ஹைதராபாத் அணிக்கு ஏற்றம் தந்த மாற்றம்: தவானை தடுத்த நடராஜனின் யார்க்கர்கள்

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணிக்காக அறிமுக போட்டியில் ஆடிய மார்க்கண்டேயா சுழற்பந்துவீச்சில் அசத்த, ராகுல் திரிபாதியின் சரவெடி பேட்டிங்கால் எளிதான வெற்றி சாத்தியமானது. தனி ஒருவனாக போராடிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவானின் சாதனை ரன்கள் வீணாகிப் போயின.

நடப்புத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதாபாத் அணி வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய நெருக்கடியில் இருந்தது. மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆடிய இரு போட்டிகளிலும் வென்று தெம்பாக இருந்தது.

வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹெயின்ரிச் கிளாசன், இந்தியாவைச் சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் மார்க்கண்டேயா ஆகியோர் ஐதராபாத் அணிக்கு அறிமுக வீரர்களாக களம் கண்டனர்.

மறுபுறம், பஞ்சாப் அணியோ காஜிசோ ரபாடா, சிக்கந்தர் ரஸா ஆகிய சர்வதேச முன்னணி வீரர்களை பெஞ்சில் அமர வைத்துவிட்டு 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியது.

முதல் பந்தில் முதல் விக்கெட் - புவனேஷ்வர் குமார் அசத்தல்

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிராப்சிம்ரன் சிங்கும், கேப்டன் ஷிகர் தவானும் பேட்டிங்கை தொடங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வாண வேடிக்கை காட்டி மிரட்டிய பிராப் சிம்ரன் சிங்கை ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கோல்டன் டக்காக்கி வெளியேற்றினார்.

இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை நோக்கிச் சென்ற பந்து சிம்ரன்சிங்கின் பேட்டை ஏமாற்றி அவரது கால் காப்பில் பட, எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய வாய்ப்பிருந்தாலும் அதற்கு முயற்சிக்காமல் அவர் வெளியேறினார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த மார்க்கோ ஜேன்சன்

ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனதை ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். வேகப்பந்துவீச்சாளர் மார்க்கோ ஜேன்சன் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். பஞ்சாப் அணிக்காக அறிமுக வீரராக பல்வேறு கனவுகளுடன் களம் கண்ட மாட் ஷார்ட்டை அற்புதமான இன்ஸ்விங்கரில் எல்.பி.டபிள்யூ மூலம் அவர் காலி செய்தார்.

மார்க்கோ ஜேன்சன் வீசிய அடுத்த பந்தும் இன்ஸ்விங்கராக சென்று ஜிதேஷ் சர்மாவின் கால் காப்பில் பட, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி எல்.பி.டபிள்யூ அப்பீலை ஏற்று நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். பஞ்சாப் அணி ரிவியூவுக்குச் செல்ல, பந்து ஸ்டம்புகளை விட்டு விலகிச்செல்வது தெளிவாக தெரிந்ததால், நடுவரின் முடிவு திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், ஜிதேஷ் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜேன்சனின் அடுத்த ஓவரிலேயே மிட் ஆப் திசையில் நின்றிருந்த ஹைதராபாத் கேப்டன் மார்க்ரம்மிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெறும் 4 ரன்களில் அவர் நடையைக் கட்டினார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் அணிக்கு சுட்டிக் குழந்தை தந்த சிறப்பான 'கேமியோ'

பஞ்சாப் அணி ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் கூட, மறுபுறம் அந்த அணி கேப்டன் ஷிகர் தவான் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருந்தார். ஹைதராபாத் அணி வீசிய ஏதுவான பந்துகளை தண்டிக்க அவர் தவறவில்லை. அவரது பேட்டில் இருந்து அவ்வப்போது பவுண்டரிகள் வந்த வண்ணம் இருந்தன.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த பஞ்சாப் அணிக்கு, சி.எஸ்.கே. ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கர்ரன் சிறிது நேரம் வாண வேடிக்கை காட்டி விருந்தளித்தார். மார்கோ ஜேன்சன் தனது பந்துவீச்சின் ரிதத்தை இழந்து தவறான லென்த்தில் வீசிய பந்துகளை அவர் சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். இதனால் பவர் பிளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்தாலும் 41 ரன் என்ற ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

வாஷிங்டன் சுந்தர், நடராஜனின் பந்துவீச்சு எடுபடாத சோகம்

பவர் பிளே முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுநதரை ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச அழைத்தார். அவரது முதல் பந்திலேயே ஷிகர் தவான் பவுண்டரி அடித்து மிரட்டினாலும் வாஷிங்டன் சுந்தர் சுதாரித்துக் கொண்டு பின்னர் மீண்டார். அடுத்த 5 பந்துகளில் அவர் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச கேப்டன் மார்க்ரம் வாய்ப்பு தரவில்லை.

அடுத்த ஓவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீசினார். பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் தமக்கிருந்த அனுபவத்தையும், கற்றுத் தேர்ந்த கிரிக்கெட் நுணுக்கங்களையும் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக பயன்படுத்தினார். நடராஜன் பந்துவீச்சில் 2 பவுண்டரிகளை அவர் விளாச பஞ்சாப் அணியின் ஸ்கோர் 8 ஓவர்கள் முடிவில் 58 ரன்களாக உயர்ந்தது.

லெக் ஸ்பின்னர் மார்க்கண்டேவின் மிரட்டல் அறிமுகம்

ஆட்டத்தின் 9-ஆவது ஓவரை வீச வந்த ஹைதராபாத் அணியின் அறிமுக வீரர் மயங்க் மார்க்கண்டே, ஏற்கனவே நெருக்கடியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.

பஞ்சாப் அணியின் ரன் ரேட்டை உயர்த்த முயன்று, அதிரடி காட்ட பேட்டை வேகமாக சுழற்றிய சுட்டிக் குழந்தை சாம் கர்ரன், மார்க்கண்டேயா வீசிய பந்தில் எட்ஜாகி ஷார்ட் தெர்ட் திசையில் நின்றிருந்த புவனேஷ்வர் குமாரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 15பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்திருந்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

கேப்டன் மார்க்ரம் புத்திசாலித்தனமும் சிறப்பான பந்துவீச்சும்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், பேட்டிங்கில் அணியை தூக்கி நிறுத்த பிரப்சிம்ரன் சிங்கிற்குப் பதிலாக சிக்கந்தர் ரசாவை இம்பாக்ட் பிளேயராக பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறக்கியது. ஆனால் அவர் பஞ்சாப் அணி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. 5 ரன் எடுத்த நிலையிலேயே உம்ரான் மாலிக்கிடம் அவர் வீழ்ந்தார்.

புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப்பும், சிறப்பான பவுலிங்கும் கைகோர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு சிக்கந்தர் ரசாவின் அவுட் ஒரு உதாரணம். தேர்ட்மேன் திசையில் எல்லைக்கோட்டிற்கு சற்று உள்ளே பீல்டரை நிறுத்தி, வேகப்பந்துவீச்சாளரை ஆஃப் ஸ்டம்பில் ஷார்ட் பிட்ச் வீசச் செய்தார் மார்க்ரம். அவ்வாறே, 142 கிலோமீட்டர் வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்து ஆடுகளத்தில் மையத்தில் பிட்ச்சாகி பவுன்சாக, கேப்டன் மார்க்ரம் எதிர்பார்த்தப்படியே சிக்கந்தர் ரசா அப்பர்கட் செய்ய முயல, அது அங்கே நின்றிருந்த மயங்க் அகர்வால் கைகளில் கேட்ச்சாக மலர்ந்தது.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

மார்க்கண்டேயாவின் மாயாஜாலத்தில் ஏமாந்து போன ஷாரூக் கான

சிக்கந்தர் ரசா அவுட்டானதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக் கான் களம் கண்டார். மிடில் ஆர்டரில் அதிரடியாகவும், அதேநேரத்தில் சூழலுக்கு ஏற்றபடி நிலைத்தும் ஆடக் கூடிய திறமை வாய்ந்த ஷாரூக் கான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தார். மார்க்கண்டேயா வீசிய கூக்ளியை அடித்தாட ஷாரூக் முயல, பந்து அவரை ஏமாற்றி கால் காப்பில் பட்டது. நடுவரின் அவுட் முடிவை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி அப்பீல் செய்தும் பலனில்லாமல் போனது. ஷாரூக் கான் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்த ஓவரில் உம்ரான் மாலிக் வேகத்தில் ஹர்பிரீத் ப்ரார் ஸ்டம்புகளை சிதறவிட்டார். 147.6 கி.மீ. வேகத்தில் வந்த பந்து ஸ்டம்புகளை பறக்கவிட்டது. அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அப்போது, 11.2 ஓவரில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த ஓவரில் மார்க்கண்டேயா மேலும் ஒரு விக்கெட்டை எடுத்து பஞ்சாப் கிங்சை மேலும் இக்கட்டில் தள்ளினார். அவரது பந்தில் ராகுல் சஹார் ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

தான் வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒருவிக்கெட் எடுத்து அசத்தினார் மார்க்கண்டேயா. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது, மேலும் விக்கெட் விழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த நாதன் வில்லிஸ் ரிவெர்ஸ் ஸ்வீப் என்ற மோசமான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், மார்க்கண்டேயா வீசிய கூக்ளி, அவரை ஏமாற்றி விட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்துவிட்டது. எல்லிஸ் டக் அவுட்டானார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

தனி ஒருவனாகப் போராடிய பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்

15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற் 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணி 100 ரன்களை எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது. இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் தனி ஒருவனாக அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டார். அடுத்த ஓவரில் இருந்து அவர் விஸ்வரூபம் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வழக்கமாக டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக பயன்படுத்தும் யார்க்கர் கிங் நடராஜனுக்கு அடுத்த ஓவரை வழங்கியது. இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் சிங்கிள் வாய்ப்புகளை புறக்கணித்த ஷிகர் தவான், அடுத்த 2 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி அரைசதத்தை எட்டினார். பஞ்சாப் அணியும் 100 ரன்களைக் கடந்தது. அடுத்த ஓவரை தானே சந்திக்க கடைசிப் பந்தில் ஒரு ரன்னையும் எடுத்தார் ஷிகர் தவான்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

புவனேஷ்வர் குமாரால் 3 முறை தப்பிப் பிழைத்த தவான்

புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான் அடுத்த பந்தில் அவுட்டாகி இருக்க வேண்டியது. யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்தை தவான் அடிக்க முயல, சரியான டைமிங் அமையாமல் பந்து பேட்டில் பட்டு புவனேஷ்வர் குமாரை நோக்கி வந்தது. ஆனால், அவரோ அதனை தவறவிட்டார்.

உம்ரான் மாலிக் வீசிய அடுத்த ஓவரிலும் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை புவனேஷ்வர் குமார் தவறவிட்டார். உம்ரான் மாலிக் வீசிய ஷார்ட் பிட்ச் பவுன்சரை தவான் தூக்கி அடிக்க முயற்சிக்க, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேல் எழும்பி டீப் பைன் லெக் திசையில் பறந்தது. அங்கே நின்றிருந்த புவனேஷ்வர் குமார் பந்தை கேட்ச் செய்ய தவறியதுடன், சிக்சராகவும் வழிவகுத்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

புவனேஷ்வர் குமாரால் மறுவாழ்வு கிடைத்த தவான் அந்த ஓவரில் மேலும் ஒரு சிக்சரையும், பவுண்டரியையும் விளாசினார்.

இதே புவனேஷ்வர் குமார், தவானுக்கு மூன்றாவது வாய்ப்பையும் வழங்கினார். அவர் வீசிய அடுத்த ஓவரில் புல்டாசாக வீசப்பட்ட பந்தை பவுலருக்கு நேரே தாழ்வாக தவான் விரட்டியடிக்க, புவனேஷ்வர் குமார் வழக்கம் போல் தடுமாறி கோட்டைவிட்டார். புவனஷ்வர் குமாரால் மீண்டும்மீண்டும் மறுவாழ்வு பெற்ற தவான், அவரது அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரி அடித்து தண்டித்தார்.

யார்க்கர்களை வீசி தவான் வேகத்திற்கு அணை போட்ட நடராஜன் - மிஸ்ஸான சதம்

19 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணி கேப்டன் தவான் 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். சதத்தை கடக்குமா என்றிருந்த அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திய அவர், தனிப்பட்ட முறையில் சதம் காண்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜன், அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். நல்ல பார்மில் நின்றிருந்த தவான் கடைசி ஓவரை விளாச முற்பட்டாலும், நடராஜன் தனது பிரம்மாஸ்திரமான யார்க்கர்களை வீசி அவரை திணறடித்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

நடராஜனின் சிறப்பான யார்க்கர்களால் பவுண்டரி, சிக்சர் என பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் திணறிய தவான் முதல் 5 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்தார். கடைசிப் பந்தில் நடராஜன் புல்டாசாக பந்து வீச, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தவான் மிட் விக்கெட் திசையில் பிரமாண்ட சிக்சரை விளாசினார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. அதில் மூன்றில் இரு பங்கு, அதாவது 99 ரன்களை கேப்டன் தவான் எடுத்திருந்தார். மற்ற வீரர்களில் சாம் கர்ரன் தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

ஐ.பி.எல்.லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு அறிமுகப் போட்டியிலேயே அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க்கண்டேயா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நடராஜன் 4 ஓவர்களில் 40 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ஓவரில் 6 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இருவருமே ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ஹைதராபாத் அணிக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த ஹாரி புரூக்

எட்டக் கூடிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் சொதப்பிய அதிரடி வீரர் ஹாரி புரூக்கை அந்த அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய போதிலும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக அவர், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்சை அதிரடியாக தொடங்கினார்.

எனினும், எளிதான இலக்கு என்பதால் தொடக்க வீரர்கள் இருவருமே ரிஸ்க் ஏதும் எடுக்காமல், ஏதுவான பந்துகளை மட்டுமே எல்லைக்கோட்டிற்கு விரட்டினர். முதல் 3 ஓவர்களில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய நான்காவது ஓவரில் முதல் 2 பந்துகளை ஹாரி புரூக் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் பந்தை லேட் கட் செய்து தேர்ட்மேன் திசையில் பவுண்டரி அடித்த அவர், இரண்டாவது பந்தை பவுலருக்கு நேராக விளாசினார்.

அதே ஓவரின் ஐந்தாவது பந்தை அர்ஷ்தீப் சிங் சரியான லென்த்தில் சற்று மெதுவாக வீச, சற்று முன்னதாகவே பேட்டை வீசிய ஹாரி புரூக் ஸ்டம்பை பறிகொடுத்தார். 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களை அவர் எடுத்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

ரன் ரேட் குறைந்ததால் ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி

முதல் விக்கெட் போன பிறகு அடுத்த சில ஓவர்களில் ஹைதராபாத் அணி அசாதாரண பொறுமை காத்தது. அதிரடி காட்ட வேண்டிய பவர் பிளேவில் ஐந்தாவது ஓவரில் 3 ரன்களும், ஆறாவது ஓவரில் 4 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட்டன. பவர் பிளே முடிவுக்கு வந்ததும், அடுத்த ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரின் பந்தில் திரிபாதி சிக்சர் விளாசினார். ஆனாலும், அந்த ஓவரில் வேறு ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. எட்டாவது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் ப்ரார் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார்.

5 முதல் 8 வரையிலான 4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 16 ரன்களை மட்டுமே சேர்த்ததால், அந்த அணி வெற்றி பெறத் தேவையான ரன் ரேட் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நெருக்கடியில், 9-வது ஓவரில் ராகுல் சஹார் வீசிய பந்தை மயங்க் அகர்வால் சிக்சருக்கு ஆசைப்பட்டு லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். வானோக்கி பறந்து சென்று கீழிறங்கிய பந்தை சாம் கர்ரன் அபாரமாக கேட்ச் செய்து அகர்வாலை வெளியேற்றினார். அவர் 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன் எடுத்திருந்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

வரிசையாக பவுண்டரிகளை தெறிக்க விட்ட ராகுல் திரிபாதி

ஆட்டம் படிப்படியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிச் செல்கிறதோ என்பது போல் தெரிந்த வேளையில்தான், ரன் ரேட்டை உயர்த்தும் பொறுப்பை ராகுல் திரிபாதி தானே கையில் எடுத்துக் கொண்டார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் அடுத்தடுத்து எல்லைக்கோட்டை முத்தமிட்ட வண்ணம் இருந்தன. மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த அதே ராகுல் சஹாரின் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளையும் திரிபாதி பவுண்டரிக்கு ஓடவிட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்களை நன்கு ஆடக் கூடிய மிடில் வரிசை பேட்ஸ்மேனான ராகுல் திரிபாதி, இளம் வீரர் ஹர்பிரீத் ப்ரார் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். மீண்டும் பந்து வீச வந்த ராகுல் சஹார் ஓவரில் 2 பவுண்டரிகளுடன் திரிபாதி அதிரடியாக 10 ரன்கள் சேர்த்தார். இதனால், 11 ஓவர்களில் 2 விக்கெட்டிற்கு 78 ரன் என்ற நிலையை எட்டியதால் ஹைதராபாத் அணி சற்று ஆசுவாசமடைந்தது.

மோகித் வீசிய 13-வது ஓவரில் பவுலரின் தலைக்கு நேரே பிரமாண்ட சிக்சர் அடித்த ராகுல் திரிபாதி 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரது அடுத்த ஓவரிலும் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை ராகுல் திரிபாதி விளாசினார். இதனால், 15-வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்துவிட்ட ஹைதராபாத் அணி, அந்த ஓவர் முடிவில் 118 ரன்களை எட்டியது.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

திரிபாதியுடன் ரன் வேட்டையில் கைகோர்த்த மார்க்ரம்

அடுத்த 5 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நெருக்கடி முற்றிலுமாக தணிந்து விட்டிருந்தது. அப்போது, ராகுல் திரிபாதியுடன் பார்ட்டியில் இணைந்து கொண்ட கேப்டன் மார்க்ரம், நேதன் எல்லிஸ் வீசிய 17-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உள்பட 4 பவுண்டரிகளை அடித்தார்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் திரிபாதி பவுண்டரி அடித்து, தமது அணி எதிர்பார்த்திருந்த தித்திப்பான முடிவைத் தேடித் தந்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் அசத்தல் சாதனை

நேற்றைய ஆட்டத்தில் தனி ஒருவனாக அணியை கரை சேர்க்கப் போராடிய ஷிகர் தவான், அதில் வெற்றி பெற முடியாமல் போனாலும் கூட சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். ஒரு ரன்னில் சதத்தை எட்ட முடியாமல் போன அவர், கடைசி விக்கெட்டிற்கு மொகித் ரதீயை ஒருமுனையில் வைத்துக் கொண்டே 55 ரன்களை சேர்த்து பிரமிக்க வைத்தார். ஐ.பி.எல்.லில் கடைசி விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும்.

அத்துடன், ஒரு அணியின் பேட்டிங்கில் மற்ற 10 வீரர்களுடன் ஜோடி சேர்ந்த 2-வது வீரர் என்ற பெருமையையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பார்த்திவ் படேல் இதே மைல்கல்லை எட்டியிருந்தார்.

IPL - SRH vs PBKS

பட மூலாதாரம், BCCI/IPL

அத்துடன், ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவீத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் ஷிகர் தவான் தன் வசமாக்கியுள்ளார். 3 போட்டிகளில் 225 ரன்களைக் குவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முந்தி தவான் முதலிடம் பிடித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: