விராட் கோலியின் 'மந்தமான பேட்டிங்' பெங்களூர் தோல்விக்கு காரணமாகிவிட்டதா?

பட மூலாதாரம், BCCI/IPL
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான நேற்றைய ஆட்டமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது. ரோலர் கோஸ்டர் ரெய்டு போல அமைந்த இந்த ஆட்டத்தில், நெருக்கடியை சிறப்பாக கையாண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி வெற்றியை வசமாக்கியது.
கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி வழக்கம் போல் சிறப்பான தொடக்கம் தந்து, மேக்ஸ்வெல்லின் அதிரடி சரவெடியால் 212 ரன்களைக் குவித்தும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை இந்தியன்சுக்கு எதிரான முதல் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தில் நடப்பு ஐ.பி.எல். தொடரை சிறப்பாக தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது தோல்வி.
பவுலிங், பேட்டிங் ஆகிய இரண்டிலும் ஒருங்கிணைந்த நல்ல அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திகழ்வதை உறுதிப்படுத்திய இந்த போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலவீனத்தையும், நெருக்கடியை கையாள முடியாமல் அந்த அணி வீரர்கள் கோட்டை விட்டதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சிறப்பான தொடக்கம் தந்தாலும் பேட்டிங் சொர்க்கபுரியில் இது போதுமா?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிறந்த தொடக்க ஜோடியாக திகழும் விராட் கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு முறை சிறப்பான தொடக்கம் தந்தது. பவர் பிளேவில் 6 ஓவர்களில் 56 ரன்களைக் குவித்துவிட்ட இந்த ஜோடி, அதன் பிறகு வேகத்தை குறைத்து விட்டது.
விக்கெட் ஏதும் விழாத நிலையில் பேட்டிங்கிற்கு ஏதுவான பெங்களூர் மைதானத்தில் அந்த அணி காட்டிய அசாத்திய நிதானம் ரசிகர்களுக்கு வியப்பூட்டியது. இதன் பிறகு, கோலிக்குப் பிறகு களம் புகுந்த மேக்ஸ்வேல் காட்டிய அதிரடி, அதற்கு முன்பு குறைந்து போன ரன் வேகத்தை ஈடு செய்வதாக மட்டுமே அமைந்துவிட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
மிடில் ஓவர்களில் சாதித்த லக்னோவின் சுழல் கூட்டணி
நட்சத்திர வீரர்களான கோலியும் டுப்ளெஸ்ஸியும் உச்சக்கட்ட பார்மில், களத்தில் நன்றாக காலூன்றி நின்றிருந்த நிலையிலும் கூட, லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி மீண்டும் ஒருமுறை சாதித்துக் காட்டியுள்ளது. குருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் ஷாட்களை ஆட விடாமல் செய்தனர்.
இதனால் குறைந்து போன ரன் ரேட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே விராட் கோலி ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகளுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் இந்த மிடில் ஓவர்கள்தான்.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி 19 பந்துகளில் 19 ரன் - ஆர்.சி.பி. தோல்விக்கு கோலியும் ஒரு காரணமா?
கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தாலும், டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் பெரிய ஷாட்களை ஆட முடியாமல் தடுமாறினார். அப்போதெல்லாம் கோலி ஆடிய அற்புதமான கிரிக்கெட் ஷாட்களே அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தின. பவர் பிளேவில் பெங்களூரு எடுத்த 56 ரன்களில் 42 ரன்கள் கோலியிடம் இருந்து வந்தவை. 25 பந்துகளில் அந்த ரன்களை கோலி எடுத்திருந்தார்.
பேட்டிங் சொர்க்கபுரி, விக்கெட் இழப்பு இல்லை, தனிப்பட்ட முறையில் உச்சக்கட்ட பார்ம் என இவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் கூட பவர் பிளேவுக்குப் பிறகு கோலி திடீரென கியரை மாற்றினார். டுப்ளெஸ்ஸி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்த போது, கோலியும் வேகத்தை குறைத்தது அந்த அணியின் ரன் ரேட்டை வெகுவாக பாதித்தது.
அதனை மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க முயற்சித்து, கோலி அவுட்டாகி வெளியேறினார். அவர் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரைப் போன்ற சிறந்த வீரருக்கு இந்த ரன்கள் போதுமா? இதுதான் பெங்களூரு அணியின் தோல்விக்கு வழிவகுத்ததா? என்று கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பூரன் இந்த 19 பந்துகளில் 62 ரன்களைக் குவித்து லக்னோ வெற்றிக்கு வித்திட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

பட மூலாதாரம், BCCI/IPL
பந்துவீச்சு பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வாடிக்கை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய ரன்களைக் குவித்து விட்டு தோல்வியை முத்தமிடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை நடந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் அந்த அணியின் பலவீனமான பந்துவீச்சுதான். அது நேற்றும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு முகமது சிராஜ் மட்டுமே நம்பிக்கை தரும் ஒரே பவுலராக திகழ்கிறார். நேற்றும் கூட 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், கைல் மேயர்ஸ், லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை தேவையாக இருந்த போது எடுத்துக் கொடுத்தார்.
