ஐபிஎல் 2023: அற்புதம் செய்த ரின்கு சிங்- ரஷித் கானின் ஹாட்ரிக் வீண்

பட மூலாதாரம், BCCI/IPL
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா அணி மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
கொல்கத்தாவின் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் எடுத்த போதிலும் ரஷித் கான், அல்ஸாரி ஜோசப் ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சால் ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.
இதனால், குஜராத் டைட்டன்ஸ் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்துகொண்டிருந்த வேளையில், தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரிங்கு சிங் குஜராத்திடம் இருந்து வெற்றியை பறித்து கொண்டார் என்று கூறினால் அது மிகையாகாது.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் நிதீஷ் ராணா கூறும்போது, ‘ரின்கு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. 2வது சிக்ஸரை அவர் அடித்ததும் நம்பிக்கை மேலும் அதிகரித்தது. 100ல் ஒரு ஆட்டத்தில் நீங்கள் இவ்வாறு வெற்றி பெற முடியும். ரின்குவின் ஆட்டத்தை பற்றிக் கூற என்னிடம் வார்த்தையே இல்லை’ என்றார்.
தனது இன்னிங்ஸ் குறித்து ரின்கு சிங் கூறும்போது, "என்னால் முடியும் என்று நான் நம்பினேன். நம்பிக்கையோடு இறுதிவரை விளையாடு என்று நிதீஷ் ராணா என்னிடம் கூறினார். நான் நம்பினேன், அது சாத்தியம் ஆனது" என்றார்
முன்னதாக, கடந்த ஆட்டத்தில் நான்கு ஆண்டுகள் பின் ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் பலம் வாய்ந்த அணியாக குஜராத் டைட்டன்ஸ் வலம் வந்தது. இதனால் இயல்பாகவே இந்த அணிகள் மோதும் ஆட்டம் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பு வீணாகவில்லை என்பதை இன்றைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு
டாஸ் போடப்படும்போது குஜரான் டைடன்ஸ் சார்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரஷித் கான் வந்திருந்தார். டாஸை வென்ற அவர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறினார். மேலும், ஹர்திக் பாண்டியாவின் உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். இதேபோல், கொல்கத்தா அணியில் டிம் சௌதி, மந்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், லொக்கி பெர்குசன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
சுனில் நரேன் சுழலில் வீழ்ந்த சாஹா, கில்

பட மூலாதாரம், BCCI/IPL
குஜராத் டைடன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரித்திமான் சாஹா, சுப்மன் கில் களமிறங்கினர். கொல்கத்தா சார்பில் முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, உமேஷ் யாதவின் அடுத்த ஓவரில் 1 பவுண்டரியை குஜராத் பேட்ஸ்மேன்கள் எடுக்க 3 ஓவர் முடிவில் அந்த அணி 24 ரன்களை எடுத்திருந்தது.
முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் எதுவும் வீழாத நிலையில், 4வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு கேப்டன் நிதீஷ் ராணா வழங்கினார். இதற்கு நான்காவது பந்தில் பலன் கிடைத்தது. சாஹா தூக்கியடித்த பந்தை ஜெகதீசன் அற்புதமாக கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார். இதன் பின்னர், சுப்மன் கில்லுடன் சாய் சுதர்ஷன் இணைந்தார்.
சுப்மன் கில் அதிரடியான ஷாட்களுக்கு முயற்சி செய்யாமல் கிளாசிக் ஷாட்ஸ் மூலம் ரன்களை சேர்த்தார். வருண் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரிகளை கில் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது. பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
குஜராத்தின் விக்கெட்டை வீழ்த்த கொல்கத்தா கடுமையாக முயற்சி செய்தது. முதல் 8 ஓவர்களில் 6 பவுலர்களை அந்த அணி பயன்படுத்தியது. எனினும் பெரியதாக பலன் கிடைக்கவில்லை. சுப்மன் கில்- சாய் சுதர்ஷன் ஜோடி கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தனர். வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரின் பந்துகளை சாய் சுதர்சன் சிக்ஸருக்கு விரட்டி அதிரடி காட்டினார்.
சுனில் நரேன் வீசிய 12வது ஓவரில் சுப்மல் கில் தூக்கியடிக்க முயற்சித்து உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 39 ரன்களை எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அரை சதம் அடித்த சாய் சுதர்சன்
கில்லை தொடர்ந்து களத்திற்குள் வந்த அபினவ் மனோஹர், உமேஷ் யாதவின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். பெரிய ரன்னை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அடுத்த ஓவரிலேயே சுயாஷ் வீசிய கூக்லியில் போல்ட் ஆகி அவர் ஏமாற்றமளித்தார். இதைத் தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் - விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் கிடைத்த நல்ல பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர். இதனால் 17வது ஓவரில் சாய் சுதர்ஷன் அரை சதம் அடிக்க அதே ஓவரில் குஜராத் அணி 150 ரன்களை கடந்தது.
சுனில் நரேன் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தை சாய் சுதர்ஷன் தூக்கியடிக்க முயற்சிக்க அது கேட்சாக அமைந்தது. சுனில் நரேன் இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 3வது விக்கெட்டாகவும் இது அமைந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
அதிரடி காட்டிய விஜய் சங்கர்
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 159 ரன்களை எடுத்திருந்த நிலையில் 19வது ஓவரை பெர்குசன் வீச வந்தார். முதல் பந்தை அவர் நோ பாலாக வீச விஜய் சங்கர் அதை பவுண்டரிக்கு விரட்டினார். மேலும் ஒரு பவுண்டரி , 2 சிக்ஸர்களை அவர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது.
ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து 21 பந்துகளில் அரை சதம் அடித்த விஜய் சங்கர் அந்த ஓவரில் மேலும் 2 சிக்ஸர் அடிக்க குஜராத் அணி 204 ரன்களை குவித்தது. கடைசி 12 பந்துகளில் மட்டும் அந்த அணிக்கு 45 ரன்கள் கிடைத்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 4 பவுண்டரி , 5 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மெதுவான தொடக்கம்
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கொல்கத்தா களமிறங்கியது. முதல் ஓவரை கச்சிதமாக வீசிய ஷமி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அதே ஓவரின் 3வது பந்தை பேக்வர்ட் ஸ்கொயரில் தூக்கியடிக்க முயற்சிக்க யஷ் தயால் அற்புதமாக கேட்சி பிடித்து அவரை வெறியேற்றினார். அடுத்த ஓவரில் ஜகதீசனை லிட்டில் வெளியேற்ற கொல்கத்தா அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்திருந்தது.
வெங்கடேஷ் ஐயர்- நிதீஷ் ராணா அதிரடி
இதைத் தொடர்ந்து , இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய வெங்கடேஷ ஐயர் தனது அதிரடி பேட்டிங் மூலம் குஜராத் டைடன்ஸ் அணிக்கு குடைச்சல் கொடுத்தார். ஜோசப் வீசிய 8வது ஓவரில் 6 சிக்ஸரை அடித்து கேப்டன் நிதீஷ் ராணாவும் அதிரடியை வெளிப்படுத்தினார். டி20 போட்டிகளில் பௌலிங்கில் முதலிடத்தில் உள்ள ரஷித் கானின் பந்துவீச்சும் அவர்களிடம் தப்பவில்லை. அவர் வீசிய 11வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் அற்புதமான சிக்ஸரை அடிக்க, ராணா தன் பங்கிற்கு ஒரு பவுண்டரியை விளாசினார்.
யஷ் தயால் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெங்கடேஷ் ஐயர் அர சதம் எட்டினார். அந்த ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸர்கள் போக கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது. இதேபோல், 30 பந்துகளில் 50 ரன்கள் பார்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி அடுத்த 25 பந்துகளில் மேலும் 50 ரன்களை அடித்து 100 ரன்கள் பார்னர்ஷிப்பை எட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
திருப்பம் ஏற்படுத்திய அல்ஸாரி ஜோசப்
100 ரன்கள் பார்னர்ஷிப்பை எட்டிய அடுத்த பந்திலேயே நிதீஷ் ராணா தனது விக்கெட்டை இழந்தார். அல்ஸாரி ஜோசப் வீசிய பந்தை ராணா மிட் ஆஃப்பில் அடிக்க முயற்சி சமி கைகளில் கேட்சாக அது தஞ்சம் புகுந்தது. 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 45 ரன்களில் அவர் வெளியேறினார். ராணா ஆட்டமிழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் தனது அதிரடியை விடாமல் தொடர்ந்தார். லிட்டில் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி , 1 சிக்ஸர் அடித்து குஜராத் டைடன்ஸை மிரட்டினார்.
16 வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப், குஜராத் அணிக்கு சவாலாக இருந்த வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பம் ஏற்படுத்தினார். லாங் ஆன் திசையில் வெங்கடேஷ் ஐயர் அடித்த பந்தை சுப்மல் கில் பிடித்து அவரை வெளியேற்றினார். 40 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்டர் உட்பட 83 ரன்களை வெங்கடேஷ் ஐயர் எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரஷித் கான்
முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் எதையும் வீழ்த்தாமல் 35 ரன்களை விட்டுக்கொடுத்த ரஷித் கான், தனது கடைசி ஓவரில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மொத்தமாக சரணடைய வைத்தார். முதல் பந்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ரஸல் விக்கெட்டை வீழ்த்திய அவர், 2வது பந்தில் சுனில் நரேன், 3வது பந்தில் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை ஆட்டமிழக்க செய்து ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
7 பந்துகளில் 40 ரன் - ரின்கு சிங் செய்த மாயாஜாலம்
இதையடுத்து ஆட்டம் முழுமையாக திரும்பியது. கடைசி 12 பந்துகளில் 43 ரன்கள் வெற்றிக்கு தேவையாக இருந்தது. கைவசம் மூன்று விக்கெட்கள் மட்டுமே கொல்கத்தா வசம் இருந்தது. குஜராத் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறது என்பது போட்டியை பார்த்தவர்களின் கணிப்பாக இருந்தது. அப்போதுதான் கொல்கத்தாவின் ரின்கு சிங் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 19வது ஓவரை வீசிய லிட்டில் முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீச அதன் மூலம் 2 ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை எதிர்கொண்ட ரின்கு சிங் 1 ரன் எடுக்க, அடுத்து வந்த உமேஷ் யாத்வ் ஒரு ரன் எடுத்து மீண்டும் ரின்கு சிங்கிற்கு ஸ்ரைக் கிடைக்க செய்தார். 3வது, 4வது பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத ரின்கு 5வது பந்தை சிக்ஸருக்கும் ஆறாவது பந்தை பவுண்டரிக்கு விரட்ட அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.
கொல்கத்தா வெற்றி பெற 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை. யஷ் தயால் முதல் பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுக்க மீண்டும் ரின்குவிடம் ஸ்ரைக் கிடைத்தது. 5 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில் 2வது பந்தை எதிர்கொண்ட ரின்கு அதனை அற்புதமாக சிக்ஸருக்கு விரட்டினார். அடுத்த மூன்று பந்துகளையும் அவர் சிக்ஸருக்கு விரட்ட என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குஜராத் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்று இருந்தபோது அதையும் சிக்ஸருக்கு விரட்டி கொல்கத்தாவுக்கு மறக்க முடியாத வெற்றியை ரின்கு பரிசளித்தார். 21 பந்துகளில் 48 ரன்களை எடுத்த ரின்கு சிங், தான் சந்தித்த கடைசி 7 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












