தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன்: எல்லோரும் இவரை மெச்சுவது ஏன்?

 சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம், BCCI/IPL

"அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். கடந்த 15 நாட்களாக அவரது பேட்டிங், நீங்கள் பார்க்கும் அதன் முடிவுகள் அனைத்திற்கும் அவரது கடின உழைப்பு தான் காரணம். அடுத்த 2 ஆண்டுகளில் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் ஏன் இந்திய அணிக்காகவும் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்."

டெல்லி கேப்பிடல்ஸ்- குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு குஜராத் அணியின் பேட்ஸ்மேனான சாய் சுதர்ஷன் குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியது இது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 3-ஆவது ஓவரில் சாஹாவும் 5வது ஓவரில் சுப்மன் கில்லும் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து குஜராத் அணி தவித்திருந்தது.

அந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் - விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. குறிப்பாக சாய் சுதர்ஷனின் ஆட்டம் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் முதல் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி குஜராத் அணிக்கு அச்சுறுத்தலாக நோர்ட்ஜே இருந்தார். இருப்பினும் 144 கிலோமீட்டர் வேகத்தில் வந்த அவரது பந்தை 69 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து தான் எவ்வித அழுத்தத்திலும் இல்லை என்பதை சாய் சுதர்ஷன் நிரூபித்தார்.

"கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர் செய்தது அணிக்கு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. உண்மையாகவே, அவர் திறமை வாய்ந்த நபர், எங்கள் அணிக்கு நிச்சயம் அவர் தேவை" என்று நேற்றைய ஆட்டத்தில் 31 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த மற்றொரு வீரரான டேவிட் மில்லர் சாய் சுதர்ஷன் குறித்து கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு சுப்மான் கில் எடுத்திருந்த 63 ரன்கள் எந்தளவு காரணமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது சாய் சுதர்ஷன் எடுத்திருந்த 22ரன்கள். முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் எடுக்கப்பட்டவை என்பதால் அவரது ஆட்டம் கவனிக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகம் விருது பெற்ற பின் பேசிய சாய் சுதர்ஷன், "எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி. இங்கு முதன்முறையாக நிற்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் எண்ணினேன். ஆட்டத்தில் நான் அழுத்தமாக உணரவில்லை" என்று தெரிவித்தார்.

யார் இந்த சாய் சுதர்ஷன்?

சாய் சுதர்ஷன் பெற்றோரும் விளையாட்டு பாரம்பாரியத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரது தந்தை பரத்வாஜ் தெற்கு ஆசியா போட்டிகளிலும் இந்திய அணிக்காக தடகளத்தில் பங்கேற்றவர். இதேபோல் அவரது தாயார் உஷா பரத்வாஜ் தமிழ்நாடு வாலிபால் அணிக்காக விளையாடியுள்ளார்.

இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்ஷன் 2021-2022 முஸ்தக் அலி டிராபி தொடரில் 7 ஆட்டங்களில் 182 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர். டிஎன்பிஎல் எனப்படும் 2019ல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சென்னை சேப்பாக் கில்லீஸ் அணியில் முதலில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன் அந்த அணிக்காக களமிறங்கவே இல்லை.

இதனிடையே 2021ல் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் போட்டியிலேயே 5 சிக்ஸர், 8 பவுண்டரிகள் உட்பட 43 பந்துகளில் 87 ரன்கள் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அந்த தொடரில் 8 போட்டிகளில் 358 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தையும் அவர்பிடித்தார்.

முதல் ஆட்டத்திலேயே தனது திறமையை நிரூபித்த சாய் சுதர்ஷனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பாராட்ட தவறவில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பையன் சாய் சுதர்ஷன் சிறப்பானவன். உடனடியாக அவனை தமிழ்நாடு அணியில் சேர்த்துகொள்ளுங்கள். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தற்போது 20 ஓவர் போட்டிகளுக்கு ஏற்ற விதத்திலும் அவர் மாறிவிட்டார்" என்று பாராட்டி இருந்தார்.

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI/IPL

டிஎன்பிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போனவர்

22 வயதாகும் சாய் சுதர்ஷன் தற்போது தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடந்தது. இதில், லைக்கா கோவை கிங்ஸ் அணி சாய் சுதர்ஷனை 21.6 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. டிஎன்பிஎல் தொடருக்காக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை இதன் மூலம் சாய் சுதர்ஷன் பெற்றார்.

இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி வரும் குஜராத் அணி சாய் சுதர்ஷனை 20 லட்சத்திற்கு தான் ஏலம் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரை விட டிஎன்பிஎல் தொடரில் அவர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்ஷன் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அவருக்கு தமிழ்நாடு அணியிலும் இடம் கிடைக்க செய்தது.

ஷாருக் கான், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், அபரஜித், நாராயணன் ஜெயகதீஷன் போன்ற திறமையான வீரர்கள் உள்ள தமிழ்நாடு அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சாய் சுதர்ஷன் சிறப்பாகவே பயன்படுத்திக்கொண்டார். சையித் முஸ்தக் அலி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் 35 ரன்களை அவர் எடுத்தார். இதேபோல் ரஞ்சி டிராபியில் தனது அறிமுக போட்டியிலேயே 179 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தமிழக அணிக்காக ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் என அனைத்து தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை சாய் சுதர்சன் வெளிப்படுத்தி வருகிறார். விஜய் ஹசாரா டிராபி போட்டியில் 3 சதம் உட்பட 610 ரன்களையும் ரஞ்சி டிராபியில் 7 ஆட்டங்களில் 2 சதம் உட்பட 572 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: