சென்னை சூப்பர் கிங்ஸுக்கு புதிய கேப்டனா? தோனியின் எச்சரிக்கைக்கு என்ன காரணம்

சென்னைக்கு புதிய கேப்டனா?

பட மூலாதாரம், Twitter/IndianPremierLeague

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்றுள்ளது. பேட்டிங்கில் கணிசமாக ரன்களைக் குவித்த போதிலும் பலவீனமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணியால் போராடியே வெல்ல முடிந்தது. இதனால் அதிருப்தியடைந்துள்ள 'மஞ்சள் படையின்' கேப்டன் தோனி விடுத்துள்ள புதிய எச்சரிக்கை அந்த அணி ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

கேலரி பிரச்னை, கொரோனா பேரிடர் ஆகிய காரணங்களால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2019-க்குப் பிறகு நேற்று தான் முதல் போட்டி நடைபெற்றது. சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் தந்த புத்துணர்ச்சியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னௌ ஜெயன்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

217 ரன் குவித்தும் வெற்றிக்காக கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ்

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு இம்முறையும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கைகொடுத்தார். அவருடன் இணைந்து டெவன் கான்வோ தந்த அதிரடி தொடக்கத்தின் வாயிலாக கிடைத்த சிறப்பான அடித்தளத்தை பின்னர் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களது ஆதர்ச நாயகனை நேரில் கண்ட மஞ்சள் படை ரசிகர்களுக்கு தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து விருந்து படைத்தார்.

217 ரன்களைக் குவித்துவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு லக்னௌ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் கிலி கொடுத்துவிட்டார். மின்னல் வேகத்தில் அணியின் ஸ்கோரை எகிறச் செய்த அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணியை மிரள வைத்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்து வெறியேறியதும் ஆட்டம் சென்னை அணியின் வசமானது.

மலைக்க வைக்கும் ஸ்கோர் தந்த நெருக்கடியில் லக்னௌ வீரர்கள் அடித்தாட முயன்று விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். எனினும், சென்னை அணிக்கு வெற்றி அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. கடைசி ஓவர் வரையிலும் போராடியே வெற்றியே வசமாக்க வேண்டியிருந்தது.

சென்னைக்கு புதிய கேப்டனா?

பட மூலாதாரம், BCCI/IPL

அதிக முறை 200 ரன்னுக்கு மேல் குவித்து சென்னை அசத்தல் சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 200 ரன்னுக்கு மேல் எடுத்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து சென்னை அணி 24 முறை 200 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 22 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது.

லக்னௌ அணிக்கு எதிரான வெற்றி சென்னை அணிக்கு நிம்மதியையும் ஆசுவாசத்தையும் அளித்திருந்தாலும் இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் செயல்பாடு முழு திருப்தி அளிப்பதாக அமையவில்லை. இந்த ஆட்டத்தை முழுமையாக திரும்பிப் பார்த்தாலே அது புலப்படும். போட்டி முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனியின் வார்த்தைகளும் அதனை உறுதிப்படுத்தின.

ருதுராஜின் அசத்தல் பார்ம் சென்னைக்கு மிகப்பெரிய பிளஸ்!

கடந்த 3 தொடர்களாகவே சென்னை அணியின் ஸ்கோர் போர்டில் முக்கிய பங்கு வகித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட், நடப்புத் தொடரில் முதல் போட்டியில் இருந்தே அசத்தி வருவது சென்னை அணிக்கு மிகப்பெரிய பிளஸ். முதல் போட்டியில் 50 பந்துகளில் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 92 ரன்களைச் சேர்த்த அவர், நேற்றைய போட்டியிலும் தனது சிறப்பான பார்மைத் தொடர்ந்தார். தொடக்கம் முதலே பந்துகளை அடித்தாடிய ருதுராஜ், 31 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார்.

டெவன் கான்வேயும் உறுதுணையாக ஆடியதால் சென்னை அணி 6 ஓவர்கள் பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களைக் குவித்து பிரமாதப்படுத்தியது. தொடக்க ஜோடியின் அதகள ஆட்டம் சென்னை அணிக்கு நம்பிக்கை தருகிறது. வழக்கத்திற்கு மாறாக, நடப்புத் தொடரைப் பொருத்தவரை, அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்ச் தொப்பியை முதல் ஆட்டம் முதலே ருதுராஜ் வசப்படுத்தியுள்ளார்.

சென்னைக்கு புதிய கேப்டனா?

பட மூலாதாரம், Twitter/IndianPremierLeague

வாண வேடிக்கை நிகழ்த்திய தோனி முன்வரிசையில் களம் காண்பாரா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியைப் போலவே லக்னௌவுக்கு எதிராகவும் கடைசிக் கட்டத்தில் களம் கண்ட தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து பிரமாதப்படுத்தினார். இரண்டே பந்துகளில் 12 ரன் சேர்த்த அவர், அடுத்த பந்தில் அவுட்டானார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி அடித்த சிக்சர்களை நேரில் கண்ட ரசிகர் படையின் ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

இதன் மூலம் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் 236 ஆட்டங்களில் ஆடி 24 அரைசதம் உள்பட 5004 ரன்கள் குவித்துள்ளார். கோலி, தவான், வார்னர், ரோகித், ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் தோனி ஆவார்.

41 வயதாகிவிட்ட தோனி கடந்த 3 தொடர்களாகவே தொடர்ச்சியான சிறப்பான பேட்டிங்கைத் தர முடியாமல் திணறி வந்தார். குறிப்பாக, அவரது பேட்டில் இருந்து பவுண்டரி, சிக்சர்கள் அதிகம் வரவில்லை. அதற்கு நேர்மாறாக, இம்முறை 2 போட்டிகளிலுமே அசத்தலாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிய அவர், தனது சிறப்பான பார்மை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பேட்டிங்கில் முன்வரிசையில் களமிறங்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நடக்குமா என்பது அடுத்து வரும் போட்டிகளில் தெரியவரும்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

லக்னௌ அணி வீரர் கைல் மேயர்ஸின் மிரட்டல் பேட்டிங்

லக்னௌ அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரரான கைல் மேயர்சுக்கு இதுதான் முதல் ஐ.பி.எல். தொடர். அறிமுக போட்டியில் டெல்லி கேப்பிடல்சை புரட்டி எடுத்த கைல் மேயர்ஸ், நேற்றும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை மிரள வைத்தார். அவரது பேட்டில் இருந்து சிக்சர்களும், பவுண்டரிகளும் பறந்த வண்ணம் இருந்தன. வேகப்பந்துவீச்சாளர்களான பென் ஸ்டோக்ஸ், துஷாரா தேஷ்பாண்டே ஆகியோரை ஒரே ஒரு ஓவருடன் சென்னை அணி ஓரங்கட்டும் வகையில் கைல் மேயர்ஸ் அதிரடியில் மிரட்டினார்.

கைல் மேயர்ஸ் களத்தில் இருந்த வரை சென்னை அணி நிர்ணயித்திருந்த 217 ரன் இலக்கு என்பது சவாலான ஒன்றாகவே தோன்றவில்லை. ஏனெனில், லக்னௌ அணி 6 ஓவர் பவர் பிளே முடிவில் 80 ரன்களைக் குவித்துவிட்டது. மேயர்ஸ் வீழ்ந்த பின்னரே சென்னை அணியால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. அடுத்து வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு கிலி கொடுக்கும் வீரராக திகழும் அதேநேரத்தில், அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களுக்கு அவர் நிச்சயம் விருந்து படைப்பார் என்று நம்பலாம்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

சென்னை அணிக்கு கைகொடுத்த சுழற்பந்துவீச்சு

சென்னை மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்தாலும் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. நேற்றைய ஆட்டம் அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. சவாலான இலக்கைத் துரத்திய லக்னௌ அணிக்கு மின்னல் வேக தொடக்கம் கொடுத்த கைல் மேயர்ஸின் அதிரடிக்கு சுழற்பந்துவீச்சு மூலமே சென்னை அணி அணை போட்டது.

வேகப்பந்துவீச்சை அடிக்கடி எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்த கைல் மேயர்ஸ், மொயீன் அலியின் சுழலில் வீழ்ந்ததும் ஆட்டம் படிப்படியாக சென்னையின் கட்டுப்பாட்டில் வந்தது. மொயீன் அலி - மிட்செல் சாண்ட்னர் சுழற்பந்துவீச்சுக் கூட்டணி லக்னௌ பேட்ஸ்மேன்களை அதிரடியாக ரன் சேர்க்க விடாமல் கட்டிப் போட்டது. லக்னௌ அணியின் பேட்டிங் வரிசையில் முதல் 5 பேட்ஸ்மேன்களையும் இந்த கூட்டணியே வெளியேற்றியது.

4 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து மேயர்ஸ் உள்ளிட்ட 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி, ஆட்டநாயகனாக ஜொலித்தார். மறுமுனையில் மொயீன் அலிக்கு கம்பெனி கொடுத்த மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான தீபக் ஹூடாவை போல்டாக்கினார். இருவரின் சிறப்பான சுழற்பந்துவீச்சே மிடில் ஓவர்களில் லக்னௌவின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தியதுடன் முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி சென்னையின் வெற்றிக்கு வித்திட்டது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

ரவீந்திர ஜடேஜாவின் மோசமான பார்ம்

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச் சீட்டுகளில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. குறிப்பாக, சென்னை மைதானத்தில் அவரது சுழற்பந்துவீச்சு எப்போதுமே அணிக்கு கைகொடுக்கும். நேற்றைய போட்டியிலும் மொயீன் அலி - சாண்ட்னர் சுழற்பந்துவீச்சு கூட்டணி படிப்படியாக ஆட்டத்தை சென்னை பக்கம் திருப்பிய பிறகு, மிக முக்கியமான கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவைப் பயன்படுத்த கேப்டன் தோனி முயன்றார்.

ஆனால், ஜடேஜாவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார் நிகோலஸ் பூரன். அதுவும், ரிவெர்ஸ் ஸ்வீப்பில் அவர் அடித்த இரண்டாவது சிக்சர் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தாலும் சென்னை ரசிகர்கள் சற்று மிரண்டுதான் போய்விட்டனர். இதன் பிறகு ஜடேஜாவை கேப்டன் தோனி பயன்படுத்தவே இல்லை. 2 போட்டிகளிலும் ஜடேஜா பேட்டிங்கிலும் பெரிய அளவில் பங்களிக்கவில்லை. சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல விரும்பும் மஞ்சள் படை ரசிகர்கள், ஜடேஜா மீண்டும் பார்முக்கு திரும்புவது அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

சென்னைக்கு புதிய கேப்டனா?

பட மூலாதாரம், ALEX DAVIDSON

பலவீனமான வேகப்பந்துவீச்சால் ரணகளமாகும் பவர் பிளே, டெத் ஓவர்கள்

சென்னை அணியைப் பொருத்தவரை, அதன் பலவீனமான வேகப்பந்துவீச்சு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. காயம் காரணமாக கடந்த தொடர் முழுவதும் விளையாடாத தீபக் சாஹர்ல் இம்முறை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காயம் காரணமாக பந்துவீச மாட்டார் என்று கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பவர் பிளேவில் பந்துவீசினாலும் கூட அது கொஞ்சமும் எடுபடவில்லை. அந்த ஓவரில் 18 ரன்களை வாரிக்கொடுத்த அவருக்கு கேப்டன் தோனி மீண்டும் பந்துவீச வாய்ப்பு தரவே இல்லை.

குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சற்று நம்பிக்கை அளித்த மற்றொரு இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹங்கர்ஹெர் இம்முறை தடுமாறினார். அவரது பந்துவீச்சை லக்னௌ பேட்ஸ்மேன்கள் விளாசிவிட்டனர். இம்பாக்ட் பிளேயராக இந்த போட்டியிலும் உள்ளே வந்த துஷார் தேஷ்பாண்டே பவர் பிளே ஓவர்களில் தடுமாறுகிறார். முதல் ஓவரில் நோபால், வைட் என்று உதிரிகளை வாரியிறைத்து 18 ரன்களை விட்டுக் கொடுத்த அவரை வேறுவழியின்றி கடைசிக் கட்டத்தில் தோனி பயன்படுத்தினார்.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்து ரசிகர்களை அவர் குஷிப்படுத்தினார். எனினும், பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களை வீச சென்னை அணிக்கு நம்பிக்கையான பவுலர்கள் இன்னும் இல்லை என்பது கவலை தரும் விஷயம் தான்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

உதிரிகளை வாரி இறைக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள்

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சு வெகு சாதாரணமானது, பலவீனமானது என்பது ஊருக்கே தெரியும் என்றாலும், நேற்றைய போட்டியில் அவர்கள் உதிரிகளை வாரியிறைத்தது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கேப்டன் தோனியையே வெறுத்துப் போகச் செய்துவிட்டது. குறிப்பாக, பவர் பிளேவில் துஷார் தேஷ்பாண்டே வீசிய நான்காவது ஓவர், சென்னை அணி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. 2 நோ பால், 3 வைட்களை வீசிய தேஷ்பாண்டே இணையத்தில் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.

அதேபோல், டெத் ஓவர்களில் வைட் பால், நோ பால் வீசுவது சென்னைக்கு தொடர் கதையாகி வருகிறது. தீபக் சஹரின் அவரது கடைசி ஓவரில் 3 வைட் பால்களை வீசினார். வெற்றிக்கு யாருக்கு என்பது மதில் மேல் பூனையாக இருந்த பரபரப்பான கட்டத்தில், 19வது ஓவரை வீசிய ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் 3 வைட்கள் வீசி ரசிகர்களை வெறுப்பேற்றினார். போதாக்குறைக்கு தீபக் ஹூடா ஒரு கேட்சையும் தவறவிட்டார். இத்தனை பலவீனங்கள், குறைகளையும் தாண்டியே சென்னை அணி வெற்றியை ருசித்திருக்கிறது.

"சென்னை அணிக்கு புதிய கேப்டன்" - பந்துவீச்சாளர்களுக்கு தோனி எச்சரிக்கை

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மீதிருந்த ரசிகர்களின் அதிருப்தியை கேப்டன் தோனியும் அப்படியே பிரதிபலித்தார். போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ""வேகப்பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை, நிலைமைக்கு ஏற்றவாற பந்துவீச வேண்டும். எதிரணி பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தோனி, "நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நோ பால், வைட் வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாட வேண்டியிருக்கும்." என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

'புதிய கேப்டன்' - தோனி அப்படிச் சொல்வது ஏன்?

நேற்றைய போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக சென்னை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைசி ஓவரில் மேலும் ஒரு வீரரை உள் வட்டத்திற்குள் பீல்டிங் நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதாவது, 5 வீரர்களுக்குப் பதிலாக 4 வீரர்கள் மட்டுமே உள் வட்டத்திற்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

ஐ.சி.சி. அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, போட்டிகளில் ஒரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால், முதல் முறை அந்த அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அது நடந்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சமும், அணியின் பிற வீரர்களின் சம்பளத்தில் 25 சதவீதமும் அபராதம் வசூலிக்கப்படும்.

மூன்றாவது முறையும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அந்த அணியின் கேப்டன் அடுத்து வரும் ஒரு ஆட்டத்தில் விளையாட முடியாது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடுவார். இந்த விதிகளை மனதில் வைத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, "உதிரிகளை நிறைய வீசுவதன் மூலம் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்வது தொடரும் பட்சத்தில் புதிய கேப்டனின் கீழ் விளையாட வேண்டியிருக்கும் " என்று பந்துவீச்சாளர்களை எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: