தடுமாறிய குஜராத்தை தூக்கி நிறுத்திய தமிழ்நாடு வீரர்கள்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி கேப்பிடல்ஸை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி நடப்பு தொடரில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றியை ருசித்திருக்கிறது குஜராத் டைடன்ஸ் அணி.

டாப் ஆர்டர்களின் தடுமாற்றத்தால் தோல்வியில் விளிம்பில் தவித்த அணியை, வெற்றிப் பாதைக்கு மீட்டு வந்துள்ளனர் தமிழ்நாடு வீரர்கள். என்ன நடந்தது?

முதல் ஓவரில் நடந்த 'ட்ராமா'

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 7வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் வேகத்தில் திக்குமுக்காடிய பேட்ஸ்மேன்கள் அக்சரின் 'அற்புதத்தால்' மீண்டெழுந்த டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். நேற்றைய சி.எஸ்.கே ஆட்டம் கண்முன் வந்து சென்றது. அந்தளவுக்கு முதல் ஓவரில் மட்டுமே 11 பந்துகளை வீசினார் ஷமி. பந்து அவ்வளவு வேகமாக சீறியது. எதிர்கொள்ள முடியாமல் டேவிட் வார்னரின் முகத்தில் சிரிப்பு வெளிப்பட்டது. உதிரிகள் உள்பட மொத்தம் 11 ரன்களை சேர்த்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் தன்மை புலப்பட்டுவிட்டது. டி20 போட்டியா டெஸ்ட் ஆட்டமா என வியக்கும் அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் கை வண்ணத்திற்கு கைக்கொடுத்தது ஆடுகளம். டெல்லி அணியோ வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு பக்கம், அக்சர் பட்டேல் அணியை மீட்க தனி ஆளாக போராட, குஜராத்திற்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.

வேகத்தால் வீழ்ந்த டெல்லி அணி

குஜராத் வேகத்தில் திக்குமுக்காடிய பேட்ஸ்மேன்கள் அக்சரின் 'அற்புதத்தால்' மீண்டெழுந்த டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

முதல் ஓவரைத் தவிர்த்து, பவர் பிளேவில் அடுத்தடுத்த ஓவர்களை துல்லியமாக வீசினார் முகமது ஷமி. அவரது வேகத்தில் ஷமி, மிட்செல் மார்ஷ் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.

குஜராத் சார்பில் புயல் வேகத்தில் வீசினார் அல்சாரி ஜோசஃப். அவரது துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறியது டெல்லி அணி.

அல்சாரி ஜோசஃப் வேகத்தில் டேவிட் வார்னரும் அடுத்த பந்திலேயே ரில்லி ரூசோவும் டக் அவுட்டாகி வெளியேறினர். அபிஷேக் போரல் ஹெல்மெட்டையும் அல்சாரி ஜோசஃபின் ஷாட் பால் பதம் பார்த்தது. 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய டெல்லி அணியை, தனி ஆளாக நின்று மீட்கத் தொடங்கினார் அக்சர் படேல்

அக்சர் நிகழ்த்திய 'அற்புதம்'

மொத்தம் 22 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அக்சர் பட்டேல் 3 சிக்சர், 2 பவுன்டரிகளை விளாசி 36 ரன்கள் சேர்த்தார். அதுவரை குஜராத் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், நேர்த்தியான ஷாட்களால் ரன்களை குவிக்கத் தொடங்கினார் அக்சர் படேல்.

மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், அக்சர் படேலின் பங்களிப்பால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

மைதானத்திற்கு வந்த ரிஷப் பண்ட்

குஜராத் வேகத்தில் திக்குமுக்காடிய பேட்ஸ்மேன்கள் அக்சரின் 'அற்புதத்தால்' மீண்டெழுந்த டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தை காண டெல்லியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் வருகை தந்தார்.

கார் விபத்தால் படுகாயம் அடைந்து, தற்போது மீண்டும் வரும் ரிஷப் பண்ட், போட்டியை கண்டுகளிக்க வருகை தந்தார். அவரது புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

தடுமாறிய குஜராத் - கைகொடுத்த தமிழ்நாடு வீரர்கள்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

163 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைடன்ஸ். சாஹா 14 ரன்களில் விடைபெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மான் கில் இம்முறை 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதல் இரண்டு விக்கெட்களையும் நோர்ட்ஜே எடுத்திருந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து குஜராத் தடுமாறிக் கொண்டிருந்தது.

4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி ரன்களை மெல்ல சேர்த்தனர். இம்பாக் ப்ளேயராக களமிறங்கிய விஜய் சங்கர், 23 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்த்து குஜராத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின் ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சனை பாராட்டிய பாண்டியா

மறுமுனையில் சாய் சுதர்சன் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஐபிஎல் தொடரில் தனது 2வது அரை சதத்தை எட்டினார். 48 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்து இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 16 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் அதிரடியாக 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்து குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சாய் சுதர்சன் பெற்றார்.

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, `அவர்(சாய் சுதர்சன்) மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். கடந்த 15 நாட்களாக அவரது பேட்டிங், நீங்கள் பார்க்கும் அதன் முடிவுகள் அனைத்திற்கும் அவரது கடின உழைப்பு தான் காரணம். அடுத்த 2 ஆண்டுகளில் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் ஏன் இந்திய அணிக்காகவும் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்` என்று குறிப்பிட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: