வார்னரின் ஆமை வேகம் டெல்லி கேபிட்டல்சை காவு வாங்குகிறதா? சாதனை மன்னருக்கு ஏற்பட்ட சோதனை

பட மூலாதாரம், Getty Images
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியுற்றதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடாததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டாலும், அதன் கேப்டன் டேவிட் வார்னரின் ஆமை வேக ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 'இதுபோன்று விளையாடினால் ஐ.பி.எல். ஆட வர வேண்டாம்' எனும் அளவுக்கு முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் டேவிட் வார்னர் என்றாலே அனைவருக்கும் அவரது தடாலடி ஆட்டம் தான் நினைவில் வரும். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என்று எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் களத்தில் இறங்கியதும் முதல் பந்தில் இருந்தே விளாசுவதே அவரது இயல்பு. வார்னரின் தடாலடி ஆட்டத்திற்கென்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் வார்னர்
ஐ.பி.எல். போன்ற கிளப் கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட ஆட்டக்காரருக்கு கடும் கிராக்கி இருக்கும்தானே. இளம் வீரராக 2009-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவர் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த அணிக்காக சில சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும் தொடர்ச்சியாக அவர் சிறப்பாக ஆடியிருக்கவில்லை.
2013-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய வார்னர், 2 அதிரடி சதங்கள், 10 அரைசதங்களை விளாசி இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த அதிரடி சூரர் சேவாக், டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருந்ததால் வார்னர் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒரு முறை சாம்பியன், 3 ஆரஞ்சு தொப்பிகள் - ஐதராபாத் அணியில் விஸ்வரூபம்
ஐ.பி.எல்.லைப் பொருத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்ந்த பின்னர்தான் வார்னர் விஸ்வரூபம் எடுத்தார். 2014-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் சேர்ந்த பிறகு வார்னருக்கு அனைத்தும் ஏறுமுகம் தான். 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வார்னர் வசப்படுத்தினார். அவரது ஸ்டிரைக் ரட் 156.54.
2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தலைமை தாங்கி வழிநடத்திச் சென்று, அந்த அணி முதன் முறையாக ஐ.பி.எல். கோப்பையை உச்சி முகர காரணமாயிருந்தார். அந்த தொடரில் வார்னர் தனிப்பட்ட முறையில் 848 ரன்களைக் குவித்தார். எனினும், அப்போது உச்சக்கட்ட பார்மில் இருந்த விராட் கோலி இதைக் காட்டிலும் அதிக ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தி விட்டார்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2017 ஐ.பி.எல். தொடரிலும் வார்னரின் ரன் வேட்டை தொடர்ந்தது. அந்த ஆண்டில் 14 போட்டிகளில் 621 ரன்களைக் குவித்த வார்னரே அதிக ரன் எடுத்த வீரர். அவருக்கே ஆரஞ்சு தொப்பி சொந்தமானது.

பட மூலாதாரம், Getty Images
ஐ.பி.எல்.லில் அதிவேகமாக 5,000 ரன்களை தொட்டவர்
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த ஓராண்டு தடை எதிரொலியாக, 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் விளையாட முடியாத வார்னர் அடுத்த ஆண்டே ஐ.பி.எல். திரும்பினார். ஐ.பி.எல்.லில் நுழைந்ததும் வழக்கம் போல் ஆரஞ்சு தொப்பிக்கான கோதாவில் குதித்துவிட்ட அவர், 692 ரன்கள் குவித்து அதனை வசப்படுத்தினார்.
2020-ம் ஆண்டும் ரன் வேட்டையைத் தொடர்ந்த டேவிட் வார்னர் 4 அரைசதங்களுடன் 548 ரன்களைக் குவித்ததுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டி வரையிலும் அழைத்துச் சென்றார். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்சிடம் தோற்று அந்த அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஐ.பி.எல்.லில் 5 ஆயிரம் ரன்களைக் குவித்த வார்னர், மிகக் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஐ.பி.எல். தொடரில் இதுவரை 163 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 6,080 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 4 சதங்களும், 58 அரை சதங்களும் அடங்கும். ஐ.பி.எல்.லில் அதிக அரை சதம் அடித்தவர் வார்னர்தான். அத்துடன், தொடர்ச்சியாக 6 ஐ.பி.எல். தொடர்களில் 500 ரன்களுக்கும் மேலாக குவித்தவர், 3 முறை ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற பெருமையும் வார்னருக்கே உரித்தானது.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சோதனைக்காலம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகச் சிறப்பாக பங்களித்துள்ள வார்னர், அந்த அணிக்காக 95 போட்டிகளில் விளையாடி 4,014 ரன்களைக் குவித்துள்ளார். ஐதராபாத் அணிக்காக அவர் 2 சதங்கள், 40 அரைசதங்களை அடித்துள்ளார். அவரது சராசரி 49.59. ஸ்டிரைக் ரேட் 142.59,
ஐ.பி.எல்.லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்து சாதனைகள் பல படைத்துள்ள வார்னருக்கு 2021-ம் ஆண்டு உவப்பானதாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லீக் போட்டிகளில் வரிசையாக தோற்றுப் போக, தொடரின் நடுவிலேயே அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
அடுத்து வந்த போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட அவர், களத்தில் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்ற காட்சி ரசிகர்களை வாட்டியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கோப்பை வென்று கொடுத்து, பல சாதனைகளையும் படைத்த வார்னரை இப்படியா நடத்துவது என்று சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி அணியில் மீண்டும் வார்னர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகி கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்த அவர், 12 போட்டிகளில் 432 ரன்களை குவித்து தான் இன்னும் சோடை போகவில்லை என்று நிரூபித்தார். அதிலும், முந்தைய ஆண்டு மோசமாக நடத்தி அவரை வெளியேற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 92 ரன்களை குவித்ததும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. கடந்த ஐ.பி.எல்.லில் வார்னரின் ரன் சராசரி 48. ஸ்டிரைக் ரேட் 150.52.
ஐ.பி.எல்.லைப் பொருத்தவரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தடாலடி அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு கொடுங்கனவை கொடுத்து வந்த வார்னருக்கு நடப்பு ஐ.பி.எல். தொடர் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை. சாலை விபத்தில் சிக்கி ரிஷப் பந்த் காயமடைந்ததால், கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் அவரது கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரது தலைமையில் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியின் இன்றைய பரிதாபமான நிலைக்கு மோசமான பேட்டிங், மோசமான பந்துவீச்சு, பீல்டிங் சரியில்லை என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக விமர்சிக்கும் அனைவரது கரங்களும் கேப்டன் வார்னரை நோக்கியே நீள்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தானுக்கு எதிராக ஆமை வேக ஆட்டத்தால் அதிருப்தி
நான்கு போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 189 ரன்களை குவித்திருந்த போதிலும், அதற்காக அவர் அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதே விமர்சனங்களுக்குக் காரணம். குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 192 என்ற சவாலான இலக்கை டெல்லி அணி துரத்திய போது, வார்னரிடம் இருந்து வழக்கமான அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை. இதுபோன்ற பெரிய இலக்கை துரத்தும் போது பவர் பிளே ஓவர்களில் அடித்து ஆட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
ஆனால், தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அசாத்திய பொறுமை காத்தார். அணி வெற்றிபெறத் தேவையான ரன் ரேட் ஏகத்திற்கு எகிறிய போதும் கூட வார்னரின் பேட்டில் இருந்து சிக்சர், பவுண்டரிகள் பறக்கவே இல்லை. கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் கூட அடித்தாட முற்படாமல் பந்துகளை தட்டிவிட்டு ஒன்று, இரண்டு ரன்களாக அவர் சேகரித்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சவாலான இலக்கை துரத்த வேண்டிய அந்த ஆட்டத்தில் வார்னர் 55 பந்துகளில் 65 ரன்களையே எடுத்தார்.
19-வது ஓவரின் கடைசிப் பந்தில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களைக் காட்டிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரசிகர்களே நிம்மதி அடைந்தனர் என்கிற அளவுக்கு அவரது ஆட்டம் இருந்தது. ஒரு காலத்தில் களத்தில் இறங்கினாலே பந்துவீச்சாளர்களுக்கு கிலி கொடுக்கும் பேட்ஸ்மேனாக மிரட்டிய டேவிட் வார்னர், ஆட்டமிழந்தால் நல்லது என்று அவரது ரசிகர்களே எண்ணும் அளவுக்கு இன்று அவரது நிலை கீழிறங்கிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
அக்ஷர் படேலுடன் ஒப்பிட்டால் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் பாதியே
இதேபோல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயித்த 193 ரன் இலக்கை டெல்லி கேபிட்டல்ஸ் அணி சேஸ் செய்யும் போதும் வார்னர் 48 பந்துகளில் 56 ரன்களையே எடுத்தார். டெல்லி அணி 143 ரன்களில் அடங்கி விட்டது. வார்னர் எடுத்த ரன்கள் அந்த அணிக்கு பயன்படாமல் போய்விட்டது.
நேற்றும் கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி தோற்றுப் போனதற்கு அவரது ஆமை வேக பேட்டிங்கும் ஒரு காரணமாக கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. 47 பந்துகளை சந்தித்த அவர் 51 ரன்களை மட்டுமே சேர்த்தார். 6 பவுண்டரிகளை அடித்த அவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. நேற்று மட்டுமல்ல, நடப்புத் தொடரில் இதுவரையிலுமே வார்னர் பேட்டில் இருந்து சிக்சர்கள் வரவே இல்லை.
பின் வரிசையில் வந்த சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அதிரடியாக 54 ரன்களை குவித்ததால்தான் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் சவாலான இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்க முடிந்தது. நடப்புத் தொடரில் அரைசதம் கண்ட 3 ஆட்டங்களிலும் 15 ஓவருக்கும் மேலாக தாக்குப் பிடித்துள்ள வார்னரிடம் இருந்து கடைசி வரையிலும் அதிரடி ஆட்டம் வெளிப்படவே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
நடப்புத் தொடரில் 100 ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்களில் ஒரு சிக்சர் கூட அடிக்காதவர் வார்னர் மட்டும் தான். கடந்த ஆண்டு 150 ரன்னுக்கும் மேலாக இருந்த வார்னரின் ஸ்டிரைக் ரேட், தற்போது 114 என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. ஸ்டிரைக் ரேட்டில் 70-வது இடத்தில் இருக்கும் வார்னரைக் காட்டிலும் உமேஷ் யாதவ், அடில் ரஷித் போன்ற பந்துவீச்சாளர்கள் கூட சிறப்பான இடத்தில் இருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒற்றை ஆளாக போராடி தனது அணியை தூக்கி நிறுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான், நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான நேர்த்தியான ஆட்டத்தை வார்னரிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
'ஐ.பி.எல். விளையாட வராதீர்கள்' சேவாக் சாடல்
Cricbuzz வலைதளத்தில் நேர்காணல் அளித்த இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்கார் வீரேந்திர சேவாக், "25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால் ஐ.பி.எல். விளையாட வராதீர்கள்" என்று வார்னரை கடுமையாக விமர்சித்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐ.பி.எல்.லின் ஆரம்ப ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்சாக வலம் வந்த போது, சேவாக் தலைமையின் கீழ் வார்னர் விளையாடியுள்ளார், அவருடன் இணைந்து தொடக்க வீரராக களம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கரோ, "8 ரன்களில் 8 என்றால் பரவாயில்லை. ஏனெனில், பேட்ஸ்மேன் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வார்னரின் இந்த ஆட்டம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இந்த தோல்விக்கு வார்னரே பொறுப்பேற்க வேண்டும். அவர் கேப்டனாக இருப்பதால்தான் இன்னும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் நீடிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரராக இருந்திருந்தால் அதுவே அவரது கடைசி ஆட்டமாக இருந்திருக்கும்." என்று சாடியுள்ளார்.
வார்னரின் ஆமை வேக ஆட்டத்திற்கான விலையை டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொடுத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் விமர்சித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஐ.பி.எல். தொடரில் 10 ஆண்டுகளாக, பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, டானாக வலம் வந்த டேவிட் வார்னர், தனது வழக்கத்திற்கு மாறான ஆமை வேக ஆட்டத்தால் நாலாபுறமும் இருந்து கேள்விக்கணைகளை எதிர்கொண்டுள்ளார்.
ஐ.பி.எல்.லில் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து, பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள அவர், அடுத்து வரும் போட்டிகளில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், டெல்லி கேபிட்டல்சை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












