள் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான் எனக் கூறும் ஓய்வுபெற்ற பேராசிரியர் வே.பெருவழுதி, அதே நேரம் எம்.ஃபில் படிப்பில் பெரிய எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதற்குப் பிற மாநிலங்களில் எம்.ஃபில் படிப்பு நிறுத்தப்பட்டது அல்லது குறைக்கப்பட்டதே காரணம் என்கிறார்.
``தற்போது உயர்கல்வியில் யூஜிசி விதிகள்தான் பின்பற்றப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஃபில். படிப்பை நிறுத்திவிட யூஜிசி முடிவெடுத்தது. ஆனால், கல்வி என்பது மத்திய மற்றும் மாநில அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால் சில விஷயங்களில் மாநில அரசு முடிவெடுக்க முடியும்.
அந்த அடிப்படையில் தமிழகத்தில் எந்தெந்த பல்கலைக்கழகங்களுக்கு எம்.ஃபில் படிப்பு வேண்டுமோ அவர்கள் தொடரலாம் என தமிழக அரசு கூறியது. அந்த வகையில் தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் இன்னும் எம்.ஃபில் படிப்பு தொடர்கிறது. ஆனால் தமிழக அரசு எம்.ஃபில் படிப்பைத் தொடருமா என்பது தெரியவில்லை`` என்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் வே.பெருவழுதி.

எம்.ஃபில் படிப்பு கட்டாயம் இல்லை என யூசிஜி அறிவித்துவிட்ட நிலையில், அந்தப் படிப்பை தமிழகத்தில் இத்தனை பெண்கள் தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம்.
``தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்களிடம் பிஹெச்டி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், இன்றைக்கு பிஹெச்டி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு உட்பட நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. அதனால் பிஹெச்டி வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் எம்.ஃபில் படிப்பைத் தேர்தெடுக்கின்றனர்`` என்றார் பேராசிரியர் வே.பெருவழுதி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலுமே பெண்கள் சேர்க்கை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிவதாகக் கூறும் பேராசிரியர் வே.பெருவழுதி, தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கான சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.
`பெண்களுக்கு கல்வி வேண்டும், கல்வியைப் பேணுவதற்கு` என்ற பாரதிதாசனின் வரிகளைச் சுட்டிக்காட்டும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கடந்த காலங்களில் அரசு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்தளங்களிலும் பெண் கல்வியின் அவசியம் இதுபோல வெகுவாக வலியுறுத்தப்பட்டது என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












