ஒரே ஓவரில் 4 விக்கெட்: கடைசிப் பந்து வரை திக்... திக்... டெல்லிக்கு எதிராக மும்பை 'திரில்' வெற்றி

மும்பை இந்தியன்ஸ் 'திரில்' வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஐ.பி.எல், தொடரில் மீண்டும் ஒரு திரில்லிங் மேட்ச் நடந்து முடிந்துள்ளது. கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நகர்ந்த இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ரோகித் சர்மாவின் அதிரடியால் இலக்கு நோக்கி வேகமாக முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி ஓவரில் அடுத்தடுத்து யார்க்கர்களை வீசி நோக்கியா மிரட்டிவிட்டார்.

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னரும், அதிரடியில் அசத்தக் கூடிய பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த 3 போட்டிகளைப் போல அல்லாமல் இம்முறை டெல்லி அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது.

டெல்லி அணி சிறப்பான தொடக்கம்

பெஹரன்டார்ஃப் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே லாங்-ஆப் திசையில் பவுண்டரி அடித்து பிரித்வி ஷா நம்பிக்கை அளித்தார். அடுத்த ஓவரிலும் பிரித்வி ஷா பவுண்டரி அடிக்க, மறுமுனையில் வார்னரும் தன் பங்கிற்கு பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார். இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த மூன்றாவது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு ஓடவிட்டார்.

3 ஓவரில் 29 ரன் என்று சிறப்பான தொடக்கம் கண்ட டெல்லி கேபிட்டல்ஸ் நான்காவது ஓவரில் தடம்புரண்டது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பவர் ஓவர்களில் துணிச்சலாக சுழற்பந்து வீச்சாளரை கொண்டு வர அதற்கு பலனும் கிடைத்தது. ஹிரிதிக் ஷோகீன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பிரித்வி ஷா, நான்காவது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் முட்டிப்போட்டு ஸ்வீப் செய்ய கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் மணிஷ் பாண்டே முதல் போட்டியிலேயே அசத்தினார். பிரித்வி வெளியேறியதும் களம் புகுந்த அவர், வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் ஓவரிலும், அதற்கு அடுத்த ஷோகீனின் ஓவரிலும் தலா 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால், டெல்லி அணியின் ரன் ரேட் எகிறியது. 6 ஓவர் பவர் பிளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன் என்ற நல்ல நிலையில் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

சீட்டுக்கட்டுகளாக சரிந்த டெல்லி விக்கெட்டுகள்

பவர் பிளே முடிந்ததும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை கொண்டு வந்தார் ரோகித் சர்மா. தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார் பியூஷ் சாவ்லா. சாவ்லா வீசிய 9-வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்சருக்கு ஆசைப்பட்டு இறங்கி வந்து லாங் ஆஃப் திசையில் மணிஷ் பாண்டே தூக்கி அடிக்க, எல்லைக்கோடு அருகே நின்றிருந்த பெஹரன்டார்ஃப் கைகளில் பந்து தஞ்சம் புகுந்தது. 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அவர் சேர்த்திருந்தார்.

மணிஷ் பாண்டே ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் சரிவு தொடங்கியது. 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன் என்ற நிலையில் இருந்த அந்த அணி தடம்புரண்டது. ஐ.பி.எல்.லில் அறிமுக வீரராக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக களம் கண்ட இளம் வீரர் யாஷ் துல்லை அடுத்த ஓவரிலேயே ரிலே மெரிடித் காலி செய்தார். ஷார்ட்பிட்ச் பந்தை யாஷ் துல் பிளிக் செய்ய, டீப் மிட் விக்கெட் திசையில் மேலேழும்பிய பந்தை வதேரா கேட்ச் செய்தார். யாஷ் துல் 2 ரன்களை மட்டுமே எடுத்தார்.

மிடில் ஆர்டரில் டெல்லி அணி பெரிதும் நம்பியிருந்த ரோவ்மென் பொவெல் மீண்டும் ஏமாற்றினார். ஒரு பவுண்டரியுடன் திருப்திப்பட்டுக் கொண்ட அவர், பியூஷ் சாவ்லா பந்தில் எல்.பி,டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது.

பியூஷ் சாவ்லா தனது அடுத்த ஓவரிலும் விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலம் சேர்த்தார். இம்முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் லலித் யாதவின் ஸ்டம்புகளை அவர் சிதறடித்தார். லலித் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது டெல்லி அணி 12.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை சேர்த்திருந்தது.

தடாலடியாக அதிரடியில் மிரட்டிய அக்ஷர் படேல்

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்ததால் மறுமுனையில் கேப்டன் வார்னரால் வழக்கமான அதிரடி காட்ட முடியவில்லை. அவருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக மறுமுனையில் ஜோடி சேர்ந்த அக்ஷர் படேல் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். அவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறந்தவண்ணம் இருந்தன.

ஷோகீன் வீசிய 15-வது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் அவர் சிக்சர் அடித்து பிரமாதப்படுத்தினார். லாங் ஆப் திசையில் அக்ஷர் அடித்த இரண்டாவது சிக்சர் கேட்சாக மாறியிருக்க வேண்டியது. அங்கே நின்றிருந்த சூர்யகுமார் பந்தின் திசையை தவறாக கணித்ததால் கேட்சை கோட்டை விட்டதுடன், 6 ரன்களையும் தாரை வார்த்தார். இந்த பீல்டிங் சொதப்பலால் கேப்டன் ரோகித் சர்மாவின் முகத்தில் அதிருப்தி ரேகைகளை பார்க்க முடிந்தது.

கேமரூன் கிரீன் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளையும், அதற்கு அடுத்து வீசிய பெஹரன்டார்ஃபின் ஓவரில் 2 சிக்சர்களையும் அக்ஷர் படேல் அடித்து டெல்லி ரசிகர்களை பரவசப்படுத்தினார். ரிலே மெரிடித் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 22 பந்துகளில் அரைசதம் கடந்து அக்ஷர் படேல் அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பெஹரன்டார்ஃப் வீசிய ஒரே ஓவரில் 4 விக்கெட்

அரைசதம் அடித்த அக்ஷர் படேல் அடுத்ததாக பெஹரண்டார்ஃப் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் விளாசினார்.

மூன்றாவது பந்தில் டெல்லி கேப்டன் வார்னரையும் பெஹரண்டார்ஃப் வெளியேற்றினார். ஒருநாள் போட்டிகளைப் போல ஆடிய வார்னர் 47 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை சேர்த்தார்.

அடுத்து வந்த குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலேயே ரன் அவுட்டானார். கடைசிப் பந்தில் அபிஷேக் போரலையும் ஒரு ரன்னில் பெஹரண்டார்ஃப் அவுட்டாக்கினார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

டெல்லி அணி 172 ரன்களில் ஆல்அவுட்

ரிலே மெரிடித் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ஆன்ரிச் நோக்கியா, அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். இதனால் டெல்லி அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை சேர்த்திருந்தது. அக்ஷர் படேலின் அதிரடி அரைசதமே மும்பை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை டெல்லி அணி நிர்ணயிக்க காரணமாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெஹரன்டார்ஃப் 3 விக்கெட்டுகளையும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டுகளையும் ஷோகீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்களில் 68-0

173 ரன்களைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்சை கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார். முகேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ரோகித், அடுத்த பந்தை சிக்சருக்கு விளாசினார். இந்த ஓவரின கடைசி பந்தையும் பவுண்டரிக்கு ஓடவிட்டார் ரோகித்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இஷான் கிஷன் வீசிய இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து மிரட்டினார் இஷான் கிஷான். ஆன்ரின் நோக்கியா வீசிய மூன்றாவது ஓவரில் 2 பவுண்டரிகளையும், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்சரையும் தெறிக்க விட்டார் ரோகித் சர்மா. ரோகித்திடம் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிப்பட்ட அதிரடி ஆட்டம் மும்பை அணி ரசிகர்களை மகிழ்வித்தது.

ரோகித்தின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 ஓவர்களிலேயே 42 ரன்களைக் குவித்துவிட்டது. களத்தில் தொடர்ந்து சூறாவளியாக ரோகித் சுழன்ற பவர் பிளே ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களைத் திரட்டிவிட்டது. ரோகித் 37 ரன்களுடனும் இஷான் கிஷன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இஷான் கிஷன் 31 ரன்னில் ரன்அவுட்

பவர் பிளே முடிந்த பிறகு அக்ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. லலித் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் டெல்லி அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. அவசரப்பட்டு ரன் எடுக்க ஓடிய இஷான் கிஷன், முகேஷ் குமாரால் ரன்அவுட் செய்யப்பட்டார். இஷான் கிஷன் 26 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 46 பந்துகளில் 88 ரன்களை குவித்து பிரமாதப்படுத்திய இளம் வீரர் திலக் வர்மா அடுத்து களம்புகுந்தார். ஒரு ஓவர் நிதானம் காட்டிய அவர், குல்தீப் யாதவ் வீசிய 12-வது ஓவரில் சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய திலக் வர்மா

மும்பை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டன, ரன் ரேட்டை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த திலக் வர்மா 16-வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். முகேஷ் குமார் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்ட திலக் வர்மா, அடுத்த இரு பந்துகளையும் சிக்சராக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த ஓவரிலேயே டீப் மிட் விக்கெட் திசையில் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களை அவர் சேர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

மும்பைக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த சூர்யகுமார்

அதன் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக்அவுட் ஆகிய மோசமான பார்முடன் ஐ.பி.எல்.லை தொடங்கிய அவர் இங்கும் அதனைத் தொடர்கிறார்.

கடந்த சில தொடர்களில் அசத்திய அவர், நடப்புத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் மும்பை அணிக்கு ஏமாற்றம் அளித்தார். சந்தித்த முதல் பந்திலேயே லெக்சைடில் தனது பேஃபரைட் ஷாட்டை ஆட, டீப் பைன் லெக்கில் குல்தீப் யாதவால் கேட்ச் செய்யப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அவுட்

அடுத்தடுத்து 2 விகெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் கேப்டன் ரோகித் நல்ல பார்மில் இருந்ததால் மும்பை அணி தனக்கு சேஸிங்கில் சிக்கல் இருப்பதாக எண்ணவில்லை. அதற்கேற்ப, முஸ்தாபிஜூர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தனது அபார பார்மை ரோகித் நிரூபித்தார்.

அடுத்த 3 பந்துகளிலும் ரன் எடுக்காத ரோகித், ஐந்தாவது பந்தில் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்தினாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கவில்லை. அந்த அணியின் இன்னிங்சில் நங்கூரமாக நின்று பலம் சேர்த்த ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதில், 6 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் 'திரில்' வெற்றி

பட மூலாதாரம், Getty Images

சிக்சர்களை விளாசி நம்பிக்கை தந்த கேமரூன் கிரீன் - டிம் டேவிட் ஜோடி

அடுத்து வந்த கேமரூன் கிரீன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டலாக இன்னிங்சை தொடங்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்தில் கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகிய இரு அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தால் மும்பை அணி நம்பிக்கையுடன் இருந்தது. இரு தடாலடி ஆட்டக்காரர்கள் களத்தில் இருந்த போதிலும் 18-வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோக்கியா சிக்கனம் காட்டினார்.

2 ஓவர்களில் 20 ரன் தேவை என்ற நிலையில், முஸ்தாபிஜூர் வீசிய 19-வது ஓவரில் கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகிய இருவருமே தலா ஒரு சிக்சர் அடித்து மும்பை அணிக்கு இருந்த நெருக்கடியை குறைத்தனர்.

யார்க்கர்களால் மிரட்டிய நோக்கியா - கடைசிப் பந்தில் மும்பை திரில் வெற்றி

கடைசி ஓவரில் 5 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் மீண்டும் பந்து வீச வந்த நோக்கியா யார்க்கர்களை வீசி திணறடித்தார். இரு அதிரடி வீரர்களுமே ரன் சேர்க்க முடியால் திணறினர். இரண்டாவது பந்தில் டிம் டேவிட் கொடுத்த கேட்சை முகேஷ் கோட்டை விட்டு பெரும் தவறிழைத்தார்.

கடைசிப் பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் நோக்கியா மீண்டும் ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார். அதனை லாங் ஆப் திசையில் டிம் டேவிட் அடிக்க, பந்தை சேகரித்த வார்னர் மிக உயரத்தில் விக்கெட் கீப்பரை நோக்கி வீசியெறிய அதனால் கிடைத்த அவகாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான 2 ரன்களை எடுத்துவிட்டது.

ஒரு கட்டத்தில் மிக எளிதாக வெற்றி இலக்கை எட்டிவிடும் என்று கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பாராத சரிவால் திணறிப் போய், ஒருவழியாக கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

நடப்புத் தொடரில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அதேநேரத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்துள்ள 4-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இன்னும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: