'என்னுடைய 14 வயதில் என் திருமண சான்றிதழில் அம்மா கையெழுத்திட்டார்' - அமெரிக்காவிலும் குழந்தை திருமணங்கள்

அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள், குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம், Given to the BBC by Patricia Lane

படக்குறிப்பு, 13 வயதில் கர்ப்பமான பட்ரிசியா லேனுக்கு குடும்பத்தினர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்
    • எழுதியவர், அயெலன் ஒலிவா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பசுமையான மலைகளும் அழகாய் நதி பாயும் ரம்மியமான ஈடன் ப்ரேரி என்ற சிறிய நகரத்தில் பட்ரிசியா லேன் வளர்ந்தார். பலருக்கு இந்த இடம் அழகான வாழ்விடமாகத் தோன்றலாம். ஆனால் பட்ரிசியாவைப் பொருத்தவரையில், குழந்தைப் பருவத்தை தொலைத்த ஊராகவே நினைவில் இருக்கிறது.

"நானும் எனது சகோதரரும் கலாசார ரீதியாக மிகவும் தனிமைப்படுத்தப்பட்டோம். பெரிய அமெரிக்க நகரத்தின் புறநகர்ப் பகுதியில் நாங்கள் வாழ்ந்தபோதிலும், எங்களது வாழ்க்கை மிகவும் இறுக்கமானதாகவும் அடக்குமுறை நிறைந்ததாகவும் இருந்தது," என்று பட்ரிசியா நினைவுகூர்கிறார்.

மிகவும் இளம் வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்ரிசியா கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார். தனது 12 வயதிலேயே அவசர உதவி மையம் ஒன்றை அவர் நாடினார்.

அங்குதான் அவரது கணவர் டிம்மை சந்தித்தார். ஒரு நாள் அவரது அழைப்பிற்குப் பதிலளித்த டிம், சில மாதங்களுக்குப் பிறகு பட்ரிசியாவின் கணவரானார்.

டிம்மிற்கு அப்போது 25 வயது, அவர் மதக் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி பயின்றுக் கொண்டிருந்தார். அவரது மதப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் சிறிய அமைப்பு ஒன்றில் பணியமர்த்தப்பட்டார்.

விரைவிலேயே அவர்கள் நேரில் சந்திக்கத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே பட்ரிசியா கர்ப்பமானார். திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டபோது அவருக்கு வயது 14 தான்.

அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள், குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கர்ப்பமான தங்கள் மகள்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக பெண்களின் பெற்றோரால் குழந்தைத் திருமணம் முன்வைக்கப்படலாம்

பட்ரிசியா, சீர்திருத்த சபை சார்ந்த (evangelical) ஒரு குடும்பத்தில் வளர்ந்தார்.

"கருவுறாமல் இருக்க பிரார்த்தனை உதவாது என்பதை கண்டுகொண்டேன். நான் கர்ப்பமாக இருந்தேன், ஆனால் அவரைத் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை," என்று அந்த கடினமான சூழ்நிலையை அவர் நினைவு கூர்கிறார்.

பட்ரிசியா கருவுற்ற செய்தியைக் கேட்டு டிம் அழுது கொண்டிருந்தபோது, யாருமே நினைததுக்கூட பார்க்காத அந்த செய்தியை தனது பெற்றோரிடம் பட்ரிசியா தெரிவித்தார். அவர் எதிர்பார்த்தது போல அவரது தாயின் எதிர்வினை இருக்கவில்லை. "குடும்பத்தின் கௌரவத்தைக் கெடுத்துவிட்டதாக" அனைவரும் குற்றம் சாட்டினார்கள்.

"என் அம்மா மிகவும் தெளிவாக இருந்தார், குடும்பத்திற்கு நான் ஏற்படுத்திய அவமானம் அனைத்திற்கும் நானே பொறுப்பு என்றும், அதைச் சரிசெய்வதற்கான ஒரே வழி அந்த மனிதனைத் திருமணம் செய்துகொண்டு நல்ல மனைவியாக இருப்பதுதான் என்றும் அவர் கூறிவிட்டார்," என்கிறார் பட்ரிசியா.

குழந்தையை அவர் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவானது.

திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் சம்மதக் கடிதத்தில் பட்ரிசியாவின் தந்தை கையெழுத்திட்டார். அடுத்த நாள், தன்னுடைய தாய், டிம் ஆகிய இருவருடன் பட்ரிசியாவும் கிளம்பினார்.

மினசோட்டாவில் பட்ரிசியாவின் வயதுடைய சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருந்ததால், அந்த வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கும் மாகாணத்தைத் தேடி ஒரு சாலைப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

"எனக்கு வேறு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, அவரைத் திருமணம் செய்யப் பிடிக்கவில்லை, ஆனால் குழந்தையை என்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஒரு நல்ல தாயாக இருக்க முடியும் என்று நம்பினேன்."

அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள்

பட மூலாதாரம், Given to the BBC by Patricia Lane

படக்குறிப்பு, பெற்றோர் சம்மதத்துடன் பட்ரிசியா லேன் தனது 14 வயதில் திருமணம் செய்தார்.

சட்டத்தில் ஓட்டைகள்

சிறார்களுக்கு திருமணத்தை அனுமதிக்கும் கென்டக்கி (Kentucky) மாகாணத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். "நிச்சயமாக முடியாது. பெண் மிகவும் சிறியவள்," என்று அதிகாரிகள் கூறியதை பட்ரிசியா நினைவு கூர்கிறார்.

"அவர்கள் சொன்னது சரிதான். நான் திருமணத்திற்கு மிகவும் சிறியவளாகவே இருந்தேன்."

பின்னர் அவர்கள் அலபாமா மாகாணத்திற்குச் சென்றனர். அங்கு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிந்தது. லாடர்டேல் கவுண்டியில் ஒரு சில நிமிடங்களிலேயே பட்ரிசியாவிற்கும் டிம்மிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பட்ரிசியா வெண்ணிற உடையோ அல்லது தலையில் மலர் கிரீடத்தையோ சூடிக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார்.

"திருமணம் மிக அவசரமாக நடந்தது. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அந்த மனிதனை எனக்குப் பிடிக்கவில்லை, என் தாயோ கடும் கோபத்தில் இருந்தார்," என்று இப்போது 58 வயதாகும் பட்ரிசியா லேன், பிபிசி-யிடம் கூறுகிறார்.

"அது மிகவும் கொடுமையாக இருந்தது."

திருமணச் சான்றிதழைப் பெற்ற சில நிமிடங்களில், அவர் நீதிமன்றத்திற்கு எதிரே இருந்த பூங்காவிற்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சலாடினார். 14 வயது குழந்தையின் இந்த செயல் அவரது தாய்க்கும், அவரது புதிய கணவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

"திருமணத்தைப் பற்றி நான் நினைத்திருந்தது எதுவுமே உண்மையில்லை," என்று பட்ரிசியா நினைவு கூர்கிறார். அவருக்கு திருமணம் நடைபெற்ற போது, முதல் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் இருந்தார். அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும், அந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டது.

"எனது திருமணச் சான்றிதழில் எனது பெயர் உள்ளது, ஆனால் நான் கையெழுத்திட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. என் தாய் எனக்காக கையெழுத்திட்டார். அவர் என் வாழ்க்கையை ஒரு மனிதனிடம் ஒப்படைத்தார். இப்படித்தான் சில திருமணங்கள் நடைபெறுகின்றன. மற்றவர்களிடம் உங்களை ஒப்படைத்துவிடுவார்கள், அப்படி பதின்பருவத்தில் திருமணம் நடைபெறுபவர்கள் 18 வயது ஆகும் வரை திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்க முடியாது," என்கிறார் அவர்.

பட்ரிசியா டிம்மைத் திருமணம் செய்து 46 ஆண்டுகள் ஆனபோதிலும், அலபாமா மாகாணத்தில் திருமண விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. இன்று, 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடியாது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக இருந்தபோதிலும், பெற்றோரில் ஒருவரின் சம்மதத்துடன் 16 வயது சிறுமி திருமணம் செய்து கொள்ள முடியும்.

"கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. மைனர் பெண் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றோ அல்லது நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றோ அந்த மாகாணம் கட்டாயப்படுத்தவில்லை," என்று அவர் விளக்குகிறார்.

2025-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 16 மாகாணங்கள் மற்றும் வாஷிங்டன் டிசி மட்டுமே, மனித உரிமைக் குழுக்கள் கோரியபடி, எந்த விதிவிலக்குகளும் இன்றி குறைந்தபட்ச திருமண வயதை 18 என நிர்ணயித்துள்ளன.

பிற மாகாணங்களில் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ விதிவிலக்குகளில், வருங்கால கணவரால் கர்ப்பமடைதல், ஏற்கனவே அவருக்குக் குழந்தையைப் பெற்றெடுத்திருத்தல் மற்றும் பெற்றோரின் சம்மதம் ஆகியவை அடங்கும். ஆர்கன்சாஸ், நியூ மெக்ஸிகோ மற்றும் ஓக்லஹோமா போன்ற மாகாணங்களில், குறைந்தபட்ச திருமண வயதிற்கு விதிவிலக்கு பெறுவதற்கான காரணங்களில் ஒன்றாக பெண் கருவுற்றிப்பது முன்வைக்கப்படுகிறது.

சமத்துவம் இப்போது (Equality Now) என்ற பாலின உரிமை அமைப்பைச் சேர்ந்த அனஸ்தேசியா லாவின் கூற்றுப்படி, இந்த விதிவிலக்குகள் "சட்டப்பூர்வமான பாலியல் வன்புணர்வு அல்லது குழந்தை வன்கொடுமை எனக் கருதப்பட வேண்டிய சுரண்டல் செயல்களையும் உறவுகளையும் மேலும் நியாயப்படுத்த மட்டுமே உதவுகின்றன" என்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் உலகளவில் இன்றும் ஆண்டுதோறும் சுமார் 1.2 கோடி சிறுமிகள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 18 வயது என்பது குழந்தைத் திருமணத்தை வரையறுப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பாகும்.

'நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு' ஏற்ப, 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த நடைமுறையை ஒழிக்க வேண்டுமானால், இதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஐநா சபை எச்சரிக்கிறது. இந்த நடைமுறை சர்வதேச அளவில் மனித உரிமை மீறலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறித்த தேசிய அளவிலான பொதுவான சட்டம் ஏதும் இல்லை. அந்நாட்டில் இத்தகைய திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவரப் போராடும் 'சங்கிலி பிணைப்பில் இருந்து இறுதியில் விடுபடுதல்' (Unchained at Last) என்ற அமைப்பின் தரவுகளின்படி, 2000 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துள்ளனர்.

அவர்களில் சிலர் 10 வயதிலேயே திருமணம் செய்துகொண்டனர், இருப்பினும் பெரும்பாலானோர் 16 அல்லது 17 வயதுடையவர்கள். பெரும்பாலான சிறுமிகள் வயது வந்த ஆண்களுக்கே திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

"தற்போது திருமணத்தின் பெயரில் குழந்தைத் திருமணத்தையும், குழந்தைகள் கடத்தலையும் அனுமதிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் சட்ட ஓட்டைகளை தேசிய அளவிலான பொதுவான சட்டம் மட்டுமே அடைக்க முடியும்," என்று அனஸ்தேசியா லா கூறுகிறார்.

அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'தசாப்தங்களைத் தாண்டியும் தனிமையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்'

திருமணத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், தனது மகளைத் தத்து கொடுப்பது மற்றும் கணவரை விவாகரத்து செய்வது உள்ளிட்ட பல கடினமான முடிவுகளை பட்ரிசியா எதிர்கொண்டார். பின்னர், அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இம்முறை தனது சொந்த விருப்பத்தின் பேரில்.

அமெரிக்காவில் கட்டாயத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடும் அமைப்புகளின் கூற்றுப்படி, இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பள்ளியை விட்டு பாதியிலேயே நிற்கும் வாய்ப்புகள் அதிகம். சிறு வயதில் திருமணம் செய்வதால், பெண்கள் பொருளாதார ரீதியாக கணவரையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

"என்னுடைய படிப்பு சில வருடங்கள் தடைபட்டது. பின்னர் நான் மீண்டும் படித்தாலும், அது முன்பு போல இல்லை," என்கிறார் பட்ரிசியா.

"நண்பர்களுடன் பழக என் கணவர் என்னை அனுமதிக்கவில்லை. முற்றிலும் தனிமையில் இருந்தேன். இன்றும் கூட தனிமையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் என்னால் யாரையும் சுலபமாக நம்ப முடிவதில்லை என்பதால், பிறருடன் இருப்பதை விடத் தனிமையில் இருப்பதே எனக்கு வசதியாகத் தோன்றுகிறது," என்கிறார் அவர்.

அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள், பட்ரிசியா

பட மூலாதாரம், Given to the BBC by Patricia Lane

படக்குறிப்பு, 'நான் முற்றிலும் தனிமையில் இருந்தேன்,' என்று பட்ரிசியா நினைவு கூர்கிறார்

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் தொடர்ச்சியான போராட்டத்தால், 2018-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் 16 மாகாணங்கள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.

"இது வளர்ந்து வரும் நாடுகளில் அல்லது சில குறிப்பிட்ட மதங்களில் மட்டுமே நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல - இது அமெரிக்காவிலும் நடக்கிறது," என்கிறார் பட்ரிசியா லேன்.

அமெரிக்காவில் குழந்தைத் திருமணம் ஒரு பிரச்னை என்ற விழிப்புணர்வு இல்லாததும், சமூகத்தில் பாலினப் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருப்பதுமே சட்ட ரீதியாக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதைக் கடினமாக்குவதாகப் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

"ஆண்களுக்கு இத்தகைய திருமணம் என்பது குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது. இதை அனுமதிக்க வேண்டாம் என்று நான் சட்டமியற்றுபவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்," என்கிறார் பட்ரிசியா லேன்.

"மேலும், 16 அல்லது 17 வயதில் வருவது உண்மையான காதல் என்று வாதிடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் - அது உண்மையான காதலாக இருந்தால், அவர்களுக்கு 18 வயது ஆகும்போதும் அது உண்மையான காதலாகவே இருக்கும், எனவே காத்திருக்கலாம்..."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு