'சிங்கத்தின் குகைக்குள்' நுழைந்து சுழற்றி அடித்த சென்னையின் சுழல் - நாயகனாக உருவெடுத்த ரஹானே

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் தொடரின் பாரம்பர்யத்தில் பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித கொண்டாட்டம்தான்.
அந்தக் கொண்டாட்டத்திற்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக இன்றைய போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் சென்னை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனிக்கு வான்கெடா மைதானம் மிகவும் நினைவுகூரத்தக்க ஒன்று. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா அவரது தலைமையில் இந்த மைதானத்தில்தான் வெற்றியை ருசித்தது.
கூடவே ரஹானேவின் கம்பேக் அதிரடியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
"மொயீன் அலிக்கு உடல்நிலை சரியில்லை. ஆகையால் நான் விளையாடப் போகிறேன் என்பதே டாஸ் போடுவதற்கு சற்று முன்புதான் தெரியும். களத்தில் நன்கு அனுபவித்து நேர்த்தியான ஷாட்களை ஆடினேன்."
வெற்றிக்குப் பிறகு அஜிங்கியா ரஹானே உதிர்த்த வார்த்தைகள் இவை.
'ரஹானேவுக்கு வயதாகிவிட்டது. இனி அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டியதுதான்' என அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த பேச்சுகளுக்கு மஞ்சள் சீருடையில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் அஜிங்கியா ரஹானே.
'What a Comeback' என்று இணையத்தில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
அதேபோல், ஏழாவது ஓவரில் இஷான் கிஷனின் ஷாட் ஒன்றை அற்புதமாக கேட்ச் பிடித்து, “அந்த இடத்தை நான் பூர்த்தி செய்கிறேன்” என்று சொல்லாமல் சொன்னார் ஜடேஜா.
இந்தப் போட்டியில் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஹங்கர்கேகர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே, துஷார் தேஷ்பண்டே, ப்ரிடோரியஸ், மகாலா ஆகியோர் களமிறங்கினர்.
இஷான் கிஷன் அந்த ஷாட்டை சரியாகத் திட்டமிட்டு அடிக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆனால், அதற்கும் முன்பாகவே பவர் பிளேவில் துஷார் தேஷ்பாண்டே ரோகித் ஷர்மாவின் விக்கெட்டையும் எடுத்திருந்தார்.
ரோகித்தின் ஆட்டம் முதல் ஓவரிலேயே அதிரடியாக இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கியது. இரண்டாவது ஓவரை வீசிய துஷார் பந்துவீச்சிலும் ரோகித் ஒரு பவுண்டரி அடித்தார். கூடவே துஷார் இரண்டு பந்துகளை வீணடித்தார்.
ரோகித் ஷர்மா, இஷான் கிஷான் கூட்டணி மூன்று ஓவர்களில் 30 ரன்களை எடுத்திருந்தது. அவர்களது அதிரடியை கட்டுப்படுத்த துஷார் எடுத்த முயற்சிக்கு நான்காவது ஓவரில் பலன் கிடைத்தது.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரோகித் ஐபிஎல் போட்டிகளில் தனது 5000 ரன்களை கடந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆனால், துஷார் விடவில்லை. ஓவர் இறுதியில் ஆஃப் ஸ்டம்பில் அவர் வீசிய பந்து மிக அழகாக ரோகித் ஷர்மாவை போல்டாக்கி வெளியேற்றியது. ஒரு சிக்ஸ், 3 பவுண்டரிகளை விளாசியவர், 13 பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெளியேறினார். பவர் பிளே முடிவில் மும்பை ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்திருந்தது.
இதற்கடுத்து, தொடர்ச்சியாகச் சரிந்த விக்கெட்டுகள் முந்தைய போட்டியில் தோனி கொடுத்த எச்சரிக்கையை சென்னையின் பவுலர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டியுள்ளனர். இந்தப் போட்டியில் சென்னை பந்துவீச்சைப் பொறுத்தவரை ஒரு திட்டத்தோடுதான் வந்திருந்தது.
மும்பை வீரர்களை சுழற்றி வீசிய சென்னையின் சுழல் வீரர்கள்
ஏழாவது ஓவர், 8, 9, 10 என்று அடுத்தடுத்து ஓவருக்கு ஒரு விக்கெட் என்று சென்னையின் சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
ஏழாவது ஓவரில் ஜடேஜா கேட்ச் பிடித்து இஷான் கிஷனை வெளியேற்றினார். எட்டாவது ஓவரில் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார் கேப்டன் தோனி.
மிகச் சாதாரண டெலிவரியாகவே அந்த பந்துவீச்சு இருந்தது. அதை சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், அது தவறவே பந்து தோனியின் கைகளுக்குச் சென்றது. நடுவர் அந்தப் பந்து வைட் எனக் கூறி நாட் அவுட் அறிவித்தார். ஆனால், உடனடியாக தோனி அப்பீல் சென்றார்.
துல்லியமான முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ரிவ்யூ முறையை தோனி ரசிகர்கள் செல்லமாக தோனிஸ் ரிவ்யூ சிஸ்டம் என்று அழைப்பதுண்டு. இதை அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் கேப்டன் தோனியிடம் உள்ளதால் இப்படி அழைக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அந்த முறையை இன்றைய போட்டியிலும் அவர் தனது முடிவை உறுதி செய்வதற்காக முக்கியமான கட்டங்களில் பயன்படுத்தினார். அபாயகர நாயகனான சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்திய பந்தை, நடுவர் நிகில் பட்வர்தன் வைட் எனக் கூறவே, தாமதிக்காமல் உடனடியாக தோனி ரிவ்யூவுக்கு சென்றார்.
ரீப்ளே மூலம், முடிவு தோனிக்கு சாதகமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூன்றாவது நடுவர் டேனியல் பட்வர்தன் நாட்-அவுட் முடிவை ரத்து செய்து, விக்கெட் விழுந்ததை உறுதி செய்தார்.
ஒன்பதாவது ஓவரில் ராக்கெட் போல முகத்திற்கு நேராகப் பறந்து வந்த கேமரூன் க்ரீனின் ஒரு ஷாட்டை கனநேரத்தில் செயல்பட்டு ஜடேஜா கேட்ச் பிடித்தார்.
பந்து அவ்வளவு வேகமாக அவரது முகத்தை நோக்கி வருவதால் ஏற்பட்ட அதிர்ச்சி அவரிடம் நன்கு தெரிந்தது. இருப்பினும் அந்த கேட்சை பிடித்து கேமரூன் க்ரீன் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து பத்தாவது ஓவரில் சான்ட்னர் அர்ஷத் கானை வெளியேற்றினார்.
ஜடேஜா இன்று எந்தவித தவறையும் செய்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். அதற்கேற்ப 13வது ஓவரிலும் திலக் வர்மாவுக்கு ஒரு சிக்ஸ் கொடுத்து, அவரது நம்பிக்கையை ஏற்றிவிட்டார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே எல்.பி.டபுள்யூ மூலம் அவுட்டானபோது திலக் வர்மவின் நம்பிக்கை உடைந்து நொருங்கியது.
பந்துவீச்சிலும் ஃபீல்டிங்கிலும் சென்னை அணியின் ஒருங்கிணைப்பு

பட மூலாதாரம், BCCI/IPL
மகாலா இன்றைய போட்டியில் 28 ரன்களை கொடுத்துவிட்டார். ஆனால், அவரது பங்கு இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்கதாக இருக்கக்கூடும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், துஷார் தேஷ்பாண்டே 50க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்திருந்தபோதும் தோனி அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தார். அதற்கான பலன்களையும் துஷார் கொடுத்தார். இத்தகைய நம்பிக்கையை மற்ற அணிகள் இப்படியான வீரர்களுக்குப் பெரியளவில் கொடுப்பதில்லை.
அதற்கேற்ப மகாலா வீசிய 16வது ஓவர் இறுதியில் டிறிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட் விழுந்தது. ஃபுல்லராக அவர் வீசிய பந்தை ஸ்டப்ஸ் சிக்சர் ஷாட் அடித்தார்.
ஆனால், பவுண்டரிக்குள் விழுவதற்கு முன்பாக டுவைன் பிரிட்டோரியஸ் பந்தை குதித்து கேட்ச் பிடித்தார். ஆனால், அவர் பின்னால் பவுண்டரி லைனை தாண்டி விழச் சென்றார்.
இருப்பினும், சாமர்த்தியமாக தரையில் லேசாக காலூன்றி பந்தை வீசிவிட்டு, அவர் மட்டும் கீழே பவுண்டரி லைனுக்கு வெளியே விழுந்தார். அவர் வீசிய பந்தை ருதுராஜ் கெய்க்வாட் ஓடி வந்து பிடித்துக்கொண்டார்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே மீண்டும் துஷார் டிம் டேவிட் விக்கெட்டை வீழ்த்தினார். டிம் டேவிட் அவரது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று அடித்தார். அவருக்கு அதே ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுத்து, ரஹானேவின் கைகளுக்கு கேட்ச் கொடுக்க வைத்தார் துஷார்.
இறுதி ஓவரை வீசிய டுவைன் பிரிட்டோரியஸ் அந்த ஒரு ஓவரில் மட்டும் 16 ரன்களை கொடுத்துவிட்டார். 19 ஓவர் முடிவில் 141 ரன்கள் என்ற நிலையில் இருந்த மும்பை, 20 ஓவர் முடிவில் 157 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
சென்னை அணியின் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் ஃபார்ம் இன்று நன்றாக இருப்பதை அடுத்தடுத்து விழுந்துகொண்டிருந்த மும்பையின் விக்கெட்டுகள் காட்டின. சென்னை அணியிலுள்ள சுழற்பந்துவீச்சாளர்களின் பலம் இன்றைய போட்டியில் நன்றாகவே வெளிப்பட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னை ரசிகர்களுக்கு எகிறிய ‘ரத்த அழுத்தம்’
சென்னை அணியின் பேட்டிங், ரசிகர்களுக்கு ரத்த அழுத்தத்தை எகிற வைத்தபடியே தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
முதல் ஓவரை வீசிய ஜேசன் பெரெண்டார்ஃப், நான்காவது பந்திலேயே டெவான் கான்வேவை போல்டாக்கி சென்னை அணியின் முதல் விக்கெட்டை பூஜ்ஜிய ரன்களிலேயே எடுத்தார்.
இருப்பினும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கியா ரஹானே, சென்னைக்கான இன்றைய நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தார். சென்னை அணிக்கு இந்த சேஸிங் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென நினைத்தார்களோ அப்படியெல்லாம் அமைந்தது.
மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தவர், அந்த ஓவரில் நிதானமாகத் தான் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அர்ஷத் கான் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸ், தொடர்ச்சியாக நான்கு பவுண்டரி ஷாட்கள் என்று அர்ஷத்தின் பந்துகளை பறக்கவிட்டார். கூட்டணியில் ருதுராஜ் நிதானித்து நின்றது அவர் மேற்கொண்டு விளாச வாய்ப்பளித்தது.
அதன் விளைவாக பவர் பிளே இறுதியில் சென்னை ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை எடுத்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
நம்பிக்கை நாயகனாக உருவெடுத்த ரஹானே
அஜிங்கியா ரஹானே இந்த ஐபிஎல் தொடரின் வேகமான அரை சதத்தை அடித்தார். சீம் பவுலரான ஜேசன் பெஹ்ரென்றாஃப் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு ஷார்ட் பாலை சிக்சர் அடித்து தனது சரவெடியைத் தொடங்கினார்.
மும்பையைச் சேர்ந்த 34 வயதான இந்த பேட்ஸ்மேன், இடதுகை பந்துவீச்சாளரான அர்ஷத் கான் வீசிய ஓரே ஓவரில் 23 ரன்களை எடுத்தார். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பாக, பிரித்வி ஷா இதுவரைக்கும் ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலுமே பவுண்டரி ஷாட்களை அடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியைச் சேர்ந்த பிரித்வி ஷா ஆறு பந்துகளிலும் பவுண்டரி ஷாட் அடித்தார்.
ஆனால் அதற்கும் முன்பாகவே, 2012ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடியபோது அஜிங்கியா ரஹானே பெங்களூருவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 பவுண்டரிகளை அடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் அத்தகைய அதிரடியை மீண்டும் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள்ஸ் மட்டுமே ஓட முடிந்தது.
இருப்பினும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் இன்று சென்னையின் நாயகனாகத் திகழ்ந்தார். அவர் 19 பந்துகளிலேயே தனது அரை சதத்தை சரவெடியாக அடித்துத் தீர்த்தார். ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு மும்பை அணியில் அறிமுகமான ரஹானே, 106 ஐபிஎல் போட்டிகளில் 4100 ரன்களை குவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இன்று 27 பந்துகளில் 61 ரன்களை எடுத்து பியூஷ் சாவ்லா வீசிய 8வது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதோடு ருதுராஜ் கெய்க்வாட் உடன் அவர் அமைத்த கூட்டணியும் அபாரமாக இருந்தது. 47 பந்துகளில் 82 ரன்களை எடுத்த கெய்க்வாட், ரஹானே கூட்டணி, இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகித்தது.
ரஹானேவின் ஆட்டம் குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, "மிகுந்த அழுத்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். களத்திற்குச் சென்று நீங்கள் விரும்பிய ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்றேன். அதேபோன்று அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்," என்று பாராட்டினார்.
அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளை அடித்து, களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்துகளில் 28 ரன்களை எடுத்து 15வது ஓவரில் குமார் கார்த்திகேயாவிடம் அவுட்டானார். ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் இழக்காமல் நின்று நல்ல கூட்டணியை அமைத்துக் கொடுத்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
ஷிவம் துபேவை தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு, மொத்தம் 3 பவுண்டரிகளை அடித்து 16 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். குறிப்பாக, 19வது ஓவரில் கடைசியாக வெற்றிக்கான ஒரு பவுண்டரி ஷாட்டையும் அடித்தார். மும்பை அணியைப் பொறுத்தவரை, அவர்களது முதல் போட்டியும் சரி இந்தப் போட்டியும் சரி மிகவும் சுமாரான ஆட்டமே வெளிப்பட்டது.
அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிஎஸ்கே, முழு நம்பிக்கையுடன் விளையாடி ஆட்டத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டது. இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 'சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து' சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா, "சென்னையின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். எங்களை அழுத்தத்திலேயே அவர்கள் வைத்திருந்தனர்.
அதை எங்களால் சரியாக சமாளிக்க முடியாமல் போனது. அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்துள்ளோம். நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று மீண்டு வருவோம்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