லக்னோவைப் போல பெங்களூருவுக்கு தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகிய இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய போது என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றதை பார்க்க முடிந்தது.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் வெய்ன் பர்னெல் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிக்கும் புதிய வரவு. இது மட்டுமே நேற்றைய போட்டி முடிவில் பெங்களூரு அணிக்கு நல்ல செய்தி.

பட மூலாதாரம், BCCI/IPL
லக்னோவை சரிவில் இருந்து மீட்ட ஸ்டோய்னிசின் தரமான ஆட்டம்
மிகப்பெரிய இலக்கைத் துரத்திய லக்னோ அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கைல் மேயர்சை இழந்து விட்டது. குருணால் பாண்டியா, தீபக் ஹூடாவும் அடுத்தடுத்து அவுட்டாக, 23 ரன்களிலேயே அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் தனது அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்திற்கு உயிரூட்டினார். வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலையும், லெக் ஸ்பின் பவுலர்களான கரன் ஷர்மா, ஷாபாஸ் அகமதுவையும் அவர் கடுமையாக தண்டித்தார்.
30 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களை குவித்த அவரது ஆட்டமே துவண்டு போயிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ரன் ரேட்டை தூக்கி நிறுத்தியது. லக்னோ அணியால் வெற்றி இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையும் அதன் பிறகே துளிர்விட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
நிகோலஸ் பூரனிடம் இருந்து வெளிப்பட்ட நம்ப முடியாத வாண வேடிக்கை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நிகோலஸ் பூரனிடம் இருந்து மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டம் வெளிப்பட்டது. சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்சர் விளாசிய அவர், தனது அதிரடியை நிறுத்தவே இல்லை. எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தையுமே எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பந்து தரை மார்க்கமாவும், ஆகாய மார்க்கமாகவும் எல்லைக்கோட்டை கடந்து கொண்டே இருந்தது. மொத்தம் 7 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் சாதனையாக, 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய அவர், வெறும் 19 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். பூரன் களமிறங்கும் போது லக்னோஅணி வெற்றிபெற 56 பந்துகளில் 116 ரன் தேவை என்ற நிலை இருந்தது. 17-வது ஓவரில் பூரன் அவுட்டாகி வெளியேறும் போது அதுவே 18 பந்துகளில் 24 ரன் என்ற எட்டக் கூடிய இலக்காக மாறிவிட்டது. இப்படித்தான், இமாலய இலக்காக தோன்றியதை சாதாரண ஒன்றாக தனது சூறாவளி பேட்டிங்கால் மாற்றிக் காட்டினார் நிகோலஸ் பூரன்.

பட மூலாதாரம், BCCI/IPL
பெங்களூரு பீல்டிங் மோசம் - ஸ்டோய்னிஸ் கொடுத்த கேட்சை கோட்டைவிட்ட சிராஜ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமான ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகிய இருவருக்குமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.
ஸ்டோய்னிஸ் வெறும் 2 ரன்களே எடுத்திருந்த நிலையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் தவறவிட்டார். இதுபோல், லோகேஷ் ராகுலுக்கு ஒருமுறை மேக்ஸ்வெல்லும், இரண்டாவது முறை கரன் சர்மாவும் ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கினர். ஒருவேளை அது நடந்திருந்தாலும் லக்னோ அணி நிலைகுலைந்து போயிருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி வீசிய 16-வது ஓவரில் அதிரடி வீரர் பூரனுக்கு கடினமான கேட்ச் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பவுன்சராக வந்த அந்த ஓவரின் நான்காவது பந்தை பூரன் 'புல் ஷாட்' ஆட, பந்து பேட்டில் சரியாக கிளிக் ஆகாமல் எட்ஜாகி மேலே பறந்தது. சூறாவளியாக சுழன்று கொண்டிருந்து பூரனுக்கு நெருக்கமாக பீல்டர்கள் நிறுத்தப்படாத நிலையில், ஆளில்லாத அந்த இடத்தில் பந்து கீழ் நோக்கி வந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரே நேரத்தில் பந்தை நோக்கி பவுலர், விக்கெட் கீப்பர், ஒரு பீல்டர் என 3 பேர் விரைந்தாலும், பந்து யார் கைகளிலும் சிக்கவில்லை. கடினமான இந்த கேட்ச்சை மூவரில் யாரேனும் ஒருவர் டைவ் அடித்து பிடித்திருந்தால் ஐ.பி.எல்.லின் மிகச் சிறந்த கேட்ச்சாக அது அமைந்திருக்கும்.
லக்னோவுக்கு கைகொடுத்த இம்பாக்ட் பிளேயர் வியூகம்
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு இம்பாக்ட் பிளேயர் வியூகம் வெகுவாக கைகொடுத்தது. பந்துவீச்சில் ஓரளவு நல்ல பங்களிப்பை அளித்ததுடன், விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்திய அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக ஆயுஷ் படோனியை லக்னோ அணி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது.
இக்கட்டான கட்டத்தில் பூரனுக்கு ஒத்துழைப்பு தந்த அவர், பூரன் அவுட்டான பிறகு ரன் ரேட்டை உயர்த்தும் பொறுப்பை தானே கவனித்துக் கொண்டார். வெய்ன் பர்னெல் பந்துவீச்சில் ஆப் ஸ்டம்பிற்குச் சென்று பந்தை லெக் சைடில் சிக்சருக்கு அவர் தூக்கியதும் லக்னோ வெற்றியை எட்டிவிட்டது என்றே ரசிகர்கள் நினைத்தார்கள்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை அடித்த பின்னர் பேட்டால் அவர் ஸ்டம்புகளையும் தொட்டு வெளியேறினார். இல்லாவிட்டால் ஆட்டம் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். 24 பந்துகளில் அவர் எடுத்த 30 ரன்கள் லக்னோ அணியின் சேஸிங்கில் முக்கியமான பங்களிப்பு.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொருத்தவரை, இளம் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத்திற்குப் பதிலாக களம் கண்ட சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 48 ரன்களை வாரி வழங்கினார். அந்த அணியின் தோல்விக்கு இவரது இந்த மோசமான பந்துவீச்சும் ஒரு காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக குறைந்தபட்சம் 3 ஓவர்களை வீசிய பவுலர்களில் சராசரியாக ஒரு ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது இவர்தான் என்ற வகையில் மிக மோசமான பந்துவீச்சாக இது பதிவாகிவிட்டது.
நெருக்கடியை சரிவர கையாளத் தவறிய பெங்களூரு மூத்த வீரர்கள்
கடைசிப் பந்து வரை நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர்கள் பதற்றத்தில் செய்த தவறுகள் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டன. குறிப்பாக, பேட்டிங் களத்தில் 2 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்த கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் மூத்த வீரர்களே பதற்றத்தில் தவறிழைத்துவிட்டனர்.
ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் அரங்கேறிய கடைசி நேர உச்சக்கட்ட டிராமாவில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் 2 தவறுகள் அரங்கேறின. மன்கட் முறையில் ரவி பிஷ்னோயை அவுட் செய்ய முயன்ற ஹர்ஷல் படேல் பதற்றத்தில் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறவிட்டார்.
அதேபோல், அடுத்து ஹர்ஷல் படேல் வீசிய கடைசிப் பந்தை பேட்டிங் முனையில் நின்றிருந்த ஆவேஷ் கானால் தொட முடியாமல் போய்விட்டாலும் கூட, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் ஒரு ரன்னை ஓடி எடுத்துவிட்டனர். அதற்கு மிக முக்கிய காரணம், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் பந்தை சரிவர பிடிக்காததே காரணம். பந்தை துரிதமாக சேகரிக்காமல் பதற்றத்தில் அவர் தடுமாறியதே லக்னோ வெற்றிக்கான ரன்னைக் கொடுத்துவிட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
தினேஷ் கார்த்திக் துரிதமாக செயல்பட்டிருந்தால் இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டியை வெல்ல மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
கடைசிப் பந்தில் 'மன்கட்' முறையில் அவுட் கொடுக்கப்படாதது ஏன்?
ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்த கடைசிப் பந்தில், வெற்றிக்குத் தேவையான ரன்னை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று முனைப்புடன் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய், பந்துவீசப்படும் முன்பே கிரீசை விட்டு வெளியேறிவிட்டார். இதனை முன்பே எதிர்பார்த்திருந்தது போல், ஹர்ஷல் படேல் பந்துவீசாமல் மன்கட் முறையில் ஸ்டம்புகளை பெயர்த்து அவரை அவுட் செய்ய முயன்றார்.
இது நல்ல முயற்சியாக இருந்த போதிலும் பதற்றத்தில் அவர் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறிவிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பந்தை தூக்கி எறிந்து அவர் ஸ்டம்புகளை சிதற விட்டாலும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். காரணம், முதல் முயற்சியில் அவர் ஸ்டம்புகளை தாக்கியிருந்தால் அது மன்கட் முறையில் அவுட்டாக அமைந்திருக்கும்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதைச் செய்யத் தவறிய ஹர்ஷல் படேல் சில அடிகள் முன்னே சென்றுவிட்டதால் பந்து 'டெட்பால்' ஆகிவிடுகிறது. இதனால் அதற்குப் பின்னர் அவர் ஸ்டம்ப் மீது பந்தை குறி தவறாமல் வீசியிருந்தாலும், மன்கட் முறை பரிசீலிக்கப்படாது. ஹர்ஷல் படேல் பதற்றப்படாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டியின் முடிவும் கூட வேறு மாதிரி ஆகியிருக்கக் கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












