'காதலில் விழுங்கள்' - சீன கல்லூரிகளின் இந்த சுற்றறிக்கைக்கு என்ன காரணம்?

சீனா, காதல், மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

  • சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து "காதலில் விழுங்கள்" என்று சுற்றறிக்கை மூலம் கூறி இருக்கிறது
  • விடுமுறையின் போது, பயண அனுபவங்களை குறிப்புகளாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கல்லூரிக்கு திரும்பி வரும் போது சமர்பிக்கவும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது.

விடுமுறை அளித்த கல்லூரி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வசந்த காலத்தை வெளியே சென்று கொண்டாட வசதியாக தங்களது மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருக்கிறது.

ஃபேன் மீ (Fan Mei) கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விடுமுறையில் செல்லலாம் என அந்த குழுமம் மார்ச் 23ஆம் தேதியன்று அறிவித்தது.

சீனாவில் ஏப்ரல் 5ஆம் தேதி கிங்மிங் திருவிழாவாக அறியப்படுகிறது. அதையொட்டி சீனாவில் இந்நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 'கல்லறை சுத்தம் செய்யும் தினம்' என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.

இதையொட்டியே இந்த கல்லூரிகள் விடுமுறையை நீட்டித்து வசந்த கால விடுமுறை என்று அறிவித்து இருக்கிறது.

"மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வசந்த கால விடுமுறையை வழங்குகிறது," என்று மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள், இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வசந்த காலத்தின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துங்கள்," என மாணவர்களிடம் கல்லூரி தெரிவித்துள்ளது.

ஃபேன் மீ குழுமத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்தும் விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கான பயிற்சியை வழங்குகின்றன.

விமர்சனத்திற்குள்ளான அறிவிப்பு

சீனா, காதல், மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அன்பை வெளிப்படுத்த விடுமுறை அளித்த அறிவிப்பு இணையவாசிகளிடம் கவனத்தைப் பெற்றது. சீனாவின் பிரபல சமூக ஊடகமான வெய்போவில் இது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து சீனா நியூஸ் நெட்வெர்க் ஊடகம் இந்த கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் சிச்சுவான் சவுத்வெஸ்ட் ஏவியேஷன் கல்லூரியை தொடர்பு கொண்டு கருத்து கேட்டது.

அப்போது பேசிய அந்தக் கல்லூரியின் துணை முதல்வர் லியூ பிங், இந்த விடுமுறை வழக்கமான ஒன்று. 2019-ஆம் முதல் எங்கள் கல்லூரியில் வசந்த காலத்தின் போது விடுமுறை அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது என்றார்.

சீனா, காதல், மக்கள் தொகை

பட மூலாதாரம், Weibo

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டுக்கான கருத்துருவாக 'பூக்களை அனுபவியுங்கள், காதலில் விழுங்கள்' என அன்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

தேசிய சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படியும், வெளியே சென்று நண்பர்களை உருவாக்கி கொள்ள விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கேட்ட மாணவர்களின் கோரிக்கை அடிப்படையிலும் இந்த விடுமுறைத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது என்று லியூ தெரிவித்தார்.

ஜியாங்சி மாகாணத்தின் பண்பாடு, சுற்றுலா கழகத்தின் இயக்குநரான மீ, "இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் சீனா முழுவதும் வசந்த காலம், இலையுதிர் காலங்களின் போது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து இருந்ததாக, சீனா இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான 'சீனா யூத் டெய்லி' செய்தி வெளியிட்டு இருந்தது.

விடுமுறையிலும் ஹோம் ஒர்க்

7 நாட்களுக்கு வசந்த கால விடுமுறை அளித்திருந்தாலும், விடுமுறை முடிந்து திரும்ப கல்லூரிக்கு வரும் போது பயண அனுபவங்களை குறிப்புகளாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமர்பிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஹோம் ஒர்க் வழங்கப்பட்டுள்ளது என்று சீனா நியூஸ் நெட்வெர்க் ஊடகத்திடம் பேசிய யாங் ஹான்யூ தெரிவித்துள்ளார்.

"நான் லிஜியாங்கிற்கு விடுமுறையை கொண்டாட 4 - 5 நாட்கள் செல்ல திட்டமிட்டுள்ளேன். கடைசி இரண்டு நாட்களில் கல்லூரி கொடுத்துள்ள ஹோம் ஒர்கை தயார் செய்வேன்," என்று அவர் தெரிவித்தார்.

சீனா, காதல், மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

குழந்தை பிறப்பை ஊக்குவிக்க விடுமுறையா?

காதலிக்க விடுமுறை அளித்த கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், இந்த அறிவிப்பின் மூலம் குறைந்து வரும் சீனாவின் மக்கள் தொகையும், குழந்தை பிறப்பு விகிதமும் அதிகரிக்கக்கூடும் என சீனாவின் ட்விட்டர் பதிப்பான வெய்போவில் கருத்துகள் பகிரப்பட்டு இருந்தன.

"இதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பிரபலப்படுத்த முடியாதா?" என ஒரு பயனர் கருத்திட்டு இருந்தார்.

"கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க சிச்சுவான் எடுத்துள்ள முயற்சி" என மற்றொருவர் பதிவிட்டு இருந்தார்.

சீனாவில் வேகமாக குறைந்து வரும் பிறப்பு, திருமண விகிதங்களை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கை அவ்வப்போது செய்யப்படுகின்றன என 'இன்சைடர்' செய்தி வெளியிட்டு இருந்தது.

புதிதாக திருமணம் செய்யும் நபர்களுக்கு 30 நாட்கள் "திருமண விடுமுறை" வழங்குவது, சீனாவின் சில பல்கலைக்கழங்கள் காதலிப்பது எப்படி என ஆன்லைனில் கற்பிப்பது, திருமணமாகமல் இருக்கும் வயதான நபர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வது என உள்ளூர் நிர்வாகங்கள் பல முயற்சிகளை செய்வதாக 'இன்சைடர்' குறிப்பிட்டுள்ளது.

குறைந்து வரும் மக்கள் தொகை

சீனா, காதல், மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் மக்கள் தொகை முதல் முறையாக குறைந்துள்ளது.

சீனாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஒரு குழந்தையை பெற நினைக்கிறார்கள். சிலர் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புவது இல்லை என்று புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவில் குழந்தை இல்லாத பெண்களின் எண்ணிக்கை 2015 இல் இருந்த 6 சதவிகிதத்திலிருந்து 2020 இல் 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சீனாவின் மக்கள்தொகை, மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களிடையே , குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை குறைந்து வருகிறது என்று இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டில் சீனப் பெண்களின் குழந்தைகளைப் பெறுவதற்கான சராசரி விருப்ப எண்ணிக்கை 1.76 ஆக இருந்தது, இது 2021 இல் 1.64 ஆகக் குறைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: